திருப்பூர் உரை, கடிதம்

ஆசிரியருக்கு வணக்கம்…

தமிழகத்தின் கூட்டங்களுக்கு விழாக்களுக்கு என்று சில பொதுப் பண்புகள் உண்டு.

அ. குறித்த நேரத்தில் தொடங்காமை குறித்த நேரத்தில் நிறைவு செய்யாமை

ஆ.வந்திருப்பவர்களின் நேரத்தை துச்சமென மதித்து நீட்டி முழக்கப்படும் பொருளற்ற உளறல்கள்.

இ. மேடையில் இருக்கும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி விதந்தோதுதல்.

ஈ. பெரும்பாலும் வழங்கப்பட்ட தலைப்பிற்கு பொருத்தமற்ற அந்த நேரத்தில் மனதிற்கு தோன்றும் நினைவுகளை தொடர்பற்று பேசுதல்.

உ. தான் எவ்வளவு அடக்கமானவன் எளிமையானவன் என்பதை மட்டும் அவையடக்கத்தோடு பதினைந்து நிமிடம் உரைத்து பின்பு தலைப்பிற்குள் செல்லுதல்.

ஊ. கூட்டத்தில் ஒரு செல்வந்தரோ அதிகாரியோ அரசியல்வாதியோ இருந்து விட்டால் அவர் வாழும் காலத்தில் நாமெல்லாம் வாழ்வதே ஒரு பெருமை கொடுப்பினை என்பதை ஐம்பது முறை மட்டும் வந்திருப்பவர்களுக்கு நினைவுபடுத்துதல்.

எ. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் போன்ற  நூறாண்டு பாரம்பரியம் கொண்ட  எண்ணற்ற தேய் வழக்குகளை மீண்டும் மீண்டும் புளித்துப் போகும் அளவு கூறுதல்.

ஏ. சகிக்க முடியாத பாவனைகள் தோரணகள்.

ஐ. எழுதி எடுத்து வந்த குறிப்புகளை தலையை குனிந்து கொண்டு  கூட்டத்தினரோடு எவ்வித தொடர்பும் கொள்ளாமல் தப்பும் தவறுமாக படித்து ஒப்பித்தல்.

ஒ. ஒரு பக்கம் நினைவுக்கு வருபவற்றை எல்லாம் தோன்றியவாறு பேசுபவர்கள் என்றால் இன்னொரு பக்கம் நூறு பூக்கள் நூறு காய்கள் சில பதிகங்கள் பாசுரங்கள் திருக்குறள்களை மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் திறனையே ஒரு பெரிய சாதனை என நம்பி ஆபாசமாக தங்களை முன்னிறுத்துபவர்கள்.

ஔ. தன்னுடைய வாழ்வில் ஒருபோதும் பின்பற்றாதவற்றை போலியாக போதனை செய்தல். அன்பு அமைதி ஆனந்தம் சமூக நீதி சமத்துவம் பகுத்தறிவு போன்ற வெறும்வாய் புரட்சிகள்

இதுபோன்ற குளறுபடிகள் இல்லாமல் மிகச் சிறப்பாக நண்பர் ராஜமாணிக்கம் மாநில தலைவராக பொறுப்பேற்ற நிகழ்வு அமைந்தது. நவீன இலக்கியத்திற்கு அறிமுகமான ராஜமாணிக்கம் போன்ற ஒருவர் ஒழுங்கு செய்யும் ஒரு நிகழ்ச்சி எப்படி இருக்கும் என்பதை உணர முடிந்தது.

மூத்த பொறியாளர்கள் ஜெயகோபால் ஐயா அவர்களும் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களும் மிகச் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.இயற்கை விதிகளை வாழ்வின் வளங்களாக ஒரு பொறியாளர் எப்படி தனது மதி நுட்பத்தால் இம்மண்ணில் நெடுங்காலம் முன்பே உருவாக்கியுள்ளார்கள் என்பதை காளிங்கராயன் கால்வாய் பவானி உதாரணங்களைக் கொண்டும் கட்டுமானம் போன்ற கணக்கை அடிப்படையாகக் கொண்ட ஒரு துறையில் கலை நுழையும் பொழுது ஏற்படும் மாற்றங்களை தேவைகளை இருவரும் குறைந்த நேரத்தில் சிறப்பாக வெளிப்படுத்தினார்கள்.

இந்த சங்கத்தின் கடந்த கால செயல்பாடுகளை பொறுப்பை கைமாற்றுதல்  போன்றவற்றை விரித்துரைத்த தருணங்களும் மிக கச்சிதமாக இருந்தது.முக்கியமாக சங்கத்தின் சின்னமாக பாலத்தை வடிவமைத்துள்ளார்கள். கல்விக்கூடங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் இடையே எப்போதும் இருக்கும் இடைவெளி ஒன்றுன்டு. அந்த இடைவெளியை இணைப்பதற்கான தங்களுடைய தொடர்ச்சியான கருத்தரங்கங்கள் மூத்த ஆளுமைகளை கொண்டு நடத்திய வகுப்புகள் போன்றவற்றை குறைந்த நேரத்தில் சொல்லி நிறைவு செய்தார்கள். அறிவை பகிர்ந்து பரவலாக்கி தேச கட்டுமானத்திற்கு பங்களிப்பதே சங்கத்தின் பிரதான நோக்கம் என்று கூறியபோது பெருமிதமாக உணர்ந்தேன்.

இது போன்ற ஒரு பொது நிகழ்வில் பல்வேறு துறையினரும் தரப்பினரும் கூடும் ஒரு அடையாள கூட்டத்தில் நீங்கள் என்ன பேச போகிறீர்கள் என்பது குறித்து எனக்கு ஒரு சின்ன குறுகுறுப்பு இருந்தது.பொதுவாக இலக்கியம் சாராத உங்களை மட்டும் கேட்க வராத, செவி கொடுக்கும் வாய்ப்பும் அறிவார்ந்த செயல்பாடுகளில் முன் பயிற்சியும்  குறைவாக உள்ள இடங்களில் நீங்கள் பேசுவதில்லை என்பதை நான் அறிவேன்.  உங்கள் உரைக்குப்பின் அவ்வை பாட்டியின் கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்ற மூதுரையை நினைத்து கொண்டேன். ராஜமாணிக்கத்தை ஒரு தந்தையின் இடத்தில் இருந்து வாழ்த்த வந்திருப்பதாக கூறியது  ராஜமாணிக்கத்திற்கு வாழ்நாளிற்கான பேறு.பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையேயும் உங்களுடைய கட்டுமான பணியினை நிறைவு செய்து கொடுத்த தேவ சிற்பி ஆனந்த் அவர்களை நினைவு கூர்ந்தது உங்களின் பெருந்தன்மைக்கும் அவரின் திறமைக்கும் சான்று.

தனிப்பட்ட நேர் பேச்சுகளிலோ உங்கள் கட்டுரைகளிலோ கதைகளிலோ சாதாரணமாக கடந்து செல்லும் ஒன்றை நீங்கள் பெரும்பாலும் கூறுவதில்லை. பாலு அண்ணன் பண்ணை வீட்டில் நடந்த புத்தாண்டு நிகழ்வில் கலந்து கொண்ட எனது மனைவி வீடு திரும்பும் போது ஒன்று சொன்னார் அணுவிடை தளரா நெருப்பு போல் எரிகிறீர்கள் என. இந்த உரையும் அவ்வாறானதுதான் வாழ்நாளுக்கான கதகதப்பை வந்திருந்தவர்களுக்கு வழங்கியது.

இந்த பிரபஞ்சத்தில் வாழ்வு எனப்படுவதே  சிவசக்தி லீலைதான்…இரவு பகல், சந்திரன் சூரியன், பிறப்பு இறப்பு, செயல் அமைதி, விரிதல் ஒடுங்குதல் என மரபில் இருந்து விஷ்வகர்மாவையும் மயனையும் முன்வைத்து துவங்கியது பெரும் திறப்பு.அமைதிக்கும் நேர்மறைக்கும் நிதானத்திற்கும் ஒரு வகையில் அடித்தளமாக இருப்பது வென்று செல்லும் விழைவுள்ள ஆண்மை மிகுந்த அறைக்கூவல்கள் தானே. துவாரகையும் இந்திர பிரஸ்தமும் அஸ்த்தினாபுரியுமே அழியும்போது இன்றைய பெருங்கட்டிடங்கள் அப்படியே எஞ்சி விடுமா என்ன…

எதுவுமே எஞ்ச  போவதில்லை என்ற அதி எல்லைக்கு சென்று விட்டால் செயலின்மையில் மூழ்கடித்து விடும். புவியனைத்தும் எனக்கே  என் தேவையையும் விழைவையும் தாண்டி பிரிதொன்றில்லை என்று தருக்கி எழுந்தால் சாம்பல் கூட மிஞ்சாத சர்வநாசம் தான். சலனமும் அசைவின்மையும் சந்திக்கும் சமரசப் புள்ளியில் முயங்கியெழுவதே வாழ்வெனும் ஆடல்…மாறாத நிலையான நடுநிலை என்ற ஒன்று இல்லை  ஒற்றை எல்லையில் தேங்கி விடாத  இடைநில்லா பயணத்தின் இடையில் தோன்றும் சமநிலைகளை நடுநிலை என்றெண்ணுகிறேன்.

மகாத்மாவின் தற்சார்புத்தரிசனங்களின் தேவை அளவுக்கே சுதந்திர இந்தியாவின் நவீன ஆலயங்களான அணைகளுக்கும் இடம் உண்டு.அதே சமயம் நவ காந்தியர்களின் கூற்றான அணை கட்டினால் ஆறு இறந்துவிடுகிறது என்பதையும் பேரணைகளால் விளைந்த சூழியல் நாசம் என்ற கோணத்தையும் மறுப்பதற்கு இல்லை. இங்கேதான் நீங்கள் உரையில் குறிப்பிட்ட நம்மாழ்வார் ஐயா போன்றவர்களின் ஓடும் தண்ணீரை நடக்க வைக்க வேண்டும் நடக்கும் தண்ணீரை நிற்க வைக்க வேண்டும் நிற்கும் நீரை நிலத்தினுள் இறங்க வைக்க வேண்டும் என்ற பார்வைகளுக்கான தேவைகள் எழுந்து வருகின்றன.

பாரதத்தின் பழைய வறுமை சற்றேறக்குறைய இப்போது இல்லை ஒரு சுற்று நிறைவுறும் தருணம் இது.தேவ சிற்பிகள் பெருக வேண்டிய காலமிது…நீங்கள் நெடுங்காலமாக வலியுறுத்தி வரும் தன்னறத்தையும் நான்கு வேடங்கள் சார்ந்த புரிதலையும் இன்று இங்கே இப்போது மகிழ்ந்து வாழ்வதற்கான தேவையையும் வழிகளையையும்  மற்றும் ஒரு கோணத்தில் படைப்பூக்கத்தோடு பகிர்ந்து கொண்டதாகவும் இந்த உரைகளில் ஒரு தொடர்ச்சி இருப்பதையும் உணர்கிறேன்.

இந்த நிகழ்விற்கு வர விரும்பி வேலை நெருக்கடிகளின் காரணமாக வர முடியாத சகோதரி லோகமாதேவி அவர்கள் இதே தலைப்பில் உரை நிகழ்த்த இருப்பதாகவும் பதிவு செய்ய முடியுமா என்றும் கேட்டிருந்தார். கைவசம் இருந்த கைபேசியிலேயே உங்கள் உரையை பதிவு செய்து அவருக்கும் நண்பர்களுக்கும் பகிர்ந்திருந்தேன். இணைப்பு

https://youtu.be/JUDzMb49L-g

வெண்முரசு எழுதுவதற்கு முந்தைய ஜெயமோகனின் முள் சிறிது மயனின் பக்கம் சாய்ந்திருக்கும் தானே…

நன்றியுடன்

மு.கதிர் முருகன்

கோவை

முந்தைய கட்டுரைமாடன் மோட்சம், மலையாளத்தில்
அடுத்த கட்டுரைதொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்