வைக்கம் -மாபெரும் பிரச்சார இயந்திரம்

இன்றைய காந்தி வாங்க

உரையாடும் காந்தி வாங்க

அன்புள்ள ஜெ

பெரியாரின் வைக்கம் போராட்டப் பங்களிப்பு பற்றிய பிரச்சார இயந்திரம் மீண்டும் அதிவேகமாக இயங்க தொடங்கியிருக்கிறது. அவர்களுக்கு இருக்கும் பாதுகாப்பின்மை புரிகிறது. நேற்று இதை கண்டேன். “பெரியாரின் பங்களிப்பை மறுப்பவர்கள் (ஜெயமோகன்) தங்களது விருப்பத்தை வெளிப்படுத்துகிறார்கள். வைக்கம் போராட்டத்திற்கு உயிரூட்டிய பெரியார்”

இந்தப்பிரச்சாரத்தை எதிர்கொள்ள போகிறீர்களா? அல்லது அவ்வளவுதானா?

ஆனந்த்ராஜ்

அன்புள்ள ஆனந்த் ராஜ்,

தமிழ்நாட்டில் நிலைநிறுத்தப்பட்டிருந்த ‘சித்தரிப்புகள்’ இவை. பாடநூல்களில் இப்படி எழுதி, கற்பிக்கப்பட்டிருந்தது. சுவரெழுத்துக்கள் தமிழகம் முழுக்க இப்படி எழுதப்பட்டன. பக்கம் பக்கமாக நூல்கள் இதே வரிகளுடன் எழுதப்பட்டன. மேடைப்பேச்சுகள் சொல்லவே வேண்டாம். இன்றும் இவ்வரிகளை நீங்கள் காணலாம்.

அ.  Periyar launched Vaikom Struggle

ஆ. வைக்கத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிமையை ‘வாங்கிக்கொடுத்தவர்’ பெரியார்.

இ. வைக்கத்தில் ஆலய நுழைவுப்போராட்டத்தை நடத்த தலைவர்களே இல்லை. பெரியாரை அழைத்தார்கள். அவர் சென்று போராட்டத்தை நடத்தி வெற்றி வாங்கிக் கொடுத்தார்.

ஈ. வைக்கம் போராட்டத்தை தொடங்கி நடத்தி முடித்தமையால் அவர் வைக்கம் வீரர் என அங்கிருந்தோரால் புகழப்பட்டார்.

*

வைக்கம் போராட்டம் முழுக்க முழுக்க ஒரு காந்தியப்போராட்டம், காந்தியின் வழிகாட்டலில் காந்திய முறைப்படி நடந்த போராட்டம், காந்தியவாதிகள் நடத்திய போராட்டம் என்பது இவர்களால் சொல்லப்படவில்லை. அது காந்தியப்போராட்டம் என்று இன்றும்கூட இங்குள்ள பொதுமக்களில் பெரும்பாலும் எவருக்குமே தெரியாது.

வைக்கம் போராட்டம் என்பது டி.கே.மாதவன் என்னும் பெருந்தலைவரின் திட்டம். அவரால் தொடங்கப்பட்டது. அவரே காந்தியை உள்ளே கொண்டுவந்தவர். அவரே அதை நடத்தி முடித்தவர். வைக்கம் போராட்டத்தை வெற்றியுடன் முடித்தவர். அதன்பின் அதே போராட்டத்தை திருவார்ப்பு முதலிய ஆலயங்களில் முன்னெடுத்தவர். இச்செய்திகள் இங்கே சொல்லப்படவில்லை. அவர் பெயரையே இவர்களின் சித்தரிப்புகளில் காணமுடியாது.

வைக்கம் போராட்டத்தில் கேரளத்தின் மாபெரும் தலைவர்கள் கலந்துகொண்டு போராடினர், சிறை சென்றனர், அவர்களே புதிய கேரளத்தின் சிற்பிகளும் ஆயினர். அவர்களில் பின்னர் கம்யூனிஸ்டுகளாக மாறிய தலைவர்களும் உண்டு. பல நாளிதழ்களே அதற்காக தொடங்கப்பட்டன. வைக்கம் போராட்டத்தில் ‘தலைமைதாங்க ஆளில்லாமல்’ ஆகவில்லை. வைக்கம் போராட்டத்தின் அமைப்பே மாதக்கணக்கில் தொடர்ச்சியாக போராடுவதுதான். ஆகவே இங்கிருந்தும் பலர் செல்லவேண்டியிருந்தது. அந்த உண்மை இங்கே மறைக்கப்பட்டது.

தமிழகத்தில் வைக்கம் போராட்டத்தில் அன்று மிக முக்கியமான காங்கிரஸ் தலைவர்களாக இருந்த கோவை அய்யாமுத்து, எம்.வி.நாயுடு தேரூர் சிவன்பிள்ளை போன்றவர்கள் பலர் கலந்துகொண்டார்கள். அவர்களுடன் ஈ.வெ.ராவும் கலந்துகொண்டார். ஆனால் மற்றவர்களின் பெயர்கள் மறைக்கப்பட்டன.

வைக்கம் போராட்டம் காந்தியின் செயல்திட்டம். அவர் சோதனை செய்து பார்த்த முதல் போராட்டம். அதன் வெற்றிக்குப்பின் அதை இந்தியா முழுக்க அவர் முன்னெடுத்தார். தமிழகத்திலும் முன்னெடுத்தார். அப்போராட்டங்களில் எதிலும் ஈ.வெ.ரா கலந்துகொள்ளவில்லை.

இந்த வரலாற்று மௌனத்திற்கு எதிராகவே நான் பேசநேர்ந்தது. என் நோக்கம் ஈ.வெ.ரா வை ‘உடைப்பது’ அல்ல. நான் எழுதியது காந்தி பற்றி, அவர் வைக்கம் போராட்டம் வழியாக எப்படி சத்தியாக்கிரக முறையை சோதனை செய்து பார்த்தார், எப்படி அதை விரித்தெடுத்தார் என்றுதான் நான் பேசினேன்.

அப்போது ’வைக்கம் போராட்டம் உண்மையில் ஈ.வெ.ரா தொடங்கி- நடத்தி -வென்ற போராட்டம் அல்லவா, காந்தி அதை எதிர்க்கத்தானே செய்தார்?’ என படித்தவர்களே என்னிடம் கேட்டனர். அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து வைக்கம் போராட்டம் உண்மையில் எப்படி நடந்தது என என விளக்கி எழுதினேன். அந்த விவாதத்தில் ஈ.வெ.ராவின் பங்களிப்பு உண்மையில் என்ன என்றும் சொன்னேன்.

என் இன்றைய காந்தி நூலில் இதைப்பற்றிய விரிவான கட்டுரை உள்ளது. அக்கட்டுரை இன்று வரை தரவுகளால் மறுக்கப்படாத ஒன்றாகவே உள்ளது. மாறாக அக்கட்டுரையின் தரவுகளுக்கு ஏற்ப இப்போது தங்கள் ஒற்றைவரிகளை கொஞ்சம் மாற்றிக்கொண்டிருக்கிறார்கள் ‘பெரியாரியர்’. அதுவே நல்ல மாற்றம்தான்.

இன்றைய காந்தி நூலே காந்தி பற்றி தமிழகத்தில் சென்ற நூறாண்டுகளாக பரப்பப்பட்டுள்ள அவதூறுகள், திரிப்புகளை ஆதாரபூர்வமாகவும் வரலாற்றுப் பின்னணியிலும் ஒட்டுமொத்தப் பார்வையிலும் விளக்கி உண்மையை நிறுவுவதுதான். என் நோக்கம் அது மட்டுமே. நான் எந்த சிந்தனையாளருக்கும் ‘எதிரி’ அல்ல. என்னால் ஏற்கமுடியாதவர்களை தேவை என்றால் ஏன் ஏற்பதில்லை என்று சொல்வேன். எதிர்ப்பது என் வேலை அல்ல.

நூறுமுறை சொன்னதை திரும்பவும் சொல்கிறேன். ’ஈ.வெ.ரா வைக்கம் போராட்டத்தை தொடங்கவில்லை, நடத்தவில்லை, முடிக்கவில்லை. அதில் பங்கெடுத்தார், அவ்வளவுதான். அது காந்தியப் போராட்டம்’

இதை ’பெரியாருக்கும் வைக்கத்திற்கும் தொடர்பில்லை என ஜெயமோகன் அவதூறு செய்கிறார். இதோ அவர் பங்கெடுத்தமைக்கான ஆதாரங்கள்’ என திரித்து பேசிக்கொண்டே இருக்கிறார்கள். பலமுனைகளில் உச்சகட்ட பிரச்சாரம் செய்கிறார்கள். பெரியாரின் பங்களிப்பே மறுக்கப்படுவதாகவும், இருட்டடிப்பு செய்யப்படுவதாகவும், அவருடைய பங்களிப்பை இவர்கள் நிறுவுவதாகவும் சொல்கிறார்கள்

பிரச்சார இயந்திரம் அப்படித்தான் செயல்படும். அது எளிமையான பொய்களை திரும்பத் திரும்பச் சொல்லி நிறுவும். அது விரிவாகவும், வரலாற்றுப்புலத்தில் வைத்தும் மறுக்கப்படும்போது அந்த மறுப்பையே எளிமையாக ஆக்கி எடுத்துக்கொண்டு மீண்டும் கூச்சலிட ஆரம்பிக்கும்.

நல்லது, இப்போது அரை இஞ்ச் முன்னகர்ந்திருக்கிறார்கள். அது காந்தியப் போராட்டம்தான் என்றும், அதில் டி.கே.மாதவனே முதன்மை ஆளுமை என்றும், வேறு பலரும் கலந்துகொண்டனர் என்றும் சொல்ல ஆரம்பித்துள்ளனர். பிரச்சார இயந்திரம் கொஞ்சம் உண்மையை முனகலாகவேனும் சொல்ல ஆரம்பித்துள்ளது. இந்த அளவுக்கு அதை நகர்த்த முடிந்ததே ஒரு வாழ்நாள் சாதனைதான். வரலாற்றுப்பங்களிப்புதான். நாராயணகுருவின் பேரியக்கத்தைச் சேர்ந்தவன் என்றவகையில், நித்ய சைதன்ய யதியின் மாணவன் என்றவகையில், டி.கே.மாதவன் எனும் வைக்கம் வீரரை தமிழில் பேசப்படச் செய்துவிட்டேன். என் ஆசிரியருக்கான கடமை நிறைவுற்றது.

இந்த ஆண்டுக்குள் வைக்கம் போராட்டம் பற்றிய முழுமையான வரலாற்றுச் சித்திரம் ஒன்றை எழுதிவிடுகிறேன். அது உண்மையின் சித்திரமாக இங்கே இருக்கும். ஆனாலும் பிரச்சார இயந்திரம் இங்கே பெருமுழக்கமிட்டபடியேதான் இருக்கும். (உண்மைகளுக்கு இத்தகைய மாபெரும் பிரச்சரா இயந்திரங்கள் தேவை இல்லை. ஆத்மார்த்தமான குரல்களாலேயே அது வாழும்) . இந்த இயந்திரத்துடன் அறிவுத்தரப்பு போரிடவும் இயலாது. நான் பேசுவது வாசிப்பவர்கள், உண்மையை அறிய முனைபவர்கள் அடங்கிய ஒரு சிறு திரளுடன் மட்டுமே.

ஜெ

வைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு

வைக்கம், ஈவேரா, புதிய கழைக்கூத்துக்கள்

வைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு

வைக்கம்,ஈவேரா,ஜார்ஜ் ஜோசப் – கடிதங்கள்

திராவிட இயக்கம், தலித்தியம்

ஐயன்காளியும் வைக்கமும்

வைக்கம் மன்னத்து பத்மநாபன்

முந்தைய கட்டுரைஎம்.வி.வெங்கட்ராம் 
அடுத்த கட்டுரைவிடுதலை