இளையராஜாவும் நவீன சினிமாவும்

நண்பர் சுரேஷ் கண்ணன் (சுகா) இளையராஜாவை எடுத்த பேட்டியில் இருந்து ஒரு பகுதி. அவருடைய முகநூலில் பகிர்ந்துகொண்டது:

*

சுகா: பரிசோதனை முயற்சிகளுக்காக செய்த படங்களுக்கு உங்கள் அளவுக்குப் பங்களித்தவர்கள் என்று யாரையும் சொல்லிவிட முடியாது. வர்த்தக ரீதியான நட்சத்திர படங்களுக்கும் இசையமைச்சிருக்கீங்க. ஆனாலும் நீங்க எத்தனையோ புதியவர்களின் படங்களுக்கு இசையமைச்சிருக்கீங்க! அத்தனையும் சின்ன பட்ஜெட் படங்கள். பல உதாரணங்கள். அதுல ஒண்ணா ருத்ரய்யாவுடைய “அவள் அப்படித்தான்” படத்தைச் சொல்லலாம். அந்தப் படம் அந்தக் காலக்கட்டத்துப் படங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு படமா இருந்தது. இன்னிக்கும் அந்தப் படம் தனியான ஒரு இடத்துலதான் இருக்கு. அவ்வளவு பிஸியாக நீங்க இருந்த சமயங்களிலும் இது எப்படிச் சாத்தியப்பட்டது?

ராஜா: சினிமால நான் வந்த காலத்துலேருந்து இன்னைக்கு வரைக்கும் நல்ல முயற்சிகளுக்காக என்னோட கதவு எப்பவும் திறந்தேதான் இருக்கு. என்னைப் பொருத்தவரையில் எல்லா படங்களுமே பரிசோதனைப் படங்கள்தான். பரிசோதனைக்கான வாய்ப்புகள் குறைவு. அதுக்கு படங்களும் அந்த மாதிரி அமையணும். கதையும், டைரக்டர்ஸும் ஒத்துழைக்கணும். இல்லையென்றால் நான்கே கருவிகளை வைத்துக்கொண்டு ‘உதிரிப்பூக்கள்’ படத்துக்கு இசையமைக்க முடிந்திருக்காது, ஐந்தே ஐந்து கருவிகளை வைத்துக்கொண்டு ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்திற்கு இசையமைத்திருக்க முடியாது. சினிமால நான் வந்த காலத்துலேருந்து இன்னைக்கு வரைக்கும் நல்ல முயற்சிகளுக்காக என்னோட கதவு எப்பவும் திறந்தேதான் இருக்கு.

சுகா: தமிழ்ல மட்டும் இல்ல. பிற மொழிகள்ல செய்யப்பட்ட சின்னச் சின்ன புது முயற்சிகள்லயும் உங்க பங்கு இருந்திருக்கு! அனந்த் நாக்கோட ‘ஆக்ஸிடெண்ட்’ …

சட்டென்று இடைமறித்து இளையராஜா: கொஞ்ச நாளைக்கு முன்னாடி நீ ஒரு மலையாளப் பட போஸ்டரைக் காமிச்சு கேட்டியே! நிஜமாவே அந்தப் படத்தை நான் மறந்துட்டேன். பாரு, இப்பக் கூட டைட்டில் ஞாபகத்துக்கு வரல.

சுகா: சம்மோகனம். சி.பி.பத்மகுமார் படம். அந்தப் படத்துக்கு நீங்க பணமே வாங்கிக்காம மியூஸிக் போட்டுக் குடுத்ததா அவர் சொல்லியிருந்தாரு.

இளையராஜா: அதனலாதான் அது என் ஞாபகத்துல இல்லியோ, என்னவோ! (சிரிக்கிறார்)

ஜன்னல்’ பேட்டியிலிருந்து .

*

சுகா சொல்லும் இந்த விஷயத்தை ஏற்கனவே நான் விரிவாகவே பதிவு செய்திருக்கிறேன்.மிகையாகப் போற்றப்படுகிறாரா இளையராஜா?

இத்தகைய செய்திகளைச் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். இல்லையேல் இளையராஜா போன்ற மாமனிதர்கள், வரலாற்றைக் கடந்துசெல்லும் சாதனையாளர்கள், எளிய வம்புகளால் தற்காலிகமாக மறைக்கப்பட்டு விடுவார்கள்.

எழுபது எண்பதுகளில் தென்னிந்திய மொழிகளில் ஓர் நவீனமயமாதல் நிகழ்ந்தது. புதிய கதைக்கருக்கள், புதிய வகை நடிப்பு, புதியவகை திரைமொழி ஆகியவை உருவாகி வந்தன. அவற்றை பொதுவாக தென்னிந்திய புதிய அலை என்று சொல்லலாம். அதை மலையாளத்தில் சமாந்தர சினிமா என்கிறார்கள். (இணையான கலைப்படம்)

இடைநிலைப் படம் என்று தமிழில் சொல்லலாம். ஆனால் அன்று தமிழில் சிற்றிதழ் சார்ந்து சினிமா பற்றி எழுதியவர்கள், குறிப்பாக வெங்கட் சாமிநாதன் போன்றவர்கள், கலைப்படம் தவிர எல்லாவற்றையும் பழித்து ஏளனம் செய்யும் மனநிலை கொண்டிருந்தனர். தமிழின் இணைப்பட முயற்சிகளை பொருட்படுத்தவே இல்லை. அம்ஷன்குமார் போன்ற இன்னொரு தரப்பு விமர்சகர்கள் சினிமாவின் முற்போக்கு உள்ளடக்கம் மட்டுமே பொருட்டு என நம்பினார்கள். பின்னர் அவர்கள் தாங்களே எடுத்த எளிமையான (முதிர்ச்சியற்ற என்றுதான் சொல்லவேண்டும்) பிரச்சாரப் படங்களைப் பார்த்தபோதுதான் அவர்கள் எதை எண்ணி இடைநிலை சினிமாவைப் பழித்தார்கள் என புரிந்தது.

தென்னிந்தியாவின் அந்த புதிய அலை என்பது ஏற்கனவே கலைப்படத்தளத்தில் உருவான திரைமொழி, பேசுபொருள் ஆகியவற்றை வணிகப்படச் சூழலில் பொதுவாகக் கொண்டு வருவதாகவே இருந்தது. மலையாளத்தில் அடூர் கோபாலகிருஷ்ணன் (சுயம்வரம்), அரவிந்தன் (காஞ்சனசீதா) ஆகியோர் கலைப்பட இயக்கத்தை தொடங்கினர். தமிழில் பாபு நந்தங்கோடு (தாகம்) ஜெயகாந்தன் (உன்னைப்போல் ஒருவன்) ஆகியோர் கலைப்பட இயக்கமொன்றுக்கு அடித்தளமிட்டனர்.

கன்னடத்தில் பி.வி.காரந்த் (வம்ச விருக்ஷெ),சோமன துடி) ஜி.வி.ஐயர் (ஹம்ஸகீதே) போன்றவர்கள் கலைப்பட இயக்கத்தை தொடங்கியிருந்தனர். தெலுங்கில் பி.எஸ்.நாராயணா (நிமஜ்ஜனம்) கலைப்பட இயக்கத்தை தொடங்கினார்.

ஆனால் தமிழிலும் தெலுங்கிலும் கலைப்பட இயக்கம் முளையிலேயே கருகியது. தமிழ்ச்சூழலில் அதற்கு அரசு ஆதரவு இருக்கவில்லை. ஊடகங்கள் எதிராகவே இருந்தன. கேலி கிண்டல் மட்டுமே எஞ்சின. தாகம் எங்குமே வெளியாகவில்லை. அதன் ஒரே ஒரு பிரதி மட்டும் ஆவணக்காப்பகத்தில் எஞ்சுகிறது.

தமிழக அரசும் நடிகர்களும் எப்படி கலைப்படத்தை ’எதிர்கொண்டனர்’ என்பதை ஜெயகாந்தனின்’ ஓர் எழுத்தாளனின் கலையுலக அனுபவங்கள்’ நூலை வாசித்தால் அறியலாம். ஒரே ஒரு திரையரங்கத் திரையிடலுக்காக ஜெயகாந்தன் அலைந்து திரிந்தார். திரையிட்ட இடத்தில் நடிகர்களின் சங்க ரௌடிகள் தாக்க வந்தமையால் ஜெயகாந்தனே தடியுடன் அரங்க வாசலில் காவலிருந்தார்.

இச்சூழலில் இளையராஜா தமிழுக்கு வந்தார். அவர் ஏற்கனவே கன்னட, மலையாள தீவிரக் கலைப்படங்களுடன் அறிமுகம் உடையவர். தமிழில் நவீன இந்திய சினிமாவை நன்கறிந்து, அதன் நடுவில் இருந்து வணிகப்படத்திற்குள் வந்த முதல் ஆளுமை அவரே.

கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழிகளில் நவீன திரைப்பட அலை வணிக சினிமாச் சூழலுக்குள் உருவாக இளையராஜா மிகப்பெரிய அடிப்படையாக இருந்தார். தமிழில் முழுக்க முழுக்க அவரிடமிருந்தே அந்த இணைசினிமா உருவானது.

பாரதிராஜா புட்டண்ண கனகலின் உதவி இயக்குநராகச் சேர்ந்ததே இளையராஜா உதவியால்தான். அன்று ஒரு நல்ல இடைநிலைப் படம் எடுக்க விரும்புபவர்கள் இளையராஜாவையே நம்பி இருந்தனர். அவர் இசையமைக்க ஒப்புக்கொண்டாலே தயாரிப்பாளர் அமைந்துவிடுவார். பாரதிராஜா, மகேந்திரன் முதல் இரண்டு தலைமுறை புதிய இயக்குநர்கள் இளையராஜாவால்தான் சினிமாவுக்குள் நுழைந்தனர். புதியவகை சினிமாக்கள் சிலவற்றை உருவாக்கினர்.

அதைவிட குறிப்பிடத்தக்கது புதிய திரைமொழிக்கு அவருடைய இசையின் பங்களிப்பு. பாரதிராஜா கொண்டுவந்த திரைமொழி வேறுபட்டது. அதற்கு முன் ஸ்ரீதர் முதலியோர் கோணங்களில் சோதனை செய்திருந்தாலும் ‘கட்டிங்’ எனப்படும் காட்சி முடிவு -அடுத்தகாட்சி தொடக்கம் ஆகியவற்றிலும், சட்டென்று ஊடுருவும் காட்சித்துளிகளிலும் எந்தச் சோதனையும் செய்யவில்லை.  ஏனென்றால் அவை புரியாமல் போய்விடும் என்னும் ஐயம் இருந்தது. அது உண்மையும்கூட.

அன்றைய ‘ஷாட்கள்’ எல்லாம் ஒருவகை மாறாத ‘டெம்ப்ளேட்’ கொண்டவை. அது சினிமாவின் இலக்கணம் எனப்பட்டது. அன்றைய ஃபில்ம் குறைவான ஒளிவாங்கு சக்தி கொண்டது. ஆகவே அதிக ஒளியில் படம் எடுக்கவேண்டும். அந்த ஏற்பாடுகள் சிக்கலானவை. ஆகவே ஒளிப்பதிவாளர் மேல் இயக்குநருக்கு கட்டுப்பாடு இருக்கவில்லை.

அச்சூழலில் அடுத்தகட்ட அதிநுண்ணுணர்வு ஃபிலிம் வந்தது. சினிமா நேரடியாக ஊர்களில் எடுக்கப்படலாயிற்று. புதிய திரைமொழி உருவாகியது. அந்தப்படங்களில்  இளையராஜாவின் இசையே காட்சியோட்டத்தை புரியவைப்பதாக அமைந்தது. பின்னணி இசை என்பதை புரிந்துகொண்டு இசையமைத்த முதல் இசையமைப்பாளர் அவர்.

அதற்கு முன் மகத்தான இசையமைப்பாளர்கள் இருந்தனர், ஆனால் அவர்கள் பின்னணி இசையை பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. அவர்களுக்கு சினிமாக்கலையும் பெரிதாகத் தெரியாது. அவர்கள் இசைவிற்பன்னர்கள் மட்டுமே. பின்னணி இசையை இசையமைப்பாளரின் உதவியாளரே அமைப்பதுதான் சினிமா வழக்கம். ஜோசப் கிருஷ்ணாவோ, புகழேந்தியோ.

இளையராஜா ஒவ்வொரு காட்சியையும் புரிந்துகொண்டு இசையமைத்தார். காட்சிமுடிவு காட்சி தொடக்கம் ஆகியவற்றை இசை வழியாக உணர்த்தினார். அதனூடாக தமிழ் சினிமா அடுத்த கட்டத்திற்கு வர வழிவகுத்தார்.

அந்த வரலாற்று உண்மையை திரும்பவும் சொல்ல வேண்டியிருக்கிறது. மீண்டும் மீண்டும் சொல்லவேண்டியிருக்கிறது.

மிகையாகப் போற்றப்படுகிறாரா இளையராஜா?

முந்தைய கட்டுரைகா.சி.வேங்கடரமணி
அடுத்த கட்டுரைதியானம், கடிதம்