எம்.டியின் மஞ்சு

எம்.டி.வாசுதேவன்நாயர்

எம்.டி.வாசுதேவன் நாயர் தமிழ் விக்கி

அன்பின் ஜெ,

வணக்கம்.

இக்தாராவின் அந்தக் காத்திருப்பின் இசையை மறுபடி கேட்க வேண்டும் போலிருந்தது. எம்.டி-யின் “மஞ்சு”-வை சென்ற வாரம் மீள்வாசிப்பு செய்தேன்.

எம்.டி. வாசுதேவன் நாயர் என்ற பெயர், முதன்முதலாக சினிமா திரைக்கதைகள் மூலமாகத்தான் தொண்ணூறுகளில் எனக்கு அறிமுகமாயிற்று. கல்லூரிக் காலத்தில், கோவை தியேட்டர் ஒன்றில் “சதயம்” பார்த்துவிட்டு அதிர்ந்துபோய் உட்கார்ந்திருந்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது. அதன்பின்தான் அவர் புத்தகங்களைத் தேடித் தேடி வாசிக்க ஆரம்பித்தேன். “மஞ்சு”, 1983-ல் எம்.டி-யின் இயக்கத்தில் மலையாளத்தில் திரைப்படமாக வெளிவந்திருக்கிறது.

ஜக்பீர் ஹிமாலயாவின், குமாயுன் மலையடிவாரத்தில் பள்ளத்தாக்கில் அமைந்திருக்கும் நகரம் நைனிடால், கோடையில் சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகமிருக்கும் ஒரு மலை வாசஸ்தலம். கடல் மட்டத்திலிருந்து சுமார் 1900 மீட்டர்கள் உயரத்தில் இருக்கிறது. நகர் நடுவில், சுமார் 2 கிமீ சுற்றளவில் கண் வடிவ அமைப்பிலான அழகான ஏரி ஒன்றிருக்கிறது. அதனை ஒட்டி படகுத் துறை. மேலே குன்றில் பெரிய வெண்கல மணிகளுடன் நைனி தேவி கோயில்.

விமலாவிற்கு 31 வயது. ஏரிக்கருகில் ஒரு ரெசிடன்சியல் பெண்கள் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்துகொண்டு அங்கேயே தங்கியிருக்கிறாள். 1955-ல், தன் 21-வது வயதில் சந்தித்து, காதலிக்க ஆரம்பித்த நண்பன் சுதிர்குமார் மிஸ்ராவின் மீள் வருகைக்காக கடந்த ஒன்பது வருடங்களாகக் காத்திருக்கிறாள். 53 மைல்கள் தொலைவில் உருளைக்கிழங்கு தோட்டங்களுக்கு மத்தியில்தான் அவள் வீடு. வீடு அவளுக்குப் பிடித்ததில்லை. நோய்வாய்ப்பட்டு கடந்த இரண்டு வருடங்களாக படுத்த படுக்கையாய் கிடக்கும் அப்பா.  ஆல்பர்ட் கோமஸுடன் உறவு வைத்துக்கொண்டு அடிக்கடி அவருடன் வெளியில் சுற்றக் கிளம்பிவிடும் அம்மா. வீட்டு வேலைக்காரன் பீர்பகதூர் வழியாக தன் காதலன் பிரதீப் சந்திர சர்மாவிற்கு காதல் கடிதங்கள் கொடுத்துவிடும் தங்கை அனிதா. இரவில் வீட்டிலிருந்து வெளியேறி பஹாடிகளுடன் கஞ்சா புகைத்துக்கொண்டு சீட்டாடும் தம்பி பாபு. வீட்டின் நினைவு எழுந்தாலே மனம் கசக்கிறது அவளுக்கு.

படகுத் துறையில் “மேஃப்ளவர்” படகை வாடகைக்கு எடுத்து ஓட்டும் 18 வயது புத்து, விமலாவிற்கு பரிச்சயமானவன். அவன், தன் அப்பாவை இதுவரை பார்த்ததில்லை. அவன் அப்பா ஒரு வெள்ளைக்காரர் என்று அவன் அம்மா சொல்லியிருக்கிறாள். எப்போதாவது ஒரு கோடை ஸீஸனில் நகருக்கு வரும்வெள்ளைக்காரர்களில் அப்பாவும் இருப்பார் என்ற நம்பிக்கையில் அவரின் வருகைக்காக அவரின் புகைப்படத்தை பையில் வைத்துக்கொண்டு காத்திருக்கிறான் புத்து.

பள்ளிக்குப் பக்கத்திலேயே இருக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கான காட்டேஜ் “கோல்டன் நூக்”கில், அக்கோடையில் தனியாக வந்து தங்கும் சர்தார்ஜி, விமாலாவிற்கு நட்பாகிறார். அவருக்கு நுரையீரல் புற்றுநோய்; இன்னும் நான்கு மாதங்கள்தான் உயிரோடிருப்பார். இறப்பிற்காக காத்திருக்கிறார். இறப்பதற்கு முன் தனக்குப் பிடித்த, தன் நினைவுகளுடன் பின்னிய பழைய இடங்களைப் பார்ப்பதற்காக வந்திருக்கிறார்.

“மரணம் மேடைப் பிரக்ஞை இல்லாத் ஒரு கோமாளி” என்று ஓரிடத்தில் உரையாடலில் சொல்கிறார் சர்தார்ஜி. மற்றொரு சமயத்தில் கீழ்வரும் வரிகளை விமலா நினைத்துக்கொள்கிறாள்…

“என் மரணத்தையும் என் பின்னவர் மரணத்தையும்

நானே மரிக்கிறேன்…

என் வாழ்வையும் என் பின்னவர் வாழ்வையும்

நானே வாழ்கிறேன்…”

இக்தாரா இசைக்கருவியின் இசை, நாவல் முழுவதும் பின்னணி இசையாக வருகிறது. மலையும், ஏரியும், பனியும், பருவமும், காலமும் பாத்திரங்களாக உடனிருக்கின்றன. “மஞ்சு” ஒரு சிறிய நாவல்தான்; நீள்கதை அல்லது குறுநாவல் என்றும் கொள்ளலாம். ஆனால் அது தரும் அனுபவம் அபாரமானது. காட்சிகளும், பசுமையும், உணர்வுகளும் வைகறைப் பனியென மனதில் கவிபவை. பரபரப்புகளோ, ஓசைகளோ, சந்தடிகளோ அற்ற, வெகு நிதானத்தில் நகரும் மௌனச் சலனங்களின் கவிதை போல் தோன்றியது “மஞ்சு”.

வெங்கி

“மஞ்சு” (குறுநாவல்) – எம்.டி. வாசுதேவன் நாயர் (1964)

மலையாளத்திலிருந்து தமிழில்: ரீனா ஷாலினி

காலச்சுவடு பதிப்பகம்

முந்தைய கட்டுரைகி.ரா -100
அடுத்த கட்டுரைஅமெரிக்கன் கல்லூரி உரை, கடிதங்கள்