அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,
இரண்டு மாதங்கள் முன்பு, மூதன்னை கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்களின் மகள் சத்யா அக்கா அழைத்ததன் பேரில், கெளசிக், அருணிமா, மதுமஞ்சரி, வினோத் பாலுச்சாமியுடன் நானும் சேர்ந்து காந்திகிராம் பல்கலைக்கழகத்திலுள்ள ஊழியரகத்திற்குச் சென்றிருந்தோம். கிராமங்களில் களப்பணியாற்றும் காந்தியர்களுக்கான வெவ்வேறு செயற்பயிற்சிகளைத் தொடர்ந்து வழங்கிவந்த கூடமே ஊழியரகம். ஜெகந்நாதன் மற்றும் கிருஷ்ணம்மாள் உள்ளிட்ட நிறைய காந்தியர்கள் கல்சுமந்து கட்டியெழுப்பிய கற்கட்டிடம் அது. இளமைக்காலந்தொட்டு தாங்கள் அவ்வப்போது தங்கியிருந்து தொண்டாற்றிய இடத்திற்கே கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்கள் மீண்டும் வந்து நிரந்தரமாகத் தங்கத்தொடங்கியுள்ளார். அவரது மகளான சத்யா அக்கா, குழந்தைகள் மருத்துவராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற சூழ்நிலையில், தனது ஆய்வுக்கட்டுரைப் பணிகள் மற்றும் கூடுதல் களப்பணிகளின் திட்டமிடுதலுக்காகவும் தன் தாயுடன் ஊழியரகத்தில் தங்கி பணிசெய்து வருகிறார்.
கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்களின் குரலிலேயே அவருடைய வாழ்வனுபவங்களைப் பதிவுசெய்யும் பெரும்பொறுப்பினை சமகாலச் செயற்திட்டங்களுள் ஒன்றாகத் துவங்கியிருக்கிறோம். அந்த ஆவணப்பதிவின் பொருட்டு அம்மாவுடன் மூன்று நாட்கள் கூடவே தங்கியிருந்து அவரது வாழ்வுக்கதையைக் கேட்டறியும் நல்வாய்ப்பும் அமைந்தது. அப்படியான ஒருநாளின் பின்னிரவில் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்கள் ‘அறம்’ புத்தகத்தினைக் கையிலெடுத்து, ‘ஓலைச்சிலுவை’ மற்றும் ‘நூறுநாற்காலிகள்’ கதைகளைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். இலட்சியவாதக் கனவை மனதுள் ஆழப்பதிக்கும் அக்கதைகளின் நினைவுகளினூடே, நான்கைந்து முறை திடீரெனத் தனது கைகளையுயர்த்தி “ஆறாயிரம் வீடுகள கட்டியே ஆகணும்” என சொல்லிக் கொண்டார். முதிர்ந்து கனிந்திருக்கும் அந்த மூதன்னையின் மனம் ஏந்தியுள்ள வைராக்கியம் எங்களுக்கு மலைப்பை உண்டாக்கியது. அணையாத்தீயென அறம் அம்மாவுக்குள் இன்னமும் சுடர்ந்துகொண்டே இருக்கிறது.
நாகப்பட்டினம் கடற்கரைப் பகுதியில் வாழும் மீனவ மக்கள் வசிப்பதற்கு எப்பாடுபட்டாவது ஆறாயிரம் வீடுகளைக் கட்டவேண்டும் என்கிற கனவு அம்மாவுக்குள் உயிர்த்துடிப்பை நீட்டித்துக்கொண்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே அந்த இலக்கு குறித்து தொடர்ந்து அவர் பேசியபடியே இருக்கிறார். வெவ்வேறு மனிதர்களை அதன்பொருட்டு எங்கெங்கோ சென்று சந்திக்கிறார். எதன்பொருட்டும் தொய்வின்றி அக்கனவு சார்ந்த முயற்சி நிகழ்ந்துகொண்டே இருப்பதை நாங்கள் நேர்பட அறிந்தோம். “எப்பயாச்சும் மனசளவுல நொடிஞ்சுபோனாக்கூட இந்தக் கதைகள் வைராக்கியத்தை கூட்டுதுய்யா. ஒவ்வொரு கதையிலயும் சத்தியம் இருக்கு” என்று இரண்டு மூன்றுமுறை தனது அகவுணர்வைப் பகிர்ந்துகொண்டார்.
மேலும், “நாம செய்யுற வேல மட்டுந்தான்ய்யா நிலைச்சு நிக்கப்போகுது. நம்மளப்பத்தி ஏசுற பேச்சுகளோ, குற்றச்சாட்டுகளோ, செஞ்ச வேலைகள்ல இருக்க சின்னச்சின்ன குறைகளோ… எதுவுமே காலத்தோட கணக்குல எஞ்சாது. செஞ்சோமா இல்லையான்னு மட்டுந்தான் அது ஞாபகம் வச்சுக்கும். நம்மளவிட நம்ம வேலைக்கு ஆயுசு அதிகம். சிவாய்யா… நாம இன்னும் தீவிரமா நிறைய வேல செய்யனும்ய்யா” என்று குரலதிர அவர் சொன்னபோது நாங்கள் கண்கலங்கி அழுதிருந்தோம்.
மதுமஞ்சரி முன்னெடுக்கும் கிணறு தூர்வாரும் பணிகளைப்பற்றி குறிப்பிட்டுப் பேசும்போதுகூட, “தீண்டாமைக்கான பெரிய ஆயுதத்த இந்த சின்னப்பொன்னு கையில எடுத்திருக்காய்யா. இந்த வேலயும் கிணறு தூர்வார்ரது மாதிரிதான். தோண்டும்போது தெரியாதுய்யா, தோண்டுற வேல என்ன செய்யும்னு. ஆனா, தண்ணி ஊத்தெடுத்து ஊரோட தாகம் தணியுறப்ப தெரியும், வேலயோட வீரியம். இங்க திண்டுக்கல் பக்கத்துல, அப்படி நிறைய கிராமங்கள்ல இருக்க கிணறுகள்ல எடுத்து வேல செய்யணும்ய்யா. ஒன்ன மீட்டா போதும், அது தர நம்பிக்கைல ஒன்னொன்னா மீட்டுடலாம்” எளிமையான வார்த்தைகள் தான். ஆனால், தன் வாழ்க்கையால் ஓர் ஆசிரியர் அதற்கு அடிக்கோடிடும்போது அது இவ்வுலகிலேயே மிக வலிமையான தத்துவமாக மனம் நுழைகிறது.
98 வயது ஆகிவிட்டது கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்களுக்கு. இந்தியா முழுக்க எத்தனையோ களப்பணிகளுக்காக அலைந்து திரிந்து எத்தனையெத்தனை மனிதர்கள், எவ்வளவு அனுபவங்கள், சரிவுகள், மீண்டெழல்கள் அவரது வாழ்வில்! இத்தனையைக் கடந்து அகவுறுதி அடைந்த அவருக்கு நம்பிக்கை தரக்கூடிய பற்றுதலாக ‘ஒரு சொல்’ இருக்கிறது. அறம் தொகுப்பின் கதைகளில் இருப்பதும் திரள்வதும் எக்காலத்துமான ஓர் அழியாப்பொருள். அது ஓர் ஆழ்மனச்சுனை. அதிலிருந்து சுரந்துபெருகும் ஒன்று இம்மானுடம் முழுமைக்கும் பொதுவான ஒன்று. அதைத்தான் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்களும் பெற்றடைந்திருக்கிறார்.
இதற்குமுன்பு பலமுறை அம்மாவுடன் அணுக்கமான உரையாடல்களில் அருகிருந்தாலும் இந்தமுறை அது மிகவும் நெகிழ்வுக்குரிய தருணமாக மனதுள் பதிந்துவிட்டது. அண்ணன் பாலசுப்பிரமணியம் முத்துசாமி எழுதிய ‘இன்றைய காந்திகள்’ மற்றும் ‘சுதந்திரத்தின் நிறம்’ புத்தக வெளியீட்டு நிகழ்வு பற்றியும், ஜெகந்நாதன் கிருஷ்ணம்மாள் தம்பதியினரின் வாழ்வியல் ஒளிப்பட அருங்காட்சியகத்தை நீங்கள் திறந்துவைத்த நினைவுகளையும் அம்மாவுடன் பகிர்ந்துகொண்டோம். முகமலர்ந்து அவர், “அன்னைக்கு அந்த கூட்டம் எழுப்புன சத்தம் எனக்கு இன்னும் ஞாபகமிருக்குய்யா. எல்லாரும் சேர்ந்து சந்தோசத்த வெளிப்படுத்துன சத்தம். அவரு நட்டவச்சு மரம்கூட நல்லா வளந்து துளிர்விட்டிருக்கு பாத்தியா. எல்லோருக்கும் சந்தோசமான நாளு” என்றார்.
எல்லாவகையிலும் அந்நாளின் அருள் நீங்கள் படைத்த அறத்தால் விளைந்தது. கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்கள் கரங்கூப்பி கடவுளைத் தொழும் அதிகாலைப் பிரார்த்தனையில் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்குமான இறைவேண்டலும் உள்ளுறையும். நாங்களறிந்து நான்கைந்து தடவைகளுக்கும் மேலாக ஓலைச்சிலுவைக் கதையை அம்மா படித்துவிட்டார். திரும்பவும் படிக்க ஆசைப்படுவதாகச் சொல்கிறார். இக்கடித்த்துடன் இணைக்கப்பட்டுள்ள ஒளிப்படங்கள் ஓரிரு நாட்கள் முன்பாகத்தான் வந்துசேர்ந்தது. ஒளிப்படக்கலைஞர் வினோத் பாலுச்சாமி காட்சிப்பதிந்தவை இவை. உங்களுக்கு இப்படங்களை அனுப்புவதில் ஓர் நல்லசைவு முழுமையடைவதை உணர்கிறோம்.
அறம் சிறுகதைத் தொகுப்பிலுள்ள கதைநாயகர்கள் ஒவ்வொருவரும் தங்களை முற்றளித்தத் தியாக வாழ்வானது நம் எல்லா தலைமுறைகளுக்குமான அசரீரி. எண்ணற்ற இருதயங்களுக்கு மீட்பளிக்கும் என்றுமுள சொல் அது. செயலாற்றத் துணியும் சமகால மனிதனுக்கு… காற்றில் கரைந்த அந்த நல்லான்மாக்கள் இக்கதைகள் வழியாக மீளவும் அகமடைந்து ஆசியாகவும் ஆசிரியராகவும் உடன்வருகிறார்கள். எல்லாம்வல்ல பேரிறைக்கு ஒப்பான அந்தத் தியாகமனிதர்களின் கருணையைப் பணிந்து வணங்கி இக்கடிதத்தை நிறைவு செய்கிறேன்.
~
நன்றியுடன்,
சிவராஜ்
குக்கூ காட்டுப்பள்ளி