கைவிலங்கும் பக்த குசேலாவும்

நான் சின்னப்பையனாக இருந்தபோது பிரேம் நசீர் என் விருப்ப கதைநாயகன். பின்னர் சோட்டா அறிவுஜீவி ஆனபோது நசீரை ஏளனம் செய்ய கற்றுக்கொண்டேன். நிஜமாகவே சிலவற்றை எய்தியபின் மீண்டும் சிறுவனாக நசீருக்கு திரும்பினேன். ஒருநாளில் என் கதைநாயகனின் அழகிய, கள்ளமற்ற முகத்தை காணாமல் உறங்குவதில்லை. நசீருக்கு யேசுதாஸின் குரல். நஸீர் இக்காவின் முகம் தாஸேட்டனின் குரலும் எனக்கு ஒவ்வொருநாளும் தேவை.

நடிகர் முகேஷ் ஒரு யூடியூப் சேனல் நடத்துகிறார். Mukesh Speaking அதில் அவர் சினிமா அனுபவங்களை பகிர்கிறார். இந்த காணொளியில் நசீர் பற்றிய சுவாரசியாமான மூன்று நிகழ்வுகளைச் சொல்கிறார்.

முப்பதாண்டுகளுக்கு முன் நஸீர் துபாய்க்குச் செல்கிறார். திரும்பும்போது நடிகர்குழுவுக்கு தனி வரிசையில் பாஸ்போர்ட் பரிசோதனை. ஓர் அரேபியர் ஒவ்வொரு பெயராக அழைக்கிறார். “மிஸ்டர் அப்துல் காதர்! மிஸ்டர் அப்துல் காதர்!”

ஒருங்கிணைப்பாளர் சென்று “அப்படி எவரும் இங்கில்லை” என்கிறார்.

“பின்னே, இந்த பாஸ்போர்ட் எப்படி இந்த வரிசையில் வந்தது? மிஸ்டர் அப்துல் காதர்! மிஸ்டர் அப்துல் காதர்”

“அப்படி எவரும் எங்களுக்குள் இல்லை”

நஸீர் ஒருங்கிணைப்பாளரின் தோளில் மெல்லத் தொட்டு “அஸே, நான்தான் அப்துல் காதர். அது என் இயற்பெயர்”

அப்போதுதான் நஸீரின் பெயரே மற்றவர்களுக்கு தெரியவருகிறது. நஸீரின் இயல்பும் அதில் உள்ளது. அவர் எந்நிலையிலும் நிதானமாகவே இருப்பார். கூச்சலிடுவதோ அவசரப்படுவதோ இல்லை.

ஒரு நாளில் 16 மணிநேரம், மூன்று ஷிப்டுகளிலாக நஸீர் நடித்துக்கொண்டிருந்த காலம். நஸீர் பணத்திற்காக அப்படி நடிக்கவில்லை. அவர்தான் உச்ச நட்சத்திரம். ஆனால் ஒரு படம் ஓடவில்லை என்றால் தயாரிப்பாளருக்கு அடுத்த படம் இலவசம். படம் ஓடும் வரை இலவசம். நண்பர்களுக்கு இலவசமாக நடித்துக்கொடுத்தார். நஸீரால் ஒரு காலத்தில் மலையாள சினிமாவுலகமே வாழ்ந்தது.

ஒரு காலையில் படப்பிடிப்பு. மதியம் 12.30க்கு நஸீர் அடுத்த படப்பிடிப்புக்குச் செல்லவேண்டும். நஸீரை கைதுசெய்து விசாரிக்கும் காட்சி. கைவிலங்கு போட்டு நஸீர் சம்பந்தமான காட்சிகளை எடுக்கிறார்கள். அன்றுமின்றும் கைவிலங்கில் டம்மி என்பதே இல்லை. அசல் விலங்குதான். அதை பூட்டினால் சாவி இருந்தால் மட்டுமே திறக்க முடியும். உடைக்கவே முடியாது. வெல்டிங் ராடால்கூட உருக்க முடியாது.

படப்பிடிப்பு முடிந்து நஸீர் கிளம்பத் தயாரானபோது தெரியவருகிறது, கலை இயக்குநர் அந்த விலங்கின் சாவியுடன் எங்கோ போய்விட்டார். எங்கே என தெரியாது. ஏதோ வாங்கச் சென்றிருந்தார்.

என்ன செய்வதென்று தெரியவில்லை. பதறி குழம்பி ஒருவழியாக இயக்குநரே நஸீரிடம் விஷயத்தைச் சொன்னார். நஸீர் கோபப்படும் வழக்கம் இல்லை. “பரவாயில்லை அஸே, மனிதன் தவறு செய்பவன்தானே… நான் இப்படியே வீட்டுக்கு செல்கிறேன். சாவி கிடைத்தால் கொடுத்தனுப்புங்கள்”

நஸீர் கைவிலங்குடன் காரிலேறி வீட்டுக்குச் சென்றார். ஒருமணிநேரம் கழித்து கலை இயக்குநர் வந்தார். குழுவே அவரை அடிக்க பாய்ந்தது. அவர் பதறிவிட்டார். அப்படியே செத்துவிடலாமா என நினைக்குமளவுக்கு. அழுகை, புலம்பல்.

“நீ போய் அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேள்” என்றார் இயக்குநர்.

கலை இயக்குநர் நஸீரின் வீட்டுக்குச் சென்றார். வீட்டில் சோபாவில் நஸீர் கைவிலங்குடன் அமர்ந்திருந்தார். சென்றதுமே அவர் காலில் விழப்போனார் கலை இயக்குநர்.

“சேச்சே, மனிதன் காலில் மனிதன் விழக்கூடாது… பூட்டை திற” என்றார் நஸீர்.

பூட்டை திறந்துவிட்டு கலை இயக்குநர் கண்ணீருடன் நின்றார்.

“ஏன் அழுகிறாய்?”

”என்னை திட்டுங்கள், என்னை அடியுங்கள்… நான் தவறு செய்துவிட்டேன்”

“நீ என் நண்பன்… நான் உனக்கு நன்றி சொல்லவேண்டும்” என்று நஸீர் கலை இயக்குநரின் கையைப் பற்றிக் குலுக்கினார். அவர் திகைத்தார்.

“என் மனைவி தேனிலவுநாட்களில் எனக்கு சோறு ஊட்டிவிட்டிருக்கிறாள். இத்தனை ஆண்டுகளுக்குப்பின் இப்போதுதான் மீண்டும் ஊட்டிவிட்டாள்… அது உன்னால்தான். நீ என் நண்பன், உனக்கு நன்றி” என்றார் நஸீர்.

நஸீரின் அபாரமான பொறுமை, நம்பமுடியாத அளவுக்கு விரிந்த மனிதாபிமானம், நகைச்சுவை உணர்ச்சி பற்றி சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். அது நடிகர்கள் ஓர் அதிகாரமையமாக இருப்பதனால் உருவாகும் வழக்கமான புகழ்மாலை அல்ல. நஸீர் இன்று நான்காம் தலைமுறையினரால் நினைவுகூரப்படுகிறார். நஸீரிடமிருந்தது மெய்யான ’மாப்பிளாப் பண்பாடு’. கேரள முஸ்லீம்கள் ஒரு காலத்தில் பெரும்பாலும் அனைவருமே அப்படித்தான் இருந்தனர். மலபாரில் நான் சந்தித்த அத்தனை மாப்பிளா முஸ்லீம்களும் அதே குணத்தவர்கள்தான்.

நஸீர் அவருடைய சிறையின்கீழ் கிராமத்திற்கு வந்தபோது ஒரு பள்ளித்தோழர் பார்க்க வந்தார். அவருடைய மகனுக்கு அரசுவேலைக்கு அரசு செக்ரடரி ஒருவர் கையெழுத்திடவேண்டும். நஸீர் சிபாரிசு செய்தால் நடக்கும். அவர் கோரியபோது நஸீரால் மறுக்கமுடியவில்லை. நஸீர் தன்னைப்பற்றி நினைப்பவர் அல்ல. செகரடரியின் அலுவலகத்திற்குச் சென்றால் செய்தி ஆகும். ஆகவே வீட்டுக்குச் சென்று சொல்லும்படி நண்பர் கோரினார்.

ஆகவே மறுநாள் காலை கிளம்பி நண்பரின் மகனுடன் திருவனந்தபுரம் சென்றார். நஸீரை பார்த்ததும் அந்த அதிகாரியின் வீடிருக்கும் பகுதியே விழாக்கோலம் கொண்டது. தெருவெங்கும் மக்கள். நஸீர் அவருடைய வீட்டுக்குள் நுழைந்தார். அதிகாரியின் மனைவியால் நம்பவே முடியவில்லை. அவரும் அவர் பிள்ளைகளும் வந்து சூழ்ந்துகொண்டனர். அனைவருக்கும் பரவசம். நஸீர் வீட்டுக்கே வருவதென்பது கடவுளே வருவதுபோல.

அதிகாரியின் மனைவி உள்ளே போய் கணவரிடம் நஸீர் வந்திருப்பதைப் பற்றி பொங்கிக்கொந்தளித்தபடி சொல்ல அவர் எரிந்துவிழுந்தார். அவர் பழமைவாதி, பக்தர், கொஞ்சம் இஸ்லாமிய வெறுப்பும் உண்டு.

“எனக்கு சினிமாவே பிடிக்காது. நான் சினிமா பார்த்ததே இல்லை. கூத்தாடிகளையும் பிடிக்காது. அவர்கள் என் வீட்டுக்கு வரவேண்டியதில்லை” என்று கூச்சலிட்டார்.

“வீடு தேடி வந்துவிட்டார்… வந்து முகத்தையாவது காட்டுங்கள்” என்று மனைவி சொன்னாள்.

“நான் பூஜை செய்யப்போகிறேன் என்று சொல்லி அந்த ஆளை அனுப்பிவை” என்றார் அதிகாரி

அந்த அம்மாள் வந்து சொன்னதும் நஸீர் எழுந்து “அவர் பூஜையறைக்குள் செல்வதற்குள் பார்த்துவிடுகிறேனே” என உள்ளே சென்றுவிட்டார்.

அவர் அதற்குள் ஓடி பூஜையறைக்குள் நுழைந்து அதி தீவிரமாக கண்களை மூடி பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார்.

பூஜையறையைப் பார்த்த நசீரால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. அப்படியே திரும்பி வந்தார். ”பரவாயில்லை அம்மா, நான் போனில் பேசுகிறேன்” என்று அந்த அம்மாளிடம் விடைபெற்று சென்று காரில் ஏறிக்கொண்டா.

நண்பரின் மகன் அவரிடம் அவர் ஏன் சிரித்தார் என்று கேட்டார்.

“இல்லை சிரிப்பை அடக்கமுடியவில்லை” என்றார் நஸீர் உரக்கச் சிரித்தபடி.

“அதுதான் ஏன்?” என்றான் பையன்

நஸீர் என்ன நடந்தது என்று விளக்கினார். கிருஷ்ண பக்தனான அந்த அதிகாரி பூஜையறையில் சட்டமிட்டு மாட்டி மாலையணிவித்து ஊதுவத்தி கொளுத்தி கும்பிட்டுக் கொண்டிருந்தது இருபதாண்டுகளுக்கு முன்பு பக்த குசேலா என்ற படத்தில் நஸீர் கிருஷ்ணனாக வந்த தோற்றம்.

முந்தைய கட்டுரைசாந்தி
அடுத்த கட்டுரைகோவை சொல்முகம் உரையாடல்- 26