கி.ராவும் அழகிரிசாமியும்

கி.ராஜநாராயணன் தமிழ் விக்கி

கு.அழகிரிசாமி தமிழ் விக்கி.

அன்புள்ள ஜெ

அமெரிக்கன் கல்லூரி உரை கேட்டேன்.

ஒரு கேள்வி, ஓர் ஒப்பீடுக்காக கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன் இருவரையும் ஒப்பிட்டால் எவரை மேலே வைப்பீர்கள்?

சரவணன் குமரேசன்

அன்புள்ளச் சரவணன்,

விரிவாக விவாதிக்க முடியும். சுருக்கமாக இப்படிச் சொல்கிறேன். இலக்கியப்படைப்பு உலகியலில் இருந்து தொடங்குவது. இங்குள்ள வாழ்க்கை, அதன் சிக்கல்கள், அதில் எழும் விவேகம் ஆகியவையே அடித்தளம். ஆனால் அங்கேயே நின்றுவிடும் படைப்பாளிகளை விட மேலும் சென்று பிரபஞ்சம், இயற்கை ஆகியவற்றை பார்ப்பவர்கள் ஒரு படி மேலானவர்கள். மானுட வாழ்க்கையின் ஒட்டுமொத்தத்தை இயற்கையுடனும் பிரபஞ்சத்தின் முடிவின்மையுடனும் அவர்கள் இணைத்துக் கொள்வார்கள். அந்த எல்லையில் அவர்களிடம் கூடும் ஒரு முழுநோக்கையே தரிசனம் (vision) என்று நான் சொல்வது.

பொதுவாக, எளிய வாசகர்களால் அந்த தரிசனத் தளத்தை தொடமுடியாது. அவர்கள் தாங்கள் தங்கள் அன்றாடத்தில் இருந்து சம்பந்தப்படுத்திக் கொள்ளும் உலகியல் தளத்தையே இலக்கியத்தில் இருந்து பெற்றுக்கொள்வார்கள். அதையொட்டியே இலக்கியத்தைப் புரிந்துகொள்வார்கள். அந்த தரிசனத் தளத்தைச் சுட்டிக்காட்டவேண்டியது விமர்சகனின் பொறுப்பு. அப்போதுகூட எல்லா வாசகர்களும் அதை வந்தடைய இயலாது. வந்தடையாதோரிடம் விவாதிக்கவும் இயலாது. அவர்கள் வாழ்ந்து சற்று முதிர்ந்து ஒருவேளை வந்தடையலாம் என எதிர்பார்க்க வேண்டியதுதான்.

கு.அழகிரிசாமி பெரும்பாலும் உலகியல் தளத்திலேயே நின்றுவிட்ட படைப்பாளி. உலகியல் விவேகம் என்பதன் கனிந்த வடிவங்களே அவருடைய கதைகளில் வெளிப்படுகின்றன. அன்பளிப்பு, ராஜா வந்திருக்கிறார், காலகண்டி என அவருடைய பெரும்பாலான அரிய கதைகள் இவ்வகைப்பட்டவை. விதிவிலக்கு இருவர் கண்ட ஒரே கனவு.

அழகிரிசாமி கதைகளில் அனேகமாக இயற்கையே இல்லை. மனிதர்கள் மட்டுமே உள்ளன. குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷன் போன்ற சில கதைகளிலேயே கவனிக்கத்தக்கச் சூழல் வர்ணனைகளாவது உள்ளன. ஆனால் கி.ரா கதைகளில் தமிழின் மிகச்சிறந்த இயற்கை விவரணை உள்ளது. இயற்கை கி.ரா கதைகளில் இயல்பாக நிகழ்கிறது. மிகச்சிறந்த உதாரணம் கிடை,நிலைநிறுத்தல் போன்ற கதைகள்.

கி.ராஜநாராயணன் அவருடைய சிறந்த கதைகளில் உலகியல் எல்லையைக் கடந்து செல்வதை, முழுமைநோக்கை அடைவதைக் காணலாம். அந்த முழுமைநோக்கு ஒருவகை திகைப்பாக, கேள்வியாக, புதிராக மட்டுமே வெளிப்பட்டு நின்றுவிடுவது. அந்த தரிசனம் அழகிரிசாமியைவிட   கி.ராஜநாராயணனை ஒரு படி மேலே நிறுத்திவிடுகிறது. மிகச்சிறந்த உதாரணம், பேதை. கன்னிமை, கனிவு போன்ற கதைகள்;கோபல்லகிராமத்தின் பசு பிடிபடும் இடம். கழுவேற்றம் நிகழும் இடம் என வாசகன் கண்டடையத்தக்க பல உள்ளன.

கு.அழகிரிசாமி கிராமப்புற உரையாடல்தன்மையை , செவிவழிக் கதைத்தன்மையை எடுத்துக்கொண்டார். ஆனால் நாட்டார் மரபின் பிரம்மாண்டத்தைப் பொருட்படுத்தவில்லை. அவர் கிராமத்தில் நீண்டநாட்கள் வாழவில்லை. அத்துடன் அவருடைய காலகட்டத்தில் நாட்டாரியலை பிற்பட்ட மனநிலைகொண்டது, மூடநம்பிக்கையாலானது என ஒதுக்கும் போக்கும் அறிவுச்சூழலில் இருந்தது. கி.ராஜநாராயணனின் படைப்புலகிலுள்ள தரிசனம் என்பது நாட்டாரியலில் உள்ள கவித்துவத்தில் இருந்து அவர் அடைந்தது.

கு.அழகிரிசாமியிடமுள்ள உலகியல் பக்குவம் கி.ராஜநாராயணனை விட நுணுக்கமானது, இன்னும் கருணையும் அறமும் கொண்டது என்பதைச் சுட்டிக்காட்டவேண்டும். ஆயினும் கவித்துவம், தரிசனம் இரண்டுமே இலக்கியத்தின் உச்சங்களை நிறுவுபவை என்பதே என் மதிப்பீடு. அவை கி.ராவை ஒரு படி மேலே நிறுத்துகின்றன.

ஜெ

முந்தைய கட்டுரைபா.கேசவன்
அடுத்த கட்டுரைமீன்விழி திருமணம் – கடிதம்