கல்லுக்குள் ஈரம், கடிதம்

ர.சு.நல்லபெருமாள் தமிழ் விக்கி

கல்லுக்குள் ஈரம் தமிழ் விக்கி

அன்பின் ஜெ,

வணக்கம்.

ர.சு. நல்லபெருமாளின் “கல்லுக்குள் ஈரம்” வாசித்தேன். நல்லபெருமாள் பற்றி மேல் விபரங்கள் அறியவும், வாசிப்பனுபவத்தை நண்பர்களுக்கு பகிரும்பொழுது அவரின் புகைப்படங்களை தரவிறக்கிக் கொள்ளவும் தமிழ் விக்கி தளம் மிகுந்த உதவியாயிருந்தது.

நாவல் வெளிவந்து கிட்டத்தட்ட ஐம்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாகிறது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் உண்மை வரலாற்று நிகழ்வுகளினூடே கதை மாந்தர்கள் பயணிக்கிறார்கள். காந்தி, மகாதேவ தேசாய், நேரு, படேல், வ.உ.சி, பாரதி, சுப்ரமணிய சிவா, முஸ்லிம் லீகின் தலைவர் முகமது அலி ஜின்னா, சுபாஸ் சந்திர போஸ், ராஷ் பிஹாரி போஸ், அமெரிக்க பத்திரிகையாளர் வெப் மில்லர்,  பிரிட்டனின் அரசியல் தூதுவர் சர் ஸ்டாஃபோர்டு கிரிப்ஸ், கோட்சே…அனைவரும் நாவலில் வருகிறார்கள். சுதந்திரப் போராட்டத்தில், காந்தியின் அஹிம்சை வழிமுறைகளுக்கும், தீவிரவாதக் குழுக்களின் ஆவேசத்திற்குமிடையேயான உரையாடல்களும், முரணியக்கங்களும் நாவலில் இடம்பெற்றிருக்கின்றன. புனைவுப் பாத்திரங்களை, உண்மை மனிதர்களிடையே உலவவிட்டு, சுதந்திரப் போராட்டத்தின் பல முக்கிய நிகழ்ச்சிகள் வழியாக, நாவலைப் படைத்திருக்கிறார் ர.சு. நல்லபெருமாள்.

22 வயதாகும் ரங்கமணி, அம்பாசமுத்திரம் நெல்லையப்பப் பிள்ளையின் பேரன். ரங்கமணியின் அப்பா சாமிநாதன், வ.உ.சி-க்கும், பாரதிக்கும், சுப்ரமண்ய சிவாவிற்கும் நெருங்கிய நண்பர். சிதம்பரம் பிள்ளை சுதேசி கப்பல் கம்பெனி துவங்க, சாமிநாதன், அப்பா நெல்லையப்பரை வற்புறுத்தி, முதலீட்டில் உதவியிருக்கிறார். அவர் உறுப்பினராயிருந்த “பாரத மாதா சங்க”த்தின் ஏற்பாட்டில்தான் வாஞ்சிநாதன் மணியாச்சியில் ஆஷ் துரையை சுட்டுக் கொன்றது; அப்போது சாமிநாதனும் உடனிருந்திருக்கிறார். “பிளான் B”-யாக, வாஞ்சியால் முடியாமல் போனால், ஆஷைக் கொல்வதற்கு அவரிடமும் ஒரு துப்பாக்கி இருந்திருக்கிறது.

ரங்கமணியின் பத்தாவது வயதில், அவன் கண் முன்னாலேயே அவனின் அப்பா சாமிநாதன், சுதந்திரப் போராட்டத்தில் வெள்ளைக்கார காவல்துறையால் அடித்துக் கொல்லப்பட்டுவிட, அதற்குப் பழிவாங்கும் சமயத்திற்காகக் காத்திருக்கிறான் ரங்கமணி. பள்ளிப் பருவத்தில், தாத்தாவின் நண்பர் சங்கரராம தீக்ஷிதருடன் சென்று, தன் பதினான்காவது வயதில், திருநெல்வேலிக்கு வந்திருந்த காந்தியைச் சந்திக்கிறான் ரங்கமணி. காந்தி அவனுக்கு சிலுவை ஒன்றை பரிசாகத் தருகிறார். தீக்ஷிதர் அவனை அஹிம்சா வழியில் திருப்ப எத்தனைதான் முயற்சித்தாலும், வளர வளர, ரங்கமணியின் மனதில் வெள்ளையர்களை பழிவாங்க வேண்டும் என்ற வெறி தழலாய் எரிகிறது. சுதந்திரப் போராட்டத்தில் காந்தியின் அஹிம்சா வழிமுறையை அடியோடு வெறுக்கிறான் ரங்கமணி. போஸ்தான் அவனின் ஆதர்சம். தீவிரவாத சிந்தனைகளிலும், செயல்பாடுகளிலும் விருப்பம் கொண்டு சென்னை சட்டக்கல்லூரி படிப்பை பாதியில் விட்டுவிட்டு ஊருக்குத் திரும்புகிறான்.

முன்பொருமுறை, செம்புதாஸ் கிட்டங்கியில் ரகசியமாக வெடிகுண்டுகள் வாங்கி, ஓர் நள்ளிரவில், செயிண்ட் ஜார்ஜ் கோட்டையின் அரசு அலுவலகத்தின் மேல் வீசிவிட்டு தப்பி ஓடும்போது, துரத்திக்கொண்டு வந்த காவலர்களிடமிருந்து, தன்னைக் காப்பாற்றிய, திருநெல்வேலி சிந்துபூந்துறையைச் சேர்ந்த சர்தார் சொக்கலிங்கம் பிள்ளையை (அவருக்கு, முன்பு வேறு பெயரிருக்கிறது) சென்று சந்திக்கிறான் ரங்கமணி. சிக்கல் நரசையன் கிராமத்திலிருக்கும் தன் சுயேட்சை அச்சகத்தில் அவனை நிருபராக வேலைக்குச் சேர்த்துக்கொள்கிறார் பிள்ளை. அச்சகத்தில் தங்கிக்கொண்டு பிள்ளையின் வீட்டிலேயே சாப்பிட்டுக் கொள்கிறான். பிள்ளையின் சகோதரியான அத்தை, ரங்கமணியின் மேல் மிகுந்த பிரியம் கொள்கிறாள். ரங்கமணியும் அத்தையை அம்மாவாக நினைத்து அன்பு செலுத்துகிறான். பிள்ளையின் மகள் இளம்பெண் திரிவேணி, அப்பகுதியிலேயே பிரபலமான காங்கிரஸ்வாதி. காந்தியத்தின் மேல் நம்பிக்கை கொண்டவள். ரங்கமணியின் மேல் காதல் கொள்கிறாள். அவனை அஹிம்சா வழிக்குத் திருப்பமுடியும் என்று நம்புகிறாள்.

போலீஷ் டெபுடி சூப்பிரண்ட்டென்ட் சிவானந்தம் (25 வயது), காந்தியவாதிகள் மேல் மரியாதை கொண்டவன். ஆனால், வகிக்கும் பதவியினால், போராட்டக்காரர்கள் விஷயத்தில் கடுமையாக நடந்துகொள்ள வேண்டியிருக்கிறது. சிவானந்தத்திற்கு சொக்கலிங்கம் பிள்ளையின் மகள் திரிவேணியின் மேல் மிகுந்த மதிப்பு. ஆனால் அவன் மனைவி கமலவாசகிக்கு (ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்த ஊத்துப்பட்டி ஜமீந்தார் சர் டி. முத்தையா பிள்ளையாவின் மகள்) காங்கிரஸ்காரர்களைக் கண்டாலே பிடிப்பதில்லை. கமலாவின் பெரியப்பா பையன் வெங்கு, ஒரு வெகுளி; பிள்ளைக்கும், திரிவேணிக்கும், ரங்கமணிக்கும் நண்பன்.

சொக்கலிங்கம் பிள்ளையின் “சுயேட்சை அச்சகம்” வெறும் மேல் பூச்சுக்குத்தான். “பாரத மாதா சங்க”-த்தின் கிளை அங்குதான், பிள்ளையின் தலைமையில் செயல்படுகிறது. பகலில் அச்சகம். இரவில் ரகசியக் கூட்டங்களும், செயல் திட்டங்கள் வடிவமைப்பும் நடக்கும் இடம் அது. சங்கத்தின் உறுப்பினர்கள், சோமு (20 வயது), மந்திரம், மீனாட்சிநாதன், மாணிக்கம், நாகலிங்கம், முத்து, காசிலிங்கம், நீலகண்டன்… இவர்களுடன் இப்போது ரங்கமணியும்.

இரண்டாம் உலகப்போரில் ஜப்பான், ஜெர்மனிகூட்டுப்படைகளுக்கெதிராக போரிடுவதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பு/பங்களிப்பு வேண்டி இந்திய தேசிய காங்கிரஸுடன்  பேச்சுவார்த்தை நடத்த கிரிப்ஸ் டெல்லி வருகிறார். பத்திரிகை நிருபராக ரங்கமணி டில்லிக்கு அனுப்பப்படுகிறான் (ஆனால் காரணம் வேறு; கேப்டன் மோகன் சிங் தலைமையில், போஸ் அமைக்கவிருக்கும் “இந்திய தேசிய ராணுவ”ப் பணிகளின் ரகசிய செய்திப் பரிமாற்றங்களுக்கான ரேடியோ டிரான்ஸ்மீட்டர் கருவியை, ரவீந்திர சென் குப்தாவிடமிருந்து பெற்று வருவது). டில்லியில் ரங்கமணிக்கு இரகசியக் குழுவின் உறுப்பினர் தேவிகாவின் அறிமுகம் கிடைக்கிறது. அமெரிக்க பத்திரிகையாளர் மில்லரும், கிரிப்ஸ் செய்தியாளர் சந்திப்பில் அறிமுகமாகி நட்பாகிறார்.

1942 ஆகஸ்ட். டிரான்ஸ்மீட்டரின் மீதிப் பாகங்களை வாங்க பம்பாய் செல்லும் ரங்கமணி, அங்கும் தாஜ் ஹோட்டலில் மில்லரை சந்திக்கிறான். மில்லர் காங்கிரஸ் கமிட்டியின் பம்பாய் கூடுகையில் செய்தி சேகரிப்பதற்காக வந்திருக்கிறார். 8-ம் தேதி “வெள்ளையனே வெளியேறு இயக்கம்” காந்தியால் அறிவிக்கப்படுகிறது. மறுநாள் அதிகாலையிலேயே காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்படுகிறார்கள். நாடெங்கும் பதட்டம்; கொந்தளிப்புகள். கொதித்தெழும் மக்கள் கூட்டம், தலைவர்களின் வழிகாட்டுதல் இல்லாமல் நாடு முழுதும் ஒத்துழையாமை இயக்கத்தின் பேரால்  கட்டவிழ்கிறது. ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறுகின்றன.

இங்கு திருநெல்வேலியிலும் திரிவேணியின் தலைமையில் நடந்த பேரணியில் வன்முறை. வெங்குவும், திரிவேணியின் அத்தையும் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலியாகிறார்கள். தாயைப் போன்ற அத்தையின் இழப்பில் மனம் உடையும் ரங்கமணி, பழிவாங்க ஏதேனும் செய்யத் துடிக்கிறான். இரவு, சுயேட்சை அச்சகத்தில் குழு கூடுகிறது. சேரன்மாதேவி தாமிரபரணி ஆற்றுப் பாலத்தை வெடி வைத்துத் தகர்த்து, 500/600 வெள்ளையர்கள் பயணிக்கும் ரயிலை கவிழ்க்க திட்டம் தீட்டப்படுகிறது.

அன்றிரவு…

திரிவேணியும், தீக்ஷிதரும் ரங்கமணியை ஒருமுறையாவது காந்தியைச் சந்திக்குமாறு சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். காந்தியைச் சந்தித்தால் தன் மனதை மாற்றி அஹிம்சை வழியில் திருப்பிவிடுவாரோ என்ற பயத்தினாலேயே அவரைச் சந்திப்பதைத் தவிர்த்துக்கொண்டே வந்திருக்கிறான் ரங்கமணி. ஒருமுறை தீக்ஷிதருடன் வார்தா ஆசிரமம் வரை சென்றுவிட்டு காந்தியைப் பார்க்க பயந்துகொண்டு தீக்ஷிதரிடம் கூட சொல்லாமல் அவருக்குக் கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்னை திரும்பியிருக்கிறான்.

சேரன்மாதேவி சம்பவத்திற்குப்பின் நடந்த நிகழ்வுகளால் மனம் வெதும்பி கலங்கிப்போய், வாழ்க்கையில் விரக்தியடைகிறான் ரங்கமணி. ஆயுள் தண்டனை பெற்று சிறைவாசத்தில் இருக்கும்போது, நாடு சுதந்திரம் அடைந்து, சிறையிலிருக்கும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படும்பொழுது, ரங்கமணியும் விடுதலையாகிறான்.

1948 ஜனவரி 30. காந்தியைச் சந்தித்து அவருடனேயே தங்கிவிடும் முடிவுடன், தீக்ஷிதருடன் கிளம்பி டில்லிக்கு வருகிறான் ரங்கமணி (தான் சிறுவனாயிருந்த போது காந்தி பரிசாகத் தந்த சிலுவையையும் உடன் எடுத்து வருகிறான்). அப்போது காந்தி டில்லி பிர்லா மாளிகையில் தங்கியிருக்கிறார். டில்லி ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி பயணியர் விடுதியில் அறை எடுத்து தங்குகிறார்கள் தீக்ஷிதரும், ரங்கமணியும். தீக்ஷிதர் பிர்லா மாளிகைக்குச் சென்று காந்தியைச் சந்தித்து ரங்கமணியைக் கூட்டிவர அனுமதி/நேரம் கேட்கச் செல்கிறார். விடுதியில் மற்றொரு அறையில் தங்கியிருக்கும் விநாயக ராவும், நாராயண ராவும் ரங்கமணிக்கு பரிச்சயமாகிறார்கள். அவர்கள், தாங்களும் காந்தியைச் சந்திப்பதற்குத்தான் ஆவலாய் இருப்பதாகவும், ஆனால் இன்று சந்திக்க முடியுமா என்று தெரியவில்லை என்றும், இரவு ஊருக்குக் கிளம்ப வேண்டும் என்றும் ரங்கமணியிடம் சொல்கிறார்கள்.

மாலை நான்கு மணிக்கு மேல் விடுதிக்கு வரும் தீக்ஷிதர், பிரார்த்தனைக் கூட்டத்திற்குச் செல்வதற்கு முன் ரங்கமணியைச் சந்திப்பதாக காந்தி சொல்லியிருக்கிறார் என்று கூறி இருவரும் அவசரமாகக் கிளம்பி பிர்லா மாளிகைக்குச் செல்கிறார்கள். அங்கு செல்ல சிறிது தாமதமாகி விட, காந்தி பிரார்த்தனைக் கூட்டத்திற்குக் கிளம்பி வழியில் வந்துகொண்டிருக்கிறார். தீக்ஷிதரும், ரங்கமணியும் சென்று ஜனங்களுடன் வரிசையில் நின்று கொள்கிறார்கள். யதேச்சையாய் பக்கத்தில் பார்க்கும் ரங்கமணி அங்கு விநாயக ராவ் (கோட்சே) நிற்பதைப் பார்க்கிறான்…

வெங்கி

“கல்லுக்குள் ஈரம்” – ர.சு. நல்லபெருமாள்

வானதி பதிப்பகம்

முந்தைய கட்டுரைவைக்கமும் கேரளமும்
அடுத்த கட்டுரைஆகாயம், கடிதம்