காதல், காமம் -ஓர் உரையாடல்

நன்றி https://www.ideelart.com/magazine/paintings-of-women

என் தளத்தில் அவ்வப்போது தனிப்பட்ட கடிதங்கள் வெளியாவதுண்டு. பலசமயம் அவை சமூக – உளவியல் ஆலோசனைகளாக இருக்கும். தன்வெளிப்பாடுகளாகவும் இருப்பதுண்டு. அவற்றுக்கு நான் அளிக்கும் பதில்கள் ஒரு பொதுவிவேகம் சார்ந்தவையாகவே இருக்கும்.

பல நண்பர்கள் இந்தத் தளத்தில் அவற்றுக்கான இடம் என்ன என்று என்னிடம் கேட்பார்கள். இது இலக்கியம், தத்துவம் ஆகியவற்றுக்கான தளம் அல்லவா என்பார்கள். உண்மை. ஆனால் இந்த உரையாடல்கள் எனக்கு தேவையாகின்றன. தொடர்ச்சியாக நான் சமூகத்தின் வெவ்வேறு களங்களைச் சார்ந்த வெவ்வேறு மனிதர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறேன். ஒருவேளை தமிழில் வேறெந்த எழுத்தாளரும் இந்த அளவுக்கு ஒரு தொடர் உரையாடலில் இல்லை.

இந்த உரையாடல்களின் வழியாகவே இவற்றிலுள்ள உண்மையான உணர்வுகளை என்னால் தொட்டெடுக்க முடிகிறது. இந்த தளத்தில் என்னென்ன விசித்திரமான வாழ்க்கைகள் பதிவாகியிருக்கின்றன, அன்றாட எளிய வாழ்க்கையில் உருவாகும் சிறு சிக்கல்கள் எவ்வளவு பதிவாகியிருக்கின்றன என்பது ஆச்சரியமளிப்பது. ஒருவகையில் இந்த தளத்தின் உயிர்த்துடிப்பை இவை நிலைநாட்டுகின்றன, இதை ஒரு சமூக உரையாடற்களமாக நிலைநிறுத்துகின்றன என நினைக்கிறேன்.

அண்மையில் ஓர் உரையாடல்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களே ,

என் பெயர் –. உங்களின் தீவிர வாசகன். என் சொந்த வாழ்வில் ஒரு ஐயம் உள்ளது.

நான் திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண், இதற்கு முன் ஒருவரை காதலித்திருக்கிறார். திருமணம் செய்து கொள்ளும் முன் என்னிடம் அதை சொல்லி விட்டார். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. நீங்கள் எனக்கு வெறும் எழுத்தாளர் அல்ல நான் வழிபடும் குரு. பெரும் குழப்பத்தில் இருக்கிறேன். சத்திய வார்த்தையை கேட்க விழைகிறேன். நான் என்ன செய்ய வேண்டும்.

அன்புடன்

அன்புள்ள நண்பருக்கு

இந்தக்காலகட்டத்திலும் இப்படி குழப்பங்கள் வருமா என எனக்கு திகைப்பாக இருந்தது. ஆனால் இரண்டு இளம் நண்பர்களிடம் பொதுவாகப் பேசினேன். அவர்கள் உண்மையில் இன்றைய இளைஞர்களுக்கு இந்த குழப்பமும் கேள்வியும் இருப்பதாகச் சொன்னார்கள். நம் பண்டைய உளத்தடைகள் எளிதில் அகல்வதில்லை.

நீங்கள் சொல்லியிருப்பது ஒரு விஷயமே அல்ல. அதைப்பற்றி ஐந்து நிமிடங்களுக்குமேல் யோசிப்பதே அபத்தமானது. இது பழைய காலம் அல்ல. இன்று ஆணோ பெண்ணோ திருமணம் செய்துகொள்ள பல ஆண்டுகளாகின்றன. அதுவரை காதல் என ஒன்று உருவாகாமலிருக்குமா என்ன? மனதளவிலாவது? உறவும் பிரிவும் நிகழ்ந்திருந்தால் அது மிக இயல்பே. அதை எவரும் பொருட்படுத்தவேண்டியதில்லை.

அந்த முந்தைய காதல் முழுமையாக அகன்று பழங்கதையாக ஆகிவிட்டிருந்தால் அது எவ்வகையிலும் வாழ்க்கையில் ஒரு பிரச்சினை அல்ல. அதைப்பற்றி முழுமையாகவே இருவரும் மறப்பதும், அதை எந்நிலையிலும் நினைவுகூராமலிருப்பதும், பேசிக்கொள்ளாமலிருப்பதுமே முக்கியமானது. இதையெல்லாம் எல்லா நாளிதழ் குடும்ப ஆலோசனைப் பகுதிகளிலும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். மேலதிகமாக ஒரு சொல் என்னிடம் கேட்கிறீர்கள், நல்லது. அதைச் சொல்லிவிட்டேன்.

ஜெ

சார்,

எனக்கு அந்த பெண் முன்பு காதலித்தது எந்த பிரச்சினையும் இல்லை எனக்கிருக்கும் ஒரே சந்தேகம், இந்த விஷயம் எங்களை இயல்புநிலையில் இல்லாமல் ஆக்கிவிடுமோ என்ற பயம் மட்டும்தான்.

இரண்டு பேரின் வாழ்வும் இதனால் ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயம்தான். எனக்கு இதனை கண்ட்ரோல் செய்யும் அளவு மென்டல் மெச்சூரிட்டி உண்டா என்பதை அறிய முடியவில்லை.

என் மனம் ஏதாவது ஒன்றில் இறுக்கி பிடித்து கொண்டே உழன்று கொண்டே இருக்கும். என்னால் இதனை சரியாக ஹேண்டில் பண்ண முடியுமா என்பது சந்தேகம் தான். நான் உங்களிடம் கேட்பது ஒரு வகையில் என்னிடமே கேட்பது போலத்தான்

அன்புடன்

_

அன்புள்ள —

புரிகிறது. அதற்குத்தான் பதில் சொன்னேன். இது ஒரு விஷயமே இல்லை. அந்த விஷயத்தைப் பற்றி பேசாமலிருந்தாலே போதுமானது. கொஞ்சம் கொஞ்சமாக அது பின்னகர்ந்துவிடும். திருமணத்திற்கு முன்பு சிலநாட்களுக்கு இது ஒரு சிக்கலாக இருக்கும். அப்படி தோன்றும். திருமணத்திற்குப்பின் அதைப்பற்றி பேசாவிட்டால் அது மறைந்துவிடும்.

திருமணத்திற்குப்பின் காமம், அந்த பெண்ணின் ஆளுமை பற்றிய உங்கள் ஈர்ப்பு ஆகியவை மேலோங்கும். ஓரிரு ஆண்டுகளில் மனைவி கூட முக்கியமில்லை, குழந்தைகளே முக்கியமாக இருக்கும். எஞ்சிய வாழ்க்கை முழுக்க அப்படித்தான்.

திருமண வாழ்க்கையில் காமம், ஆண்பெண் உறவு என்பது 10 சதவீதம்தான். எஞ்சியதெல்லாமே குழந்தைகள்தான். நீங்கள் மனைவி கருத்தரித்ததுமே குழந்தை மேல் பித்து ஆகிவிடுவீர்கள். அப்போது தெரியும், இதெல்லாம் எவ்வளவு சின்ன விஷயம் என்று.

ஜெ

முந்தைய கட்டுரைசி.மோகன்
அடுத்த கட்டுரைமதுரை நாடு – ஓர் ஆவணப்பதிவு