The Abyss வாங்க
ஏழாம் உலகம் வெளியாகி இருபதாண்டுகள் ஆகிறது. 2003 டிசம்பரில் வெளியான அந்நாவல் ஒரே வாரத்தில் எழுதப்பட்டது. அந்நாவலை எழுதுவதற்குச் சில நாட்களுக்கு முன்புதான் காடு நாவலை எழுதியிருந்தேன். காடு ஓர் இனிய கனவு, ’வறனுறல் அறியாச் சோலை’யில் மீண்டும் வாழ்ந்து மீண்டேன். இன்று வரை பல்லாயிரம் வாசகர்கள் அந்த வாழ்க்கைக்குள் சென்று திளைத்துக் கொண்டிருக்கிறர்கள். ஆனால் அந்த உச்சத்தில் இருந்து நான் ஏழாம் உலகத்தின் இருட்டுக்குள் சரிந்தேன்.
காரணம், சட்டென்று எழுந்த திம்மப்பனின் நினைவு. தொழுநோயாளி, பிச்சைக்காரர், ஆனால் நான் சந்தித்த அபூர்வமான மாமனிதர்களில் ஒருவர். திம்மப்பன் ஏழாம் உலகம் நாவலில் ராமப்பனாக ஆனார். அவரை நாயகனாக்கி அந்நாவலை எழுதவேண்டுமென எண்ணினேன். ஆனால் எழுதத் தொடங்கிய சில வரிகளிலேயே போத்திவேலுப் பண்டாரம் துலக்கமாக எழுந்து வந்தார். இது ஆச்சரியமான ஒரு விஷயம், எழுதுவோர் பலருக்கும் இது அனுபவமாகியிருக்கும். ஒரு கதாபாத்திரத்தை நாம் எந்தவகையிலும் உருவகிக்கும் முன்னரே அதுவே நம்முள் உருவாகி வரும். சிலசமயம் முகமாக. சிலசமயம் அது வாழும் சூழலாக. சிலசமயம் அது பேசும் சொற்களாக.
போத்திவேலுப் பண்டாரத்தின் பெயர்தான் எனக்கு அவரை உடனடியாக காட்டியது. எனக்கு பெயர்களிலேயே ஒரு கதாபாத்திரத்தின் முழு வாழ்க்கையும் தெளிவடைந்து தெரிவதுண்டு. ப.சிங்காரத்தின் ‘டாலர் ராஜாமணி ஐயர்’ எனக்கு ஒரு நாவலுக்குரிய கதாபாத்திரமாக தெரிகிறார். நான் எழுதிவிடலாம், எழுதாமலும் போகலாம். ஆனால் அவரை எனக்கு நன்றாகவே தெரியும். நாவலின் முதல்வரியிலேயே அப்படித் தெரிய வந்தவர் போத்திவேலுப் பண்டாரம்.
எங்கிருந்து அந்தப்பெயர் அமைந்தது? எங்களூரில் ஒரு கடையின் பெயர் போத்திவேலு ஆண்ட் சன்ஸ். அதுவாக இருக்கலாமா? அ.கா.பெருமாள் அந்த மூலக்கதாபாத்திரம் பற்றி ஒரு முறை சொன்னபோது அந்தப்பெயரும் உடன் நுழைந்திருக்கலாமோ? தெரியவில்லை. அவர் வந்ததும் கதை அப்பக்கமாகச் சென்றது. எழுதி முடித்து உடனடியாக தமிழினி வசந்தகுமாருக்கு அனுப்பி உடனே அச்சிடப்பட்டு சிலநாட்களிலேயே விற்பனைக்கு வந்து வந்த சூட்டிலேயே விற்றும் தீர்ந்துவிட்டது.
பின்னர் நான் கடவுள் படம் எடுக்கப்பட்டபோது அந்தக் களத்தில் ஒரு ‘அதீதநாயகன்’ கொண்டுவந்து இணைக்கப்பட்டார். தானே விதித்துக்கொண்ட ஓர் இடைவெளிக்குப்பின் பாலா நான் கடவுள் வழியாக மீண்டு வந்தார். அதற்கு ஏழாம் உலகத்தில் அவர் திரும்பத் திரும்ப உழன்றது வழிவகுத்தது. என்னை அவரிடம் அழைத்துச் சென்ற சுகா சொன்னார், “அவரு அவருக்கான ஏழாம் உலகத்த காட்டுவார் மோகன். ஆனா அதை எடுத்த பிறகுதான் அது என்ன் எப்டீன்னு அவருக்கே தெரியும். அவரு சினிமாவ எடிட்டிங்லதான் உண்டுபண்ணுவார்”
2004ல் தொடங்கிய நான் கடவுள் 2009ல்தான் வெளியாகியது. பாலாவுக்கு தேசிய விருதை பெற்றுத்தந்தது. நான் கடவுள் படம் வணிகவெற்றி பெற ஆர்யா நடித்த ருத்ரனே காரணம். ஆனால் நினைவில் நீடிப்பதற்கு அதில் காட்டப்பட்ட இரு உலகங்களே காரணம். ஒன்று காசி, இன்னொன்று பாலா காட்டிய ஏழாம் உலகம். அந்த உலகம் சினிமாவில் ’திறந்துகொள்ளும்’ காட்சியை இன்றுவரை தமிழ் சினிமாவின் அடுத்த தலைமுறை இயக்குநர் வியந்துரைப்பதுண்டு, ஒரு பாடமாகவே பயில்வதுமுண்டு.
அந்த காட்சி ஒரு நீண்ட ஒற்றை ‘ஷாட்’. தாண்டவன் அறிமுகமாகும் காட்சி. உயர்தர காரில் இருந்து அவன் இறங்கி திமிராகவும் அலட்சியமாகவும் நடந்து வருகிறான். அவனை முன்னாலிருந்து பார்த்தபடி காமிரா நகர்கிறது. அவன் நிலத்துக்கு அடியில் இறங்கிச் செல்லும் படிக்கட்டுகள் வழியாக உள்ளே சென்று இருண்ட ஆழத்திற்குள் நுழைகிறான். அவன் முகம் இருளில் மறைகிறது. இருளில் மூழ்கி மீண்டும் அவன் தோன்றும்போதும் அதே ஷாட் தொடர்கிறது. (உண்மையில் இன்னொரு ஷாட் அது. ஆனால் ஒரே ஷாட் என நம்பவைக்கும்படி கச்சிதமாக எடிட் செய்யப்பட்டுள்ளது) இப்போது காமிரா அவன் பின்னால் தொடர்ந்து செல்கிறது. தாண்டவனின் பார்வையில் ‘ஏழாம் உலகம்’ என்னும் Abyss விரிகிறது. சிதைந்த உடல்கள், கோர உருவங்கள், இருள், நிழல், ஊடே புகுந்த ஒளி… ஒரு நரகம்.
பாலா காட்டும் அவர் உருவகித்த ஏழாம் உலகம் இது. ஒரு சொல்கூட இல்லாமல் பாதாளம் அது என காட்டுகிறார். (அதலம் விதலம் முதலிய ஏழு கீழுலகங்களில் ஏழாவது உலகம் பாதாளம்.) அந்த ஏழாம் உலகிலேயே அன்பும் நட்பும் இருப்பதை வேகமாகச் செல்லும் காட்சிகளிலேயே காட்டுகிறார். நான் சிங்கப்பூரில் நான் -யாங் பல்கலையில் இருக்கையில் சினிமா பற்றி ஒரு வகுப்பை எடுக்க கோரினர். திரைக்கதை காட்சியாகும் விதம் பற்றி. அதில் இந்த ஷாட்டை காட்டி ஏழாம் உலகம் நாவல், அதற்கு நான் எழுதிய திரைவடிவம், அதற்கு பாலா அளித்த காட்சிவடிவம் ஆகியவற்றை சுட்டிக்காட்டி விளக்கினேன்.
பாலாவுக்கு தேசியவிருது கிடைக்கக் காரணமாக அமைந்த ஷாட் இது என்றே சொல்வார்கள். தொடர்ந்து அந்தப்படத்தை வேறொரு வகையில், கதையை கருத்தில்கொள்ளாமல் ஒரு காட்சியனுபவமாக மட்டும் பார்க்க இந்த ஷாட் வழி வகுத்தது. இந்த ஷாட் பற்றி மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ளன. ஆனால் நான் கடவுள் வெளியானபோது தமிழில் வெளிவந்த நூற்றுக்கும் மேற்பட்ட விமர்சனங்களில் ஒன்றில்கூட அந்த ஷாட், அல்லது அப்படத்தின் காட்சித்தன்மை பேசப்படவில்லை. அன்று தமிழில் எழுதிய பெரும்பாலும் அனைவருமே அந்தப்படத்தின் ‘கதை’ சரியில்லை என்றோ அதன் ‘அரசியல்’ சரியில்லை என்றோ மட்டுமே எழுதினர். அவ்வளவுதான் நம் ரசனை.
அந்த முதல் ஷாட்டுக்கு நிகரான பல ஷாட்டுகள் உள்ளன. ஏழாம் உலகின் மனிதர்களின் விதவிதமான சிரிப்புகள் வழியாக ஓடும் காட்சிகள். பல்வேறு தெய்வ உருவம் அணிந்த பிச்சைக்காரர்களின் திகைப்படைந்த முகங்கள் வழியாக ஓடும் ஒரு ஷாட். எவையும் இங்கே பேசப்பட்டதில்லை
நான் எப்போதுமே நினைப்பது ஒன்றுண்டு. தமிழ் சினிமா போல இந்த அளவுக்குக் கவனிக்கப்படும் ஓர் உலகம் இல்லை. ஆனால் தமிழ் சினிமாவை உண்மையில் கூர்ந்து கவனிப்பவர்கள், ரசிப்பவர்கள், அதை நினைவில் நிறுத்தி தலைமுறைகளுக்குக் கொண்டு செல்பவர்கள், சினிமாவுக்குள் இருப்பவர்கள்தான். அவர்கள்தான் சினிமாவின் உண்மையான ரசிகர்கள், விமர்சகள். சினிமா எடுப்பவர்களும் அவர்களையே உண்மையில் தங்கள் மெய்யான பார்வையாளர்களாக நினைத்து அவர்களின் கருத்துக்களையே பொருட்படுத்துகிறார்கள் என்பதை கவனித்துள்ளேன்.
ஏனென்றால் இங்கே வெளியே சினிமா பார்ப்பவர்கள் பலவகை. பெரும்பாலானவர்களுக்கு சினிமா கேளிக்கை மட்டுமே. சுவாரசியமாக இருக்கவேண்டும், அவ்வளவுதான். இன்னும் கொஞ்சபேருக்கு அது ஒருவகை பந்தயம். நடிகள் பந்தயக்குதிரைகள். அவர்கள் பார்ப்பது ஒரு போட்டி. சினிமா விமர்சனம் செய்பவர்களும் பலவகை. ஒரு சாரார், எதையாவது சொல்லி கூடுமானவரை அதிகம்பேரால் கவனிக்கப்படவேண்டும் என நினைப்பவர்கள். அவர்களுக்கு சினிமா ஒருவகை வம்பு மட்டுமே.
இன்னொரு சாரார், தங்களுடைய அரசியலை மட்டுமே சினிமாவில் தேடுபவர்கள். இன்னொரு சாரார், எங்கோ சினிமா பற்றி தெரிந்துகொண்ட சொந்தக் கருத்துக்களை சினிமா மேல் சுமத்துபவர்கள். சினிமா என்னும் கலையை மதித்து கூர்ந்து பார்த்து எழுதுவோர் அரிதினும் அரிது. கொண்டாடப்பட்ட, பெருவெற்றி அடைந்த படங்களுக்க் கூட சினிமாக்காரர்கள் மதிக்கும் ஒரு மதிப்புரை என்பது மிக அரிது.
நான் கடவுள் அடைந்த வணிகவெற்றி எனக்கு இந்நாள் வரை நீளும் திரைவாழ்க்கையை அளித்தது. என்னை பொருளியல் சுதந்திரம் கொண்டவனாக, நான் கொண்டிருந்த கனவுகளை நிறைவேற்றும் ஆற்றல் கொண்டவனாக ஆக்கியது. இன்று வந்தடைந்த இடத்திற்கு, செய்துள்ள பணிகளுக்கு அவ்வகையில் நான் கடவுள் காரணம். அதற்கு ஏழாம் உலகம் காரணம். ஏழாம் உலகத்திற்கு நான் திம்மப்பனுக்கு கடமைப்பட்டவன்.
ஏழாம் உலகம் வெளியாகி பதினைந்தாண்டுகளாகியும் இன்றும் ஓடிடி தளத்தில் மிக அதிகமாகப் பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக அது உள்ளது. பல இந்திய மொழிகளில் அதன் மொழிமாற்று வடிவங்கள் உள்ளன. அவ்வாறு அதைக் கொண்டுசென்றவை இளையராஜாவின் இரண்டு பாடல்கள். ‘மா கங்கா’ ‘ஓம் சிவோகம்’ இன்று காசிக்குச் சென்றால் அவற்றை கேட்காமல் நாம் திரும்பி வரமுடியாது.
சுசித்ரா மொழியாக்கத்தில் ஏழாம் உலகம் The Abyss என்ற பேரில் ஆங்கிலத்தில் ஜக்கர்நாட் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. அமேசானில் முன்பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நூலின் அட்டைப்படத்தை முதலில் பார்த்தபோதே அதற்கு அமைந்த மிகச்சிறந்த படம் என்னும் எண்ணம் உருவாகியது. யாசிக்கும் கைகள் போல் தோன்றுகின்றன. இருளை துழாவும் கைகளாகவும் தெரிகின்றன. சட்டென்று பார்க்கையில் தழல்போலவும் தோன்றுகின்றன.