ஆலயம் அறிதல், கடிதம்
உளம் கனிந்த ஜெவுக்கு,
தங்கள் நலம் விழைகிறேன். ஆலயக் கலை வகுப்பைத் தொடர்ந்து தாராசுரம் கோவிலுக்கு தலபயணத்தை 19.3.23 அன்று அஜி ஒருங்கிணைத்தார். காலை 8.20 மணி அளவில் ஜெயக்குமார் அவர்கள் வந்ததும் அந்த இனிய பயணம் தொடங்கியது. கோவிலுக்குள் செல்லும் முன்பு வெளிய உள்ள கோபுரத்தை பார்க்க வேண்டுமென்று அழைத்து சென்றார். மற்ற கோவில்களுடன் ஒப்பிடும் பொழுது தாராசுரம் எப்படி வேறுபடுகிறது, அதன் சிறப்புகளாக ஜாலகம், miniature சிற்பங்கள் ,சைவமும் சாக்தமும் இணைந்த தன்மை, அம்மனுக்கு தனி சன்னதி மற்றும் பெரியபுராண சிற்பங்கள் இருப்பதை கூறினார். சிதிலமடைந்த அவ்விடத்தில் நடமாடும் திருஞானசம்பந்தரை கண்டதும் உள்ளம் கூத்தாட தொடங்கியது, குழல் கொண்டு கண்ணனையும் சம்பந்தரையும் வேறுபடுத்தலாம் என்றும், ஒன்பது வகை நிதியங்களில் சங்க நிதி பதும நிதி இருவரையும் வளத்தின் குறியீடாக காண்பித்தார். கோவிலில் உத்தர காமிக ஆகமம் பின்பற்றபட்டதும் வெவ்வேறு சக்தி வடிவங்களை விளக்கி கூறினார், அவற்றில் சில சிற்பங்கள் இப்போது இல்லை.
பின்பு பலிபீடம் ( சலிலாந்த்ரம்), சோபனம் ஆகியவற்றை பார்த்து கோவிலுக்குள் சென்றோம். முகமண்டம் (ராஜகம்பீர திருமண்டபம்), மகா மண்டபம் , அர்த்தமண்டபம், அந்தராளம் & கருவறையை வேறுபடுத்திக் காட்டினார். தாரசுர அம்மை அப்பரை வணங்கினோம். உபபீடம், அதிஷ்டான பந்தங்கள், கண்டபாதம்,குமுதம், யாளம் போன்றவற்றை ஒவ்வொரு இடத்திலும் விளக்கினார். முகமண்டப சோபனத்தில் இருந்து இடமாக ஒவ்வொரு சிற்பங்களாக மன்மத தகனம், தக்கன் வேள்வி தகர்த்தது, கோஷ்ட சிற்பங்கள் அவற்றின் ஸ்தானகம், மகுடம்,கை அமைதி, ஆபரணங்கள் & கம்போடியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட வெள்ளைக்கல் பற்றியெல்லாம் விவரித்துக் கூறினார். சரபேஸ்வரர் மற்றும் தட்சிணாமூர்த்தி சிற்பம் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒன்று, அழகில் உச்சங்களைத் தொட்டு மனதை கொள்ளை கொள்பவை. சரபேஸ்வர சிற்பத்திற்கு அடித்தளம் ” மடங்கலானைச் செற்றுகந்தீர் மனைகள் தோறும் தலை கையேந்தி விடங்கராகி திரிவதென்ன வேலை சூழ் வெண்காடனீரே” எனும் திருமுறை பாடலே என்றார்.
அடுத்ததாக அப்பர் கயிலை பெருமானை தரிசித்த பொழுது அருளிய பதிகத்தை காந்தார பண்ணில் ஜெயக்குமார் அவர்கள் பாடிய பின் சிற்பங்களாக காணத் தொடங்கினோம், திருவையாறில் கடந்த வருடம் ஆடி அமாவாசை தினத்தன்று அப்பர் கயிலை காட்சி விழா காணச் சென்றிருந்தேன். ஒருமித்த குரலில் ஓதுவார்கள், பொதுமக்கள் உட்பட அனைவரும் *மாதர்பிறை கண்ணியானை*பதிகம் பாட கயிலை பெருமான் காட்சியளித்த தருணத்தை ஒத்தது, கற்சிற்பம் அளித்த காட்சி. அப்பர் நடந்து,விழுந்து, தவழ்ந்து, புரண்டு பல தடைகளை கடந்து அவனை தரிசித்தேயாக வேண்டும் என செல்லும் பெரிய புராண காட்சிகள் வடிக்கப்பட்டுள்ளன. அவருக்கு கயிலாயத்தில் கிடைக்காத காட்சி திருவையாறில் கிடைத்தது.காணும் ஒவ்வொரு இணையையும் அம்மை அப்பராக கண்டார் களிறு, கோழி, வரிக்குயில், அன்னம்,மயில், பகன்றில், ஏனம், கலை, நாரை, பைங்கிளி, ஏறு என ஒவ்வொன்றிலும்…. அப்பரின் உள்ளம் சொல்லாகியது சிற்பியின் உள்ளம் கல்லாக்கியது மீண்டும் கண்ட எங்களின் உள்ளமும் ஆகியது. 5,12, 21 என மூன்று வெவ்வேறு நூற்றாண்டு உள்ளங்கள் இணைந்த தருணம். அந்த தருணத்தில் இருந்து மீள்வதன் முன் முகமண்டபத்தில் உள்ள கந்த புராணச்சிற்பங்களை
குடவாயில் பாலசுப்ரமணியம் ஐயாவின் நூல் கொண்டு முருகனுக்கும் அசுரர்களுக்கும் எப்பொழுது போர் வரும் என்ற ஆர்வத்துடன் வளைத்து வளைத்து கீழிருந்து மேல் மேலிருந்து கீழ் என குதூகலமாகப் பார்த்தோம். மதிய உணவிற்குப் பின் மாலையில் மீண்டும் கூடி சிறுதொண்டர் புராணத்தை விவரிக்கும் சிற்பங்கள், தனித்திருக்கும் அம்மன் சன்னதி அதன் சிறப்புகளாக கர்ண கூடம், மகாநாசிகை, சாலை ஆகியவற்றை பார்த்த பின்பு சுந்தரர் அருளிச் செய்த திருத்தொண்டத் தொகை வரிசையில் அமைந்த நாயன்மார்கள் வாழ்க்கை வரலாற்றை ஒவ்வொரு குறுஞ்சிற்பங்களாக பார்க்க தொடங்கினோம். ” தில்லை வாழ் அந்தணர் தொடங்கி இசைஞானியர் வரை, நாயன்மார்கள் ஒவ்வொருவரையும் பெருமான் தனித்தனி வழியில் ஆட்கொண்ட முறையை கண கச்சிதமாக பார்த்த பொழுது விழிப்பாவை விரிந்தது மட்டுமே இப்பொழுது ஞாபகம் இருக்கிறது.நாவுக்கரசரை காட்டுமிடத்தில் பெருமானால் திருவடி தீட்சை அளிக்கப்பட்ட நிகழ்வு காட்டப் பெற்றிருந்தது. அந்நிகழ்வு நடந்த திருநல்லூரில் கூட சித்திரம் மட்டுமே உள்ளது. ஆனால், இங்கு கண்ட அழகிய குறுஞ்சிற்பம் கண்ணை விட்டு அகலாமல் உள்ளது. நாயன்மார்களை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே பிரதோச மூர்த்தி உலா வந்து காட்சியளித்தார். அடியார்கள் தரிசனத்தின் பரிசாக நினைத்துக் கொண்டேன். நிறைவாக 108 ஒதுவார் சிற்பங்களை பார்த்து மீண்டுமொரு முறை மூலவரை வணங்கி வெளிவந்தோம். பயணம் முடிந்தவிட்டதே என ஏங்கி ஆசிரியரிடம் நன்றி கூறும் பொழுது அடுத்து ஹொய்சாளம் போவோமா என்றார், மனம் குதூகலமானது. அழகான இந்த பயணத்தில் சற்றும் சோராமல் இன்முகத்துடன் விளக்கிய ஜெயக்குமார் அவர்களுக்கும், சிறப்பாக ஒருங்கிணைந்த அஜீக்கும், அச்சாணியாக இருக்கும் தங்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு முறை கோவிலுக்கு செல்லும் பொழுதும் சிற்பங்களை பார்க்க பார்க்க மனம் அலைபாயும் இது என்ன சிற்பமாக இருக்கும், ஏன் இப்படி இருக்கிறது, என பல கேள்விகள் எழும், மூலவரை நிறைவுடன் வணங்கி வந்தாலும் கோவிலை விட்டு வரும்பொழுது ஏதோ பார்க்காமல் விட்டு வருகிறோம் என்ற எண்ணமே மேலெழும். ஆசிரியர் உடனிருந்து விளக்கினால் நன்றாக இருக்குமே என தோன்றும், தங்களால் அது நிகழ்ந்தேறியதில் மிக்க மகிழ்ச்சி.ஒன்று மட்டும் புரிந்தது இன்னும் கண்டடைய வேண்டிய தேடல் நிறைந்துள்ளதென..
பிரியமுடன்
பவித்ரா, மசினகுடி