மதுக்கடல்,கடல்

அன்புள்ள ஜெ.,

‘பாலாபிஷேகம் செய்யவோ…’ எழுபதுகளின் இறுதியில் வானொலியில் குறிப்பாக இலங்கை வானொலியில் நிறைய ஒலித்த பாடல். ஜெயச்சந்திரனின் ஆரம்பகாலப் பாடல். அவருடைய மலையாளப்பின்னணி தெரியாத அந்த வயதிலேயே அவருடைய தமிழ் உச்சரிப்பு ஜேசுதாஸைவிடத் தெளிவாக இருந்ததாக உணர்ந்திருந்தேன். ‘மாஞ்சோலைக் கிளிதானோ…மான்தானோ…’  பள்ளி, கல்லூரிகளில் பாட்டுப்போட்டிகளில் கலக்கிக்கொண்டிருந்தபோது, அவர் பாடியதுதான்  ‘மதுக்கடலோ….’ எஸ்.ஜானகியோடு, சங்கர் கணேஷ் இசையில். அநேகமாக நீங்கள் கேட்டிருக்கலாம். இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலித்த பாடல். பாடலின் வெற்றி நம்மைப்போலவே அது பிறக்கும்நேரத்திலேயே முடிவு செய்யப்பட்டுவிடுகிறது போல.

படத்தின் பெயரோ, பாடல்களின் முதல் வரியோ தெரிந்தால் தட்டச்சிக் கண்டுபிடித்து விடலாம். தெரியாவிட்டால் சிரமம்தான். சமீபத்தில் திடீரென்று கண்டசாலா பாடிய ஒரு பாட்டு நினைவுக்கு வராமல் திணறிக்கொண்டிருந்தேன். மனிதனைப் பார்த்து பாரடா..பாரடா…என்று புலம்புவார் என்று மட்டும் நினைவிலிருந்தது. முதல் வரி தெரியவில்லை. குகை திறக்கும் மந்திரம் தெரியாமல் திணறும் அலிபாபாவின் அண்ணனைப்போல தப்புத்தப்பாக சொல்லிப் பார்த்தாலும் வரவில்லை. கடைசியில், கூகுளில் கண்டசாலா, நண்பா, பாரடா என்று தட்டச்சிக் கண்டுபிடித்துவிட்டேன். ‘சுயநலம் பெரிதா…பொது நலம் பெரிதா..’ தான் பாட்டின் ஆரம்பம். தப்பான இடத்தில் சந்தி பிரிப்பதும், தேவையில்லாத இடங்களில் அழுத்தம் கொடுப்பதுமான கண்டசாலாவின் ‘அக்மார்க்’ பாடல்.

‘கண்பாடும் பொன்வண்ணமே..’,’கொடுத்துப்பார் பார் பார் உண்மை அன்பை’, ‘நினைக்கும் போதே ஆஹா…’ (ஏ.எம்.ராஜா) ‘இன்பக் காவியம் ஆகும் வாழ்வே..’ (கண்டசாலா, பானுமதி) ‘எளியோரைத் தாழ்த்தி…’, ‘வீடு நோக்கி ஓடிவந்த எம்மையே…’ (டி எம் எஸ்), ‘ஆசை அன்பெல்லாம் கொள்ளை கொண்ட நேசா…’ (ஜிக்கி), ‘கண்ணில் தோன்றும் காட்சி யாவும்….'(நடிப்பிசைப்புலவர் கே.ஆர்.ராமசாமி, ஜிக்கி), தென்னிலங்கை மங்கை…(எஸ்.ஜானகி) போன்ற தொகுப்புகள் தவறவிடும் பாடல்களையும் ‘கூகுளி’ல் இப்பிடித் தட்டச்சி கண்டுபிடித்துவிட முடிகிறது. ‘காணா இன்பம் கனிந்ததேனோ..(டி ஏ மோதி, பி சுசிலா) நீ வரவில்லையெனில் ஆதரவேது…(சத்யம் பாடியது) இப்பிடி ஒன்றிரண்டு பாடல்கள் பாடியவர்களும் வரலாற்றில் நீடிப்பதைக் காணமுடிகிறது. எனக்கென்னவோ இன்றைய தொழில்நுட்பம் இணையத்தில் வெளியிடப்படும் எல்லாப்பாடல்களுக்கும் ஒருவிதமான அமரத்துவத்தை அளித்துவிடுவதாகத் தோன்றுகிறது.

‘புதைந்தவை’ என்றா சொன்னீர்கள்? நம்முள் புதைந்தவை. ஆனால் நம்மோடு புதையப்போபவை அல்ல. தகவல் வெளியில் புதைந்து கிடப்பவை. நம்முடைய ரசனைத் தீற்றல் கொண்ட யாராலோ தோண்டி எடுத்துக்கொள்ளப்படக் காத்திருப்பவை. ‘இதைக்கேட்ட இன்னொருவரை சந்தித்ததில்லை’ என்று இனிமேல் எப்போதாவது எழுதவேண்டி வந்தால், என்னை நினைவில் கொள்ளவும்.

அன்புடன்,

கிருஷ்ணன் சங்கரன்

முந்தைய கட்டுரைஇரண்டாம் கட்ட யோகப்பயிற்சி வகுப்புகள்
அடுத்த கட்டுரைகொற்றவை, நீலி- கடிதம்