ஆலயம் அறிதல், கடிதம்

ஜெ

தாங்கள் நலமா?

காலை விழித்தவுடன் ‘ஓர் இரவு’ கட்டுரையை வாசித்தேன். பேருந்தில் பயணித்து கொண்டே விழுந்து விழுந்து (கீழே விழாமல்) சிரித்து கொண்டிருந்தேன். தங்களிடம் பேசலாம் என்று தோன்றியது.

நேற்று தாராசுரம் கோயிலில் ஜெய குமார் அவர்களுடன் வகுப்பு ஓர் அரிய அனுபவம். இது குறித்து விரிவான கடிதம் எழுதுகிறேன்.

நல்ல வெயில். ஆனால் சலிக்காமல் எல்லாவற்றையும் விளக்கினார். பல தகவல்களை அளித்தார். கதைகள் சொன்னார் (பவித்ரா அக்காவும் நாயன்மார்கள் கதைகள் சொன்னார்கள்) . அம்பாள் சன்னதியிலும் ஐராவதீஸ்வரர் சந்நிதியிலும் பாடினார். கருவறையில் சங்கீதம் கூடிய இறை தரிசனம். மாலையில் செல்லும் போது அவர் வாய்யும் தொண்டையும் வலி கொண்டிருந்தது.

சனிக்கிழமை காலையில் கும்பகோணம் சென்றுவிட்டிருந்தேன். இராமசாமி கோயிலையும் கும்பேஸ்வரர் கோயிலையும் தஞ்சை பெரிய கோயிலையும் சென்று பார்த்தேன். ஆலயங்களை நான் பார்க்கும் முறை எத்தனை மேம்பட்டு இருக்கிறது என்று ஒரே ஆச்சர்யம். சின்னங்களை கொண்டு சிற்பங்களை நானே அடையாள படுத்திகொண்டது எனக்கே வியப்பாக இருந்தது. மகிழ்ச்சியில் துள்ளி குதித்து கொண்டேன் (மனதில்). ஆரம்ப கட்ட அளவில் தான் என்றாலும், இந்த முன்னேற்றம் மேலும் பயில வேண்டும் என்று ஆர்வத்தை தூண்டுகிறது.

முற்றிலும் புதிய ஒரு அனுபவமாக அமைந்தது. இத்தகு வாய்ப்பை அமைத்தமைக்கு மிக்க நன்றி.

நன்றி,
சரண்யா

அன்புள்ள சரண்யா,

1985ல் எனக்கு இருபத்து மூன்று வயதிருக்கையில் நான் ஆலயக்கலை அறிந்த கேரளத்து அறிஞர் ஒருவருடன் (எம்.பிரசாத்) கோயில்களுக்கு முதல்முறையாகச் சென்றேன். அவருடைய கண்வழியாகச் சிற்பங்களைப் பார்த்தேன். அது ஒரு பெரும் தொடக்கம். அதன்பின் 1998ல் ஜெயச்சந்திரன் என்னும் நடனக்கலைஞருடன் காஞ்சிபுரம் உள்ளிட்ட ஊர்களுக்கு ஆலயங்களைப் பார்க்கச் சென்றேன். அது இன்னொரு அனுபவம். ஆலயங்கள் பற்றிய என் பார்வையே மாறியது. அங்கிருப்பது ஒரு கட்டிடம் அல்ல. அது ஒரு மாபெரும் கலைப்புத்தகம், வரலாற்றுநூல் என அறிந்தேன். அதன்பின் இன்றுவரை ஆலயப்பித்து குறையவில்லை. எனக்கு மரபான பக்தி இல்லை. நான் வழக்கமான வழிபாடுகளைச் செய்வதில்லை. ஆனால் ஆலயங்கள் எனக்கு மிகப்பெரிய ஓர் உலகமாக இன்று வரை உள்ளன. இந்தியாவெங்கும், ஏன் உலகமெங்கும் ஆலயங்களைப் பார்க்கவே சென்றுகொண்டிருக்கிறேன். அந்த பித்து உங்களுக்கும் தொடங்கட்டும். அது ஒரு பெரிய இனிமை. வாழ்க்கையில் சலிப்பென்பதே இல்லாமலாக்கிவிடும்.

நவநாகரீக வாழ்க்கை பணத்தை அளிக்கிறது. கலாச்சாரப் பயிற்சியை அளிப்பதில்லை. எந்தக் கலையை ரசிப்பதென்றாலும் முதலில் தேவையாவது கலாச்சாரப் பயிற்சிதான். அது இல்லாதபோதுதான் எளிமையான கேளிக்கைகளுக்குச் செல்கிறோம். அக்கேளிக்கை அறிவுத்திறன் கொண்டவர்களுக்கு விரைவிலேயே சலித்துவிடும். அவர்கள் போதை, சூது என முன்னகர்வார்கள். கலாச்சாரப் பயிற்சியின் விளைவாக கிடைக்கும் அறிவுசார்ந்த மகிழ்ச்சிகள் வளர்ந்துகொண்டே இருப்பவை. நம் அகவை முதிர்வில் பெரும் நிகருலகு என உடனிருப்பவை. நம்மை இவ்வாழ்வின் எல்லா வெறுமைகளிலிருந்தும் காப்பவை. இன்றைய சூழலில் ஒரு முகநூல் ஜோம்பி’ ஆகவோ ’இன்ஸ்டா ஆவி’யாகவோ ’யூடியூப் பக்கி’ யாகவோ ஆகாமலிருப்பதே நம்முள் உள்ள ஒரே பெரும் சவால். அதற்கான வழி இது ஒன்றே

ஜெ

முந்தைய கட்டுரைஇன்னொருவரின் புலி -கடிதம்
அடுத்த கட்டுரைசந்திரகலையணிந்தவனின் தேவி