கனவுகளின் காலத்தில் வாழ்தல்

செறுகாடு தமிழ் விக்கி

1984 இறுதியில் நான் காசர்கோடு தபால்-தந்தி ஊழியர் சங்கத்தின் கம்யூனில் தங்க ஆரம்பித்தபோது தோழர் நந்தகுமார் எனக்குப் பரிந்துரைத்த நூல்களில் ஒன்று செறுகாடு எழுதிய வாழ்க்கை வரலாறு. வாழ்க்கை வரலாறுகளில் எனக்கு அப்போது பெரிய ஆர்வமிருக்கவில்லை. நான் புனைவுகளில் வெறிகொண்டிருந்த வயது. அத்த்துடன் நான் செறுகாடு யார் என்று அறிந்திருக்கவுமில்லை.

ஆனால் எதையும் வாசிக்கும் வயதென்பதனால் செறுகாடு எழுதிய தன் வரலாற்றை வாசித்தேன். நுணுக்கமான, விரிவான புனைவுகளுக்குச் சமானமாக என்னை உள்ளிழுத்துக்கொண்டது. நான்குநாட்களில் வாசித்து முடித்த அந்நூலை இந்த நிமிடம் வரை நினைவில் வைத்திருக்கிறேன்.

மலையாள இலக்கியத்தின் மாபெரும் தன்வரலாறுகள் சில உண்டு. கொடுங்காற்றின் எதிரொலி (ஏ.கே.கோபாலன்) கண்ணீரும் கினாவும் (வி.டி.பட்டதிரிப்பாடு )நான் (என்.என்.பிள்ளை) ஆகியவற்றைச் சொல்வேன். (எல்லாமே இடதுசாரியினரால் எழுதப்பட்டவை) அவற்றுடன் இணைவைக்கத்தக்கது செறுகாடின் இந்த தன் வரலாறு.

செறுகாடு என்ற பெயரில் எழுதியவர் செறுகாடு கோவிந்த பிஷாரடி. கேரள இடதுசாரி இயக்கங்களின் நிறுவனர்களில் ஒருவர். அவர் எழுதிய முத்தச்சி என்னும் நாவல் மலபாரின் மார்க்ஸிய எழுச்சியின் ஆவணம். தாய் நாவலின் இன்னொரு வடிவம் எனலாம். கட்சி அனுதாபிகளுக்கு முதலில் அதைத்தான் கையில் கொடுப்பார்கள்.

செறுகாடின் இந்த தன்வரலாறு மலபாரில் இடதுசாரி இயக்கங்கள் உருவான சூழலை மிக விரிவாகச் சித்தரிக்கிறது. மலபாரின் ஆசிரியர்கள் தொழிற்சங்கம் அமைத்து ஒருங்குதிரள்வதன் வழியாகவே இடதுசாரி இயக்கம் வலுப்பெற்றது. இதை ஓர் ஆவணம் என்று திரும்பத் திரும்ப மேடைகளில் சொல்வார்கள்.

ஆனால் நான் இந்நாவலை இன்றும் நினைவுகூர்வது இது ஒரு அழகிய நாவலாகவும் வாசிக்கத்தக்கது என்பதே. புனைவுக்குரிய நுண்செய்திகள் நிறைந்த நூல். கதைநாயகனின் (செறுகாடின்) உள்ளம் வெளிப்படும் பல அரிய தருணங்கள் உண்டு. வாழ்க்கையின் திருப்புமுனை புள்ளிகள் தீவிரமான மொழியில் எழுதப்பட்டுள்ளன.

பழைய மலபாரின் மருமக்கள்தாய முறையை விரிவாகச் சொன்னபடி ஆரம்பிக்கிறார் செறுகாடு. அன்றைய பல தன்வரலாறுகளில் தாய்மாமன்களின் ஊழல், பொறுப்பின்மையே பேசப்பட்டிருக்கும். செறுகாடு அவருடைய குஞ்சு அம்மாவன் மேல் பெரும் பிரியத்துடன் இருக்கிறார். தன்னை உருவாக்கியவர் அவர் என நினைக்கிறார். குடும்பச் சூழல், வறுமை போன்ற எதனாலும் செறுகாடு இடதுசாரி ஆகவில்லை. அவரை இடதுசாரி ஆக்கியது அவருடைய இயல்பான கற்பனாவாதப் பண்புதான் என்று படுகிறது.

சிறுகதைக்கு நிகரான தருணங்கள் வந்துகொண்டே இருக்கும் வரலாறு இது. கறுத்தபட்டேரி என்னும் நம்பூதிரி செறுகாடின் வீட்டுக்கு வருகிறார். உடனே அவருக்கு செறுகாடின் தமக்கை மாளுவை திருமணம் செய்து வைக்கிறார்கள். அவர் அங்கேயே தங்குகிறார். உள்ளூர் கோயிலில் பூஜை செய்கிறார். மாளுவுக்கு குழந்தை பிறக்கிறது. அவளுக்கு கண்நோய் வருகிறது. கண்நோய் தீரும்வரை பட்டேரி மனைவியை பார்க்கக்கூடாது என வைத்தியர் சொல்கிறார். ‘படுக்கையை உதறிச் சுருட்டி’விட்டுச் செல்லும் பட்டேரி சென்றவர் சென்றவர்தான். சுருக்கமான கதை. ஆனால் பட்டேரி சுரண்டல்காரர் அல்ல. அவர் சுதந்திரப்போராட்ட வீரர். அன்றைய நம்பூதிரிகளின் வாழ்க்கை அதுதான். ஒருவகை நாடோடிகள்.

இந்நூலில் என்னை அன்று கவர்ந்து இன்றும் நினைவில் இருப்பது இதிலுள்ள ஒரு காதல் கதை. கேரளத்தின் வரலாற்றுக் காதல்கதைகளில் இதற்கிணையானது சி.வி.ராமன்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றில் வருவதுதான் (ஆசிரியர் பி.பரமேஸ்வர பிள்ளை)

செறுகாடின் அத்தை பாருக்குட்டியும் தன் இரண்டாவது மகளான இரண்டு வயது லட்சுமி பிஷாரஸ்யாரை ஏழுவயதான செறுகாடுக்கு திருமணம் செய்து கொடுப்பதைப் பற்றிப் பேச அவர் அம்மா அதை உறுதி செய்கிறார்கள். அன்று குடியேறிய அந்தக் காதல் அவர் உள்ளத்தில் வளர்கிறது. ஆனால் குடும்பங்களில் பிளவு. வெவ்வேறு இடங்களில் லட்சுமி என்ற கரிய பெண்ணை பார்த்திருந்தாலும் செறுகாடு அவள்மேல் தன் காதலைச் சொல்லவில்லை. அவளுக்கு வேறு இடத்தில் திருமணம். அதை இன்னொருவர் சொல்லி அறிகிறார்.

ஆனால் உடைந்துபோகவில்லை. துயரம் இருக்கிறது. அதைவிடப் பெரிய கனவுகள். காங்கிரஸின் கதரியக்கத்தில் தீவிரமாக இருக்கும் காலகட்டம் அது. சட்டமீறல் இயக்கம், தலைவர்களுடனான உறவுகள், கொள்கைசார்ந்த உரையாடல்கள்… கொந்தளிப்பான நாட்களில் காதலை எண்ணிக் கலங்க நேரமே இல்லை.

பின்னர் குறுவட்டூர் என்னும் இடத்தில் பதினேழுவயதான லட்சுமியை மீண்டும் சந்தித்தார் செறுகாடு. அப்போது அவளுடைய அந்த திருமண உறவு முடிந்துவிட்டிருந்தது. படித்து ஆசிரியை ஆகிவிடவேண்டும் என நினைத்து அதில் ஈடுபட்டிருந்தாள். செறுகாடு அவளுக்கொரு கடிதம் எழுதி கொடுக்கிறார். அதில் தன் காதலைத் தெரிவிக்கிறார்.

மிகக்குறைவான சொற்களில் அந்தக் காதல் சொல்லப்படுகிறது. “அவள் அந்த கடிதத்தை எடுத்து உள்ளே போனாள்”  எந்த உணர்ச்சியும் இல்லாமல் மீண்டும் சந்திக்கிறாள். கடிதத்தை படித்தாயா என்ற கேள்விக்கு படித்தேன் என்று பதில். என்ன சொல்கிறாய்? பதில் தருகிறேன். பதிலில் சம்மதம், ஆனால் வீட்டாரின் சம்மதம் தேவை என்கிறாள். நான் சம்மதம் வாங்குகிறேன், அதுவரை காத்திருப்போம் என்கிறார் செறுகாடு. அதன்பின் அவளை மணக்கிறார்.

இந்த எளிமையான காதல் ஒருவகை அமரகாதலாகவே எழுதப்பட்டுள்ளது. அந்த எளிமையால்தான் அது அமரகாதலாகிறது. நேரடியான ஒரு வகை சித்தரிப்பு. தான் தற்பாலுறவு கொண்டிருப்பதாகவும், விபச்சாரியிடம் ஒருமுறை சென்றிருப்பதாகவும் செறுகாடு பதிவு செய்கிறார். அதே நடையில் இந்தக்காதலையும் எழுதுகிறார். செறுகாடு உருவாக்கிய யதார்த்தவாதம் இது.

நிர்மால்யா அதே எளிமையான நேரடிநடையை மொழியாக்கத்திலும் கொண்டுவந்துள்ளார். முக்கியமான ஒரு வாசிப்பனுபவமாக இந்நூல் ஆவது அந்த நடையால்தான்.

இன்று பார்க்கையில் அந்த வாழ்க்கையின் ’அளவு’ பிரமிக்கச் செய்கிறது. போராட்டங்கள், சிறைவாசங்கள், உயர்ந்த இலட்சியக்கனவுகள், சோர்வுகள், மீட்சிகள், வெறிகொண்ட வாசிப்பும் எழுத்தும், ஓயாத பயணங்கள்…எவ்வளவு நிகழ்வுகள். இந்திய சுதந்திரம், கம்யூனிஸ்டு கிளர்ச்சிகள், கட்சி தடைசெய்யப்படுதல், கட்சி ஆட்சியைப் பிடித்தல்…அதன் நடுவே ஒரு அமரகாதல் இல்லையென்றால்தான் குறைவு. அந்த தலைமுறை கனவுகள் நூறுமேனி விளைந்த காலத்தில் வாழும் நல்லூழ் கொண்டது.

முந்தைய கட்டுரைஅருணாச்சல புராணம்
அடுத்த கட்டுரைமழையில் சொல்லப்பட்டது…