அகச்சாகசம்…. பனிமனிதன்

பனி மனிதன் வாங்க

அன்புள்ள ஜெ,

சிலவருடங்களாகவே பனிமனிதன் நாவலை வாங்கி பசங்களுக்குக் கதை சொல்ல வேண்டும் என அவ்வப்போது நினைப்பேன். ஆனாலும் இந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் நற்றிணையின் சிறப்புச் சலுகையில் தான் உங்களின் 15 புத்தகங்களில் ஒன்றாக அதை வாங்கினேன். முதலில் குழந்தைகளை என்னுடன் இருத்தி வார்த்தை வார்த்தையாகப் படித்துக் கதை சொல்லிக் கொண்டிருந்த நான், பிறகு அவர்களை விட்டு விட்டு இரண்டு நாட்களில் படித்து முடித்தேன். என் ஆமை வேக வாசிப்பு வரலாற்றில் இது ஒரு அசுர சாதனை. அந்த உற்சாகத்தில் உடனடியாக இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

இமயமலையை ஒட்டிய நிலப்பகுதியில், சிறுவன் கிம், ராணுவ வீரர் பாண்டியன், டாக்டர் திவாகர் மூவரும் பனி மனிதனைத் தேடிப் பயணிக்கிறார்கள். பல்வேறு இடர்களுக்கு உள்ளாகி, மரண விளிம்பு வரை சென்று பனிமனிதனைக் கண்டு மீள்கிறார்கள். அவர்களின் சாகசப்பயணங்களும், அந்த பயணம் வழி அவர்கள் அடையும் மாற்றமுமே நாவலின் பொதுவான கதை. பனிமனிதனைத் தேடிச் செல்ல மூவரின் நோக்கமும் வேறு வேறு என்றாலும் புத்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிம் என்ற ஆன்மீக தேடல் கொண்ட சிறுவனுக்கு ஏற்படும் சோதனைகளும் அதை அவன் கடத்தலுமே கதையின் உள்ளுறைப் பயணம்.

பரிணாம வளர்ச்சியில் இரு வேறு திசைகளில் சென்ற இனங்கள் மீண்டும் சந்தித்துக் கொள்வது என்பதே மிக சுவாரஸ்யமான கற்பனை. அதில் நீங்கள் விவரிக்கும் நிலக் காட்சிகளும், பனி மனிதனின் காடு, விலங்குகள், அவர்களின் வாழ்க்கை முறைகள் பற்றிய விவரணைகளும் வாசிக்கும் போது ஒரு கனவுத் தன்மையை உண்டாக்குகின்றன.

தினமணி சிறுவர்மணியில் தொடர்கதையாக வெளிவந்த நாவல், எழுதப்பட்டு 25 ஆண்டுகளுக்குப் பிறகும் வாசிப்பு சுவாரஸ்யம் குறையாமல் இருக்கிறது. துப்பறியும் தொடர்கதையின் இலக்கணப்படி ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது.  அதும் வலியத் திணித்தது போல் இல்லாமல் கதையோட்டத்துடனே வருகிறது. ஒரு ஆங்கில 3D சாகச சினிமாவைப் பார்ப்பது போல நாவலின் அனைத்து பக்கங்களும் செல்கின்றன. The Croods, Avatar போன்ற சினிமாக்களில் வரும் கையடக்க யானை, ஆறு கால் குதிரை, பரிணாம வளர்ச்சியின் பல்வேறு கலப்பின சோதனை விலங்கு வடிவங்கள், பிற உயிரினங்களுடன் உணர்வுகளால் இணைந்திருத்தல், அனைத்து உயிர்களுக்குமான ஒற்றை மனம், போன்றவை எல்லாம் 1998 ஆம் ஆண்டு எழுதப்பட்ட இந்நாவலில் வருவது உங்களின் ஆராய்ச்சியையும் எழுத்திற்கான மெனக்கெடலையும் காட்டுகிறது.  நாவலில் வரும் Fantacy சம்பவங்களை உங்களின் மிகு கற்பனை என்று நினைத்து வாசித்து, அதே அத்தியாயத்தின் இறுதியில் அதற்கான  அறிவியல் விளக்கங்களும், ஆராய்ச்சிக் குறிப்புகளும் படித்து, இணையத்தில் தேடி, மீண்டும் முதலிலிருந்து வாசிக்கும் போது அந்த சம்பவங்கள் மேலும் பிரம்மாண்டமாக விரிகின்றன.

சிறுவர்களுக்கான சாகசக் கதையில், எந்த மிகு கற்பனையையும் எழுதலாம் என்றில்லாமல், ஒவ்வொரு சம்பவத்திற்குமான அறிவியல் சாத்தியங்களை நீங்கள் கொடுத்திருப்பது, ஆதர்ச சிறுவனுக்காக கதை சொல்வது போன்ற பல காரணங்களால், சுந்தர ராமசாமி காந்தியை வெஸ்டர்ன் மைண்ட் செட் உள்ளவர் என்று அவதானிப்பதைப் போல, நீங்களும் வெஸ்டர்ன் மைண்ட் செட் உள்ளவர் என்று தான் எனக்குத் தோன்றுகிறது. கொற்றவை வாசித்தபோது முதலில் தோன்றியது இது.

மீண்டும் வார்த்தை வார்த்தையாக குழந்தைகளுக்கு கதை சொல்ல புத்தகத்தை எடுத்திருக்கிறேன். நன்றி ஜெ.

ரதீஷ் வேணுகோபால்

***

அன்புள்ள ரதீஷ்,

நலம்தானே?

எனக்கு எப்போதும் ஓர் எண்ணம் உண்டு. ஆன்மிகப்பயணிகள் போல சாகசக்காரர்கள் வேறு உண்டா என்று. ஆன்மிகமே ஒரு சாகசப்பயணம்தான். அகத்தும், புறத்தும். அதை ஒரு சிறுவர்நாவலாக எழுதினேன். அதுதான் பனிமனிதன். உங்கள் வாசிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது

ஜெ

முந்தைய கட்டுரைதியடோர் பாஸ்கரன் மலர், கடிதங்கள்
அடுத்த கட்டுரைகோவை அய்யாமுத்து