விழுப்புரம் புத்தகக் கண்காட்சி

இனிய ஜெயம்

இன்று விழுப்புரத்தில் முதல் புத்தக திருவிழா துவக்கம். தமிழ் நிலம் முழுக்க கோயில் கோயிலாக சுற்றிக் கொண்டிருக்கிறேன். அதே போல புத்தக சந்தை புத்தக சந்தையாக சுற்ற துவங்கி விடுவேன் போல :). புத்தகம் வாங்குவது அல்ல, பொது ஜனம் இத்தகு விஷயங்களை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை நேரில் காணும் ஆவல்தான்.

விழுப்புரம் திருவிழா மிக சிறந்த ஏற்பாடு. நகரின் மையம். விழுப்புரம் வாசிகள் எதை செய்யவேண்டும் என்றாலும் அந்த சாலையை தொட்டே தீர வேண்டும். புதிய நிலையத்தில் பேருந்தில் இருந்து இறங்கிய உடனே அடுத்த காலை நேரடியாக புத்தக சந்தை வாசலில் வைத்து விடலாம். பொது ஜனம் எவரும் காணும் வண்ணம் சாலை நோக்கி திறந்த அரங்க வாயில்கள்,  மேடை, விசாலமான பார்க்கிங்  என நல்ல தேர்வு. விழுப்புரம் சுற்றி உள்ள எல்லா பக்கமும் நல்ல விளம்பரமும் செய்திருக்கிறார்கள். நாளொன்றுக்கு 10 000 பேர் வரை உள்ளே வர வேண்டும் எனும் இலக்குடன் கலக்டர் பணி புரிகிறார் என கேள்விப்பட்டேன். தமிழக அரசு, வருடம் முழுக்க தமிழ் நிலம் முழுக்க சர்வே செய்து, இந்த புத்தக விழா விஷயத்தில் முன்னுதாரணமாக செயல்படும் மாவட்ட ஆட்சியர்களுக்கு ஏதேனும் சிறப்பு செய்யலாம்.

உள்ளே சும்மா சுற்றி வந்தேன். பரவாயில்லை எனும் படிக்கு கூட்டம். வணிகமும் நடந்து கொண்டிருந்தது. நமது ஈரோடு நண்பர் பாரதி புக் இளங்கோ அண்ணன் கடைகள் எடுத்திருக்கிறார். இதை எதிர் பார்க்கல இன்னிக்கு நல்ல சேல்ஸ் என்றார்.  விழா நடைபெறும் 12 நாளும் மேடை பரபரப்பாகவே இருக்கும் வண்ணம் நிகழ்ச்சி நிரல் அமைக்கப்பட்டு இருக்கிறது. துவக்க நாளின் மாலை உரைக்கான சிறப்பு விருந்தினர்கள் கவி மனுஷ்ய புத்திரன் மற்றும் கண்மணி குணசேகரன்.

பொதுவாக முகநூல் எழுத்தாளர்கள் மத்தியில் ஒன்றை கவனிக்கிறேன். அது இத்தகு நிகழ்வுகளில், சொந்த ஊரை சேர்ந்த எழுத்தாளர்களை அழைக்கவில்லை, இவரை கூப்பிட வில்லை, அவரை அழைக்க வில்லை, இந்த ஊரில் புத்தக சந்தை நடக்கிறது இந்த ஊரிலேயே வாழ்ந்து 300 புத்தகம் போட்ட அந்த தொல்லியல் ஆய்வாளரை ஏன் கூப்பிடவில்லை. இவர்களை இப்போதுதான் மக்கள் பார்க்க வழி, இப்போதும் அவர்களை விடுத்து எப்போ பாரு சுகி சிவமா போன்ற முணுமுணுப்புகள்.

பொறுமை அய்யா பொறுமை. நான் பார்த்த வரை நிர்வாகம் சரியாகவே செயல்பட்டு வருகிறது. இவ்வருடம் இல்லை எனில் வரும் வருடங்களில் வாய்ப்பு உண்டு. இது போக அந்தந்த மாவட்ட அளவில் ஜனத்தொகை அடிப்படையில், அதிலிருந்து பொது வாசிப்பு நோக்கி சிலர் உள்ளே வர  இத்தகு முதன் முதல் புத்தக சந்தை முயற்சிகளில்,  வெகு மக்களை உள்ளே கொண்டு வரும், அவர்களை உள்ளே இருத்தி வைக்கும் முகங்களையே முதல் சில வருடங்களுக்கு முன்னணி படுத்த முடியும். அந்த வகையில் நிர்வாகம் சரியான நாட்களில் முக்கிய எழுத்தாளர்களை உள்ளிட்டே நிகழ்ச்சி நிரலை அமைக்கிரது.

இதற்க்கு வெளியே நிர்வாகத்தையே குறை கூறுவதை விடுத்து எழுத்தாளர்கள் வசமும் சில  குறைபாடு  உண்டு அதையும் கொஞ்சம் பேசிப் பார்க்கலாம். அது என்ன எனில், இன்றைய தேதியில் மனுஷ்ய புத்திரன், எஸ்ரா, பவா செல்ல துரை, பாரதி கிருஷ்ண குமார், கண்மணி குணசேகரன் உள்ளிட்ட ஒரு 15 எழுத்தாளர்களுக்கு மட்டுமே எடுத்த முதற்சொல் துவங்கி நன்றி தெரிவிக்கும் வரை பொது மக்களை தனது உரைக்குள்ளேயே பிடித்து நிறுத்தி வைக்கும் வல்லமை உண்டு.   பலர் எந்த மேடை எனினும் காகித கட்டை பிரித்து   எழுதிக் கொண்டு வந்ததை தவச மந்திரம் போல ஜெபித்து விட்டு செல்பவர்கள். சிலர் தேர்வு செய்யப்பட்ட அவர்கள் துறை மீது ஈடுபாடு கொண்ட வாசகர் கூட்டத்தில் மட்டுமே பேசும் வல்லமை கொண்டவர்கள். சிலர் பேச துவங்கினால் அவர்களின்  சொந்த சாகச பிலாக்கணத்தை முடிப்பதற்குள் அந்த நாளே முடிந்து விடும்.   இப்படி பல்வேறு வகை மாதிரிகள் இங்கே உண்டு.

தமிழ் நிலம் முழுக்க நீடிக்கும் ஒரு தொடர் செயல்பாடு என்பது பல்வேறு சரி தவறுகளோடு, எது சரியாக வரும் எது சரியாக வராது  இவற்றை எல்லாம் பேசிப்பேசி சிலவற்றை செய்து பார்த்து, அதில் சிலவற்றை ஏற்று பலவற்றை கைவிட்டு குறைகளை மெள்ள மெள்ள சரி செய்தபடித்தான்  முன் செல்லும். ஆகவே இன்னும் சில ஆண்டுகளுக்கேனும் புரிந்துணர்வுடன் நம்பிகையுடன் அனைவரும் சேர்ந்து செயல்பட வேண்டியதே இப்போது உள்ள முதல் தேவை.

மற்றபடிக்கு விழா மேடைக்கு அருகிலேயே விழுப்புரம் தொல்லியல் களங்களை அறிந்து கொள்ள ஒரு அரங்கு அமைத்திருந்தார்கள். நல்ல முன்னெடுப்பு. விழுப்புரம் புத்தக திருவிழா சென்ற நினைவாக மனுஷ்ய புத்திரன் எழுதிய, கவிதைகள் மீதான கட்டுரைகள் அடங்கிய நூலான எப்போதும் வாழும் கோடை நூலை வாங்கிக்கொண்டு கடலூருக்கு பேருந்து ஏறினேன்.

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைதிருப்பூர் உரை ‘படைப்பியக்கத்தின் அறம்’
அடுத்த கட்டுரைபெங்களூர் கட்டண உரை, காமன் கூத்து – கடிதம்