அண்மையில் ஒரு கேள்வி வெவ்வேறு வாசகர்களால் முன்வைக்கப்பட்டது. அவற்றுக்கு தனிப்பட்ட முறையில் அளித்த பதில்களின் தொகை இது.
முதல் கேள்வி, விஷ்ணுபுரம் வட்டம் ஓர் அதிகார அமைப்பா? எழுத்தாளர் ஜெயமோகன் ஓர் அதிகார அமைப்பா? பொதுவாகவே எழுத்தாளர்கள் அதிகார அமைப்பாக ஆகிறார்களா?
இணையத்தில் பலர் பலவகைகளில் இக்கேள்விகளை முன்வைக்கிறார்கள். அவற்றை முன்வைக்கிறவர்கள் தாங்கள் ’அதிகாரத்தை எதிர்க்கும் சிந்தனையாளர்கள்’ என்ற பிம்ப உருவாக்கத்துக்கு முயல்கிறார்கள்
முதல் கேள்வி. இதற்கு முன்னால் இந்தக் குற்றச்சாட்டுக்கள் எழுத்தாளர்கள்மேல் வந்துள்ளனவா?
இலக்கியவரலாறு அறிந்தவர்களுக்குத் தெரியும். நான்கு பேர் மேல் அடிவயிற்று ஆவேசத்துடன் இக்குற்றச்சாட்டு பல ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டது.
சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், அவர்களுக்கு முன்பு க.நா.சுப்ரமணியம், சி.சு.செல்லப்பா. நால்வருமே ஆள்திரட்டி அமைப்பை நடத்துகிறார்கள், இலக்கிய அதிகாரம் செலுத்துகிறார்கள் என வசைபாடப்பட்டனர். சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் இருவருடைய இல்லங்களும் ‘மடம்’ என்று கேலி செய்யப்பட்டன. க.நா.சுப்ரமணியம் ’பரமார்த்தகுரு’ என இழிவுசெய்யப்பட்டார். க.நா.சு, சி.சு.செல்லப்பா இருவருமே அமெரிக்க நிதிபெற்று இலக்கிய அதிகாரத்தை உருவாக்குகிறார்கள் என அவதூறு செய்யப்பட்டார்கள். இவையெல்லாம் அச்சிலேயே வாசிக்கக் கிடைப்பவை.
அதைச் சொன்னவர்கள் எவர்? அன்றைய பேராசிரியர்கள் மற்றும் அரசியலமைப்பினர். அந்தப் பேராசிரியர்கள் லட்சக்கணக்கில் பணம்கொழிக்கும் கல்வித்துறையில், அந்த ஊழலில் உழன்றவர்கள். இலக்கியமே அறியாமல் இலக்கியம் கற்பித்தவர்கள். தாங்களே கதையும் கட்டுரையும் எழுதி தங்கள் கல்லூரிகளிலேயே இலக்கியபாடமாக்கி பணம் அள்ளியவர்கள். அரசியல்வாதிகளுக்கு புளிக்கப்புளிக்க புகழ்பாடி பதவிகளை அடைந்தவர்கள். அரசியலமைப்பினர் கட்சியின் ஆணைப்படி இலக்கியம் பேசியவர்கள். அவர்கள்தான் கால்நடையாக நடந்து, தலையில் புத்தகம் சுமந்து விற்று, சிற்றிதழ்நடத்தி இலக்கியம் வளர்த்த க.நா.வையும் சி.சு.செல்லப்பாவையும் ‘அதிகாரம் செலுத்தும் ஐந்தாம்படை’ என்றனர்.
ஏன்? வெறும் அச்சம், பதற்றம். எல்லா காலகட்டத்திலும் அந்த பதற்றம் கல்வித்துறையினரை, அரசியலாளர்களை ஆட்கொள்கிறது. உண்மையில் அவர்களிடம்தான் எல்லாமே இருக்கிறது. இன்று ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒரு மணிநேர உழைப்புக்கு சராசரியாக இரண்டாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு வகை பூர்ஷுவா. பல்கலைக்கழகம் ஒருவகை நிகர் அரசு. எல்லாவகையான அதிகாரமும், அந்த அதிகாரத்திற்குரிய ஊழல்களும் கொண்டது. அரசியல்கட்சியினரின் ஊடக அணிகளிடம் அரசாங்கமே இருக்கிறது. ஆனாலும் அவர்கள் தீவிர இலக்கியத்தை அஞ்சுகிறார்கள். முடிந்த வரை இழிவுசெய்து எதிர்க்கிறார்கள்.
ஏனென்றால் தங்களுடைய உள்ளீடின்மை அவர்களுக்கு தெரியும். யானைமேல் அமர்ந்தாலும் அந்த பாதுகாப்பின்மை அகல்வதே இல்லை. எந்நிலையிலும் தீவிர இலக்கியம் இவர்களுக்கு எதிரானதாகவே இருக்குமென இவர்கள் அறிவார்கள். இவர்களின் அதிகாரமும் பணமும் இவர்களிடம் நூறுபேரை ஈர்க்கலாம், ஆனால் மெய்யான தேடலுடன் நுண்ணுணர்வும் அறிவுத்திறனும் கொண்ட ஒருவன் இலக்கியம் நோக்கிச் சென்றுகொண்டே இருப்பான் என இவர்களுக்கு தெரியும்.
எழுத்தாளர்கள் என்ன அதிகாரத்தைக் கொண்டுள்ளோம்? எவர்மேல் நாங்கள் ஆதிக்கம் செலுத்த முடியும்? எழுத்தால் சிலர்மேல் செல்வாக்கு செலுத்துவோம். ஆனால் எழுத்தின் நோக்கமே அதுதான். அச்செல்வாக்கைச் செலுத்துவதற்காகவே இலக்கியம் செயல்படுகிறது. மேலோட்டமாக வாசித்துச் செல்வதற்குரியதல்ல இலக்கியம். அது வாழ்க்கையை ஊடுருவுவது. வாசிப்பவனின் பார்வையை கட்டமைப்பது. தன்னிடமுள்ள ஒன்றை வாசகனுக்கு அளிக்கிறான் எழுத்தாளன். அவன் முன்னோடிகளிடமிருந்து பெற்றுக்கொண்டது அது. அவன் வழியாக அடுத்த தலைமுறைக்குக் கடந்துசெல்வது.
பல்கலைக்கழகங்களும் அரசியல்கட்சிகளும் அரசாங்கமும் இங்கே என்றும் கோட்டைகளை கட்டி கொடிபறக்கவிட்டு அமர்ந்திருக்கும். அவற்றை எவரும் எதுவும் செய்ய முடியாது. ஆனால் இந்த சின்னஞ்சிறு தற்கொலைப்படையும் என்றும் இருந்துகொண்டிருக்கும். ஒருபோதும் சரண் அடையாது. ஒருபோதும் முற்றாகத் தோற்காது.
நான் உருவாக்க நினைப்பது அமைப்பை அல்ல. நான் உருவாக்குவது ஓர் இயக்கத்தை. இணையான எண்ணம் கொண்டவர்கள் தன்னியல்பாகத் திரண்டு செய்யும் ஒரு கூட்டுச்செயல்பாட்டை. இங்கே தலைவர்களோ தொண்டர்களோ எவருமில்லை. எந்த பொறுப்பாளரும் இல்லை.
இந்த இயக்கம் க.நா.சு கனவு கண்டது. இலக்கியத்திற்கு ஓர் இயக்கம் என அவர் எழுதிக்கொண்டே இருந்தார். அதற்காக சிற்றிதழ்கள் நடத்தி தன் தந்தை அளித்த மொத்தச் சொத்தையும் இழந்து பணமில்லாதவராக மறைந்தார். இறுதிக்காலத்தில் ஒரு காடராக்ட் அறுவைசிகிழ்ச்சை செய்ய காசில்லாமல் இருந்தார். செல்லப்பா தன் சொத்துகளை சிற்றிதழ் நடத்தி இழந்தார். சுந்தர ராமசாமி காகங்கள், காலச்சுவடு என்னும் பெயர்களில் உருவாக்க எண்ணியது இந்த இயக்கமே. ஜெயகாந்தன் இலக்கியவட்டம் என்னும் பெயரில் உருவாக்க எண்ணியது இந்த இயக்கமே.
ஏன் இந்த இயக்கம் தேவையாகிறது? ஏனென்றால் இங்கே இலக்கியவாதி அனைத்து அமைப்புகளாலும் தனித்துவிடப்பட்டிருந்தான். கல்வியமைப்புகளில் பேராசிரியப் பெருச்சாளிகள் ஏறி அமர்ந்து தின்று கொழுக்கின்றன. அரசியலாளர்களுக்கு இலக்கியம் ஒரு பொருட்டே அல்ல. இலக்கியத்தைக் காக்க வேண்டியது இலக்கியவாதியின் வேலை என்றார் க.நா.சு. அவர் உருவாக்க எண்ணிய இயக்கம் அதற்காகவே.
ஆனால் அவர்களின் முயற்சிகள் வெல்லவில்லை. சிற்றிதழ் இயக்கம் மிகுந்த செலவேறியது. சுந்தர ராமசாமியாலேயே சிற்றிதழை நடத்த முடியவில்லை. அது அவர்களை வீழ்த்தியது. நானும் சிற்றிதழ் நடத்தி பண இழப்பை அடைந்தவனே.
க.நா.சுவும் சுந்தர ராமசாமியும் கனவுகண்டதையே நான் செய்கிறேன். 1991ல் நான் எழுதவந்த காலம் முதல் இந்த இயக்கத்தை உருவாக்க முயல்கிறேன். நான் நடத்திய எல்லா இலக்கியக் கூட்டங்களும், சந்திப்புகளும் பிற படைப்பாளிகளுக்காகவே. இலக்கியத்தை முன்வைப்பதற்காகவே. எனக்காக அல்ல.
இணையம் வழியாக பொதுமக்களிடம் குறைந்த செலவில் பேசமுடிந்தபோது இந்த இயக்கம் கொஞ்சம் வலுப்பெற்றது. இத்தனை ஆண்டுகளில் நாங்கள் செய்தது என்ன என எவரும் பார்க்கலாம். ஆ.மாதவனுக்கு முதல் இலக்கியக் கூட்டத்தை அவருடைய எழுபதாம் வயதில் நாங்கள்தான் நடத்தினோம். அன்றுவரை எந்த ஒரு பல்கலைக் கழகமும், எந்த ஒரு அரசியலமைப்பின் இலக்கியக் கிளையும் அவரை பொருட்டாக நினைக்கவில்லை.
அவ்வாறு நாங்கள் அடையாளப்படுத்திய பின்னரே மூத்த படைப்பாளிகள் கவனம்பெற்று விருதுகள் வாங்கினர். பலருக்கு அவர்களுக்குக் கிடைத்த அங்கிகாரமே நாங்கள் அளித்தது மட்டுமே. இந்த இயக்கம் உருவான பின்னரே வெவ்வேறு தனியார் விருதுகள் உருவாயின. இன்று எழுத்தாளர்களுக்கு ஏதேனும் பண ஆதரவு உண்டு என்றால் அது இவ்விருதுகளே.
இலக்கியவாதிகளாகிய நாங்கள் எங்களுக்காக உருவாக்கிக் கொள்ளும் இயக்கம் இது. கொரோனா காலகட்டத்தில் இலக்கியவாதிகளுக்கு நிதியுதவி உள்ளிட்ட பல உதவிகளை நாங்களே செய்தோம். இன்றும் அத்தகைய உதவிகள் தொடர்கின்றன. ஏனென்றால் இலக்கியவாதிக்கு இங்கே வேறவரும் உதவிக்கு இல்லை.
ஆனால் அதுகூட பேராசிரியர்களுக்கும் அரசியலடிமைகளுக்கும் கசக்கிறது. அந்தச் சிறிய இயக்கம்கூட இருக்கலாகாது என்கிறார்கள். இது அதிகாரமாம், இவர்கள் எதிர்க்கிறார்களாம். இலக்கியவாதிகள்மேல் அதிகாரம் என்றால் இலக்கியவாதி எதிர்க்கட்டும், இவர்களுக்கு என்ன வேலை இங்கே?
இவர்கள் அமைப்புக்கும் அதிகாரத்துக்கும் எதிரிகளாம். தமிழகத்தில் எந்தப் பேராசிரியராவது பல்கலைக் கழகம் என்னும் அமைப்பின் அதிகாரம், அது சிந்தனைமேல் செலுத்துத்தும் ஆதிக்கம், அங்குள்ள ஊழல் பற்றி எப்போதாவது ஒரு வார்த்தையாவது பேசி நாம் அறிந்திருக்கிறோமா? எந்தக் கட்சியடிமையாவது கட்சியின் ஆதிக்கம், ஊழலுக்கு எதிராக ஒரு சொல்லாவது பேசிவிட முடியுமா? கட்சிகளின் இலக்கிய அணிகளுக்கு இலக்கியமறியா அரசியல்வாதிகள் தலைமை வகித்து வழிகாட்டுவதைப்பற்றியாவது ஒரு முனகல் எழுப்பிவிட முடியுமா?
அவர்களின் எதிர்ப்பெல்லாம் ஆயிரம் வாசகர்கொண்ட சிற்றிதழெழுத்தாளர்களிடம் மட்டும்தான். ஏனென்றால் அதிகாரமென்றால் என்னவென்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும். எழுத்துச்சூழலில் உண்மையான எந்த அதிகாரமும் இல்லை என அதைவிட நன்றாகத் தெரியும். அதிகாரத்தின் எந்த எதிர்விளைவையும் சந்திக்காமல் அதிகார எதிர்ப்பு பிம்ப உருவாக்கத்துக்கான எளிய வழி இது.
இலக்கிய இயக்கங்களுக்குரிய செயல்முறை அதற்கான ஜனநாயகம் கொண்டது. அது அழகியல்கோணங்களின் ஜனநாயகம். நான் முன்வைக்கும் எழுத்தாளர்கள் எவரும் நான் எழுதும் அழகியலை கொண்டவர்கள் அல்ல. எனக்கு முற்றிலும் எதிரான அழகியல் கொண்ட சாரு நிவேதிதாவோ, எனக்கு முற்றிலும் அன்னியமான அழகியல் கொண்ட இரா முருகனோ அவ்வாறுதான் என்னால் ஏற்கப்படுவார்கள். அழகியல்களின் உரையாடல் வழியாக நிகழும் ஒரு செயல்பாடு இது. எல்லா தரப்புகளும் இடம் பெறும் ஒரு களம் இது.
இப்படித்தான் சிற்றிதழியக்கம் என்றும் இருந்துள்ளது. இனியும் அவ்வாறே இருக்கும். இங்கே அதிகாரம் உண்டா? ஆம், உண்டு. அது இலக்கியம் வழியாகவே உருவாகும் செல்வாக்கு. உலகமெங்கும் அது அவ்வாறே. எழுத்தின் வழிமுறையே அதுதான். ஓர் எழுத்தாளன் தான் அடைந்த வாழ்வனுபவங்கள், அவற்றிலிருந்து பெற்ற சிந்தனைகள், அவற்றினூடாகச் சென்ற அகப்பயணங்களை எழுத்தில் முன்வைத்து தன் காலகட்டம் மீது முடிந்தவரைச் செல்வாக்கு செலுத்த கடமைப்பட்டவன். ஒவ்வொரு எழுத்தாளனும் செய்வது அதையே. அதில் அவரவர் ஆற்றலும் வாய்ப்பும் அவரவருககான இடத்தை அளிக்கின்றன.
இந்த அதிகார எதிர்ப்புக் குரலுக்கு இன்னொரு நேரடிப் பின்புலமும் உண்டு. மிக அண்மைக்காலமாக தமிழக அரசு இலக்கிய விழாக்களில் நவீன எழுத்தாளர்களுக்கு அளிக்கும் இடம் இவர்களை பதறச் செய்கிறது. அது இவர்கள் அமர்ந்திருந்த இடம். இவர்கள் வெட்டிப்பேச்சு பேசி தேய்த்த பழைய திண்ணை. ஏதோ நிகழ்கிறது, இலக்கியவாதிகள் உள்ளே நுழைகிறார்கள் என அஞ்சுகிறார்கள். இவர்கள் வசதியாக வைத்து தின்றுகொழுக்கும் எதையோ இலக்கியவாதிகள் பிடுங்கிக்கொள்ளப் போகிறார்கள் என கற்பனைசெய்கிறார்கள்.
அபத்தமான பயம். இத்தனைக்குப் பின்னரும் இங்கே இலக்கியத்திற்கு இருப்பது சில ஆயிரம்பேர் மட்டும்தான். இது இன்னமும்கூட ஒருவகை தலைமறைவு இயக்கம்தான். சி.சு.செல்லப்பா காலத்தைவிட நிலைமை ஒன்றும் மேலெழுந்துவிடவில்லை. ஆகவே எவரும் கற்பனை பயங்களை வளர்க்கவேண்டியதில்லை. அவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் அந்த அதிகாரமும் பணமும் அப்படியே சிந்தாமல் அவருக்குக் கிடைக்கும். ஆசுவாசமடையலாம்.