காடு, ஒரு விமர்சனம்

காடு வாங்க 

நாம் கானகத்தை உணர வேண்டுமானால் அதன் ஆரம்பம் சென்று நிமிர்ந்து பார்த்தால் முடியாது. அதற்குள் பயணப்பட வேண்டும் . கரடுமுரடான பாதைகளை கடந்தாக வேண்டும் . அதே போல் தான் ஜெயமோகனின் இந்த படைப்பும் ஆரம்பத்தில் மிக கடினமாக தோன்றினாலும் அந்த காட்டிற்குள் கிரிதரன் வாழ பழகிய பிறகு இந்த நாவல் நம்மை அழகாக உள்வசப்படுத்திவிடுகிறது . ஞானும் மலையாளமும் கலந்து போனோம் .

அழகான ஓவியத்தின் மேல் கோடு போடுவதற்கு இணையானது காட்டில் மனிதன் அமைக்கும் சாலைகள் . நான்ஒரு முறை காட்டிற்குள் பயணப்படும் போது யானைகளின் பாதைகளை தேர்வு செய்தேன் .அழகான பாதைகளை தங்களுக்கான தேவைக்கு மட்டுமே உருவாக்குகின்றன . காட்டின் அடிவாரத்தில் இருக்கும் சிறு அருவியில் இருந்து மேல் நோக்கி பயணப்பட்டேன் . சற்று கடினமான பயணம் தான் ஆனால் அற்புதமானது . இதுவரை பார்த்திராத பறவைகள் , விலங்குகள் , மரங்கள் , செடிகள் என அனைத்துமாக என்னை ஆட்கொண்டுவிட்டது . தொடர்ந்து வழியும் நீர் பாறைகளையும் , மண்ணையும் உறவாக்கி கொள்கின்றன . காட்டின் மையப்பகுதியை எட்டுவதற்குள் இருள் சூழ தொடங்க திரும்ப வேண்டி இருந்தது . அந்த ஏக்கம் தொடர்ந்து இருந்து வந்தது . ஆனால் “காடு” என்கிற படைப்பின் வாயிலாக கானகம் முழுவதுமாக சுற்றி திரிந்த அனுபவம் கிடைத்துவிட்டது .

கிரிதரன் காட்டிற்குள் கல்வெர்ட் கட்டும் பணிக்கு மேற்பார்வையாளனாக தனது மாமாவிற்கு உதவ காட்டிற்குள் போகிறான் . அந்த நாட்களில் அவன் காட்டை கண்டு பயந்து போகிறான் . ஒரு மிளாவுடன் தான் முதலில் சினேகமாகிறான் . இந்த நாவல் முழுவதும் அந்த மிளாவும் தொடர்ந்து பயணமாகிறது . நாவலின் மற்றோரு சிறப்பான கதாபாத்திரங்கள் குட்டப்பன் மற்றும் ரெசாலம் ஆகியோர் தான் . உடன் வேணி,அம்பிகா , குரிசு , சினேகம்மை, ராசப்பன், ராபி, ஆபேல், மேரி, ரெஜினா , டாக்டர் , இன்ஜினியர் அய்யர் என நிறைய மனிதர்கள் காட்டில் வாழ்கிறார்கள் . ஆனால் வாசித்த போதே என்னில் வாழ்ந்தது நீலி மட்டுமே .

காட்டில் பெய்யும் மழை ஏற்படுத்தும் தாக்கங்களை இரண்டு பருவநிலைகளில் மிக விரிவாக கவிதை போலவே கடந்து போகிறார் . ஒரு மழை அழகானது இன்னோரு மழை ஆபத்தானது மூன்றாவதாக ஒரு மழை அதுவே முடிவாகிறது . காடு ஏற்படுத்தும் நெருக்கம் காமம் உட்பட இனிமையாகிறது . காமம் எளிதில் எட்டும் நிலையிலும் கிரிதரன் விலகி நிற்கிறான் அதனால் தான் நீலி அவனை தேடி வருகிறாள் . அந்த காட்டின் உறவு நீலி மட்டுமே . அவளோடு கிரிதரன் ஆர்பரிக்கும் மழையில் குறிஞ்சிப்பூவை காண பயணப்படுவது அழகான பயணம் . அவர்களின் அத்தனை சந்திப்பும் கவிதைகளால் புணரப்பட்ட உரையாடல்கள் .

இந்த காடு மரங்களை மட்டுமல்ல மனிதர்களையும் கொண்டாடுகிறது . தேவாங்கினை தனது குழந்தையாகவே நினைத்து உருகும் ரெசாலம் ஒரு பக்கம் , காட்டையே உறவாக கொண்ட குட்டப்பன் இன்னோரு பக்கம் , மக்கள் சேவையை மட்டுமே உயிரேன கருதும் டாக்டர் , பைபிளை மட்டுமே நேசிக்கும் குரிசு , இயற்கைக்குள் இலக்கியம் கலந்து வாழும் இன்ஜினியர் அய்யர் என அத்தனை மனிதர்களும் நம்மில் படர்ந்துவிடுகிறார்கள் . கிரிதரன் அந்த மதம்பிடித்த யானையை சந்திக்கும் ஒவ்வோரு நிகழ்விலும் ஒவ்வோரு விதமான சூழல் நிலவுகிறது . காதலில் இருந்து காமம் முதல் .

ஒரு மனிதன் அவனுக்கு நெருக்கமான சூழலை விட்டு வாழ்வதற்கான சூழலை ஏற்று கொண்டு வாழ வேண்டி வரும் போது அவன் கொஞ்சம் கொஞ்சமாக சிதறுண்டு போய் இறுதியில் ஏதோ ஒரு புள்ளியில் கரைந்து போகிறான் . கிரிதரனும் நீலிக்கு பிறகு சந்தனகாட்டிற்குள்ளாகவே கலந்து போகிறான் எஞ்சிய பிண்டம் வாழ்ந்து கொண்டிருக்கிறது . என்னுடைய நெருக்கத்தில் எப்போதும் இருக்கும் இந்த “காடு” . வாசிப்பை நேசிப்போர் தவறாது வாசிக்க வேண்டிய படைப்பு .

கதிரவன் மகாலிங்கம் .

முந்தைய கட்டுரைமேடைப்பேச்சும் எழுத்தாளர்களும்-2
அடுத்த கட்டுரைதியானப்பயிற்சி, கடிதம்