என்றும் பஷீர்
வணக்கம் ஜெ…
பஷீர் அவர்களில் ஆக சிறந்த படைப்பான மதிலுகள் படம் பார்த்தேன்… வழக்கமான கேள்வி தான் நம் தமிழில் இது போல் ஒரு படம் வெளிவர எத்தனை வருடம் பிடிக்குமோ..?
எழுத்தாளனின் வாழ்க்கை படமாக்க எவரும் முன் வர வில்லையோ என்ற கேள்வி வந்து போகிறது. தமிழ் ஆளுமைத் திறன் கொண்டவராக புதுமைப்பித்தன் பற்றிய ஒரு படம் வெளிவர நாட்கள் பல காத்திருக்க வேண்டும் போல…
தங்கள் கருத்துக்களை ஏற்கும் சிறந்த திரைப்பட இயக்குனர் களிடம் இது பற்றி பேசி பார்க்கலாம்.. மேலும் புதிய வெளிச்சம் நோக்கிய பயணமாக தமிழ் திரைப்பட உலகம் அமையும் என்பது என் சிறு புத்திக்கு எட்டிய யோசனை…
நன்றி..
கண்ணன் ந.பா
கொட்டாரம்,
கன்னியாகுமரி மாவட்டம்.
அன்புள்ள கண்ணன்,
1964ல் பஷீர் மேல் பெருமதிப்பு கொண்ட வாசகராக ஏ.வின்செண்ட் இருந்தார். (படத்தில் அவர் பஷீர் அருகே அமர்ந்திருக்கும் பணிவை பாருங்கள்) தமிழில் புதுமைப்பித்தனுக்கு அவ்வாறு ஒரு சூழல் அமையவில்லை. அன்று எவருக்கும் நவீன இலக்கியம் மீது மதிப்பில்லை. இலக்கியம் மீதே மதிப்பில்லை. ஏனென்றால் இலக்கியமே அன்று பெரிதாக அறியப்படவில்லை. அன்றைய நட்சத்திரமான அகிலன் சினிமாவுக்கு எழுதப்போய் அவமானப்பட்டு திரும்பினார். அதை பதிவு செய்துள்ளார்.
இன்று, இலக்கியம் மேல் பெருமதிப்பு கொண்ட இயக்குநர்கள் பலர் உள்ளனர். அது சென்ற முப்பதாண்டுகளில் நவீன இலக்கியம் ஈட்டிக்கொண்ட மரியாதை. அத்துடன் இலக்கியவாசகரும், இலக்கியவாதிகள் மேல் மதிப்புள்ளவருமான பாலு மகேந்திரா தனிப்பட்டமுறையில் உருவாக்கிய மாற்றம். அத்துடன் சென்ற முப்பதாண்டுகளில் பொதுவெளிக்கு வந்து தன்னை நிறுவிக்கொண்ட இலக்கிய மதிப்பீடுகளும் அதற்கு உதவின. அதுவே என்னைப் போன்றவர்களுக்கு சினிமாவில் இடமும் மதிப்பும் உருவாகக்க் காரணம்.
ஆனால் உண்மையில் இன்னமும்கூட பார்கவிநிலையம் போன்ற ஓர் இலக்கியப்படத்தை தமிழில் எடுக்கமுடியாது. எழுத்தாளனை கதைநாயகனாக்கிய ஒரு படத்தை கற்பனை செய்யவே முடியாது. என்னிடம் எவராவது கேட்டால், வேண்டாம், நஷ்டம் வரும், விஷப்பரீட்சை என்றே சொல்வேன்.
ஏன்? நம் மக்களில் ஏதேனும் வகையில் இலக்கிய அறிமுகம் கொண்ட எத்தனைபேர் உள்ளனர்? மிகப் புகழ்பெற்ற இலக்கியவாதிகளின் பெயராவது தெரிந்தவர்கள் எத்தனை சதவீதம்? அவர்களை நம்பி ஒரு சினிமாவை எடுக்கமுடியுமா?
சரி, இங்கே சினிமா விமர்சனம் செய்பவர்களில் இலக்கியத்தில் மிகமிக மெல்லிய அறிமுகமாவது கொண்டவர்கள் எத்தனைபேர்? அவர்கள் இங்கே சினிமா ரசனையை தீர்மானிக்கிறார்கள் அல்லவா? இன்றைய சூழலில் தமிழில் வணிகப்படங்களே எடுக்கமுடியும், அவற்றில் கொஞ்சம் கலையைச் சேர்க்கமுடியும், அவ்வளவுதான்.
பஷீர் பற்றி எடுக்கப்பட்டதுபோல் ஒரு படத்தை இன்று தமிழில் எடுக்கமுடியாது என்பதற்கு காரணம் இங்குள்ள மனப்பதிவுகள். எழுத்தாளன் என்னும் ஆளுமையையே இன்னமும் நம்மில் மிகப்பெரும்பாலானவர்கள் மிகமிக எளிமையாகக்கூட அறிமுகம் செய்துகொண்டிருக்கவில்லை. இதுவரை எழுத்தாளனை சினிமாவில் காட்டிய போதெல்லாம் அவனை மேடைப்பேச்சாளனாகவே காட்டவேண்டியிருக்கிறது என்பதை நினைவுகொள்ளுங்கள்.
எழுத்தாளனின் தனிமை, கொந்தளிப்பு, பித்து எதையும் நம்மவர் அறியமாட்டார்கள். தங்களுக்கு உவப்பான ‘நல்ல’ கருத்துக்களைச் சொல்லியபடி, எல்லாஇடங்களிலும் ‘நல்லவனாக’ வாழும் ஒருவனே எழுத்தாளன் என்ற அசட்டுநம்பிக்கையே இன்று இணையச்சூழலில் பேசிக்கொண்டிருக்கும் அனேகமாக அனைவரிடமும் உள்ளது. எழுத்தாளன் எழுதுவது ’கருத்து’ அல்ல, அவன் உருவாக்குவது வாழ்க்கையின் நிகரனுபவத்தை என்பதை அவர்கள் அறிவதில்லை. அவர்களில் பலர் ஓரளவு கல்வி கற்றவர்கள்.
இச்சூழலில் சாமானியர்களைப் பற்றி என்ன சொல்லமுடியும்?
ஜெ