தியானம், திரளும் தனிமையும்
அன்புள்ள ஜெ,
திரு தில்லை செந்தில் பிரபு கற்பித்த தியான வகுப்பில் பங்குபெற்றது பயன் உள்ளதாக அமைந்தது. முதல் நாள் வகுப்பில் யோகம் தியானம் ஆகியவற்றுக்கு ஞானிகளின் விளக்கங்கள் கூறப்பட்டன. சுவாசத்துடன் உடல், மனம் ஆகியவற்றுக்கு உரிய தொடர்பும், சுவாச பயிற்சியின் மூலம் அவற்றின் மீது கட்டுபாடு அமையும் என பயிற்றுவிக்கபட்டது. பின் பிராணயாமம் மற்றும் தியான பயிற்சிகள்.
அடுத்த வகுப்பில், கணம் என்ற சொல்லை விளக்கி, தியான பயிற்சி மூலம் அந்த கணத்தில் வாழ்தல் சாத்தியம் என நிறுவினார். அன்றாட வாழ்விற்கு தேவையான கருவிகளும் (Life tools) கூறபட்டன.
அ) without prejudice – முன் முடிவு, முன் அனுபவங்கள் மூலம் அந்த கணத்தை எதிர்கொள்வதால் புதிய சாத்தியங்கள் தடைபடுதல்
ஆ) acceptance – அந்த கணத்தை ஏற்று கொள்ளுதல். இங்கு ஏற்று கொள்ளுதல் என்பது சகிப்பு தன்மை அல்ல. சகிப்புதன்மை அதிக ஆற்றலுடன் ஒரு நாள் வெளிபட்டு விடும். மாறாக, அந்த கணத்தை விழிப்புணர்வுடன் கவனிக்கும் போது, சூழ்நிலையை ஏற்று கொள்வது நமக்கு தேர்ந்தெடுக்க கூடிய ஒரு வாய்ப்பாக அமையும். எளிமையாக, ஏற்றுகொள்வது என்பது அனுமதிப்பது. தேவையற்ற தனிப்பட்ட அனுபவங்களோடு (எண்ணங்கள், இச்சைகள்) போராடாமல் நமக்குள் வந்து செல்ல அனுமதிப்பது.
இ) Responsibility (ability to respond)- பொறுப்பை நேர்மறையாக ஏற்று கொள்ளுதல்.
தில்லை அவர்களுக்கும், தங்களுக்கும் நன்றி,
விஷ்ணுவர்த்தன்.
அன்புள்ள ஜெ
தியான வகுப்பு பற்றிய கடிதங்கள் கண்டேன். தியான வகுப்பு மீண்டும் நிகழுமா?
ஆனந்த்குமார்
அன்புள்ள ஆனந்த்
இன்றையசூழலில் வழிபாடற்ற ஆன்மிகம், இயற்கையையும் உடலையும் அறியும் ஆன்மிகம் இத்தகைய தியானங்கள் வழியாகவே இயல்வது. ஆகவே இதை தொடர்ந்து நடத்தவே எண்ணுகிறேன்.
ஜெ