கொற்றவை, நீலி- கடிதம்

கொற்றவை வாங்க 

அய்யா வணக்கம்..

என் பெயர் மு.மோகனப்பிரியா….நான் மயிலம் தமிழ்க் கல்லூரியில் முதுகலைத்தமிழ் இரண்டாம் ஆண்டு படிக்கிறேன்….எனக்கு ஒரு ஐயம் அய்யா…..தாங்கள் எழுதிய கொற்றவை நாவல் சிலப்பதிகாரம் மையமிட்டு காணப்படுவதால் நான் ஆய்வு செய்கிறேன்…..கொற்றவை நாவலில் கவுந்தியடிகளை முதன்மைப்படுத்தாமல் நீலியை ஏன் முதன்மைப்படுத்தினீர்கள்??……அதற்கான காரணம் வேண்டும் அய்யா….

மோகனப்பிரியா

அன்புள்ள மோகனப்பிரியா,

சிலப்பதிகாரம் சமணக்கருத்துக்களையும் பௌத்தக் கருத்துக்களையும் முன்வைப்பது. சமணக்கருத்துக்களை முன்வைக்கவே கவுந்தி அடிகள் அக்கதையில் வருகிறார். வஞ்சிக்காண்டத்தில் பௌத்தக்கருத்துக்கள் பேசப்படுகின்றன

கொற்றவை நாவல் சமணச்சார்பு அல்லது பௌத்தச்சார்பு கொண்டது அல்ல. அது பெண் சார்பு கொண்டது. கண்ணகியை அது கொற்றவையாகவே முன்வைக்கிறது. ஆகவேதான் கவுந்தி வரவில்லை.

கொற்றவையின் பரிவார தெய்வம் நீலி. அல்லது துணைத்தெய்வம். ஆற்றுகால் போன்ற கொற்றவை ஆலயங்களில் துணைத்தெய்வமாக நீலியை காணலாம். பெருந்தோழி என்றும் சொல்வார்கள். ஆற்றுகால் பகவதி கண்ணகி கோயில்தான். பின்னர் பகவதியாக ஆகியது. இன்றும் நல்லம்மத் தோற்றம் என்ற பெயரில் கண்ணகி கதை அங்கே பாடப்படுகிறது.

பகவதியின் துணைத்தெய்வமாகிய நீலிதான் கொற்றவையில் கண்ணகிக்கு துணையாக வருகிறாள். அது ஓர் இலக்கிய உத்தி. கண்ணகி கதையை முழுக்கமுழுக்க பெண் பார்வையில் சொல்வதற்கு அந்த உத்தி உதவுகிறது

ஜெ

முந்தைய கட்டுரைமதுக்கடல்,கடல்
அடுத்த கட்டுரைகி.ரா