பெண்களைப் புறக்கணிப்பவர்கள் யார்?

அன்புள்ள ஜெ

தமிழ் விக்கி இணையப்பக்கத்தில் வெளிவரும் பதிவுகளில் மறைந்துபோன பெண் எழுத்தாளர்கள் சுட்டிக்காட்டப்படுவது மிகுந்த நிறைவை உருவாக்குகிறது. இன்று உலகமெங்குமேகூட இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அன்றைய விமர்சகர்களால் ஏற்கப்பட்டவர்கள் அடுத்த தலைமுறைக்கு வந்து சேர்ந்து, மற்றவர்கள் இல்லாமலானதைப் பற்றிய ஒரு பேச்சு உருவாகியுள்ளது. பல எழுத்தாளர்கள் மீண்டு வருகிறார்கள். அவர்களில் பெண் எழுத்தாளர்களே மிகுதி. அந்த அலை தமிழகத்திலும் நிகழ்வதில் மிகுந்த மகிழ்ச்சி.

கமலா பத்மநாபன்

சரோஜா ராமமூர்த்தி

கோமகள் 

கி.சரஸ்வதி அம்மாள்

அழகியநாயகி அம்மாள்

சரஸ்வதி பாசு

கு.ப.சேது அம்மாள்  

விந்தியா

குமுதினி 

வை.மு.கோதைநாயகி அம்மாள்

ஆகிய எல்லா பதிவுகளுமே மிக விரிவானவை. அதற்கு நன்றி

பொதுவாக நம் சூழலில் பெண்களுக்கு இருக்கும் இருந்த புறக்கணிப்பு மனம்சோர்வடையச் செய்கிறது. அறிவுச்சூழலில் இந்த ஆணாதிக்கப்பார்வை இருக்குமென்றால் வெளிச்சமூகம் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை.

ஸ்ரீவித்யா ராம்

***

அன்புள்ள ஸ்ரீவித்யா,

ஒரு சிறு தகவலுடன் தொடங்குகிறேன். தமிழில் பெண்ணிய எழுத்துக்களை முன்வைப்பது, மறைந்துபோன பெண் எழுத்தாளர்களை மீண்டும் வாசித்து மீட்டெடுப்பது என்னும் நோக்குடன் நீலி என்னும் இணைய இதழ் ரம்யா என்னும் எழுத்தாளரால் தொடங்கி நடத்தப்படுகிறது.

மிகமிகத் தரமான இதழ். விரிவான கட்டுரைகள், ஆய்வுகள் வெளியாகின்றன. தமிழின் முக்கியமான படைப்பாளிகளும், இளம் எழுத்தாளர்களும் எழுதுகிறார்கள். தமிழின் முதன்மைப் பெண் எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகள், மறைந்துபோன பெண் எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகள் வெளியாகின்றன. தமிழில் இது மிகப்புதிய ஒரு பெருமுயற்சி. இப்படி வேறொன்று இல்லை, இதற்குமுன் இப்படி ஒன்று நிகழ்ந்ததும் இல்லை.

நீலி இணைய இதழ்

இந்த இணைய இதழை உங்களுக்குத் தெரிந்த பெண்கள் எவரேனும் வாசிக்கிறார்களா என்று கேட்டுப்பாருங்கள்.  முகநூல் தோழிகள், இன்ஸ்டா தோழிகள் ஆயிரத்தில் ஒருவராவது ஒரு முறையாவது உள்ளெ போய் வாசித்ததுண்டா என்று கேட்டுப்பாருங்கள். ஒருவர் கூட இருக்க வாய்ப்பில்லை.

ஏனென்றால் அந்த  இணைய இதழுக்கு மிகமிகக்குறைவாகவே வாசகர்கள் வருகிறார்கள். நான் என் இணைய இதழில் அதை தொடர்ச்சியாக அடையாளப்படுத்தி வருகிறேன். இருந்தாலும் அதில் சென்று பெரும்பாலும் எவரும் வாசிப்பதில்லை. காரணம், அதில் புனைவுகள் இல்லை, அரசியல் இல்லை, சினிமாச்செய்திகள் இல்லை, அன்றாட வம்புவழக்குச் சண்டைகளும் இல்லை.

பெண்களிடம் தொடர்ந்து கேட்கிறேன், நீலி வாசித்ததுண்டா என்று. மங்கிய புன்னகையுடன் ஒரு தலையசைப்பு, வாசித்ததில்லை. அந்த இதழை தெரியுமா என்பேன். தெரியும். ஏன் வாசிப்பதில்லை. அதற்கும் ஒரு மங்கிய புன்னகை.

அப்படியென்றால் என்ன வாசிக்கிறார்கள்? இரவுபகலாக சினிமா, வெவ்வேறுவகை ’ஃபேஷன்’கள். திரும்பத்திரும்ப ஆண்பெண் உறவு சார்ந்த அலுப்பூட்டும் கவிதைகள் எழுதுகிறார்கள். மென்காமத்தைப் பேசும் கதைகளை எழுதுகிறார்கள் (மீறல், ஒழுக்கம் இரண்டையும் குறிப்பிட்டவகையில் சமரசம் செய்து முன்வைக்கும் கதைகள்)

மீண்டும் மீண்டும் ஒரே ‘மூக்குரசும் எருமைக் காமத்தை’ எழுதி அவர்களுக்குப் பரிமாறிக்கொண்டே இருப்பவர்கள் இருக்கிறார்கள். பெரும்பாலான பெண்கள்  அவற்றையே வாசிக்கிறார்கள். அதைப்போல தாங்களும் எழுதி வாசிக்கிறார்கள். ‘காமம்- ஏக்கம்’ இரண்டு பேசுபொருட்களை தவிர வேறு எதையாவது எழுதும், வாசிக்கும் பெண்கள் எத்தனைபேர்? அம்பை அல்லது பெருந்தேவி பெயர் எத்தனைபேருக்கு தெரியும்? எண்ணிப்பாருங்கள். காமம் சார்ந்த புலம்பலையும் பகற்கனவுகளையும் எழுதி வாசித்து அதை இலக்கியம் என பசப்பிக்கொள்கிறார்கள்.

படித்த, வேலைக்குச்செல்லும் பெண்களிடம் பேசிப்பாருங்கள். ’பேஷன்’ பற்றி அவர்களுக்கு இருக்கும் பரந்துபட்ட ஞானம் எவ்வளவு என்று தெரிந்துகொள்வீர்கள். அவர்களில் ஒரு லட்சத்தில் ஒருவராவது தமிழகத்தில் இருந்த பெண்களின் அறிவுமரபு பற்றிய அடிப்படை அறிவு கொண்டவர்களா என்று பாருங்கள். சரி, அவர்களிடம் எவரும் சொல்லவில்லை. இனி சொல்லிப்பாருங்கள். பத்துலட்சத்தில் ஒருவர்கூட பத்து நிமிடம் செவிகொடுக்க மாட்டார்கள். அவர்களை யார் தடுப்பது? ஆண்களா?

இன்று நம் பல்கலைக் கழகங்களில் இலக்கியம், சமூகவியல் சார்ந்து முனைவர்பட்ட ஆய்வுகளைச் செய்பவர்கள் பத்துக்கு எட்டுபேர் பெண்கள். அவர்களில் எதையேனும் வாசிப்பவர்கள் அரிதினும் அரிதினும் அரிதானவர்கள். தங்கள் ஆய்வுசார்ந்து வாசிப்பவர்களே மிகமிகமிகக் குறைவு. அதையே ஒப்பேற்றுவதே வழக்கம். அந்தப் பெண்கள் ஏன் சரோஜா ராமமூர்த்தி பற்றியோ கோமகள் பற்றியோ குமுதினி பற்றியோ ஆய்வு செய்யக்கூடாது? அவர்களில் ஆயிரத்தில் ஒருவராவது ஏன் நீலி இணைய இதழ் போன்ற ஒன்றை எப்போதேனும் படிக்கக்கூடாது? யார் அவர்களை ஒடுக்குகிறார்கள்?

நீலி இதழிலேயே அதிகமும் ஆண் எழுத்தாளர்கள்தான் எழுதுகிறார்கள். பெண்களைப் பற்றி எழுதுகிறார்கள் என்பதே வேறுபாடு. அதை ஏன் பெண்களே எழுதக்கூடாது? வை.மு.கோதைநாயகி அம்மாள் எண்பது ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்காக இதழ் நடத்தினார். பெருநட்டம் அடைந்து நிறுத்தினார். சமையல், பூசை செய்திகளை வெளியிடும் பெண்களிதழ்களின் பல லட்சம் வாசகர்களில் ஓர் ஆயிரம்பேர் அதை வாசித்திருந்தால் அந்த இதழ் வெளிவந்திருக்கும். ஜகன்மோகினி நாநூறு பேர்தான் வாசகர் அமைந்தனர். இன்று நீலி இதழுக்கு அந்த நாநூறுகூட இல்லை.

இங்கே சமூக ஒடுக்குமுறை, அறிவுத்தள ஒடுக்குமுறை இருந்ததா? இருந்தது. இன்று இருக்கிறதா, இருக்கிறது. அதிலிருந்து பெண்கள் விடுபடவேண்டுமா? ஆமாம், வேண்டும். ஆனால் பெரும் போராட்டம் வழியாக பெண்கள் அடைந்த விடுதலை எவ்வாறு இன்று பயன்படுகிறது? அதன் அறிவுத்தளப் பங்களிப்பு என்ன?

சமூகதளத்தில் பெண்களுக்குமேல் ஒடுக்குமுறை உள்ளது. ஆனால் அறிவுத்தளத்தில் பெண்களை இன்று ஒடுக்குவது ஆண்கள் அல்ல. பெண்களின் அறியாமை, அதைவிட அறிவின் மீதான மரியாதையின்மை. காமம் மற்றும் அன்றாட உலகியலுக்கு அப்பாலுள்ள அனைத்தின்மேலும் அவர்களுக்கு இருக்கும் முழுமையான அலட்சியம்.

அந்த அறியாமையை, அலட்சியத்தை மறைக்க எந்த விஷயத்திலும் உடனடியாக ஆண்கள்மேல் பழிபோட கற்றிருகிறார்கள். ’ஒடுக்குமுறையால்தான் நாங்கள் அறிவார்ந்து செயல்படுவதில்லை’ என்பதற்கு என்ன அர்த்தம்? ’எங்களை ஒடுக்குவதனால் அந்த ஒடுக்குமுறையைப் பற்றி நாங்கள் யோசிப்பதில்லை’ என்றுதானே? எவ்வளவு அபத்தம் இது.

அறிவுச்சூழலில் பெண்களின் எதிர்வினைகள் பெரும்பாலும் மிகையுணர்ச்சி சார்ந்தவை. தங்களை ஒருவகை புனித ஆளுமைகளாகக் கட்டமைக்கிறார்கள். ஒரு பெண்ணின் படைப்பை விமர்சித்தாலே ஆணாதிக்கவெறியன் பட்டம் வந்துசேரும் என நினைக்க வைக்கிறார்கள். அந்த அச்சுறுத்தலால் தங்களை பாதுகாத்துக் கொண்டு அறியாமையில் திளைக்கிறார்கள். ஆகவே நீங்கள் சொல்வதுபோன்ற எளிமையான ஒற்றைப்படைக் கூற்றுக்களை கைவிடுங்கள். அதுவே சிந்தனையின் முதல்படி.

அரசியல் சூழலில் கருத்து சொல்லும் பெண்களுண்டு. அவர்கள்கூட தங்களை ஒருவகை ’விடுபட்ட’  ‘கலக்கார’ பெண்களாகக் கற்பிதம் செய்துகொண்டு மிகைவெளிப்பாடு செய்பவர்கள், எதிர்நிலைபாடு கொள்பவர்கள் மட்டுமே. வ.கீதா நிதானமான அரசியல்பார்வையுடன் பேசும் பெண்கள் மிக அரிதானவர்கள்.

தங்கள் மெய்யான அறிவுநிலை பற்றி பெண்களில் சிலராவது யோசிக்க ஆரம்பித்தால்தான் ஒரு ஐம்பது பேராவது எதையாவது உருப்படியாகச் செய்யும் வாய்ப்பு உருவாகும். ஆனால் இந்த உண்மை வெளிப்பாட்டைக்கூட  ‘ஆ, பெண்களை பழிக்கிறான்’ என கொந்தளிக்க ஆரம்பிப்பார்கள்.

ஆனால் அந்த போலிக் கொந்தளிப்பு எப்போதும் இங்குள்ளது. எனக்கு எதிராக அது எப்போதுமே பிரச்சாரம் செய்து வருகிறது. அதற்கு அப்பால் இருந்து தீவிரமும், அறிவுத்திறனும், கலைநுண்ணுணர்வும் கொண்ட ஒரு பெண்களின் நிரையை சென்ற இருபதாண்டுகளில் உருவாக்க நான் முன்னெடுக்கும் பொதுவிவாத முயற்சிகளால் முடிந்துள்ளது. என் மகள் உட்பட நீலியில் எழுதும் பலர் அவ்வாறு உருவானவர்கள் என்பது நிறைவளிக்கிறது.

அவர்கள்மேல் பெருநம்பிக்கையுடன் இருக்கிறேன். அவர்கள் நாளை என் படைப்புகளை, என் முன்னோடிகளை முழுமையாக நிராகரிப்பார்கள் என்றாலும்கூட அது ஓர் மாபெரும் அறிவெழுச்சி என்றே கருதுவேன்

ஜெ

முந்தைய கட்டுரைஎன்.வி.கலைமணி
அடுத்த கட்டுரைஎம். கோபாலகிருஷ்ணனுக்கு கண்ணதாசன் விருது