தன்பாலுறவினரின் வாழ்க்கை

ஒரு பாலுறவு வாங்க

ஒரு பாலுறவு மின்னூல் வாங்க

அன்புள்ள ஜெ,

அண்மையில் ஒருபாலுறவு பற்றிய உங்கள் நூலை வாங்கி வாசித்தேன். அண்மையில் ஒரு இலக்கியப்படைப்பாளி மீதான விவாதத்தில்தான் உங்களைப்பற்றிக் கேள்விப்பட்டேன். அதன் பிறகுதான் உங்கள் நூலை வாங்கி வாசித்தேன். என்னுடைய ஆர்வத்துக்கான காரணம் நான் ஒரு தன்பாலுறவு மனிதன் என்பதுதான்.

இந்தப்பிரச்சினைகளை எவரும் இன்றைக்கு எழுதுவதில்லை. நானே என் பெயரை வெளியிட மாட்டேன். நிறைய அரைகுறைஆங்கிலமும் கலந்தே என்னால் எழுதமுடியும். ஆனால் உங்கள் தளத்திலே வெளியிடமுடியும் என்று நினைக்கிறேன். அந்த நம்பிக்கையை உங்கள் புத்தகம் அளித்தது. ஆகவே எழுதுகிறேன்.

நான் என்னுடைய தன்பாலுறவு நாட்டத்தை என் 18 வயதிலேயே கண்டுபிடித்தேன். எனக்கு ஆண் மீது தவிர எந்த ஆர்வமும் இல்லை. கொஞ்சம்கூட என் இந்திரியங்கள் தூண்டப்படுவதே இல்லை. ஆண் உறவு இல்லை என்றால் எனக்கு பாலின்பமே இல்லை. நான் கைப்புணர்ச்சி செய்வதுகூட நடிகர்களின் படங்களைப் பார்த்துதான்.

நாங்கள் இந்த சமூகத்தில் வாழவேண்டாமா என்று கேட்டால் வாழவேண்டாம், சாகு என்றுதான் சமூகம் சொல்லும். இதுதான் உண்மை. ஆகவே தலைமறைவாகவே நாங்களெல்லாம் வாழமுடியும். அப்படித்தான் 90 சதவீதம்பேரும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நீங்களேகூட தலைமறைவாக வாழ்வதற்குத்தான் ஆலோசனை சொல்கிறீர்கள். அது ஒரு பெருந்தன்மையான பார்வை. நடைமுறைப் பார்வையும்கூட. பாலுறவு ஒரு சின்னவிஷயம்தான் வாழ்க்கையில் என்றும், பாலுறவை விரும்பியபடி செய்துவிட்டு, பெரிய விஷயங்களில் ஈடுபடும்படியும் சொல்கிறீர்கள். அதைத்தான் நீங்கள் சொல்லமுடியும்.

இதில் ஒரு வேறுபாட்டைச் சொல்ல விரும்புகிறேன். இருபாலுறவினர் உண்டு. அவர்களுக்குப் பெண்களுடனும் உறவுகொள்ள முடியும். அவர்கள் வேறு பிரிவு. அவர்கள் ஒரு சுவாரசியம், தனி இன்பம் ஆகியவற்றுக்காக ஆண்களுடன் உறவுக்கு விரும்புகிறார்கள். அது ஒரு மனப்பிறழ்வுதான். அவர்களுடன் என்னைப் போன்றவர்களை ஒப்பிடக்கூடாது. இது ஒரு உயிரியல் விஷயம். அரவானிகளைப்போல. இதற்கு நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது.

அண்மையிலே வந்த பிரச்சினைகளில் முற்போக்கு என்றெல்லாம் சொல்லிக் கொள்பவர்களிடம் வெளிப்பட்ட பயங்கரமான முரட்டுத்தனமும் கண்மூடித்தனமான கோபமும் எனக்கு பெரிய அச்சத்தை அளித்தது.இவர்களெல்லாம் விவாதிக்கும்போது எல்லாம் முற்போக்காகத்தான் சொல்வார்கள். ஏதாவது ஒருவன் அகப்பட்டால் அடித்தே கொலைசெய்வார்கள்.

என்னால் பலநாட்கள் தூங்கவே முடியவில்லை. என்னை முச்சந்தியில் வைத்து அவமானப்படுத்துவது போலவும், உயிருடன் கொளுத்துவதுபோலவும் கற்பனை செய்துகொண்டேன். இதெல்லாம் நூறு வருசம் முன்பு நடந்தது. அரபுநாடுகளில் கல்லால் அடித்தே கொல்வார்கள். இங்கே உள்ள முற்போக்கினர் எல்லாம் உள்ளுக்குள் அந்தப் பழமைவாத மனநிலை கொண்டவர்கள். அவர்கள் எங்களைக் கொல்லத்தான் விரும்புவார்கள். சோவியத் ருஷ்யாவிலேகூட மரணதண்டனைதான் அளிக்கப்பட்டது.

குறிப்பாக, பெண்கள் எங்களை வெறுப்பார்கள். பொதுவெளியில் ஓர் அடையாளம் வந்தாலே பெண்களிடமிருந்து மிகப்பெரிய வெறுப்பைச் சம்பாதிக்க வேண்டியிருக்கும். கொலைசெய்யும் அளவுக்கு வெறுப்பு. இந்த சமீபகால விஷயத்திலேகூட மனநிலை பாதிக்கப்பட்ட அளவுக்கு கூச்சல்போட்டவர்கள் பெண்கள்.

எங்களுக்கு இந்தச் சமூகத்தில் இயல்பான பாலியல்தேர்வே கிடையாது. அந்த பிரச்சினைகளை சமூகம் புரிந்துகொள்ளவில்லை. இதை எங்கேயும் விவாதிக்க முடியாது. அம்பது வருஷம் கழிந்து இப்படி ஒரு பிரச்சினை பேசப்பட்டது என்பது பதிவாகவேண்டும். ஆகவேதான் உங்களுக்கு எழுதுகிறேன். பிரசுரம் பண்ணுவீர்கள் என நினைக்கிறேன்.

தன்பால் உறவு மனநிலை கொண்டவர்கள் எப்படி இங்கே இணைகளை தேர்வுசெய்கிறார்கள்? தேடிக்கொண்டே இருக்கவேண்டும். வழக்கமாக எங்களைப் போன்றவர்கள் எல்லாரிடமும் அணுக மாட்டார்கள். பெரும்பாலானவர்களிடம் அப்படி தங்களைக் காட்டிக்கொள்ளவே மாட்டார்கள். அந்த வாய்ப்பு இருப்பதாக தோன்றும் நபர்களிடம் மட்டும் மென்மையாக அணுகிப்பார்ப்பார்கள். கொஞ்சம் எதிர்ப்பு தெரிந்தால்கூட அப்படியே போய்விடுவார்கள். கட்டாயப்படுத்தவே மாட்டார்கள். பெரும்பாலும் அந்த இடத்தில் இருந்தே நகர்ந்து விடுவார்கள். அந்த நபரையே மறுபடி சந்திக்க மாட்டார்கள்.

தன்பாலுறவினரிடம் பெரும்பாலும் வன்முறையே இருக்காது. ஏனென்றால் நாங்களே சமூகத்தை அஞ்சி ஒடுங்கிக்கிடக்கும் மிகச்சிறுபான்மையினர். சட்டம் ,சமூகம், மதம் எல்லாமே எங்களை கொல்ல அலைகின்றன. ஒரு சின்ன தவறு நடந்தால்கூட அவ்வளவுதான், அடி பின்னிவிடுவார்கள். எனக்கும் அடி விழுந்திருக்கிறது. ஒருநாள் முழுக்க போலீஸ் ஸ்டேஷனில் இருந்திருக்கிறேன். உதடு செவி எல்லாம் கிழிந்துவிட்டது. நேராக வேற்றூருக்கு போய்விட்டேன். அந்த மனநிலைதான் இன்றைக்கு இந்த விஷயத்தில் இணையம் முழுக்க தெரிந்தது.

கொஞ்சம் மசியக்கூடியவர் என தெரிந்தால் மட்டும்தான் என்னைப்போன்றவர்கள் தன்பாலுறவுக்கு ஆசைகாட்டுவோம். பணம், பரிசுப்பொருட்கள் கொடுப்போம். வேறுவகை உதவிகள் செய்வோம். பலவகை சலுகைகளும் கொடுப்போம். இது தப்பில்லை , இதை எல்லாரும்தான் செய்கிறார்கள் என்றெல்லாம் நியாயப்படுத்துவோம். அவர்களைக் கவர எல்லாமே செய்வோம். நல்ல ஆடை அணிவது, வாசனை பூசிக்கொள்வது உண்டு. சினிமா, அரசியல் எல்லாம் சிறப்பாகப் பேசுவோம். நகைச்சுவையாக பேசுவோம். அன்பாகவே இருப்போம்.

இதெல்லாம் உண்மை. ஆனால் ஆணும் பெண்ணும் உறவு கொள்வதே இதே வழியிலேதானே? ஒரு பெண்ணை கவர ஆண் என்ன செய்வானோ அதெல்லாம்தான் நாங்களும் செய்கிறோம். வன்முறையோ வற்புறுத்தலோ இருக்கவே இருக்காது. ஏனென்றால் சம்பந்தப்பட்டவர் ஒரு நாலுபேரிடம் சொன்னாலே நாங்கள் சாகவேண்டியதுதான். பிடிக்காவிட்டால் எவரிடமும் சொல்லாதே என்றுதான் மன்றாடிக்கொண்டே இருப்போம். இப்படி இருப்பவர் எப்படி மிரட்டமுடியும்? எப்படி பிளாக்மெயில் செய்ய முடியும்?

பொதுவாக இதற்குச் சம்மதிப்பவர்கள் இளைஞர்கள். அவர்களுக்கு வேறு செக்ஸ் இல்லாத வயதாக இருக்கும். புதிய விஷயம் என்பதனால் வரும் ஆர்வமும் இருக்கும்.  அவர்கள் எங்களைப் போன்றவர்களை பயன்படுத்திக் கொள்வார்கள். நான் நாலைந்து லட்சம் வரை செலவழித்திருக்கிறேன். என் வருமானம் 70 சதவீதம் இப்படித்தான் செலவாகிறது.

இப்படி மைனர் பையன்களை பயன்படுத்திக்கொண்டால் அது தப்பு, நீங்கள் சொல்வதுபோல சட்டப்படிக் குற்றம். ஆனால் ஒன்று தெரியவேண்டும். இளம்பெண்களைப்போன்றவர்கள் அல்ல ஆண்கள். பெண்களுக்கு நிராதரவான நிலை உள்ளது. அவர்கள் வேலையிலும் தொழிலிலும் முன்னேறவே முடியாது. அவர்களை எல்லா ஆண்களும் துரத்தி வேட்டையாடுகிறார்கள். அப்படிச் செய்யும் ஆண்களுக்கு எந்தச் சமூகப்பாதிப்பும் இல்லை. அவர்கள் பெரியமனிதர்களாக உலவலாம். அவர்களுக்கு அதில் பெருமைகூட இருக்கும்.

பெண்களுக்கு உடல் வலிமை இல்லை. அவர்களை தாக்குவது எளிய விஷயம். கற்பழிப்புகளே நடைபெறுகிறது. இந்தச் சமூகமும் அவர்களைத்தான் குற்றவாளிகளாகக் காட்டும். அவ்ர்களின் நடமாட்டமும் வேலைசெய்யும் உரிமையும்கூட பாதிக்கப்படும். அவர்களுக்கு அதாவது கெட்டபெயரை உருவாக்கிவிடுவோம் என்று சொல்லியே பெண்களை மிரட்டமுடியும்

எங்கள் விஷயம் அதுபோல அல்ல. இளம் ஆண்கள் உடல்வலிமை உடையவர்கள். ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால் அதைச் செய்யாமலிருக்க அவர்களால் முடியும். அவர்களை கட்டாயப்படுத்தவே முடியாது. வெளியே தெரிந்தால் அதற்கு கெட்டபெயரும் எங்களுக்குத்தான்.

ஒரு வயது வந்த ஆண் 21 வயதுக்குமேல் ஒரு கிரைம் விஷயத்தைச் செய்துவிட்டு எங்களை கட்டாயப்படுத்தினார்கள், எங்களை மூளைச்சலவை செய்தார்கள், இச்சககம் பேசினார்கள் என்று சொன்னால் இந்த தேசத்திலே சட்டம் அதை ஏற்றுக்கொள்ளுமா? இங்கே பெரும்பாலான ஆண்களுக்கு சின்னவயதில் எவராவது இப்படி அணுகிய அனுபவம் இருக்கும். கூடாது என்று சொல்லியிருப்பார்கள். அதோடு முடிந்திருக்கும்.

இப்படிச் சின்னவயதில் ஓர் ஆர்வத்திலே ஈடுபடுபவர்கள் கொஞ்சநாளில் அதிலிருந்து விலகிவிடுவார்கள். அவர்களுக்கு தன்பாலின ஈர்ப்பு இல்லாவிட்டால் கொஞ்சநாளிலேயே விரும்பமுடியாமல் ஆகும். அது குற்றவுணர்ச்சியை அளிக்கும். ஆகவே அவர்கள் எங்கள் மேல் முழுப்பழியையும் போட்டுவிட்டு தாங்கள் தவறே செய்யவில்லை என்று சொல்ல ஆரம்பிப்பார்கள். அதுவரை அடைந்த பலன்களையும் மறந்துவிடுவார்கள். விக்டிம் பிளே பண்ணுவார்கள். எங்களில் எல்லாருக்குமே இந்த அனுபவம் உண்டு. எனக்கே கூட உண்டு. இது எப்பவுமே நடந்துகொண்டே இருக்கும் விஷயம்.

ஆகவே ஒருவர்மேல்  சிலர் பழி சொன்னதுமே கூட்டம்கூடி தர்ம அடி கொடுப்பதைப் பற்றி மக்கள் யோசிக்கவேண்டும். தர்மஅடி கொடுப்பவர்கள் எல்லாம் யோக்கியர்கள் என்ற சித்திரம் வந்துவிடுகிறது. அவர்களெல்லாம் முற்போக்கானவர்கள் என்று தங்களை காட்டிக்கொள்பவர்கள்.  ஆனால் பழையபாணி மதவாதிகளைவிட மோசமாக நடந்துகொண்டிருக்கிறார்கள். இந்த தர்ம அடியில் ஒரு மாறுபட்ட பாலுணர்வு கொண்ட ஒருவரை நாசமாக்கி அழித்தேவிடலாம். அதை மட்டும் ஞாபகப்படுத்துகிறேன்

அன்புடன்

என்.

அன்புள்ள என்,

இந்த தளத்தில் நான் மையச்சமூகப் பரப்பில் இருந்து வெவ்வேறு வகையில் விலகிச்செல்பவர்களின் பிரச்சினைகளுக்கு தொடர்ந்து இடமளித்து வருகிறேன். ஒருபாலுறவினர் மட்டுமல்லாமல் விந்தையான நோய்க்கூறுகள் கொண்டவர்களின் பிரச்சினைகளும் இங்கே எழுதப்பட்டுள்ளன. அவை தன்னைக் கடத்தல் என்னும் நூலாக வெளிவந்துள்ளன.

இலக்கியம் வழியாக ஒருவர் கற்றுக்கொள்ள வேண்டியது முதன்மையாக ஒன்று உண்டு. ஏற்கனவே நிறுவப்பட்டு, அத்தனைபேரும் சேர்ந்து கூச்சலிடும் பொதுவான ஒழுக்கம், அரசியல்நம்பிக்கைகள், சமூகவழக்கங்கள் ஆகியவற்றைக் கடந்து சென்று மனிதனின் துயரத்தைப் பார்ப்பதுதான் அது. தனித்துவிடப்படுபவர்கள், விலக்கப்பட்டவர்கள், ஒதுங்கியவர்கள் சார்பாகவும் யோசித்துப்பார்ப்பதுதான் இலக்கியம் வழியாக கற்றுக்கொள்ளவேண்டிய அறம். மதமும் அரசாங்கமும் சொல்லித்தரும் அறத்துக்கு அப்பாலும் அறம் உண்டு என்றுதான் இலக்கியம் பேசுகிறது. என் எழுத்துக்கள் கற்பிப்பது அதுதான். கும்பலில் ஒருவன் என் வாசகன் அல்ல.

பொதுவாகப்பேசப்படும் விஷயங்களை தர்க்கரீதியாக ஆராய்ந்து ஒரு பொதுவிவேகத்தால் உண்மையில் என்ன நடந்திருக்கும் என ஊகிக்கும் திறனும் நல்ல இலக்கியவாசகனுக்கு வேண்டும். எவராயினும் அவரது தரப்பை மட்டுமே சொல்வார். பலகாலமாக அதை தயாரித்தும் இருப்பார். அவருடைய நியாயம் அதில் இருக்கும். அதை மறுக்க முடியாது. ஆனால் எவரும் வெள்ளந்திகள் அல்ல. சொற்களுக்கு அப்பாலுள்ள மானுட உள்ளத்தை அறிவதற்கே இலக்கியம் கற்பிக்கிறது. மானுட உள்ளம் நம்பமுடியாத ஆழ்ந்த இருள் கொண்டது. பலநூறு பாவனைகள், தற்பாவனைகள் வழியாகச் செயல்படுவது. அதை அறியாவிடில் இலக்கியம் வாசித்துப் பயனேதுமில்லை.

இன்றைக்கு முப்பத்தைந்தாண்டுகளுக்கு முன்பு நான்  அன்று மதிப்பு கொண்டிருந்த ஒரு பேராசிரியரின் இளம் மனைவி தற்கொலை செய்துகொண்டார். அவரையும் குடும்பத்தையும் ஊடகங்கள் வேட்டையாடின. நான் உறுதியாக அவருடன் இருந்தேன். அவருக்கு என் ஆதரவை கடிதமாக எழுதினேன். பொதுவெளியிலும் பேசினேன். ஒருவன் தனித்துவிடப்பட்டு ஊடகவேட்டை ஆடப்பட்டால் என் பார்வை அவனுக்கும் ஒரு தரப்பை அளிக்கும். அவன்மேலும் அனுதாபம் கொண்டிருக்கும்.

ஆனால் அதே பேராசிரியர் அண்மையில் இந்த விஷயத்தில் அவரே ஊடகவேட்டையாளர்களில் ஒருவராக கருத்துக்குவிப்பு செய்வதைக் கண்டேன். அவருக்கு இலக்கியம் உருவாக்கும் அறமும் அழகும் தெரியாது, அவருக்கு இலக்கியமென்பது ஆராய்ச்சி செய்து படிக்கவேண்டிய ஒரு பாடம் மட்டுமே. ஒருவகை இலக்கியப் பாமரர். அவ்வளவுதான் அவரிடம் எதிர்பார்க்க முடியும்.

தன் பாலுறவினர் உள்ளிட்டவர்களிடம் நான்  ‘அனுதாபம்’ கொண்டிருக்கவில்லை. அவர்களை புரிந்துகொள்ள முயல்கிறேன். அதன்பொருட்டு பரிவுடன் அவர்களின் சொற்களைக் கவனிக்கிறேன். அவர்களையும் உள்ளிட்ட ஒரு சமூகத்துக்காக, இன்னும் விரிவான அறத்துக்காக யோசிக்கிறேன். அதில் நான் தவறுகளும் செய்யலாம். ஆனால் என் பரிவு எப்போதுமே தனிமைப்பட்டவர்கள், வேட்டையாடப்படுபவர்களிடம்தான். ஒரு பக்கம் கும்பல் கூடிவிட்டாலே மறுபக்கத்தைத்தான் பார்ப்பேன்.

என் எழுத்துக்கள் முழுக்க அந்தப் பரிவு தெரியும். முதல் நாவலான ரப்பர் முதல் அத்தகைய கதாபாத்திரங்கள் என் உலகில் உண்டு.ரப்பர் நாவலின் குளம்கோரி எனக்கு தெரிந்தவர். அவரை ஊரே வெறுத்தது, அவமதித்தது. நான் அவருடன் நட்பாகவே இருந்தேன். அதன்பொருட்டு என்னை எவரும் ஒழுக்கம்சார்ந்து ஒரு சொல்கூட பழிக்கமுடியாது என்னும் நிமிர்வும் என்னிடமிருந்தது. அந்த பரிவும் நிமிர்வுமே என்னை கலைஞனாக்கியது. இன்று ஜெயகாந்தன் இருந்திருந்தால் என் சொற்களையே அவரும் சொல்லியிருப்பார்.

விஷ்ணுபுரம், இரவு, காடு, அனல்காற்று, பின்தொடரும் நிழலின் குரல் , ஏழாம் உலகம் முதல் வெண்முரசு வரை எத்தனை ‘புறநிலை’ மனிதர்களை எழுதியிருக்கிறேன் என நீங்கள் படித்துப் பார்க்கலாம். என் கதைகளில் அப்படி எத்தனை முகங்கள். தமிழிலக்கிய உலகம் மொத்தமாக எழுதிய புறநிலைமாந்தர்களை விடவும் இருமடங்கு இருக்கும். அந்தப்பார்வையே என்னுடையது. கும்பல்கூடி எனக்கு அறவுரை சொன்னால் ‘டேய் போடா’ என்பதே என் பதிலாக இருந்திருக்கிறது. அதுதான் ஜெயகாந்தனும் சுந்தர ராமசாமியும் முன்வைத்த இலக்கிய மரபு.

தனித்தவர்கள், வேட்டையாடப்படுபவர்கள், ஆற்றலற்றவர்கள் சார்பில் நிலைகொள்ளும் துணிவே கலைஞனின் அடிப்படை. கும்பலுக்கு எதிராக தனித்து நின்றிருக்கும் திமிரும் தேவை. எளியவன் கிடைத்தால் எங்கெங்கோ பம்மிநின்று அடக்கிவைத்த வன்முறையை முழுக்கக் கொட்டும் கீழ்மை எழுத்தாளனிடம் இருக்கலாகாது. அவனுடைய மெய்யான வாசகர்களிடமும் அது நிகழாது

ஜெ

தன்னைக் கடத்தல் வாங்க

முந்தைய கட்டுரைகருணாலய பாண்டியனார்
அடுத்த கட்டுரைஇன்னொருவரின் புலி -கடிதம்