விடுதலை, இசைவிழா உரை

விடுதலை படத்தின் இசைவெளியீட்டு விழா உரை. வழக்கம்போல ஓர் ஏழுநிமிட உரை. என் கதையின் கோனார் ஒரு வெள்ளந்தியான மனிதர். மார்க்ஸியம்கூட சரியாகத் தெரியாதவர். ஒரு சராசரிக்கும்கீழான தமிழாசிரியர். ஆனால் ஆத்மார்த்தமானவர். அவருடைய கசப்பும், நையாண்டியும் அசலானவை. குறிப்பாக என்ன என்ன என்று பேசும் அந்த நடை ஆசிரியர்களுக்குரியது.

இன்று யோசிக்கும்போது நிறைய வாசித்திருந்தவர்கள், நிறையப்பேசியவர்கள் எல்லாம் கொஞ்சம் சூதானமாக தப்பித்துக்கொண்டார்கள், வெள்ளந்திகள்தான் உண்மையாகவே நம்பி, வாழ்க்கையை பலிகொடுத்தார்கள் என்று தோன்றுகிறது.

கோவையில் இருந்து நாகர்கோயிலுக்கு 7 ஆம் தேதி காலை சென்று சேர்ந்தேன். அன்று மாலையே கிளம்பி சென்னைக்கு வந்தேன். வந்தே ஆகவேண்டிய விழா அல்ல.ஆனால் இளையராஜாவை பார்க்க விரும்பினேன். அவரை நேரில் பார்த்து நீண்டநாட்களாகிறது. கொரோனா சூழலில் நேரில் சென்று சந்திக்க பெருந்தயக்கம் இருந்தது.

நண்பர் சுகாவை நீண்டநாளுக்குப் பின் சந்தித்தேன். தந்தை நெல்லைக் கண்ணன் மறைவால் சோர்ந்திருக்கிறார். அவருக்கும் தந்தைக்குமான நெருக்கம் எனக்கும் தெரியும். கொஞ்சநாட்கள் புகைப்படம் எதையும் பார்க்கவேண்டாம் என்றேன். ‘ஆனால் எங்கு பார்த்தாலும் அவர் குரல் இருந்துகொண்டிருக்கிறதே’ என்றார். அது உண்மை. (நாளை நம் பிள்ளைகளுக்கும் இந்த சிக்கல் இருக்குமோ என நினைத்துக்கொண்டேன். எங்கும் நம் குரல் இருக்கிறது. எல்லாருமே ஆளுக்கு ஐம்பது வசை எழுதி வைத்திருக்கிறார்கள்)

சுகாவுடன் அந்த மாலை முழுக்கப் பேசிக்கொண்டிருந்தேன். வழக்கம்போல பாலு மகேந்திரா, ஜெயகாந்தன், இளையராஜா மூவரையும் பற்றி. சுகா அண்மையில் ஜெயகாந்தனைப்பற்றி ஆற்றிய உரை மிகச்சிறப்பான ஒன்று.

ராஜீவ் மேனனை கடல் காலகட்டத்திற்குப் பின் இப்போதுதான் சந்தித்தேன். அதேபோல அழகாக இருக்கிறார். பம்பாய் படத்தில் அரவிந்தசாமி கதாபாத்திரதுக்குப் பதிலாக முதலில் மணிரத்னத்தால் நடிக்க அழைக்கப்பட்டவர். இப்போது இப்படத்தில் நடிக்கிறார். அன்று நடிகரானால் ஒளிப்பதிவுக்கு எவரும் அழைக்கமாட்டார்களோ என்னும் தயக்கம் இருந்ததாகச் சொன்னார். அது ஒரு பெரும்பண்பு. புகழ், பணம் இரண்டையும் விட தன் உள்ளத்திற்கு உகந்ததை மட்டும் செய்ய விரும்புவது. அதன்பொருட்டு நிலைகொள்வது. ஒளிப்பதிவில் ராஜீவ் மேனனின் இடம் இன்றும் பிறர் எண்ணி வியக்கும் இடத்தில்தான்.

வெற்றிமாறன், விஜய் சேதுபதி, சூரி என அனைவரையும் சந்தித்தேன். ஓர் இனிய மாலை. ஆனால் மிக நீளமான ஒன்று. பதினொரு மணிக்குத்தான் அறைக்கு வந்தேன். இங்கிருந்து ஈரோடு.

முந்தைய கட்டுரைஅன்னம், வாசிப்பு – பிரபு மயிலாடுதுறை
அடுத்த கட்டுரைகூத்தபிரான்