விடுதலை திரைப்படம் இன்று (31 மார்ச் 2023) வெளியாகிறது. ஒரு வகையில் ஆச்சரியம். சென்ற 2022 செப்டெம்பர் 30 ல் பொன்னியின் செல்வன் முதல் பகுதி வெளியாகியது. அதற்கு 15 நாட்களுக்கு முன்பு வெந்து தணிந்தது காடு. இரண்டுமே நான் பணியாற்றிய படங்கள். முதல்படம் பற்றிய பதற்றம் செப்டெம்பர் முதல்வாரமே தொடங்கிவிட்டது. அது தணிந்து வெற்றியின் மகிழ்ச்சி நீடிப்பதற்குள் பொன்னியின் செல்வன் பற்றிய பதற்றம். ஒரு ரோலஸ்கோஸ்டர் மாதம் அது.
பொன்னியின் செல்வன் பற்றிய பதற்றம் கொஞ்சம் ஜாஸ்தியாகவே இருந்தது. ஏனென்றால் பொன்னியின் செல்வன் முதல் பகுதி உண்மையில் ஒரு இரண்டே முக்கால் மணி நேர டிரெயிலர்தான். கதாபாத்திரங்கள் கதைக்கரு இரண்டும் மட்டும்தான் அதில் அறிமுகமாகி இருந்தன. கதையே இல்லை. வந்தியத்தேவன் ராஷ்ட்ரகூட நாடு முதல் (நாவலில் உள்ளதுபோல காஞ்சியில் இருந்து அல்ல) தஞ்சை பழையாறை வழியாக இலங்கை வரை சென்று சினிமாவின் முதன்மைக் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்துகொள்கிறான். அவ்வளவுதான் படத்தில் இருந்தது. கதாபாத்திரங்களின் குணங்கள் கோடிகாட்டப்பட்டிருந்தன. ஒரு சதிவேலை அறிமுகமாகியிருந்தது. கதையில் நகர்வே இல்லை.
கதை முழுக்க இரண்டாம் பகுதியில்தான். கதைத் திருப்பம் ஆதித்த கரிகாலன் வழியாக. அதை நடித்தவர் விக்ரம். அப்படிப்பட்ட ஒரு பெரிய நடிகர் நடிக்கும் முக்கியமான கதாபாத்திரத்தை எளிதில் முடித்துவிட முடியாது. நீண்ட நாவல் ஒன்று சினிமாவுக்காகச் சுருக்கப்படும்போது ஏற்படும் தொடர்புச்சிக்கல்கள், நாவலிலேயே இருந்த ஏராளமான தொடர்ச்சியின்மைகள் ஆகியவற்றைச் சமாளிப்பதற்காக செய்யப்பட்ட திரைக்கதை உத்திகளும், இணைப்புகளும்தான் முதன்மையான பணிகளாக செய்யப்பட்டன.
பொன்னியின் செல்வன் படத்தின் மாபெரும் வெற்றி எடுத்தவர்களையே கொஞ்சம் திகைக்கச் செய்தது. அக்டோபர் இரண்டாம் வாரம்தான் பொன்னியின் செல்வன் காய்ச்சல் ஓய்ந்து அடுத்த வேலைக்கு நகரமுடிந்தது.
சென்ற ஆண்டு முழுக்கவே ஒரு வகை ஜ்வரவேகம்தான். ஜனவரியில் தமிழ் விக்கி அறிவிப்பு, பிப்ரவரி மார்ச் ஏப்ரல் எல்லாம் தமிழ்விக்கி தயாரிப்பு. மே மாதம் அமெரிக்காவில் தமிழ்விக்கி தொடக்கம் அதன் சவால்கள், அமெரிக்காவில் கிழக்குக் கரைமுதல் மேற்குக் கரை வரை பயணம், ஜூனில் குமரகுருபரன் விழா, ஜூலையில் குருபூஜை விழா, ஆகஸ்டில் தமிழ்விக்கி- தூரன் விழா, செப்டெம்பர் அக்டோபரில் சினிமா பதற்றம், அக்டோபரில் ஐரோப்பியப் பயணம், வந்ததுமே நவம்பரில் மலேசியப்பயணம், உடனே விஷ்ணுபுரம் விழா…
இம்முறையும் அதுவே நிகழ்கிறது. ஜனவரி முழுக்கச் சினிமா வேலைகள். பிப்ரவரியில் அருணாச்சலப்பிரதேசம். இதோ மார்ச்சில் இந்த இரு சினிமாக்கள்
மார்ச் 31 துணைவன் கதையின் விரிவாக்கமான விடுதலை. முப்பதுநாட்களுக்குள் பொன்னியின் செல்வன் 2. நான் அனேகமாக மே மாதம்தான் கொஞ்சம் நிலைக்கு வருவேன் என நினைக்கிறேன்.