அன்புள்ள ஜெ
இலக்கியவாதிகளின் மேடைப்பேச்சு பற்றி பலமுறை எழுதியிருக்கிறீர்கள். இன்று ஒரு விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது. புத்தகக் கண்காட்சிகளில் ஏன் பேச்சாளர்களை அழைக்க வேண்டும், இலக்கியவாதிகளை மட்டும் அழைத்துப் பேசவைத்தால் போதுமே என்று கேட்கிறார்கள். இன்னொரு சாரார் இலக்கியவாதிகள் பேச்சாளர்களாக ஆகக்கூடாது என்கிறார்கள். நல்ல எழுத்தாளர்கள் பேச்சாளர்கள் அல்ல என்று ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. எழுத்தாளர்களை பேசச்சொல்லக் கூடாது, அவர்களிடம் கேள்விபதில் நிகழ்வுகளை அமைக்கவேண்டும் என்றும் சொல்கிறார்கள். இந்த விவாதமே ஆளுக்காள் இழுக்கும் திசையில் சென்றுகொண்டிருந்தாலும் இலக்கியவாதிகளின் உரை பற்றி இன்றாவது ஒரு சின்ன விவாதம் ஆரம்பித்த அளவில் மகிழ்ச்சி என நினைக்கிறேன்.
ஜெய்சிங் ராஜ்
***
அன்புள்ள ஜெய்சிங்
நான் பல ஆண்டுகளாகச் சொல்லிவரும் சில விஷயங்கள் இவ்விவாதத்தில் பயனுள்ளவை. அவற்றை மீண்டும் தொகுத்துச் சொல்லலாம் என நினைக்கிறேன்
பொதுவாக இப்படிப்பட்ட கருத்துக்களைச் சொல்பவர்களுக்கு இலக்கியம் அல்லது இலக்கிய வரலாறு எந்த அளவுக்கு தெரியும் என்பதே நாம் கேட்கவேண்டியது. பலசமயம் தன்னால் பேசமுடியாத நிலையை சமாளிக்க சின்னச்சின்ன எழுத்தாளர்கள் சொல்லும் சமாளிப்பு மட்டும்தான் இது.
அ. சொற்பொழிவுக்கலையின் தோற்றம்
மேடைப்பேச்சு என்னும் கலை இன்றைய வடிவில் இருநூறாண்டுகளாகவே உலகமெங்கும் உருவாகி நிலைகொண்டுள்ளது. அது நவீன ஊடகம், நவீன ஜனநாயகம் ஆகியவற்றுடன் தொடர்புடையது.
சொற்பொழிவுக் கலையின் தொடக்கம் கிரேக்கம் எனப்படுகிறது. அரிஸ்டாடில் கலைகளில் அதுவே முதன்மையானது என்கிறார். கிரேக்க அரசியல்வாதியான டெமஸ்தனிஸ் மாபெரும் பேச்சாளர் என கிரேக்க வரலாறு கூறுகிறது. பேச்சாளர்களுக்குரிய தெய்வம் ஹெர்மிஸ் எனப்படுகிறது.
பேச்சு மிக இயல்பான ஒரு வெளிப்பாடு என்பதனால் பாடல் போலவே அதுவும் மிக தொன்மையானதாக இருந்திருக்கலாம். மகாபாரதத்திலேயே பல சொற்பொழிவுத் தருணங்கள் உள்ளன. பீஷ்மர் முதலிய மூத்தவர்களும், ரிஷிகளும் அவைகளில் சொற்பொழிவாற்றினர்.
ஆனால் அந்த உரைகள் எல்லாமே சிறிய கூடுகைகளுக்கானவை. தேவாலயம், அல்லது அரசர் அவை, அல்லது சிறிய நகர்மன்றங்கள். இந்தியச் சூழலில் உரையாற்றுவதென்பது சான்றோரவைகளில், அரசவைகளில் நிகழ்ந்துள்ளது என நூல்கள் சொல்கின்றன. மதப்பரப்புதலுக்குரிய உரைகளும் இருந்தன. அவையும் சிறிய அவைகளுக்குரியவையே.
நவீன தொழில்நுட்பமும், நவீன ஜனநாயகமும் உருவாக்கிய ஒரு தொடர்புமுறை என இன்றைய பொதுச்சொற்பொழிவு முறையைச் சொல்லலாம். ஒலிப்பெருக்கி இல்லாமல் பலர் கூடி அமரும் பெரிய அவைகள் இயல்வதல்ல. பொதுவெளி உரைகளும் அதன்பின்னரே உருவாயின. ஜனநாயகம் வந்த பின்னர்தான் அத்தனை மக்களும் வந்தமரும் அவைகள் உருவாயின.
இந்த வேறுபாடு நம் புரிதலில் இருக்கவேண்டும். சக அறிஞர்களை நோக்கி, சிறு சபை நோக்கி உரையாடும் சொற்பொழிவு முன்பு இருந்தது. மக்களை நோக்கி உரையாடும் சொற்பொழிவு என்பது ஒரு நவீன வடிவம். அதை பொதுச்சொற்பொழிவு எனலாம். அதற்குரிய முறைமைகள், அதற்கான வடிவ ஒருமை என எல்லாமே சென்ற இருநூற்றைம்பது ஆண்டுகளாக உலகளவில் உருவாகி வந்த ஒன்று
பொதுச்சொற்பொழிவு என்னும் வடிவம் உருவானதுமே மிக ஆற்றல் வாய்ந்த ஊடகம் என கண்டடையப்பட்டது. அதில் பெருந்திறனாளர்கள் உருவானார்கள். எட்மண்ட் பர்க், சர்ச்சில், மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் ,லியோன் டிராட்ஸ்கி என பெரும் பேச்சாளர்களின் பெயர்களின் நீண்ட வரிசை வரலாற்றில் உண்டு.
மூன்று தளங்களில் சொற்பொழிவு முதன்மைப் பங்களிப்பாற்றியது. ஒன்று, மதச்சீர்திருத்தம். இரண்டு, சமூகசீர்திருத்தம். மூன்று ஜனநாயக அரசியல். இம்மூன்று களங்களிலும் பெருவாரியான மக்களின் கருத்தை உருவாக்கவும் திரட்டவும் வேண்டியிருந்தது. அதற்குச் சொற்பொழிவு மிக உதவியானது. சென்ற முப்பதாண்டுகளாகவே அதற்கு மாற்றான நவீன ஊடகங்கள் தோன்றியுள்ளன.
சொற்பொழிவுக் கலை உருவானதும் அது மூன்று களங்களில் நேரடியான செல்வாக்கு செலுத்தியது. ஒன்று, தேவாலயங்களின் உரை. முன்பிருந்த பாடல்போன்ற உரைமுறைகள் மறைந்து நவீனச் சொற்பொழிவுகள் நிகழலாயின. இரண்டு. கல்வி. பேராசிரியர்கள் வகுப்புகளில் சொற்பொழிவாற்றும் முறை உருவானது. மூன்று, நீதிமன்றம். வழக்கறிஞர்கள் சொற்பொழிவாளர்களாக ஆகவேண்டுமென்னும் நிலை உருவானது.
இந்தியாவில் சொற்பொழிவு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர்தான் ஐரோப்பாவிலிருந்து வந்து சேர்ந்தது. இந்தியாவில் சொற்பொழிவு சீர்திருத்த கிறிஸ்தவ மதப்பிரச்சாரகர்கள் வழியாகவே அறிமுகமாகியது என்று சொல்லலாம். அவர்கள் முச்சந்திகளில்கூட உரையாற்றினர். விரைவிலேயே அவர்களுக்கு எதிரான சைவ, வைணவ சொற்பொழிவாளர்கள் உருவாகினர். அவர்களும் சொற்பொழிவுப் பாணியை கடைப்பிடித்தனர். பலசமயம் சிலகாலம் கிறிஸ்தவர்களாக இருந்தோ, அல்லது அவர்களிடம் அணுக்கமாகப் பழகியோ அந்த சொற்பொழிவு முறையை கற்றுக்கொண்டவர்கள்தான் சைவ, வைணவச் சொற்பொழிவாளர்களாக மாறினர்
ஆறுமுக நாவலர், சூளை சோமசுந்தர நாயக்கர், வள்ளலார், ஞானியாரடிகள் என தொடக்ககால மாபெரும் சொற்பொழிவாளர்கள் பலர். மறைமலை அடிகள், திருவிக என அந்த மரபு தொடர்ந்தது. குன்றக்குடி அடிகளார், புலவர் கீரன் என வளர்ந்து நீடிக்கிறது.
அரசியல் சார்ந்த சொற்பொழிவாளர்களாக மலர்ந்தவர்கள் பெரும்பாலும் வழக்கறிஞர்களாகவோ பேராசிரியர்களாகவோ திகழ்ந்தவர்கள் என்பதை இந்தப்பின்னணியிலேயே நாம் புரிந்துகொள்ள வேண்டும். அ.சீனிவாசராகவன், ரா.பி.சேதுப்பிள்ளை, நீதிபதி மகாராஜன், நீதிபதி மு.மு.இஸ்மாயீல் என பல உதாரணங்கள்.
ஆ. சொற்பொழிவின் வடிவங்கள்
சொற்பொழிவு என்றதுமே அதை ஒரு குறிப்பிட்ட வகையான வெளிப்பாட்டு வடிவம் என பொத்தாம்பொதுவாகச் சொல்வது இங்கே வழக்கமாக உள்ளது. அது பிழையான ஒன்று. இலக்கியம் என்றால் ஒரேவகையான வெளிப்பாடு என ஒருவர் சொன்னால் எப்படி பிழையாகுமோ அப்படி. சொற்பொழிவு வடிவங்கள் வேறு வேறு. சொற்பொழிவாளரின் இயல்புக்கு ஏற்ப சொற்பொழிவு முறையும் மாறுபடும்.
சொற்பொழிவுகள் நிகழும் களங்களை ஒட்டி அவற்றை வகைப்பிரிக்கலாம். அதைப்போல சொற்பொழிவுகள் கொண்டுள்ள உள்ளடக்கம் சார்ந்தும் அவற்றை வகைப்பிரிக்கலாம்.
அ. விவாத உரைகள்
ஒரு குறிப்பிட்ட விவாதச் சூழலில் ஒரு தரப்பை எடுத்துக்கொண்டு அதற்கு எதிர்த்தரப்பை மறுத்து , தன் தரப்பை விவாதித்து நிறுவும் உரைகள்.
இவற்றின் வடிவம் அந்த பேச்சாளர் எடுத்துக்கொண்ட தரப்பை மையம் என கொண்டது. அவர் முன்வைக்கும் வாதங்கள் வழியாக படிப்படியாக அது விரிவடையும். இந்த வகை உரைகள் எதிர்தரப்பின் மீதான மறுப்பு , தன் தரப்பு என ஊசலாடிக்கொண்டிருக்கும். நாம் கேட்கும் பெரும்பாலான அரசியலுரைகள் இத்தகையவை. இவையே அதிகமும் சுவாரசியமாக கேட்கப்படுகின்றன. ஏனென்றால் இவற்றில் ஒரு தொடர்ந்த தர்க்கம் உள்ளது. அது கேட்பவனை இட்டுச்செல்வது. அதோடு கேட்பவன் ஏற்கனவே அந்த விவாதச் சூழலில் இருப்பதனால் சொற்பொழிவுடன் அவன் எளிதில் உளம் இணைந்துகொள்கிறான்
ஆ. அறிவுறுத்தல் உரைகள்.
ஒரு குறிப்பிட்ட கருத்தையோ, எண்ணத்தையோ பேச்சாளர் விரிவாக உரைத்து கேட்பரை அதை நோக்கி ஆற்றுப்படுத்தும் தன்மை கொண்ட உரைகள். பெரும்பாலான மதப்பேருரைகள் இத்தன்மை கொண்டவை. தத்துவ உரைகளிலும் இந்த வடிவம் உண்டு. தன்னுடைய எண்ணங்களை பேச்சாளர் பல படிகளாக எடுத்து வைத்து, அவற்றின்மேல் கேட்பவர் கொள்ளும் ஐயங்களை களைந்து, அவரை ஏற்கவைக்கும் இயல்பு கொண்டவை இவை. பிரச்சார உரைகள் எல்லாமே இந்தவகையானவை.
இ. விளக்கவுரைகள்
ஒரு நூலை, அல்லது ஒரு கருத்துத்தொகுப்பையோ எடுத்துக்கொண்டு விளக்கம் அளிப்பதும் விரித்துச் சொல்வதும் இவ்வகையான உரையின் இயல்பு. பைபிள் அல்லது கீதை அல்லது குர்ஆன் உரைகள் இத்தகையவை. குறள் போன்ற நூல்களையும் இவ்வாறு விரித்துரைப்பதுண்டு. கார்ல் மார்க்ஸ் போன்ற அரசியல் சிந்தனையாளர்களின் நூல்களை இவ்வாறு விரித்துப்பேசுவதும் நிகழ்கிறது. இந்த உரைகளின் வடிவம் அந்த மூலநூலின் கட்டமைப்பைச் சார்ந்தே உள்ளது.
உ. தன்னுரைகள்
ஒரு பேச்சாளர் பேசுபொருள் சார்ந்து தன் எண்ணங்களை, உணர்வுகளை முன்வைப்பது இவ்வகை உரை. இது பேசுபவருக்கும் கேட்பவருக்குமான ஓர் உறவின் வழியாக நிகழ்கிறது. கிட்டத்தட்ட மேடையில் சிந்திப்பது, மேடையில் வெளிப்படுவதுதான் இது.
ஊ. கேளிக்கை உரைகள்
இவை பலவகை. இவற்றுக்கு உலகமெங்கும் பெரும் சந்தை உண்டு. கேட்பவரை மகிழ்விப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டவை. கற்பித்தல் அம்சமும் கொஞ்சம் சேர்ந்துகொள்ளக்கூடும். கதைகள், நகைச்சுவைகள், உணர்ச்சிகரமான மெய்ப்பாடுகள் ஆகியவை இணைந்து நிகழும் ஒருவகை மேடைக்கலை இது.
எ. சடங்குரைகள்
பல்வேறு வகையான வாழ்த்துக்கள், இரங்கல்கள் என நாம் அன்றாடம் இத்தகைய உரைகளை நிகழ்த்தவும் கேட்கவும் வேண்டியிருக்கிறது. சமூகச் செயல்பாட்டின் ஒரு பகுதி இவை.
இவ்வாறு பலவகையான உரைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றுக்கும் அவற்றுக்கான மரபுகளும் , மனநிலைகளும், வடிவ முறையும் இயல்பாக உலகமெங்கும் உருவாகி வந்துள்ளன.
இங்கே தமிழ்நாட்டில் நாம் ஆற்றவிருப்பது என்னவகையான உரை என்னும் பிரக்ஞை பேச்சாளர்களுக்கு இருப்பதில்லை. கேட்பவர்களுக்கும் அந்த வேறுபாடு தெரிவதில்லை. ஆகவே இரங்கல்கூட்டத்தில் பிரச்சாரப் பேருரையாற்றுவது, திருவிழாவில் திருக்குறள் விளக்கம் என அபத்தமாக வெளிப்படுகிறார்கள்.
உரைவடிவமும் நீளமும்
ஓர் உரையின் இயல்பென்ன, என்ன வகைமையைச் சேர்ந்தது என்பதைக் கொண்டே அதன் மற்ற கூறுகளை வகைப்படுத்த முடியும். அதை எவர் எங்கு ஆற்றவேண்டும் என வகுக்கமுடியும்.
உதாரணமாக ஒரு சடங்குரை எந்தச் சூழலில் ஆனாலும் இருபது நிமிடங்களை தாண்டலாகாது. ஏழுநிமிடம் என்பதே இன்றைய உலக நியதி. சுருக்கமாக இருக்க இருக்கத்தான் பொருத்தம்.
உரைகளின் நீளம்தான் அவற்றின் வடிவத்தை தீர்மானிக்கவேண்டும். ஏழு நிமிட உரைகள், இருபது நிமிட உரைகள் சிற்றுரைகள் என்னும் வகைமையைச் சேர்ந்தவை. அவற்றில் ஒரு மையம் மட்டுமே வெளிப்பட முடியும். அவற்றுக்கான கட்டமைப்பு ஒன்று உண்டு. நாற்பது நிமிடம் அல்லது ஒரு மணிநேரம் நிகழ்வது உரை. அதற்கான கட்டமைப்பே வேறு.
சிற்றுரை என்பது சிறுகதை போல. தீவிரமான தொடக்கம், இறுதிநோக்கி பாய்ந்துசெல்லும் தன்மை, உச்சம் ஆகியவை கொண்டது. உரை என்பதை குறுநாவல் எனலாம். அதிலும் அதே கட்டமைப்புதான். ஆனால் அதன் உட்ல் பகுதியில் ஓரிரு விரிவுகள் இருக்கலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட விஷயங்களை அது முன்வைக்கலாம்.
ஒரு மணிநேரம் அல்லது அதற்கு மேல் நீளும் உரை என்பது பேருரை. அதை ஒரு வகை ஆய்வு எனலாம். அதன் இயல்பு சொல்ல வந்ததை முழுமையாக்கிச் சொல்வதே. அதற்குத்தான் அவ்வளவு நேரத்தை அது கோருகிறது. அதை நாவல் என்று சொல்லலாம்.
ஆகவே, ஆற்றப் போகும் அளவு என்ன, அதன் வடிவம் என்ன என்று ஒரு பேச்சாளன் முன்னரே முடிவுசெய்துகொள்ள வேண்டும். சிற்றுரை ஒன்றை ஆற்ற வேண்டிய இடத்தில், அப்படி தொடங்கி, நினைவுக்கு வரவர நீளமாக்கிக் கொண்டே சென்று, ஒன்றரை மணிநேரம் பொழிந்து முடிப்பது அசட்டுத்தனம். அரங்கினர் மீதான நேரடி வன்முறை.
ஒன்றுக்கு மேல் பேச்சாளர் உள்ள அரங்கில் எக்காரணம் கொண்டும் ஒரு பேருரை ஆற்றப்படக்கூடாது. அது பயனற்றது என்பதுடன் கேட்பவர்களை கொடுமைக்குள்ளாக்குவது. ஒரே மேடையில் இரண்டு பேருரைகள் என்பதைப்போல கொடுந்தண்டனை அரங்கினருக்கு வேறில்லை.
ஒருவர் ஒரு பேருரை ஆற்றவேண்டும் என்றால், ஒரு மணிநேரத்துக்கு மேல் பேசவேண்டும் என்றால், அவர் மட்டுமே அந்த அரங்கில் பேருரை ஆற்றவேண்டும். அது மட்டுமே அழைப்பிதழிலும் அறிவிப்பிலும் முதன்மையாகச் சொல்லப்பட்டு அரங்கினர் அதன்பொருட்டே வந்திருக்க வேண்டும். அந்த உரை பேருரை என தெரியாத அரங்கினர் இருக்கக் கூடாது.
பலர் பேசும் அரங்குகளில் நாற்பது நிமிட உரையே அதிகபட்சமானது. வாழ்த்து போன்ற உரைகள் என்றால், உரைக்குப்பின் வேறு நிகழ்ச்சிகள் உண்டு என்றால் இருபது நிமிடம் அதிகபட்சம். ஏழு நிமிடம் சிறப்பு. சிற்றுரைகளின் முதல் நியதியே ‘ஒன்றைச் சொல்க’ என்பதுதான்.
(மேலும்)