மேடைப்பேச்சும் எழுத்தாளர்களும்-2

ஹெர்மிஸ்

மேடைப்பேச்சும் எழுத்தாளர்களும் பகுதி 1

நல்ல எழுத்தாளர்கள் பேச்சாளர்கள் அல்ல என்று சொல்லமுடியுமா?

அதற்கு ஒரே வரிப் பதில்தான். தமிழகத்தில் கட்டணம் வைத்து அரங்கினரைக் கூட்டி உரையாற்றிய மாபெரும் பேச்சாளர் ஒருவரின் சொல்லில் இருந்தே நவீன இலக்கியமே தோன்றுகிறது. சுப்ரமணிய பாரதி.

நவீன இலக்கியம் என்பது ஒற்றைப்படையானது அல்ல. எந்த வகை  எழுத்தாளர்கள், எந்த காலகட்ட எழுத்தாளர்கள் மேடையில் நிறைய பேசினார்கள்; எவர் மேடைகளை தவிர்த்தார்கள் என்றுதான் இலக்கியமறிந்தோர் பார்க்கமுடியும்

நவீன இலக்கியத்தில் அதன் யதார்த்தவாத அழகியல் மரபைச் சேர்ந்தவர்கள், அரசியல் நோக்கம் கொண்ட எழுத்தாளர்கள் மேடையை அதிகமாகப் பயன்படுத்திய பேச்சாளர்களாகவும் இருந்தனர். இந்தியா முழுக்க. தாகூர் சிறந்த பேச்சாளர். டாக்டர் சிவராம காரந்த் சிறந்த பேச்சாளர்.  தகழி சிவசங்கரப் பிள்ளையும் பி.கேசவதேவும் மாபெரும் பேச்சாளர்கள்.ஜெயகாந்தன் சிறந்த பேச்சாளர்.

தேசிய இயக்கம் சார்ந்தோ, இடதுசாரி இயக்கம் சார்ந்தோ செயல்பட்டவரள் சிறந்த பேச்சாளர்களாகவே இருந்தார்கள். நாமக்கல் கவிஞரோ டி.கெ.சிதம்பரநாத முதலியாரோ பேசாமல் இருக்க முடியாது. அவர்களின் வழிவந்தவர்களும் சிறப்பாகப் பேசினர்.

அதன்பின் நவீனத்துவ அலை உருவானது. அவர்களில் பெரும்பாலானவர்கள் இருத்தலியல் சார்ந்த தத்துவ நோக்கு கொண்டவர்கள். அகவயமான உளநிலை கொண்டவர்கள். ஆகவே தனித்தவர்கள். அவர்கள் பொதுவெளிப்பாட்டை தெரிவு செய்யவில்லை. அதை நிராகரித்தவர்களும் உண்டு.

மேலும் தமிழ்ச்சூழலில் நவீனத்துவ இலக்கியவாதிகள் பெரும்பாலும் சிற்றிதழ்ச்சூழலில் இயங்க நேரிட்டது. அவர்களுக்கு பெரிய மேடைகளும் அமையவில்லை. பேசும் வாய்ப்புகள் பெரும்பாலும் இல்லை. மிகச்சிறிய குழுக்களுக்குள் தங்களுக்குள் உரையாடி அவர்கள் செயல்பட்டனர். ஆகவே பொதுச்சொற்பொழிவு சார்ந்த பயிற்சி அவர்களுக்கு அமையவில்லை.

ஆனால் இந்திய நவீனத்துவர்களிலேயே யு.ஆர். அனந்தமூர்த்தி மாபெரும் பேச்சாளர். ஏனென்றால் அவர் கர்நாடக சோஷலிச இயக்கங்களில் இருந்து வந்தவர். பி.கே.பாலகிருஷ்ணன் சிறந்த பேச்சாளர். அவர் தொழிற்சங்க இயக்கத்துக்குள் நீண்டகாலம் செயல்பட்டவர். பாலசந்திரன் சுள்ளிக்காடு சிறந்த பேச்சாளர், அவர் நடிகரும்கூட. க.நா.சு டெல்லி சென்று பேசுவதற்கு அரங்குகள் அமைந்து பழகிய பின் மிகச் சிறப்பாக பேசலானார்.

நவீனத்துவ அலைக்குப் பின் இலக்கியம் பொதுவெளியை எதிர்கொள்ளலாயிற்று. புதிய ஊடகங்கள் உருவாயின. இலக்கியவாதிகளுக்கு சபைகள் அமைந்தன. ஆகவே இன்று எழுதும் படைப்பாளிகள் பேசுவதற்கு எளிதில் பழகுகிறார்கள். பலர் சிறப்பாக பேசுகிறார்கள். என் தலைமுறையில் நான், எஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர் மூவரும் சிறப்பான பேச்சாளர்களே. எனக்கு அடுத்த தலைமுறையில் மனுஷ்யபுத்திரன், அழகிய பெரியவன் போன்றோர் நல்ல பேச்சாளர்கள்.

உலகம் முழுக்கவே இப்படித்தான். எழுத்தாளர்களில் பொதுவெளிச் செயல்பாடு கொண்டவர்கள் பெரும்பாலும் நல்ல பேச்சாளர்கள்தான். பாப்லோ நெரூதா பேச்சாளராக அல்லாமல் இருக்க முடியாது.

எழுத்தாளர்கள் பேசலாமா?

எழுத்தாளனின் மைய ஊடகம் எழுத்து. பேச்சு அல்ல. பேச்சு அவனுக்கு எழுத்துக்கான துணையூடகமே. எழுத்தாளன் பேச்சாளனாக மாறுவது ஒரு தற்கொலை என்றே நினைக்கிறேன். ஆனால் எழுத்தாளன் எழுத்தாளனாக நின்றுகொண்டே பேசும் பேச்சு ஒன்று உண்டு. அதை அவன் பேசியாகவேண்டிய சூழல் இன்று உருவாகியுள்ளது.

இன்றைய உலகம் சென்ற முப்பதாண்டுகளாக மெல்ல மெல்ல உருமாறி உருவாகி வந்துள்ளது. முப்பதாண்டுகளுக்கு முன் ஓர் எழுத்தாளன் தன் படைப்புகள் பற்றி பேசுவதே பிழை என்னும் மனநிலை இருந்தது. எழுத்தாளன் எழுதிவிட்டு மௌனமாக ஒதுங்கிக் கொள்வதே உசிதமானது என்னும் எண்ணம் இருந்தது. சுந்தர ராமசாமியும் அசோகமித்திரனும் அந்த மனநிலை கொண்டவர்கள்

ஆனால் அப்போதே அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நாம் மதித்துப் போற்றும் இலக்கியமேதைகள் தங்கள் எழுத்துக்களை தாங்களே முன்வைக்க ஆரம்பித்திருந்தனர். எழுத்தாளன் ஒரு நூலை எழுதிவிட்டு ஊர் ஊராகச் சென்று அதைப்பற்றிப் பேசுவதும், அதை வாசித்துக் காட்டுவதும் எனக்கெல்லாம் திகைப்பை உருவாக்கியிருந்தது.

பதிப்பாளர் நூலுக்கான விழாக்கள், விருந்துகள் ஏற்பாடு செய்வதும்; அதில் விமர்சகர்கள் கலந்துகொள்ளச் செய்யப்படுவதும்; எழுத்தாளர் அதில் கலந்துகொண்டு அனைவரையும் கவரும்படி பேசுவதும் அமெரிக்காவில் வணிகநாவல்களின் பிரசுரங்களில் தொடங்கி பின்னர் இலக்கிய நூல்களிலும் இயல்பாக ஆயின

பின்னர் அந்த மனநிலை, அந்த வழக்கம் இந்திய ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் உருவாகத்தொடங்கியது. டி.சி.கிழக்கேமுறி சாகித்ய பிரவர்த்தக சஹஹரண சங்கத்தில் இருந்து பிரிந்து டிசி புக்ஸ் என்னும் பதிப்பகத்தை தொடங்கியபோது அவ்வழக்கத்தை மலையாளத்தில் தொடங்கி வைத்தார்.

முன்னர் இந்திய நூல்பதிப்பு என்பது ஒரு சிறுதொழில். நூலகங்களே 90 விழுக்காடு நூல்களை வாங்குவது வழக்கம். தனிநபர்கள் புத்தகங்கள் வாங்குவது அரிதினும் அரிது. நூலகங்களை நம்பியே பிரசுரம் நிகழும்போது நூல்களை விளம்பரம் செய்யவேண்டிய தேவையே இல்லை. அது முழுக்க முழுக்க தொடர்புவலையால் நிகழும் வணிகம். வாசகர்கள் நூல்களை நேரடியாக வாங்கி வாசிக்கவேண்டுமென்றால் விளம்பரம் தவிர்க்கவே முடியாது என்னும் நிலை உருவானது.

டி.சி.கிழக்கேமுறி வைக்கம் முகமது பஷீரையும் தகழி சிவசங்கரப்பிள்ளையையும் எம்.டி.வாசுதேவன் நாயரையும்பலநூறு புகைப்படக் கட்டுரைகள், கார்ட்டூன்கள் வழியாக ஒரு ‘திருவுரு’ ஆக மாற்றினார். அதைப்பற்றிய ஏராளமான நகைச்சுவைகள் உண்டு. பஷீர் இரவில் வீட்டை விட்டு வெளியே வந்தபோது மின்னல் அடித்தபோது “இரு இரு நான் வேட்டி உடுக்கவில்லை” என்று சொன்னாராம். எம்.டி.வாசுதேவன் நாயர் தென்னைமரத்தில் பாதி ஏறி அமர்ந்து அளித்த புகைப்படம் பிரபலமானது

மேலும் இருபதாண்டுகளுக்குப்பின் 2000த்தில் தமிழிலும் அந்த அலை தொடங்கியது. சொல் புதிதின் அட்டையில் எழுத்தாளர்களின் படங்களை அச்சிட்டபோது அதை கடுமையாக எதிர்த்து எனக்கு கடிதமெழுதினார் சுந்தர ராமசாமி. அம்பை அதை கேலி செய்தார். ஆனால் சுந்தர ராமசாமி ‘டைட்டானிக்’ கதைநாயகன் போல கடலோரம் கைவிரித்து நின்று புகைப்படத்திற்கு ‘போஸ்’ கொடுக்கும் காலமும் வந்தது.

அதேதான் சொற்பொழிவுக்கும். சென்ற யுகத்திற்கும் இன்றைய யுகத்திற்கும் என்ன வேறுபாடு. முதன்மையாக ’பெருக்கம்’ எனலாம். இன்று கலை, இலக்கியம், செய்திகள், கருத்துக்கள்  எல்லாமே பல மடங்காகப் பெருகிவிட்டிருக்கின்றன. பெருக்கம் என்பது பின்நவீனத்துவ காலகட்டத்தின் அடிப்படை இயல்பு என்கிறார்கள். ஆகவே எவரும் எதையும் கவனிப்பதில்லை. செய்திகளுக்காக செவிகூர்ந்திருந்த தலைமுறை இன்றில்லை. எதையும் தேடிப்போகும் மனநிலை இன்றில்லை. இன்று எல்லாமே அதற்கான ரசிகர்களை, பார்வையாளர்களை தேடிப்போகவேண்டியிருக்கிறது.

சினிமாவே உதாரணம். முன்பெல்லாம் நடிகர்கள் சினிமா விளம்பர நிகழ்வுகளுக்கு வருவதில்லை. இன்று ஊர் ஊராக அவர்கள் சென்றாகவேண்டும். நானே 2.0 வரை எந்த சினிமா விளம்பர நிகழ்வுகளுக்கும் சென்றதில்லை. தொலைக்காட்சியில் தோன்றியதில்லை. இன்று வேறு வழியே இல்லை.

தன் எழுத்தை, தன்னை எழுத்தாளன் கொண்டுசென்றாகவேண்டும் என்னும் நிலை இன்று தவிர்க்கவே முடியாததாக உள்ளது . என் நூல்கள் ஆங்கிலத்தில் வெளியாகின்றன. நான் பேட்டிகள் அளிக்கவேண்டும். இலக்கியவிழாக்களில் சென்று விவாதங்களில் கலந்துகொள்ளவேண்டும். பேசவேண்டும். இல்லையேல் என் நூல்களை கவனிக்க மாட்டார்கள். அது என் பதிப்பகத்திற்கு நான் செய்தாகவேண்டிய கடமை.

இது எல்லா துறைகளிலும் உள்ளது. சென்ற கால அறிவியலாளர்கள் பேச்சாளர்கள் அல்ல. அவர்கள் ஆய்வில் மூழ்கிக் கிடந்தவர்கள். மொழியற்றவர்கள். இன்று அப்படி அல்ல. சிறப்பாகவே பேசியாகவேண்டும். இரண்டு தளங்களில் அந்த பேச்சாற்றல் தேவைப்படுகிறது. ஒன்று, ஆய்வின் பகுதியான பேச்சு. வெவ்வேறு சபைகளில், சந்திப்புகளில் திறம்படப்பேசி தனக்கான அணியை திரட்டவேண்டும். அவர்களை ஊக்குவித்து உடன் கொண்டு செல்லவேண்டும். தனக்கான நிதியாதரவை திரட்டவும் பேசியாகவேண்டும். இரண்டு, தன் அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றி வெளியுலகுடன் பேசுவது. அறிவியலாளர்கள் திறமையாக பொதுச்சூழலுடன் உரையாடியே ஆகவேண்டும். இந்த நூற்றாண்டின் பெரும் அறிவியலாளர்கள் பெரும் சொற்பொழிவாளர்களும் கூட.

தொழில், வணிகம் என அனைத்து களங்களிலும் திறமையான உரைகள் இன்றியமையாதவை என்னும் சூழல் அமைந்துவிட்டிருக்கிறது. தன்னை முன்வைக்க, தன்னை வெளிப்படுத்த தெரியாதவனால் எதையுமே இயற்ற முடியாது என்னும் சூழல்.

உரை என்பது இந்நூற்றாண்டின் தவிர்க்கமுடியாத தேவைகளில் ஒன்று. ஆடை அணிவதுபோல. பொதுமரியாதைகள் போல அதுவும் ஒரு பொதுவான வழக்கமாக ஆகிக்கொண்டிருக்கிறது. இலக்கியவாதிக்கு மட்டுமல்ல, ஏறத்தாழ அனைவருக்கும்

இலக்கியவாதியின் உரை எது?

ஓர் இலக்கியவாதி , குறிப்பாக புனைவெழுத்தாளன், சிலவகை உரைகளை ஆற்றக்கூடாது என நான் நினைக்கிறேன். ஏனென்றால் அவை அவன் எழுதும் மொழிவெளிப்பாட்டு முறைகளுக்கு எதிரானவை. கேளிக்கையுரை குறிப்பாக. விவாத உரை அடுத்தபடியாக. அறிவுறுத்தலுரையும் எழுத்தாளனின் இயல்புக்கு மாறானதுதான். சடங்குரைகளை தவிர்க்க எவராலும் இயலாது. ஆகவே எழுத்தாளனுக்குரியது தன்னுரைதான். அவன் விமர்சகன் என்றால் விளக்கவுரைகள் ஆற்றலாம்.

ஆனால் இதை அந்த எழுத்தாளனே முடிவெடுக்கவேண்டும். அரசியல் களத்தில் செயலாற்றும் எழுத்தாளன் பிரச்சார நோக்கம் கொண்ட விவாத உரைகளையும், அறிவுறுத்தல் உரைகளையும் தவிர்க்க முடியாது.

எழுத்தாளர்களுக்கு உரைப்பயிற்சி தேவையா?  

எழுத்தாளர்களுக்கு எழுத்துப் பயிற்சி தேவை என்பது போல உரைப்பயிற்சியும் தேவை. பிற உரைகளில் இருந்து கற்றுக்கொள்ளலாம். முறையான பயிற்சிகளை எடுக்கலாம். ஆனால் எந்த ஒரு வெளிப்பாட்டுக்கும் அதற்கான வடிவ ஒழுங்கு உண்டு. அதை கற்றுக்கொண்டே ஆகவேண்டும். சிறுகதை, நாவல் போன்றதே உரையின் வடிவமும்.

ஏன் அவ்வடிவத்தை கற்கவேண்டும்? ஏனென்றால் முன்னால் கேட்டுக்கொண்டு ஒருசில உயிர்கள் அமர்ந்திருக்கின்றன. அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும், அவர்கள் உடன்வரவேண்டும். ‘எந்த பயிற்சியும் எடுத்துக்கொள்ள மாட்டேன், எந்த பொறுப்பையும் ஏற்க மாட்டேன், மனம்போனபடி உளறுவதுதான் எனக்கு வசதி’ என ஓர் எழுத்தாளன் சொல்வானேயானால் அவனை முழுமையாக தவிர்க்கும் உரிமை வாசகனுக்கும் உண்டு. அதன்பின் என்னை அழைக்கவில்லை, என்னை புறக்கணிக்கிறார்கள் என்ற பிலாக்காணத்தை வைக்க எழுத்தாளனுக்கு உரிமை இல்லை.

இப்போது எழுத்தாளர் அனைவருக்கும் பேசும் வாய்ப்புகள் அரசு நிகழ்வுகள், புத்தகக் கண்காட்சி நிகழ்வுகள் வழியாக அமைகின்றன. இது உண்மையில் மிகப்பெரிய திருப்புமுனை. இன்றுவரை எழுத்தாளர்கள் சொல்லி வந்ததெல்லாம் தங்களுக்குச் சமூகத்தில் மரியாதை இல்லை, தங்கள் எழுத்துக்களை முன்வைக்க மேடை இல்லை, தாங்கள் கவனிக்கப்படுவதில்லை என்றுதான். அதற்கெல்லாம் வாய்ப்பு இப்போது வந்துள்ளது.

ஓர் அரசு விழாவில் அழைப்பு என்பது எழுதத்தொடங்கும் எழுத்தாளர்களுக்கும், பெரியதாக அறியப்படாத எழுத்தாளர்களுக்கும் நல்வாய்ப்பே. சுற்றத்திலும் குடும்பத்திலும் அது ஒரு மதிப்பை உருவாக்கும். அந்த மதிப்பு அவன் தொடர்ந்து எழுதுவதற்கு இருக்கும் தடைகளை நீக்கும். நான் எழுத்தாளனாக விரிந்தமைக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று 1992ல்  கதா விருதை நான் இந்திய ஜனாதிபதி சங்கர்தயாள் சர்மாவிடமிருந்து பெற்றதுதான். அது என் அலுவலகச்சூழலையே எனக்குச் சாதகமாக மாற்றியது.

ஓர் எழுத்தாளன் அவ்வப்போது இலக்கியக்கூட்டங்களில் பேசுவது இன்றைய சூழலில் அவன் உளநிலைக்கும் மிக நல்லது என்பது என் எண்ணம். அவன் அங்கே பாராட்டப்படுகிறான், நேரடியாக வாசகர்களைச் சந்திக்கிறான். அந்த ஊக்கம் சில நாட்களுக்கு நீடிக்கும். இன்றைய சூழலில் நவீன இலக்கியவாதிகளுக்கு இருக்கும் தவிர்க்கமுடியாத உளச்சோர்வுக்காலகட்டத்தை தாண்ட அது மிகச்சிறந்த வழி.

அந்த வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்வதே எழுத்தாளன் செய்யவேண்டியது. அவன் தன்னை அதற்கு தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். தன் முழு ஆளுமையையும் வெளிப்படுத்தவேண்டும்

ஆனால் அந்த வாய்ப்பை அப்படி பலரும் முறையாகப் பயன்படுத்தவில்லை என்பதே உண்மை. அது ‘எழுத்தாளர்களின் இயல்பு’ அல்ல. நானறிந்த எந்த நல்ல எழுத்தாளரும் அப்படிப்பட்டவர்கள் அல்ல. அந்த இயல்பு பொதுவாக நம் சூழலில் உள்ள ஒன்று. நம் கல்விநிலையங்களில் இருந்தே வருவது. அதை ‘ஒப்பேற்றுவது’ ‘சமாளிப்பது’ என்று சொல்லலாம். சிறப்பாக வெளிப்படுவதற்குப் பதிலாக குறைந்தபட்சம் எதைச் செய்தால்போதுமோ அதைச் செய்து கடந்துசெல்வது. இதை நாம் வாழ்க்கையாகவே கொண்டிருக்கிறோம். இதையே இந்த ‘பயிலா எழுத்தாளர்களும்’ செய்கிறார்கள்.

நிகழ்ச்சி நடத்துபவர்கள், பங்கேற்பவர்கள் சொல்வதைக் கேட்டால் ஆற்றாமையாக இருக்கிறது. முதல் விஷயம் எந்த தயாரிப்பும் இல்லாமல் நேராக கிளம்பி மேடைக்குச் சென்றுவிடுகிறார்கள். அங்கே என்னென்ன தோன்றுகிறதோ அதைச் சொல்கிறார்கள்.

ஒரு மேடைப்பேச்சாளன் மேடையில் அவன் பேசவேண்டிய உரைக்கான ஒரு வரைவை காகிதத்தில் குறித்துக்கொண்டே ஆகவேண்டும். என்ன சொல்லப்போகிறோம், எவ்வளவு நேரம், எது தொடக்கம், எவை மையக்கருத்துக்கள், எப்படி முடிக்கவேண்டும் என உறுதிப்படுத்திக் கொள்ளாமல் மேடையேறினாலே உளறல்தான் நிகழும்.

என்ன ஆகும்? ஒன்று, நினைத்து நினைத்து பேசுவதனால் பேச்சு எங்கே செல்கிறதென்றே தெரியாது. பேசுபவனுக்கு அவன் சொல்லும் ஒரு விஷயத்திற்கும் இன்னொரு விஷயத்துக்குமான தொடர்பு தெரியும். ஆனால் கேட்பவனுக்கு தெரியாது. ஆகவே கேட்பவனுக்கு எதுவுமே தொடர்புறாது. துண்டுதுண்டாக ஏதோ சொல்வதாகவே தெரியும்,

இரண்டு, பேசுபவன் பேச்சை ஏற்கனவே வடிவமைத்துக் கொள்ளவில்லை என்றால் அந்தப்பேச்சுக்கு நேர அளவே இருக்காது. எத்தனை பேசினாலும் பேசவில்லை என்று தோன்றும். நேரக்கணக்கு உள்ளத்தில் தோன்றாது.  அண்மைக்கால நிகழ்வுகளில் எழுத்தாளர்களை மேடையேற்றும்போது நிகழ்ந்த பெருங்கொடுமை என்பது கட்டற்று மணிக்கணக்காக பேசித்தள்ளியவர்கள் உருவாக்கியதுதான். பிறர் நேரத்தை எடுப்பது பற்றி, பார்வையாளர்களின் பொறுமை அழிவதைப் பற்றி கவலையே படுவதில்லை

(நான் இன்று இதில் மிக உறுதியாக இருக்கிறேன். இதை அறிவித்தும் உள்ளேன். நான் ஒரு பட்டியல் வைத்திருக்கிறேன். அதிலுள்ளவர்கள் எவரேனும் பேச்சாளர் பட்டியலில் இருந்தால் நான் கலந்துகொள்ள மாட்டேன். நான் இருக்கும் மேடையில் அழைப்பிதழில் இல்லாதவர்கள் பேச வந்தால் அக்கணமே எழுந்து வெளியேறிவிடுவேன். முன்னரே ஒவ்வொருவரும் எவ்வளவு நேரம் பேசுவார்கள் என்று கேட்டுக்கொள்வேன். அதிகபட்சம் 10 நிமிடம் கூடுதலாகப்பேசலாம். அதற்கு மேல் பேசினால் நான் வெளியேறிவிடுவேன்)

மேடைப்பேச்சுப் பயிற்சி என்பது மிக எளியது. நான் நடத்திய மேடைப்பேச்சு பயிற்சி நிகழ்வில் 30 பேர் கலந்துகொண்டனர். முதலில் மிகச்சுமாராக பேசியவர்கள் மூன்றாம்நாள் சிறப்பாகப் பேசினர். அவ்வளவுதான். பேச்சுக்கான உள்ளடக்கத்தை தயார் செய்துகொள்வது, பேச்சின் கட்டமைப்பை உருவாக்கிக் கொள்வது ஆகியவையே பயிலப்படவேண்டும். கொஞ்சம் அச்சம் விலகவேண்டும். அந்த சிறு பயிற்சியைக்கூட எடுத்துக்கொள்வதில்லை, அந்த சிறு குறிப்பைக்கூட தயாரித்துக்கொள்வதில்லை என்றால் அதன் பெயர் எழுத்தாளனின் சுதந்திரம் அல்ல. அது அறியாமை, பொறுப்பின்மை.

எழுத்தாளர்களை பேசவிடவேண்டாம், கேள்விபதில் வைக்கலாம் என்பது போல அபத்தம் வேறில்லை. கேள்விபதிலும் பேச்சுதான். உண்மையில் பேச்சையாவது முன்னரே தயாரித்துக்கொண்டு வரலாம். கேள்விக்கான பதில் அங்கேயே சொல்லப்படவேண்டும். பேசத்தெரியாதவர்கள் அங்கே மேலும் உளறுவதையே நான் கண்டிருக்கிறேன். கேள்விக்கான பதிலாக சம்பந்தமில்லாமல் எதையாவது சொல்வார்கள். சொல்ல ஆரம்பித்து எங்கெங்கோ செல்வார்கள். அல்லது குழறுவார்கள்.

மேடைப்பேச்சில் உளறுபவர் கேள்விபதிலில் இரண்டு மடங்கு உளறுவார். அதோடு கேள்வி கேட்பவர் மேல் எவருக்கும் எந்த கட்டுப்பாடும் இல்லை. தனியரங்குகளில் வரையறுக்கப்பட்ட பார்வையாளர் இருந்தால் மட்டுமே கேள்விகளை சற்றேனும் ஒழுங்குக்கு கொண்டு வர முடியும்.பொது அரங்குகள் என்றால் கேள்வி என்றபேரில் எழுந்து உரையாற்ற ஆரம்பிப்பார்கள். சம்பந்தமே இல்லாமல் கேள்வி கேட்பார்கள். வேண்டுமென்றே புண்படுத்தவும் சீண்டவும் முயல்வார்கள். அரங்கு முழுமையாகவே வீணாகிவிடும். அத்தகைய சீண்டல்கள், குளறுபடிகளை சமாளித்து பேசுபவர்கள் நல்ல சொற்பொழிவாளர்களாகவே இருப்பார்கள்

ஆகவே இளம் எழுத்தாளர்கள் சொற்பொழிவுக்கலையை கற்றுக்கொள்ளவேண்டும். எல்லா துறைகளைச் சேர்ந்தவர்களும் தங்களை திறமையாக தெளிவாக அவைமுன் வைக்க கற்றுக்கொள்ளவேண்டும். அதுதான் இன்றைய உலகம். இன்றைய சூழலின் தேவை.

ஜெ

முந்தைய கட்டுரைஉமா மகேஸ்வரி 
அடுத்த கட்டுரைகாடு, ஒரு விமர்சனம்