ஆசிரியர்களும் மாணவர்களும் இன்று

அன்புள்ள ஜெ,

உங்கள் ‘சிஷ்யர்’ ஒருவர் எழுதிய குறிப்பு இது. மிகவும் முகம்சுழிக்க வைத்தது. ஆசிரியர்களைப் பற்றி இப்படி எழுதுபவர் எப்படி ஒரு நல்ல எழுத்தாளராக இருக்க முடியும்? இதை நீங்கள் சுட்டிக்காட்டவேண்டும். வாட்ஸப்பில் இந்த செய்தியை என் நண்பர் ஒருவர் பகிர்ந்தபோது கொதிப்பாக இருந்தது. நானும் ஓர் ஆசிரியன் என்பதனால் இதை எழுதுகிறேன்

என் கல்லூரி (பல்கலைக்கழகம்) ஆசிரியர்கள் பொறுப்பற்றவர்கள்.‌ முழுமையான மூடர்கள். அங்கு துணை வேந்தராக இருந்த ஆளின் மீது எனக்கு ஒரு வகையான அருவருப்பே இருந்தது. ‘டீன்’ என்ற சொல்லின் மீது மயிரளவும் மரியாதை இல்லாமல் போனதற்கு அங்கு ‘டீன்’ ஆக இருந்த ஆள் தான் காரணம். இன்றுவரை வாழ்க்கையில் பெரிய இழப்பாக நான் கருதுவது இத்தகைய மூடர்கள் என் கல்லூரி ஆசிரியர்களாக அமைந்ததுதான். வாழ்க்கை பற்றிய பல கசப்புகளை உருவாக்கியது அந்த மூடர் கூட்டம்தான் என்று இன்று யோசிக்கும்போது தோன்றுகிறது.

எஸ்.வைத்திலிங்கம்

சுரேஷ் பிரதீப் -தமிழ்விக்கி 

அன்புள்ள வைத்திலிங்கம் அவர்களுக்கு,

அது என் நண்பர் சுரேஷ் பிரதீப் எழுதிய குறிப்பு. அவர் என் சிஷ்யர் அல்ல. அவர் அடுத்த தலைமுறை எழுத்தாளர். பொதுவாக இலக்கிய உலகில் மூத்த எழுத்தாளர்களிடமிருந்து ஊக்கம்பெறுவதும், அடிப்படைகளைக் கற்றுக்கொள்வதும் அடுத்த தலைமுறை எழுத்தாளர்களின் வழக்கம். அதேபோல அடுத்த தலைமுறையின் எழுத்தாளர்களில் கலைத்திறன் கொண்டவர்களை அடையாளப்படுத்தி முன்னிறுத்தி அவர்களுக்கு ஒரு தொடக்கத்தை உருவாக்குவது முந்தைய தலைமுறை எழுத்தாளர்களின் வழக்கம். இது தலைமுறை தலைமுறையாக இவ்வாறுதான் நிகழ்ந்துவருகிறது. இது ஒன்றும் குருசீட உறவு அல்ல. அப்படிப்பட்ட கட்டுப்பாடோ, ஆதிக்கமோ இலக்கியத்தில் இருப்பதில்லை.

ஒருவரை ஆசிரியர் என உணரவேண்டியவர் தன்னை மாணவரென உணர்பவர் மட்டுமே. அது அவருடைய அந்தரங்கமான ஓர் உணர்வு. நான் ஆற்றூர் ரவிவர்மா, சுந்தர ராமசாமி, ஞானி, பி.கே.பாலகிருஷ்ணன் ஆகியோரை அப்படி எண்ணுகிறேன். அது என் உணர்வுநிலை மட்டுமே. இலக்கியத்தில் அது நிபந்தனையோ மாறாவழக்கமோ அல்ல. ஒருபோதும் எந்த எழுத்தாளரையும் இன்னொருவரின் நீட்சியாக, இன்னொருவருடன் இணைத்துப் பார்க்கக்கூடாது.

சுரேஷ் பிரதீப் நான் நடத்தும் இளம்வாசகர் சந்திப்பில் 2016ல்  எனக்கு அறிமுகமானவர். என் தளத்தில் அவரை அறிமுகம் செய்தேன். அவருடைய வாழ்க்கைநோக்கும் அழகியலும் முற்றிலும் வேறானவை. அவற்றை அவர் எப்படி கண்டடைந்து கூர்மைப்படுத்திக் கொள்வது என்பதில் மட்டுமே என்னுடைய பங்களிப்பு சிறிது உள்ளது. இன்று தமிழின் முக்கியமான இளம்படைப்பாளி அவர்.

உங்களுக்கு வாசிக்கும் வழக்கம் இல்லாமலிருக்கலாம். வாட்சப் வழியாக செய்திகளை அறிபவராக இருக்கலாம். சுரேஷ் பிரதீப் யூடியூபில் நவீனத் தமிழிலக்கியத்தை மிக விரிவாக அறிமுகம் செய்து உரைகளை ஆற்றிக்கொண்டிருக்கிறார். இளம் வாசகர்களுக்கும், இலக்கிய அறிமுகம் தேடுபவர்களுக்கும் மிகவும் உதவியானவை அவை. ஆழ்ந்த இலக்கியவிவாதங்களில் ஈடுபடுபவர்களுக்கும் உகந்தவை. நீங்கள் தேடிப்பார்க்கலாம். அவரை புரிந்துகொள்ள முயலலாம். அந்தப்பின்னணியில் அவர் என்ன சொல்கிறார் என்று விளங்கிக்கொள்ளலாம். ( தமிழ் இலக்கிய உரைகள். சுரேஷ் பிரதீப்)

*

நான் தொடர்ச்சியாக இளம் வாசகர்களைச் சந்தித்துக்கொண்டே இருக்கிறேன். இளையோரின் கடிதங்களை ஒவ்வொரு நாளும் பெறுகிறேன். திகைப்பூட்டும் உண்மை, அவர்களில் மிகப்பெரும்பாலானவர்களுக்கு ஆசிரியர் என்றாலே கசப்பு என்பதே. அவர்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு நல்ல ஆசிரியரைக்கூட சந்தித்ததில்லை என்பது மட்டுமல்ல; தங்கள் வாழ்நாளில் சந்தித்த மிக அருவருப்பூட்டக்கூடிய, மிகக்கீழ்மையான, மிகக்கொடிய மனிதர்கள் ஆசிரியர்களே என எண்ணுகிறார்கள். பள்ளியிலும் கல்லூரியிலும் ஒரே நிலை. ஆனால் கல்லூரி ஆசிரியர்கள் மேல் மிகமிகக் கடுமையான கசப்பு உள்ளது.

மிகச் சிலநாட்களுக்கு முன்னர் சந்தித்த இறுதியான இளம்வாசகர் சந்திப்பிலும் அது சொல்லப்பட்டது. ஒரு வகுப்பு சுவாரசியமாக இருக்கமுடியும், கற்றலென்பது இனிய அனுபவமாக இருக்கமுடியும் என்பதையே முதல்முறையாகத் தெரிந்துகொள்வதாகச் சொன்னார்கள்.

என் அனுபவம் அப்படி அல்ல. திறனற்றவர்களும், சிறுமை கொண்டவர்களுமான ஆசிரியர்கள் சிலரை நான் அறிவேன். குறிப்பாக குமரிமாவட்ட மாணவர்கள் பள்ளிகளில் கடும் மதவெறுப்பை வெளிப்படுத்தும் ஆசிரியர்கள் சிலரையாவது பார்த்திருப்பார்கள். ஆனால் பெருமதிப்புக்குரிய வழிகாட்டிகளான ஆசிரியர்கள் எங்கள் வாழ்க்கையில் வந்துள்ளனர். இலக்கியத்திற்கு என்னை ஆற்றுப்படுத்திய பலர் உண்டு. என் பொறுப்பின்மைகளை மன்னித்து என்னை ஓர் எதிர்கால இலக்கியவாதி என்றே அணுகிய பேராசிரியர் மனோகரன் என்னுடைய நினைவில் நீடிப்பவர்.

இளையதலைமுறைக்கு ஏன் இந்த உளப்பதிவு உருவாகிறது? இன்றைய ஆசிரியர்கள், இன்றைய கல்விமுறை வகுப்பாளர்கள் யோசிக்கவேண்டிய விஷயம் இது. எல்லாவற்றிலும் ஏதாவது அரசியல்சரிகளைச் சொல்லிக்கொண்டு எகிறிக்குதிக்கும் போலிக்கும்பல்கள் இங்கே நிறையவே உண்டு. அவர்கள் உடனே பிலாக்காணத்தை ஆரம்பித்துவிடுவார்கள் என்றும் தெரியும். நான் பேசுவது உண்மையான ஆசிரியர்களிடம்

(முன்பொருமுறை அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் நடத்தை பற்றி ஒரு குறிப்பை எழுதியிருந்தேன். முகநூல் வம்பர்கள் பொங்கிக்குதித்தனர். ஆனால் சில மாதங்களிலேயே ஏராளமான செய்திகள் வரத்தொடங்கின. நான் சொன்னதை அதைவிட தீவிரமாகக் கல்வியமைச்சரே சொன்னார். ஆணைபிறப்பித்தார். நியாயப் பொங்கலாளர்கள் ஓசையே எழுப்பவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு அதிகாரம் என்றால் என்னவென்று தெரியும். பொங்கல்கள் முழுக்க எழுத்தாளனுக்கு எதிராகவே. அந்த வெட்டிக்கும்பலைக் கடந்தே இங்கே அடிப்படைகளையே யோசிக்கவேண்டியிருக்கிறது.)

இன்றைய தலைமுறையினரில் கல்வி என்பது கடுமையான போட்டி நிறைந்ததாக ஆகிவிட்டது. இன்று கல்வி பயிற்றலுக்குப் பதில் தேர்வுக்குப் பயிற்சி அளித்தலே நிகழ்கிறது. ஆகவே கற்றலின்பமே மாணவர்களுக்கு இல்லை. இன்றைய கசப்புகளுக்கு அது முதன்மையான காரணம், மறுக்கவில்லை.

ஆனால் மேலும் பிரச்சினைகள் உள்ளன. முதன்மையானது, கற்பித்தலில் ஆர்வமே அற்றவர்கள் ஒரு வேலை என்ற அளவிலேயே ஆசிரியர் பணிக்கு வருவது. அத்துடன், பெரும்பணம் கையூட்டாகக் கொடுத்து ஆசிரியர்களாக ஆவது. சென்ற முப்பதாண்டுகளாகத் தமிழகத்தில் கையூட்டில்லாமல் ஆசிரியப்பணிக்கு செல்வது அரிதினும் அரிதாகிவிட்டது. கல்லூரி ஆசிரியப் பணிக்கு ஒருகோடி வரை இன்றைய விலை என்கிறார்கள்.

தனியார்க் கல்லூரிகளில் தலைகீழ் நிலைமை. ஓரு கடைநிலை அரசூழியர் வாங்கும் ஊதியத்தில் பத்திலொன்றுதான் அங்கே ஆசிரியரின் ஊதியம். அவர்கள் ஆசிரியர்களே அல்ல, கொத்தடிமைகள்.

கையூட்டு கொடுத்து ஆசிரியராகிறவர் ஆசிரியப்பணியையே எதிர்மறையாகப் பார்க்கிறார். நான் பணம்கொடுத்து வந்தவன், எனக்கு மேற்கொண்டு எந்தப் பொறுப்பும் இல்லை என நினைக்கிறார். லாபக்கணக்கு பார்க்கிறார். காலப்போக்கில் தன் வேலையையே வெறுக்கிறார். மாணவர்களை வெறுக்கிறார்.

கையூட்டுதான் ஆசிரியப்பணிக்கான ஒரே தகுதி என வரும்போது தகுதியானவர்களுக்கு வாய்ப்பு அமைவதில்லை. சில்லறை மனிதர்களுக்கு வாய்ப்பமைகிறது. அவர்களிடம் அறிவுத்திறனையோ, அர்ப்பணிப்பையோ எதிர்பார்க்கமுடியாது.

ஊதியம் மிகக்குறைவாக இருக்கையில் ஆசிரியரிடம் அர்ப்பணிப்பையோ தகுதியையோ எதிர்பார்க்க முடியாது. அவர்களின் உணர்வுநிலைகள் மிகையாக ஆவதைக்கூட நம்மால் தடுக்கமுடியாது.

ஆசிரியர்பணியில் இன்று முதன்முதலாக நிகழும் பணித்தேர்வு முதல் இறுதிவரை எந்த தகுதிப்பரிசீலனையும் இல்லை. ஆகவே ஆசிரியர்கள் பெரும்பாலும் வாசிப்போ, அடிப்படை அறிவோகூட அற்றவர்களாகவே இருக்கிறார்கள். கல்லூரி ஆசிரியர்கள் குறிப்பாக எதையுமே அறியும் ஆர்வமற்றவர்கள். அத்தகையோருக்கு ஒரு தாழ்வுணர்ச்சி, பாதுகாப்பின்மையுணர்ச்சி இருக்கிறது. அவர்கள்தான் கூர்மையான மாணவர்களை வெறுப்பவர்கள். அவர்களை அழிக்கக்கூட முயல்பவர்கள்.

உண்மையிலேயே ஒரு பெரிய பிரச்சினை கூர்கொண்டிருக்கிறது. மேலும் மேலும் வளர்கிறது. ஆசிரியமாணவ உறவே அற்றுப்போகும் ஒரு சமூகம் மிகப்பெரிய அறிவார்ந்த வீழ்ச்சியைச் சந்திக்கும். அதைச் சுட்டிக்காட்டவேண்டியது மட்டுமே எழுத்தாளனின் பணி.

ஆசிரியர்களிடம் இன்று எந்த அறிவுஜீவியும் பேசமுடியாது, அவர்கள் எதையுமே படிப்பதில்லை. அரசாணை மட்டுமே அவர்களிடம் சென்றுசேரும். ஆயினும் ஒன்று மட்டும் சொல்லவேண்டியிருக்கிறது. ஆசிரியர் பிற ஊழியர்களைப்போன்றவர் அல்ல. அவர் எதிர்காலத் தலைமுறைமுன் நின்றிருக்கிறார். அவரை கவனித்துக் கொண்டிருப்பவை வரும்காலத்தின் கண்கள். அவருடைய ஒவ்வொரு பிழையும், சிறுமையும் அடுத்த அரைநூற்றாண்டுக் காலத்திற்கு நினைவில் நீடிப்பவை. அந்த உணர்வாவது அவர்களுக்கு வேண்டும்.

ஜெ

முந்தைய கட்டுரைமனோன்மணியம் சுந்தரம் பிள்ளை
அடுத்த கட்டுரை‘The Abyss’ – an English translation of Jeyamohan’s Tamil novel