அயோத்திதாசர் என்னும் முதல்சிந்தனையாளர்-2

அயோத்திதாசரும் நானும்
[தொடர்ச்சி]

நாராயண குருவைப்ப்பற்றிய தொகைநூலை எழுதிய பி.கெ.பாலகிருஷ்ணன் அதில் ஒரு கட்டுரையில் ஆவேசமாகக் கேட்கிறார். வருடம் தோறும் வர்க்கலை நகரில் நாராயண குருவின் நினைவுநாளின்போது அங்கேவந்து பேருரை ஆற்றாத பிரபலங்களே இல்லை.  அந்த உரைகளில் அவர்கள் நாராயணகுருவை யுகநிர்மாண சிந்தனையாளர் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களின் பிற உரைகளில் சுயசரிதைகளில் எங்காவது நாராயணகுருவை மேற்கோள் காட்டியிருக்கிறார்களா, அவர் தங்களை பாதித்ததைப்பற்றிச் சொல்லியிருக்கிறார்களா என்று பார்த்தால் ஏமாற்றம்தான் உருவாகும். அப்படியானால் அவர்கள் சொன்ன சொற்களுக்கு என்ன அர்த்தம்?

நான் இங்கே அயோத்திதாசரைப்பற்றிப் பேசுவதற்கான முகாந்திரம் வேறு பண்பாட்டாய்வுக்கட்டுரைகளில் நான் அவரைப்பற்றி ஆங்காங்கே குறிப்பிட்டிருந்ததுதான். அதை வாசித்துவிட்டு நண்பர் பாரிசெழியன் என்னைத் தொடர்புகொண்டார். என் இல்லத்துக்கு அவர் நேரில் வந்தார். அயோத்திதாசரைப்பற்றி நாங்கள் விரிவாக விவாதித்தோம். அந்த விவாதத்தில் நான் சொன்ன கருத்துக்களைத் தொகுத்து எழுதும்படி கோரி பாரி என்னை இங்கே அழைத்தார். இதற்காக அவரே அயோத்திதாசரின் நூல்களையும் அவரைப்பற்றிய நூல்களையும் தொகுத்து அளித்தார். அவருக்கு இத்தருணத்தில் நன்றி

[அயோத்திதாச பண்டிதர்]

இத்தகைய ஒரு ஆய்வரங்கிலே பேச நான் பொதுவாக தயங்குவேன். ஏனென்றால் நம்முடைய பண்பாட்டரசியல்சூழல் அவநம்பிக்கைகள் நிறைந்தது.  பாசாங்குகளும் கருத்துத் திரித்தல்கலும் அவதூறுகளும் மண்டியது. தலித்துக்கள் நடத்தும் ஓர் ஆய்வரங்கிலே சென்று தலித்துக்களைவிடப் பெரிய தலித்தாகத் தன்னைக் காட்டிக்கொண்டு கொந்தளித்து மீள்வதென்பது இங்கே ஒரு அரசியல் வியூகம். குறிப்பாக இங்கே நடுநிலைச்சாதிகளைச்சேர்ந்த முற்போக்கு அரசியலாளர்களின் ஆகிவந்த வழி அது . அங்கேயே அக்கருத்துக்களைச் சுத்தமாகத் துடைத்துவிட்டுச் சொந்த இடங்களுக்குத் திரும்பிச்செல்வார்கள் அவர்கள்.

நான் என்னை அதில் ஒருவராக உணர விரும்பவில்லை. ஆகவே இந்த உரையைப் பிறிதொரு மேடையிலே பேசவே விரும்புவேன். இங்கே பாரியின் அழைப்பின் பேரில் இதை ஆற்ற நேர்ந்திருக்கிறது, அவ்வளவுதான்.  இந்த உரையில் நான் முன்வைக்கும் கருத்துக்கள் பல முன்னரே தமிழிலும் மலையாளத்திலும் என்னால் முன்வைக்கப்பட்டவையே. இந்த உரையில் அவற்றை சீராகத் தொகுக்கவிரும்புகிறேன். சரியான விவாதக்களம் மூலம் இவை பிழை களையப்பட்டு விரிவாக்கம் பெறுமென்றால் பின்னர் ஒரு நூலாக விரித்து எழுதமுடியும் என நினைக்கிறேன்.

அயோத்திதாசரை நான் எப்படி அறிமுகம்செய்துகொண்டேன்? 1997 டிசம்பரில் நான் எழுதிய விஷ்ணுபுரம் என்ற நாவல் வெளிவந்தது. அதைப்பற்றி வாசித்தவர்கள் சொன்ன கருத்துக்களைவிட வாசிக்காதவர்கள் வெளிப்படுத்திய கருத்துக்களே பல மடங்கு அதிகம். ஆகவே மிகப் பிழையான ஒரு மனச்சித்திரம் அதைப்பற்றி வாசகரல்லாதவர்களிடம் உள்ளது. அதன் தலைப்பை மட்டுமே எடுத்துக்கொண்டு அது ஒரு இந்துத்துவ நாவல் என்று சொல்லப்பட்டது, சொன்னவர்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டவர்கள். அந்நாவல் அதிகம் வாசிக்கப்படாத ஆரம்பகாலகட்டத்தில் அந்தக்கருத்து பெரும் பிரச்சாரம் மூலம் நிலைநாட்டவும் பட்டது.

ஆனால் கடந்த பதினைந்தாண்டுகளில் கொஞ்சம்கொஞ்சமாக வாசிக்கப்பட்ட அந்நாவல் அந்த அவதூறுப்பிரச்சாரத்தை வெகுவாகவே தாண்டிவந்துவிட்டிருக்கிறது. இந்துத்துவம் அல்லது பிராமணியம் என்று சொல்லப்படும் கருத்தியலை நேர் எதிரான திசையில் நின்று அணுகக்கூடிய ஒரு நாவல் அது. வைதிகம் மீது பௌத்தம் கொண்ட வெற்றியை முன்வைப்பது. இந்துஞானம் என்று சொல்லப்படும் ஒற்றைப்படையான உருவகத்தைப் பிரித்து ஆய்ந்து அது எந்த அளவு பன்மைத்தன்மை கொண்டது என்று காட்டுவது. குறைந்தது ஒரு தகவலையாவது சொல்லிவிடுகிறேன், அதில் உள்ள விஷ்ணுகூட விஷ்ணுவே அல்ல என்பதே அந்நாவலின் கதை.

அந்நாவல் வெளிவந்த வருடம் முழுக்க அந்நாவல் பற்றி உக்கிரமான அவதூறுப்பிரச்சாரம் செய்யப்பட்டது. அதில் முதன்மையாக நின்றவர் அ.மார்க்ஸ். மிகச்சல்லிசான வாதங்கள். ‘பேரைப்பாருங்க, விஷ்ணுபுரம் . எப்டி இப்டி ஒரு தலைப்பை வைக்கலாம்?’ என்று அவர் கத்தியதை நினைவுகூர்கிறேன்.  1998 ஜனவரியில் சென்னையில் அ.மார்க்ஸின் ஆதரவாளர்களால் விஷ்ணுபுரத்தை விமர்சனம்செய்ய ஒரு விவாதக்கூட்டம் ஏற்பாடுசெய்யப்பட்டது. அதில் நான் கலந்துகொண்டேன். அதில் அந்நாவலை வாசித்தவர்கள் சிலரே. ஆனால் ஒரு ஒட்டுமொத்தமான கூட்டுத்தாக்குதலாக அந்த கூட்டம் அமைந்தது. இளமையின் துடுக்கில் நான் அதை சாதாரணமாக எதிர்கொண்டேன்.

அப்போது அ.மார்க்ஸ் ஒரு குற்றச்சாட்டைச் சொன்னார். விஷ்ணுபுரத்தில் பறையர்கள் கோயில் தெருவில் நடமாடுவதாகவும், பறை கொட்டப் பயிற்சி எடுப்பதாகவும் வரும். பிங்கலன் என்ற கதாபாத்திரம் ஒருவரிடம் ‘நீர் பறையரா?’ என்று கேட்பார். அதைச்சுட்டிக்காட்டிய அ.மார்க்ஸ் ஆவேசமாகக் கேட்டார் ‘தமிழகத்தில் தொல்வரலாற்றுக்காலம் முதலே புழுவினும் கீழாக வைக்கப்பட்டிருந்த பறையர்களைப் பிறர் மரியாதையாக நடத்தினார்கள் , அவர்கள் உரிமையுடன் வாழ்ந்தார்கள் என்று இவர் எழுதுகிறார்.  அவர்கள் ரதமிழுக்க ராஜவீதியில் கூடினார்கள்,பறை வாசித்தார்கள் என்கிறார். எந்த ஊரில் நடந்தது இது? இது இவர் கட்டமைக்கும் ஒரு இந்துத்துவ சொர்க்கம். இது ஒரு கருத்துமோசடி’

நான் அதற்குப் பதில் சொன்னேன் ‘பறையர்கள் வரலாறு முழுக்க அடிமைகளாக இருந்தார்கள் என நான் நினைக்கவில்லை. ஒரு புனைவுக்கு ஒரு சித்திரத்தை அளிக்க ஒரு வரலாற்று முகாந்திரம் இருந்தாலே போதும். நீங்கள் சொல்லும் நிகழ்ச்சி கிட்டத்தட்ட ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் நிகழ்கிறது. அன்று பறையர்கள் உயர்நிலையில் இருந்தார்கள் என்பதற்குக் குறைந்தபட்சம் ஒரு ஆதாரமாவது இருக்கிறது. அபிதானசிந்தாமணியில் சிங்காரவேலு முதலியார் அதை பதிவுசெய்கிறார்.

‘இவர்கள் சில திருவிழாக்களில் பிற சாதியாருடன் ஒத்த சுதந்திரர்களாய் இருக்கிறார்கள். பெரும்பாலும் தென்னாட்டில் நடக்கும் இரதோற்சவங்களில் ரதமிழுக்க இவர்களே முன்னிற்கின்றனர். திருவாரூரில் சுவாமிக்குமுன் யானையேறும் பெரும்பறையன் யானைமீது ஏறிக் கவரி வீசிச் செல்கிறான்’ எனப் பதிவு செய்யும் சிங்காரவேலு முதலியார் ‘ ஒன்பதாவது நூற்றாண்டில் பல்லவர் காலத்தில்  இவர்கள் உயர்பதவிகளில் இருந்ததாத் தெரிகிறது. இந்த வள்ளுவர்கள் கோயில்களில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. ‘ஸ்ரீ வள்ளுவம் பூவாணவன் உவச்சன் ஆறுவள்ளுவரை நித்ய கட்டளைக்கு வைத்துக்கொண்டு கோயில்காரியம் நடத்த வேண்டியது’ என்று கல்வெட்டில் சொல்லப்பட்டிருக்கிறது’ என்கிறார்.   நான் இதையே ஆதாரமாகக் கொண்டேன் என்றேன்

ஒரேவார்த்தையில் ’அது ஒரு சைவ மோசடி’ என்று அ.மார்க்ஸ் புறந்தள்ளிவிட்டார்.  சிங்காரவேலு முதலியார் 1899 ல் தலித் அரசியல் பரவலாகப் பேசப்படுவதற்கு முன்னரே,சாதி ஒழிப்பு கருத்துக்கள் உருவாவதற்கு முன்னரே வெளியிட்ட நூல் அபிதான சிந்தாமணி. அவருக்கு சாதி மறுப்புநோக்கமும் இல்லை. அவர் ஒரு ஆவணநிபுணர், அவ்வளவுதான். நான் சொல்வது ’ ஒரு இந்து நாயர் அரசியல்’ என்றார் மார்க்ஸ். ’உங்கள் மனதில் சாதியே எல்லாவற்றுக்கும் அளவுகோல். அதே அளவுகோலின்படி நீங்கள் சொல்வது கிறிஸ்தவநாடார் அரசியல்’ என்றேன். கடும் கோபத்துடன் ஒரு நூலை ஓங்கியபடி என்னை நோக்கி வந்தார்.

அந்தக்கூட்டம் முடிந்தபின் நானும் பொ.வேல்சாமியும் பேசிக்கொண்டு சென்றபோது ஒருவர் என்னிடம் வந்து பேசினார். ‘பறையர் பற்றி நீங்கள் சொன்ன விஷயங்கள் உண்மைதான். அயோத்திதாசர் இதைப்பற்றி நிறைய எழுதியிருக்கிறார்’ என்றார். நான் ‘அயோத்திதாசர் யார்?’என்று கேட்டேன். அவர் ஆச்சரியத்துடன் ‘உண்மையிலேயே தெரியாதா?’ என்றார். ‘தெரியாது…கேள்விப்பட்டதே இல்லை.’ என்றேன்.’எதையெதையோ தோண்டித்தோண்டி வாசித்த உங்கள் கண்ணில் அயோத்திதாசர் மட்டும் ஏன் படவில்லை?’ என்றார். நான் மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன்.

[அன்பு பொன்னோவியம்]

அவருடன் வந்த இன்னொருவர் பின்னர் என்னைச் சென்னையில் நுங்கம்பாக்கம் அருகே இருந்த ஒரு வீட்டுக்குக் கொண்டுசென்றார்.  அது அன்பு பொன்னோவியம் என்ற  வயதான மனிதரின் இல்லம். அவரிடம் நான் சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் எனக்கு அயோத்திதாச பண்டிதர் பற்றிய நூலைக் கொடுத்தார். சில துண்டுப்பிரசுரங்களையும் அளித்தார். அந்நூலை அப்போது நான் வாசித்து மலையாளத்தில் சிறிய குறிப்பினையும் எழுதினேன். சில கட்டுரைகளிலும் குறிப்பிட்டிருந்தேன்.

ஆனால் அயோத்திதாசரை நான் முழுமையாகக் கண்டடைந்தது அடுத்த வருடம் 1999 ல் ஞான அலாய்சியஸ் அவர்களால் ஆய்வுப்பதிப்பாக பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் துறையால் வெளியிடப்பட்ட அயோத்திதாசர் சிந்தனைகள் என்ற இரு தொகுதி நூல்கள் வழியாக.ஃபாதர் ஜெயபதி அவர்களிடமிருந்து அந்நூல்களை ஆரம்பத்திலேயே வாங்கிய சிலரில் நானும் ஒருவன். அந்தப் பெருந்தொகை தமிழில் ஆழமான பாதிப்புகளை, விவாதங்களை உருவாக்கும் என நான் நினைத்தேன். ஆனால் அப்படி எதுவும் நிகழவில்லை. அவரைப்பற்றிப் பாராட்டாகச் சில சொற்களைச் சொல்லிவிட்டுத் தமிழ்ச்சூழல் அமைதியடைந்துவிட்டது.

அந்நூலின் அமைப்பும் அதற்கு ஒரு காரணம். அதன் பெரும்பகுதி அன்றைய அரசியல்சூழல் பற்றிய விவாதங்களும் கடிதங்களும் மனுக்களும் அடங்கியது. அச்சூழலை இன்று மீண்டும் கற்பனையில் உருவாக்கிக்கொண்டே அதைப்பற்றி பேசமுடியும். அது எல்லாராலும் சாத்தியப்படுவதல்ல. இன்னொன்று, அதைவிட முக்கியமானது அந்த அரசியல்சூழலை அதிகமாக முன்னிறுத்தினால் தமிழ்நாட்டில் உருவான முதல் அரசியலெழுச்சி என்பதே தலித் அரசியல் என்று சொல்லவேண்டியிருக்கும். பின்னர் உருவான காங்கிரஸ் அரசியலும் அதன் பின் உருவான திராவிட அரசியலும் அதைப் படிப்படியாக மறைத்து இல்லாமலாக்கின என்றும் சொல்லவேண்டியிருக்கும்.

அனைத்துக்கும் மேலாக ஈவேரா அவர்களைத் தலித்துக்களின் மீட்பராகக் கட்டமைக்கும் இன்றைய அரசியல் புனைவுகளை முழுமையாக மறுக்கவேண்டியிருக்கும். அன்பு பொன்னோவியம் என்னிடம் அதைத்தான் சொன்னார். அதனாலேயே பண்டிதர் மறைக்கப்பட்டார் என்று சொன்னார். தலித் மக்களின் தாழ்ந்தநிலையை ஆழ்ந்த அனுதாபத்துடன் முன்வைப்பவர்கள்,அவர்கள் நேற்று உயர்நிலையில் இருந்திருக்கலாமென்பதை எப்படி ஆவேசமாக மறுக்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

பொதுவாக நேரடி அரசியல் விஷயங்களைப் பேசுவதைத் தவிர்ப்பவன் என்பதனால் நான் தலித்அரசியல் பற்றிய விவாதங்களில் தலையிட்டதில்லை. இப்போதும் இந்த விவாதங்களுக்குள் செல்ல நினைக்கவில்லை. நான் அயோத்திதாசரைக் கண்டடைந்தது பௌத்தம், அவைதிக சிந்தனைகள் போன்றவற்றை ஆராயும்போதுதான். அந்த சிந்தனைகளில் உள்ள முக்கியமான சில விடுபடல்களை சில இடர்களை அயோத்திதாசரின் அணுகுமுறை வெற்றிகரமாக எதிர்கொள்கிறது என்று கண்டுகொண்டேன். அதன்பொருட்டு அந்தக் கோணத்தில் பண்டிதரை வாசித்தேன். நான் அவரைக் குறிப்பிட்டதெல்லாமே அவர் இந்திய சிந்தனைமரபை மதிப்பிடுவதற்கு ஒரு முக்கியமான வழி ஒன்றைத் திறந்துகாட்டுகிறார் என்பதனால்தான்.

அயோத்திதாசரின் முகங்கள்

நாராயணகுருவைப்பற்றி பேசும்போது 1967ல் நாராயணகுரு தொகைநூலில் பி.கெ.பாலகிருஷ்ணன் சொன்னார். ‘நாராயணகுருவை எதிர்கொள்ளக் கேரளசமூகம் மிகவெற்றிகரமான ஒரு நாடகத்தை நடிக்கிறது. அவரை ஈழவர்களின் குருவாக, ஈழவசாதியின் மீட்பராக, உணர்ச்சிகரமாகப் பேசி முன்னிறுத்துகிறது. ஈழவர்களும் அதை உடனடியாக ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் மானுடகுலத்துக்காகச் சிந்தித்த மெய்ஞானியும் தத்துவப்பேரறிஞரும் கவிஞருமான நாராயணகுருவை அதன்மூலம் வெற்றிகரமாக ஒரு சிறு செப்புக்குள் அடைத்துவிடுகிறார்கள். அவர் சிந்தனையாளர் அல்ல ஈழவச் சிந்தனையாளர். என்ன ஒரு மோசடி’

கிட்டத்தட்ட அதேதான் அயோத்திதாசர் விஷயத்திலும் நிகழ்கிறது என நினைக்கிறேன். அவரைப்பற்றிப் பேசியதுமே தலித் சிந்தனையாளர் என்று சொல்லிவிடுகிறார்கள். அந்த அடையாளம் அவரது பல முகங்களைச் சட்டென்று இல்லாமலாக்கிவிடுகிறது. அவர் தலித் சிந்தனையாளர், தலித்போராளி என்பதெல்லாம் உண்மை. அவரது சிந்தனைகளை அந்தத் தளத்துடன் இணைத்தே புரிந்துகொள்ளவும் வேண்டும். ஆனால் அவரது சிந்தனைத்தளத்தின் பங்களிப்புகளைத் தனியாகவே ஆராயவேண்டும்.

அயோத்திதாசரைத் தமிழில் ஒரு உண்மையான தத்துவ விவாத மரபை உருவாக்க முயன்ற முன்னோடி என்ற கோணத்திலும் ஆராயவேண்டும் என்பது என்னுடைய எண்ணம். அந்தக் கோணத்தில் அவரை எதிர்த்தோ ஆதரித்தோ எப்படிவேண்டுமானாலும் விவாதம் எழலாம். ஆனால் இன்றுள்ள புறக்கணிப்பு இனிமேலாவது முடிவடைய வேண்டும். நான் சொன்னதுபோல அவரை ’வெறும்’ ஒரு தலித் சிந்தனையாளர் என்று முத்திரை குத்துவதே முக்கியமான புறக்கணிப்பாகும்.

ஆனால் உண்மையில் அப்படி ஏதேனும் விவாதங்கள் நிகழுமா என எனக்கு சந்தேகமாகவே இருக்கிறது. ஏனென்றால் என் இருபதாண்டுக்கால இலக்கிய வாழ்க்கையில் முதல்முறையாக ஆற்றப்போகும் ஓர் உரை,பரபரப்பை உருவாக்கியிருப்பதைக் காண்கிறேன்.இருவகை எதிர்வினைகள். ஒன்று, பாரியின் தரப்புக்கு ஆற்றப்படுகிறது. ’இன்னின்னார் இருக்கிறார்களே, இவர்களைக் கூப்பிடலாமே, இவர்களைவிட்டுவிட்டு ஏன் அவருக்கு மேடை அமைக்கிறீர்கள்? அவர் இந்துத்துவா அல்லவா’.அவர் கேட்டதாகச் சொன்னார் ‘உண்மைதான். ஆனால் அயோத்திதாசர் எழுதி நூறு வருடமாகிறது. அவரை நாங்கள் மீட்டெடுத்துப் பதினைந்து வருடமாகப்போகிறது. இதுவரை நீங்கள் அவரைப்பற்றி ஏன் எழுதவில்லை?’

இன்னொருதரப்பு எனக்கு எதிர்வினையாற்றுகிறது. ’நீ என்ன பேசப்போகிறாய் என்று தெரியும். நீ பெரியாரை மட்டம்தட்ட இந்த மேடையைப் பயன்படுத்தப்போகிறாய்’ என்றவகையில் ஆவேசமான எதிர்வினைகள். இன்னொரு பக்கம் அன்பாகக் கூப்பிட்டு ‘ரொம்ப ஒன்றும் சொல்லிவிடவேண்டாம். அவர் முக்கியமானவர்தான். தலித்துக்களுக்கு எவ்ளவோ பண்ணியிருக்கார். அவ்வளவு மட்டும் சொல்லுங்க.அதுக்குமேலே சொன்னா அப்றம் அவரை பொலிடிகலா  பெரிசா நிலைநாட்டிருவாங்க’  இந்தவகையில் நல்லுபதேசமளித்த எவரும் எனக்கு நெருக்கமானவர்கள் அல்ல. ஐந்து வருடத்திற்கு ஒருமுறைகூட என்னிடம் தொலைபேசியில் பேசாதவர்கள்.

உண்மையில் இங்கே என்ன நடக்கிறதென்றே எனக்கு புரியவில்லை. இந்த அளவுக்கு ரகசிய நீரோட்டங்கள் இருக்கிறது என்பதே எனக்குப் புதிய செய்திதான். என் வழக்கப்படி அப்பட்டமாக நேரடியாக எனக்குத் தோன்றுவதைச் சொல்லிவிட்டுப்போகலாமென நினைக்கிறேன்.

அயோத்திதாசர் பற்றி அன்பு பொன்னோவியம், ஞான அலாய்ஸியஸ் ஆகியோர் சிறந்த முறையில் குறிப்புகளுடன் பதிப்பித்த நூல்களுக்கும் அவர்கள் அவரைப்பற்றி ஆற்றிய சொற்பொழிவுகளுக்கும் பெரும் முக்கியத்துவம் உண்டு. இவை தவிரப் பலநூல்கள் எழுதப்பட்டுள்ளன. பல்வேறு பிரச்சினைகள் பேசப்பட்டுள்ளன. பெரும்பாலானவற்றில் நான் வெறும் பார்வையாளனாகவே நின்றுவிட விரும்புவேன். ஒரு சமகால அரசியல் சூழல் என்பது கருத்துமோதலும் அகங்கார மோதலும் நுண்ணிய சதிவேலைகளும் பின்னிப்பிணைந்த ஒன்று.  அவற்றில் எழுத்தாளன் உள்ளே நுழைந்தால் மீளவே முடியாது. சமகால அரசியலை எழுத்தாளன் தவிர்ப்பதே நல்லது என்பது என் எண்ணம்.

[ராஜ் கௌமதன்]

நான் ஒரே ஒரு நூலை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். பேராசிரியர் ராஜ்கௌதமன் அவர்களால் எழுதப்பட்ட க.அயோத்திதாசர் ஆய்வுகள். தமிழில் இத்தளத்தில் எழுதப்பட்ட ஒரு மகத்தான ஆய்வுநூல் என அதைச் சொல்வேன். இருபதாண்டுகளாக பௌத்தம் பற்றி நான் வாசித்து வந்தாலும் இதில் பௌத்தம் பற்றிச் சுருக்கமாக அளிக்கப்பட்டிருக்கும் பகுதிகளின் செறிவு ஒரு பேரறிஞரின் திறன் என்ன என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

சென்ற பதினைந்தாண்டுக்காலத்தில் ராஜ்கௌதமன் தமிழ்ப்பண்பாடு பற்றி மிகமிக முக்கியமான சிலநூல்களை எழுதியிருக்கிறார். அவை அதிகம் பேசப்படாது போனது வருத்தமளிப்பது. தமிழினி வெளியீடாக வெளிவந்த ’பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச்சமுக உருவாக்கமும்’ , ’ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும்’ என்ற இரு நூல்களையும் நான் தமிழின் நூறாண்டுக்காலப் பண்பாட்டு ஆய்வுத்தளத்தில் நிகழ்ந்த மிகமுக்கியமான சாதனைகளில் ஒன்றாகவேதான் முன்வைப்பேன். அவற்றைப் புறக்கணித்து ஒருதமிழாய்வே சாத்தியமில்லை. அவை வெளிவந்த காலகட்டத்தில் அவற்றைப்பற்றி நான் எழுதியிருக்கிறேன். ஆனால் நான் பண்பாட்டாய்வாளனல்ல. பண்பாட்டாய்வுத்தளத்தில் பெரிய எதிர்வினைகள் வருமென நினைத்தேன், வரவில்லை.

ராஜ் கௌதமனின் அயோத்திதாசர் ஆய்வுகளை அவரது மேலேசொன்ன இரு பெரும் ஆய்வுநூல்களின் பின்புலத்தில் அவற்றின் நீட்சியாக வைத்து வாசிக்கவேண்டுமென நினைக்கிறேன். ராஜ் கௌதமன் அவர்கள் இந்நூலில் அயோத்திதாச பண்டிதரின் சாதனைகளையும் சிக்கல்களையும் விரிவாகவே சொல்லிச்செல்கிறார். அவற்றுக்கு மேலாக நான் புறவயமாக ஒன்றும் சொல்வதற்கில்லை. நான் முன்வைக்க விரும்புவது நம்முடைய சிந்தனைமரபை ஆராய்வதில் பண்டிதரின் ஆய்வுக்கோணம் அளிக்கும் வாய்ப்புகளைப்பற்றி மட்டுமே. இங்கே பேசப்போவதும் அதைப்பற்றி மட்டுமே.

[மேலும்]

[ 30-07-2011 அன்று மதுரை அயோத்திதாசர் ஆய்வு நடுவத்தில் ஆற்றிய உரையின் முன்வடிவம்]

அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர்  7
அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர்- 6
அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 5
அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 4
அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 3
அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 2
அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 1
ராஜ் கௌதமனின் இரு நூல்கள்
முந்தைய கட்டுரைஒரு சிறுவனின் கடிதம்
அடுத்த கட்டுரைஅயோத்திதாசர் என்னும் முதற்சிந்தனையாளர்- 7