வெண்முரசு குடும்ப வாசிப்பு

வெண்முரசு மின்னூல்கள் வாங்க 

வெண்முரசு நூல்கள் வாங்க 

அன்புள்ள ஜெ

ராஜேந்திரன் தண்டபாணி புகழ்பெற்ற நிர்வாகி. அவர் தன் அம்மா சுசீலா சுவாமிநாதன் அவர்களுக்கு தொடர்ச்சியாக வெண்முரசு வாசித்துக் காட்டுகிறார். ஒவ்வொரு நூல் முடிந்ததும் ஒரு படத்துடன் அறிவிப்பை வெளியிடுகிறார். அந்தப்படங்கள் அருமையாக உள்ளன. அவற்றையே வரிசையாகத் தொகுத்து வெண்முரசு மீதான வாசிப்பு பற்றிய ஓர் ஆவணப்படமாக ஆக்கலாமென தோன்றுகிறது. வெண்முரசு இப்படி நுட்பமாக வாசிக்கப்படுவதென்பது வியப்பளிக்கிறது.

ஆர்.நாகராஜன்

அன்புள்ள நாகராஜன்,

இந்த தளத்தில் தொடர்ச்சியாக வெண்முரசு வாசகர்களின் விரிவான கடிதங்கள், கட்டுரைகள் வெளிவருவதை நீங்கள் கண்டிருக்கலாம். வெண்முரசு எழுதப்பட்ட முதல் ஆண்டு முதல் இன்று வரை மிகத்தீவிரமாகத் தொடர்ந்து வாசிக்கப்பட்டு வரும் ஒரு படைப்பு. வாசிப்போ நூல்விற்பனையோ குறைந்ததே இல்லை. அச்சிட அச்சிட தீர்ந்துகொண்டே இருக்கிறது. உண்மை என்னவென்றால் இத்தனை பெரிய தொகுதிகளை தொடர்ச்சியாக அச்சிட்டு அனைத்தையும் விற்பனையில் வைத்திருக்குமளவுக்கு இங்கே அச்சகங்கள் சுறுசுறுப்பாக இல்லை. புதிய பகுதிகல் அச்ச்சிலிருக்கையிலேயே அச்சிடப்பட்டவை விற்று முடிந்திருக்கும்.

வெண்முரசு வாசிப்புக்குச் சில தனித்தன்மைகள் உண்டு. வெண்முரசு வாசகன் எளிமையானவன் அல்ல. எளிய வாசகன் அந்த பக்க அளவைக் கண்டதுமே திகைத்து பின்வாங்கிவிடுவான். சில்லறை நையாண்டிகளை எங்காவது முகநூலில் சொல்லிக்கொண்டிருப்பான். வெண்முரசை வாசிப்பவன் வாசிப்பு என்னும் செயலில் நல்ல தேர்ச்சி கொண்டவன். தன்னியல்பாக மொழியில் மூழ்கி காட்சிகளையும் உணர்வுகளையும் அடைபவன். கனவு போல கதைவாசிப்பை நிகழ்த்தக் கற்றவன். வெண்முரசின் அளவே ஒரு பெரிய வடிகட்டி, எளிய வாசகர்களை அது வெளியே தள்ளி விடுகிறது.

வெண்முரசு தூயதமிழில் உள்ளது. பல்லாயிரம் புதிய சொற்கள் அதிலுள்ளன. இந்திய மெய்ஞான மரபு பற்றிய சொற்கள் புதிதாகத் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. ஆகவே அடிப்படைத் தமிழ்ப்பயிற்சி கொண்டவர்கள் அதை எளிதில் வாசிக்க முடியும். ஆனால் நான் கண்ட ஒன்றுண்டு, அதன் அளவே அந்த மொழியை கற்பிக்கிறது. தொடர்ந்து வாசிக்கமுடிந்தால், அந்த மொழியை அந்த வாசிப்பின் வழியாகவே ஆழமாக அறிந்துகொள்ளலாம். அறியாத ஒரு சொல் இரண்டுமுறை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் திரும்ப வரும்போது தெரிந்ததாக ஆகிவிடும்.

பிற படைப்புகளுக்கு உள்ள மிக முக்கியமான குறைபாடு வெண்முரசுக்கு இல்லை. அதை contextualization எனலாம். எந்தப் புனைவானாலும் அது நிகழும் சமூகச் சூழல், பண்பாட்டுச்சூழல், காலச்சூழல் மேல் நமக்கு ஆர்வமும் ஓரளவு அறிமுகமும் இருக்க வேண்டும். பெரிய நாவல்கள் அந்த நாவல்களின் கதையோட்டம் வழியாகவே அவற்றை அறிமுகம் செய்துவிடும். ஆனாலும் உள்ளே போக கொஞ்சம் முயற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். சிலசமயம் பல்வேறு உளத்தடைகளால் நம்மால் உள்ளே செல்லமுடியாது.

அவ்வாறு உள்ளே சென்றால்கூட அந்தச் சூழலில் உள்ள நிகழ்வுகள் மற்றும் பொருட்களை படிமங்களாக விரித்தெடுத்துக்கொள்ள நம்மால் இயலவேண்டும். இல்லையேல் குறைப்பட்ட மேலோட்டமான வாசிப்பே நிகழும். அந்த ஆசிரியர் அவற்றை படிமங்களாக ஆக்கியிருந்தால்கூட நம் ஆழுளம் அவற்றை படிமங்களாக ஆக்கிக்கொள்ளாமல் இருந்துவிடக்கூடும். காரணம் அவை நமக்கு முன்னரே தெரிந்திராதவை. அவற்றை நமக்கு ஏற்கனவே தெரிந்த நிகழ்வுகள் மற்றும் படிமங்களுடன் இணைத்தால் மட்டுமே நம் ஆழுளம் அவற்றை உள்வாங்கிக்கொள்ள முடியும்.

அத்தகைய நாவல்களிலுள்ள நிகழ்வுகளும் பொருட்களும் படிமங்களானாலும்கூட அவை மேலும் ஆழ்ந்து சென்று நம் அகத்திலுள்ள ஆழ்படிமங்களை தொட்டு எழுப்பி அவற்றுடன் தங்களை இணைத்துக் கொள்ளவேண்டும். உதாரணமாக, ஒரு கடல்சார் நாவலில் மீன்பிடி வலை பற்றி வருகிறது. விரிகடலில் வலைவீசுவதை நாம் படிமமாக ஆக்கினாலொழிய அது கலைப்படைப்பாக ஆவதில்லை. ஆனால் நமக்கு மீன்பிடி வலை பற்றித் தெரியாது. அதை நாமறிந்த வலைகளுடன் சம்பந்தப்படுத்திக் கொள்ளவேண்டும். நம் ஆழத்தில் வலை என்னும் ஆழ்படிமம் உள்ளது. பிறவிவலை, கர்மவலை என பலவாகப்பிரிவது. அங்கே அந்தப்படிமம் சென்று தொடவேண்டும்.

இது எல்லா வாசகர்களாலும் இயல்வதில்லை. ஆகவே பெரும்பாலான சமகாலம் யதார்த்தப் படைப்புகளை ‘வாழ்க்கையை பதிவு செய்பவை’ என்ற அளவில் வாசித்துவிட்டு போகிறார்கள். இளமையில் வெவ்வேறு வாழ்க்கைகளை அறியும் ஆர்வமிருக்கும் காலகட்டத்தில் வாசிக்கிறார்கள். நடுவயது கடந்தபின் தன்னை, தன் அகத்தை அறிவதே முதன்மைப்படுகிறது. அப்போது புறவாழ்க்கைகளைச் சொல்லும் படைப்புகள்மேல் ஆர்வம் உருவாவதில்லை.

இந்த படிநிலைகள் எதுவுமே வெண்முரசு போன்றவற்றுக்கு இல்லை. அவை நேரடியாகவே படிமங்களாக உள்ளன. நேரடியாகவே நம் ஆழ்படிமங்களுடன் தொடர்பு கொண்டிருக்கின்றன. ஆகவே உணர்ச்சிகரமாகவும் கவித்துவமாகவும் நம்மால் மிக எளிதில் ஈடுபட முடிகிறது. இன்று வாழும் ஒரு மனிதனை புரிந்துகொள்வதை விட நம்மால் மகாபாரத கதாபாத்திரத்தை புரிந்துகொள்வது எளிது. ஒரு முதிய குடும்பத்தலைவன் கதாபாத்திரத்தை புரிந்துகொள்வதை விட பீஷ்மரைப் புரிந்துகொள்வது எளிது. சொல்லப்போனால், பீஷ்மரைக்கொண்டுதான் நாம் ஒரு முதிய குடும்பத்தலைவரைப் புரிந்துகொள்கிறோம்.

இக்காரணத்தால் நவீன இலக்கிய அறிமுகமே இல்லாதவர்கள்கூட வெண்முரசு நாவல் வரிசையை இயல்பாக வாசிக்கவும், பெரும்பாலும் முழுமையாக உள்வாங்கிக் கொள்ளவும் முடிகிறது. அதற்கான முன்தயாரிப்புகள் அவர்களுக்கு மரபில் இருந்து வந்திருக்கிறது. அவர்கள் மகாபாரதத்தை வெண்முரசில் வாசிக்க ஆரம்பிக்கிறார்கள், மிக எளிதில் அதிலுள்ள நவீன அழகியல்கூறுகளையும் தரிசனங்களையும் வந்தடைகிறார்கள். மிக வயதானவர்கள் கூட வாசித்துவிட்டு எழுதியிருக்கிறார்கள். மிகமிக இளையவர்கள் வாசித்துவிட்டு எழுதியிருக்கிறார்கள்.

நானறிந்து பலநூறு குடும்பங்களில் குடும்பமே அமர்ந்து வெண்முரசு வாசித்திருக்கிறார்கள். குடும்ப உறுப்பினர்களிடையே வெண்முரசு சார்ந்த நீண்ட உரையாடல்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்துள்ளன. குழந்தைகளுக்கு வெண்முரசு தினம் ஒரு அத்தியாயம் வீதம் கதை சொன்னவர்கள் உண்டு. நாள்தோறும் தூங்குவதற்கு முன் வாசித்துக் காட்டியவர்கள் உண்டு. இதேபோல அம்மா, அப்பாக்களுக்கு வாசித்துக் காட்டிய, வாசித்துக் காட்டும் பலர் உண்டு.

இளையதலைமுறை வெண்முரசின் கதையோட்டம், கதைமாந்தர்களுக்காக வாசிக்கிறது. ஆனால் கூடவே இந்திய இலக்கிய அழகியல், இந்திய பண்பாட்டுமரபு, இந்தியக் கலை, இந்திய தத்துவம் ஆகியவையும் அவர்களுக்குச் சென்றுசேர்கிறது. வெண்முரசில் ஏறத்தாழ எல்லா இந்திய தொன்மங்களும் உள்ளன. முதியவர்கள் அவர்கள் இன்னொருவகையில் அறிந்த ஒவ்வொன்றையும் மீள்கண்டடைவு செய்ய முடிகிறது.

ஒரு நண்பர் என்னிடம் சொன்னார். அவருடைய முதிய தந்தைக்கு அவர் கொடுக்கக்கூடிய ஒன்றுமே இல்லை. அவர் அமெரிக்காவில் இருக்க தந்தை தனியாக இந்தியாவில் இருந்தார். தந்தையிடம் வேண்டிய பணம் இருந்தது, தேவைகளும் இல்லை. ‘உங்களுக்கு என்ன வேணும் அப்பா?” என்றால் “ஒண்ணுமே வேணாம்” என்றே பதில் சொல்வார். 2019 ல் வெண்முரசு தொகுதிகள் வாங்கிக்கொடுக்க ஆரம்பித்தார். அப்பாவால் வாசிக்கமுடியாது, கண் பிரச்சினை. அருகே ஒரு கல்லூரி மாணவியை ஊதியம் கொடுத்து ஏற்பாடு செய்தார். ஒருநாள் இரண்டு அத்தியாயம் வாசித்துக் காட்டவேண்டும். அப்பாவுக்கு தான் அளித்த மிகப்பெரிய பரிசு அது என அந்த நண்பர் எழுதியிருந்தார்.

ஆண்டுக்கணக்காக அந்த வாசிப்பு நீண்டது. அப்பா முழுமையான மகிழ்வில் இருந்தார். அவருடைய வாழ்க்கையின் வெறுமை முற்றிலும் அகன்றது. கற்பனையும் கனவும் நிறைந்த ஓர் உலகில் வாழ்ந்தார். வெண்முரசு தவிர எதைப்பற்றியும் பேசுவதில்லை. வெண்முரசு முடிந்தபின் மீண்டும் ஆரம்பித்து நீலம் வாசித்தார். அதன்பின் முதற்கனல் மீண்டும் வாசிக்க ஆரம்பித்தார்

எந்த ஊருக்குச் சென்றாலும் அங்கே எவரேனும் சில வாசகர்கள் வெண்முரசு வாசிப்பு எப்படி ஒரு குடும்ப நிகழ்வாக உள்ளது, அது குடும்பத்திலுள்ள வெறுமையை எப்படிப் போக்கியது என்று என்னிடம் சொல்வதுண்டு. நவீன வாழ்க்கை இன்று நாம் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு வட்டத்திற்குள் அடைத்துவிடுகிறது. நூறாண்டுகளுக்கு முன் அப்பா, மகன், தாத்தா  அனைவரும் ஒரே தொழில் செய்து ஒரே உலகில் வாழ்ந்தனர், இன்று அவ்வாறல்ல. அவர்கள் நடுவே பேசிக்கொள்ள பொதுவாக ஒன்றுமே இருப்பதில்லை.

சென்ற காலங்களில் கொஞ்சம் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியும் பேசிக்கொண்டார்கள். இன்று அதையும் அந்தரங்கமாக வைத்துக் கொள்கிறோம். அதைப்பற்றிய விசாரிப்புகளை எவரும் விரும்புவதில்லை. எனில் பேச என்னதான் உள்ளது? அரசியலோ பிற சமகால நிகழ்வுகளோ மிகமிக எதிர்மறையானவை. மிக எளிதில் பூசல்களை கொண்டுவருபவை. வெண்முரசு இன்னொரு உலகம். கனவுலகம். உச்சங்களும் அழகுகளும் மட்டுமே கொண்டது. அனைவரும் அதில் ஈடுபட முடிகிறது. பொதுவான ஒரு பேசுபொருளாக அது அமைகிறது.

அடுத்த கேள்வி, வெண்முரசேதான் வேண்டுமா? தேவையில்லை. அதேபோல அனைவருக்கும் பொது ஈடுபாடுள்ள ஏதேனும் நூல் போதும். ஆனால் நான் பார்த்தவரை ஒன்றுள்ளது, பழைய மகாபாரதம் அல்லது ராமாயணம் வாசிக்கலாம். ஆனால் அதை வாசிக்கும் இளைய தலைமுறைக்கு அவற்றின் மொழிநடையும், அவற்றின் கூறுமுறையும் ஈர்ப்பை உருவாக்குவதில்லை. ஆர்வத்துடன் தொடங்கும் வாசிப்பு மிக எளிதில் நின்றுவிடுகிறது. அதேபோல ஒரு புதியவகை படைப்பு என்றால் முதியவர்கள் விலகிவிடுவார்கள். வெண்முரசு மரபுக்கும் நவீன இலக்கியத்திற்குமான ஓர் இணைவு. ஆகவே அது அந்த இடத்தை வகிக்கிறது.

நான் எண்ணியது வெண்முரசுக்கு அவ்வாறு ஒரு வாசிப்பு அமையவேண்டும் என்றுதான். முந்தைய தலைமுறை வரை வருந்தலைமுறை வரை அனைவருக்குமான ஆக்கமாக திகழவேண்டும்.

தமிழில் நவீன இலக்கியம் என வரையப்பட்டிருக்கும் அபத்தமான ஒரு வட்டம் என்னை சிறைப்படுத்துகிறது என்பதை எழுதவந்த காலம் முதலே உணர்ந்திருக்கிறேன். 1985 முதல் எழுதிய கடிதங்களிலேயே குறிப்பிட்டிருக்கிறேன். சுரேஷ்குமார இந்திரஜித் அண்மையில் என் பழைய கடிதமொன்றை வெளியிட்டபோது அதில் நான் அப்படி எழுதியிருந்ததை கண்டேன். விஷ்ணுபுரமே அதற்கான முயற்சிதான்.

ஜெ

முந்தைய கட்டுரைஇறையரசன்
அடுத்த கட்டுரைவிடுதலை உரை, கடிதம்