ஆலயக்கலை, சிற்பக்கூடம்- கடிதம்

இனிய ஜெயம்

சென்னையில் துவங்கி சென்னையில் முடிந்த 10 நாட்கள் அஜ்மீர் யாத்திரை முடித்து, வெள்ளி இரவு கடலூர் வந்து சனிக்கிழமை விழுப்புரம் போய்விட்டு, ஞாயிறு காலை அஜி ஒருங்கு செய்த பரத்வாஜ் ஜெயக்குமார் அவர்கள் எடுக்கும் கோயிற்கலை வகுப்பு நோக்கி தாராசுரம் பயணம்.

நண்பர்கள் புதுச்சேரி மணிமாறன், தாமரைகண்ணன், திருமாவளவன் இவர்களுடன் இணைந்து மணிமாறன் காரோட்ட அதிகாலை 5 மணிக்கு எங்கள் பயணம் துவங்கியது. வடலூர் நெய்வேலி சேத்தியாதோப்பு வழியே, தாராசுரத்தில் காலை 7,30 கு துவங்கும் வகுப்பில் சென்று சரியான நேரத்தில் இணைந்து கொள்வதாக திட்டம். சாலை மோசமாக இருந்தமையால் தாமதமாகியது.

நினைவு தெரிந்த நாள் முதல் பல முறை, பல்வேறு சூழலில், பருவங்களில்,மன நிலைகளில் நான் வந்த கோயில் இது என்றாலும், இப்போது யோசிக்கயில் குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்கள் எழுதிய தமிழக கோபுரக் கலை மரபு, தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் இந்த இரண்டு நூல்களையும் கையில் பிடித்துக் கொண்டு ஒவ்வொரு பக்கமாக புரட்டிப்பார்த்து கோயிலை அண்ணாந்து பார்த்து என்று இந்த கோயிலை சுற்றிய காலமே எனக்கு மதிப்பு மிக்கவை என்று படுகிறது. முற்கால சோழர்கள் கோயில் துவங்கி, தஞ்சை, கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் என ஒரு சுற்று ஒரே பார்வையில் குடவாயில் அவர்கள் நூல்கள் துணையுடன் முழுமையாக சுற்றி வருவது என்பது கோயிற் கலை மீது ஈடுபாடு கொண்ட அனைவரும் ஒரு முறையேனும் நிச்சயம் செய்ய வேண்டிய ஒன்று.

நாங்கள் உள்ளே சென்ற போது ராஜகம்பீரன் திருமண்டபத்தின் தூண்களில் உள்ள மினியேச்சர் சிற்பங்கள் வழியிலான புராண சித்தரிப்புகளை விளக்கிக்கொண்டிருந்தார் ஜெயக்குமார். ஆலயக் கலை வகுப்பில் பங்கு கொண்ட, மேலும் அறிய ஆர்வம் கொண்ட அதன் வாசகர்கள் பலரும் அவரை சூழ்ந்து நின்றிருக்க அஜிதன் குடவாயில் அவர்களின் தாராசுரம் நூலை கையில் வைத்து பிரித்து ஒவ்வொரு விளக்க சித்திரம் மீதான உரையையும் வாசித்துக் கொண்டிருந்தான்.

பின்னர் தலைவாயில் முதல் விமான கலசம் வரை ஒரு அறிமுகம். ஒவ்வொரு பாகத்தையும் சுட்டி ஜெயக்குமார் வினவ, வாசகர்கள் சடார் சடார் என பதில் அளித்தனர். அதன் பிறகு சங்க நிதி பதும நிதி சிற்பம் துவங்கி கோயிலின் ஒவ்வொரு சிற்பமாக அதன் தொன்ம புராண பின்புலத்துடன் அதன் கலை வீச்சை விளக்கினார். 12 மணிக்கு கோயில் மூடிவிட்டார்கள். தொல்லியல் துறை அதிலும் குறிப்பாக யுனெஸ்க்கோ கட்டுப்பாட்டில் உள்ள கோயிலை இப்படி 12 முதல் 4 வரை எல்லோரையும் வெளியே தள்ளி பூட்டுவது அநியாயம்

அவரவர் உண்டு ஓய்வு கொண்டு மிக சரியாக 4 மணிக்கு கோயில் வாயிலில் மீண்டும் கூடுவது என்ற முடிவுடன் பிரிந்தோம். அஜி அறைக்கு போகிறேன் என்று கிளம்பி விட நாங்கள் நண்பர்கள் நால்வரும், தாமரையின் நண்பர் வழிகாட்டலில்  பக்கத்தில் மாங்குடி கிராமதில் இயங்கிக்கொண்டிருந்த செந்தில் சிற்பக் கலைக் கூடத்துக்கு சென்று எங்களை அறிமுகம் செய்து கொண்டோம். அதன் முதல்வர் செந்தில் எங்களுக்காக சிற்ப பட்டரையை திறந்து விட்டு, தேன் மெழுகு கொண்டு மாதிரி சிற்பம் செய்வது துவங்கி, அச்சு செய்வது தொடர்ந்து, புடம் போடுவது வழியே முழுமையாக செப்பு சிலைகளை உருவாக்கி எடுப்பது வரை பணி சூழலில் தாமரை கேள்விகளுக்கு பதிலாக ஒவ்வொன்றாக காட்டினார்.

அவர்களை விடுத்து நான் தனியே பணிக் கூடத்தை சுற்றி வந்தேன்.  மூன்றரை அடி உயர தேன் மெழுகு சரஸ்வதி நின்றிருந்தாள். மூலையில் தேன் மெழுகு ஆஞ்சநேயர். முழுமையான செப்பு பிட்சாடனர், கிருஷ்ணன், வராக மூர்த்தி இப்படி பல தெய்வங்கள் பல்வேறு அளவுகளில் ஆங்காங்கே விழுந்து கிடந்து தயாராகிக்கொண்டு இருந்தார்கள், வேறொரு மூலையில் வெவ்வேறு உயரங்களில் விவேகானந்தர் சிலைகள், பிலாஸ்டர் கொண்டு தயாரிக்கப்படும் உற்சவ தெய்வ வாகனங்கள், தனித்தனியே கிடக்கும் குட்டி குட்டி சிற்ப ஆயுதங்கள், கரங்களின் முத்திரைகள் மேடை அலங்கார பொம்மைகள், ஒரு அறை முழுக்க வெளியே செல்ல தயாராகி நிற்கும் நான்கடி உயர நர்த்தன கணபதி, ரிஷபாந்தகர், நடராஜர், சரஸ்வதி, பாவை விளக்குகள், நூற்று கணக்கான குட்டி குட்டி சிற்பங்கள் என ஒரு குட்டி சர்ரிரியல் உலகில் கொஞ்ச நேரம் நின்றிருந்தேன். ஆசுவாசம் கண்டு தோட்டம் பக்கம் சென்றேன். முதல் கணம் கண்ட அக் காட்சி காசியின் அணையா சிதை மேடு ஒன்றின் தோற்றம் போலவே இருந்தது. தேங்காய் தென்னை எச்சங்கள்  சாணஎரு இவற்றை மட்டுமே கொண்டு இயங்கும் பெரிய உலை. கூடத்தை விட்டு வெளியேறிய பின்னரும் நெடு நேரம் சிற்பங்கள் பிறக்கும் சிதை மேடு என்னுள்ளே புகையெழுப்பிக்கொண்டே இருந்தது.

முடித்து நேரம் மூன்றையும் கடக்க, ஊருக்குள் விசாரித்து ஊரிலேயே நல்ல உணவகமான சார்ங்கபாணி கோயில் கோபுரத்துக்கு கீழே இருக்கும் உணவகத்தில் சென்று சாப்பிட்டுவிட்டு, நண்பர்கள் வெற்றிலை பாக்கு போட்டபடி, எல்லோரும் அண்ணாந்து கோயில் கோபுரத்தை வேடிக்கை பார்த்தோம். வண்ணமிக்கு சுதை சிற்பங்கள் அடங்கிய பிரம்மாண்ட கோபுரம். கீழே முதல் நிலை முழுக்க காமச் சிற்பங்கள். அந்த விஷ்ணு கோயில் கோபுரத்தின் அடித்தளம் முழுக்க சிவன் மற்றும் முருகனின் நடன புடைப்பு சிற்பங்கள். அது எவ்விதம் நிகழ்ந்து என்பது மற்றும் ஒரு அழகிய வரலாறு. தனது கோபுரக் கலை குறித்த கட்டுரை ஒன்றில்  குடவாயில் அதை விரிவாகவே விளக்கி இருக்கிறார். சரியாக 4 மணிக்கு கோயில் வளாகம் சென்றோம்.

மாலையில் ஜெயக்குமார் கோயிலுக்குள் அமைக்கப்பட்டிருந்த 63 நாயன்மார் வாழ்வு சார்ந்த சித்தரிப்புகளை அது எவ்விதம் பெரிய புராண பாடல்களின் கலை வெளிப்பாடாக இருக்கிறது என்பது சார்ந்து வகுப்பு எடுத்தார். பிரதோஷம் மற்றொரு 18 ஆவது சோழக் கோயில் கலை பயண கோஷ்டி என கோயில் இறைச்சலில் நிறைந்து அதிர்ந்து கொண்டிருந்தது.

பின்னர் தேவிக்கோட்டம் சென்று இந்த சோழக் கட்டிடக்கலை சாளுக்கியம் கலிங்கம் இங்கிருந்தெல்லாம் கலை வெளிப்பாடுகளை எவ்விதம் ஸ்வீகரித்திருக்கிறது என்பதை விளக்கினார் ஜெயக்குமார். மணி 6. மழை மேகம் திரள, திரும்ப போகும் சாலை மீதான பீதியில் நாங்கள் அங்கேயே ஜெயக்குமார் அஜி வசம் விடைபெற்று கிளம்பினோம்.

7 மணிக்கு நல்ல மழையில் சிக்கிக்கொண்டோம். மின்சாரம் இன்றி எங்கும் இருட்டு. ஓரம் கட்டி நிற்க கூட வழி இல்லாத சாலையில், மின்னல்கள் முழங்கும் பெருமழை வானின் கீழ், வைப்ரேட்டர்கள் வழித்துப் போட்ட பின்னும் எதுவும் தெரியாத கார் முகப்பு கண்ணாடி வழியே பார்த்தபடி, எதிர்வரும் பிரம்மாண்ட லாரிகள் பேருந்துகள் அள்ளி வீசும் வெளிச்ச மழைக்குள், எப்போதும் குத்து மதிப்பாகவும், அவ்வப்போது மிக மிக திறமையாகவும் காரோட்டினார் மணிமாறன்.

நெய்வேலி சாலை அது . மின்னங்களில் ஒன்று என மின்சாரம் வந்த போது கண்ணில் முதலில் பட்டது கிருஷ்ணபவன். கண்ணாடி மாளிகை. பொன்னொளிர் விளக்குகள்.  நேரம் இரவு 8.30 நெருங்க, ஓட்டல் வாசலில் காரை நிறுத்தி விட்டு, மழையின் அறையை முதுகில் வாங்கியபடி ஓட்டலுக்குள் ஓடினோம்.

நண்பர்கள் ஏதேதோ உணவு ஆர்டர் செய்ய, விதிதான் என்னையும் தாமரையையும் பரோட்டா ஆர்டர் செய்ய சொல்லி சதி செய்திருக்க வேண்டும். சார்லி சாப்ளின் ஒரு படத்தில் லெதர் செருப்புகளை வெந்நீரில் வேக வைத்து தின்பார். அதே ருசி, மணம், திடம். இது உணவைப் பழிக்கும் வரிகள் அல்ல, ப்ரோட்டாவுக்கு 100 ரூபாய் பில் போடும் ஒரு உயர்தர ஓட்டல் அதற்கு ஈடாக தந்த பரோட்டா வின் நிலை மீதான வருத்தம் இது. தமிழ்நாட்டில் இன்று பெரும்பாலான வணிகர்கள் வாடிக்கையாளரை நடத்தும் விதம் இதுதான். காசு கொடுப்பவன் முகத்திலேயே காறித்துப்பி செருப்பால் அடித்து அனுப்புவது போல ஒரு வணிகம்.

கடந்த வாரம் முழுக்க அஜ்மீர் தரிக்கா அருகே தங்கி இருந்தோம். வித விதமான உணவகங்களில் உண்டோம். தினம் ஒன்றுக்கு சாதாரணமாக லட்சம் பேர் வந்து போகும் இடம். ரெகுலர் வாடிக்கையாளரை நம்பி நடக்கும் உணவு விடுதிகள் அல்ல அவை. எனினும் ஒரே ஒரு உணவகத்தில் கூட சூடு ருசி குறைந்த உணவை நாங்கள் சாப்பிட நேர வில்லை. அந்த நிலையில் இருந்து இங்கே வந்த வகையில் இந்த தடித்தனத்தை என்னால் ஜீரணித்துக் கொள்ளவே இயலவில்லை.

வெளியே வரவும் மழை நிற்கவும் சரியாக இருந்தது. பண்ரூட்டி வந்து, கடலூர் வந்து நண்பர்கள் ஒவ்வொருவராக பிரிந்து அவரவர் இல்லம் மீண்டோம். அடுத்த சந்திப்பு உடனடியாக புதுவை வெண்முரசு கூடுகயில் சந்திப்போம்.

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைஉறையும் கணங்கள்- கடிதம்
அடுத்த கட்டுரைகபர் – கலை கார்ல்மார்க்ஸ்