பாமரர்களும் பேராசிரியர்களும்

அன்புள்ள ஜெ,

எழுத்தாளன், புனிதன், மனிதன் வாசித்தேன். மிகமிகமிக நேரடியான, விளக்கமான கட்டுரை. இலக்கியவாதியை அறிவுரைகூறி வழிநடத்துபவனாகவோ, சமூகத்தின் முன்னுதாரணமாகவோ கருதாதீர்கள் என்று சொல்கிறீர்கள். அவனுடைய நுண்ணுணர்வுதான் அவனை எழுத்தாளனாக்குகிறது, அது அவனை அலைக்கழிபவனும் நிலையற்றவனும் ஆக ஆக்குகிறது. ஆகவே அவன் சமூகமுன்னுதாரணமாக இருக்க முடியாது. இதுதான் நீங்கள் சொல்ல வருவது.

இலக்கியவாதிக்கு குற்றங்கள் செய்ய உரிமை உண்டு என்றோ, அவனை தண்டிக்கக்கூடாது என்றோ சொல்லவில்லை. மாறாக, தாராளமாக தண்டிக்கலாம் என்றே சொல்கிறீர்கள். ஆனால் இலக்கியவாதியின் வாழ்க்கையை வைத்து அவனுடைய இலக்கியத்தை நிராகரிக்க முடியாது. அவனுக்கு பண்பாட்டிலுள்ள இடத்தை மறுக்க முடியாது. ஒழுக்கம் சார்ந்த அளவுகோல்களைக் கொண்டு ஒட்டுமொத்தமாக இலக்கியத்தை மறுக்க முடியாது. இவ்வளவுதான் நீங்கள் சொல்வது. பாமரர்கள் எளிமையான ஒழுக்கவிதிகளைக் கொண்டு இலக்கியத்தையும் இலக்கியவாதியையும் வசைபாடி நிராகரிக்கும்போது இலக்கியமறிந்தோர் அதற்கு உடன்படக்கூடாது.

உலகமெங்கும் ஏற்கப்பட்டுள்ள மிக அடிப்படையான ஒரு கருத்து இது. இதைக்கூட இங்கே புரிந்துகொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள் அறிவுஜீவிகள். பிரபல நாளிதழில் ஒருவர் இலக்கியவாதிகளின் குற்றங்கள் மன்னிக்கப்படவேண்டும் என்று நீங்கள் சொல்வதாக எழுதுகிறார். ‘அமைப்பை எதிர்த்துப் போராடினால்தான் நுண்ணுணர்வு உண்டு என்று அர்த்தம், இல்லையென்றால் ஒழுங்காக இருக்கவேண்டும்’ என ஒரு பேராசிரியர் எழுதுகிறார்.

தலையிலடித்துக்கொண்டு கூச்சலிடலாம் போலிருக்கிறது. அவர்களின் நிலைபாட்டில் எனக்கு பிரச்சினை இல்லை. அப்படித்தான் இருப்பார்கள். ஆனால் அவர்களின் புரிதல்திறன்தான் திகைக்க வைக்கிறது. இந்த அளவுக்கு dumbheads நடுவிலா வாழ்கிறோம்?

அருண் ஶ்ரீனிவாஸ்

***

அன்புள்ள அருண்,

நீங்களுண்டு உங்கள் ஆராய்ச்சி உண்டு என இருக்கலாம், இந்தியாவை அங்கிருந்து திரும்பிப்பார்ப்பது அங்குமில்லாமல் இங்குமில்லாமல் செய்துவிடும். உண்மை, அத்தனை dumbheads நடுவில்தான் நாங்கள் வாழ்கிறோம். நீங்கள் மானசீகமாக இங்கேதான் வாழ்கிறீர்கள்.

நான் எழுதியது நீங்கள் எழுதியதேதான். மிக எளிமையானது. அடிப்படையானது. நான் அதை பொதுவான வாசகர்களுக்காக எழுதவில்லை. இந்த இணையதளம் இலக்கிய  – தத்துவ- மெய்யியல் வாசகர்களுக்காக மட்டும் நடத்தப்படுவது. அவர்களிடம் எனக்கு சொல்ல இருப்பதையே சொன்னேன்.

அதை எழுதியபோது நண்பர் கிருஷ்ணன் சொன்னார், அதற்கு கட்டணம் வைத்து இலக்கியவாதிகள் மட்டும் படிக்கும்படி செய்திருக்கவேண்டும் என்று. மற்றவர்கள் அதை படித்தால் பயனில்லை என்பது மட்டுமல்ல அது தேவையற்ற சிக்கல்களையும் உருவாக்கும். ஆனால் வேறுவழியில்லை, இது சமூக ஊடக உலகம்.

பாமரர் என நான் சொல்லும்போது பலவகையினரைச் சொல்கிறேன். தமிழ் ஹிந்து நாளிதழில் எழுதியவர் வாழ்நாளில் ஒரு புத்தகத்தைக்கூட கடைசி வரை படித்திருக்க வாய்ப்பில்லை. ஆங்கிலநாளிதழ் கட்டுரைகளில் இருந்து கட்டுரை தயாரிக்கும் ஆள். அவரெல்லாம் கருத்துச்சொல்லி இலக்கியத்தைத் தாக்கும் நிலை, இன்று கொஞ்சம்கொஞ்சமாக உருவாகி வரும் இலக்கிய வாசகர்களையும் வெளியே துரத்திவிடும் நிலை பற்றி மட்டுமே என் கவலை. நான் கட்டுரை எழுதியது அவரைப்போன்றவர்களை அஞ்சி மட்டுமே.

நமது பேராசிரியர்களைப் பொறுத்தவரை அவர்களால் என்ன வாசித்தாலும் இலக்கியத்தின் அழகியலை, பண்பாட்டு நுண்தளங்களை, மானுட அகத்தின் நுட்பங்களை மட்டும் கொஞ்சம்கூட புரிந்துகொள்ள முடியாது. (புரிந்தால் அவர்கள் ஏன் அந்தக் கோட்பாட்டுப் பீராய்தல்களைச் செய்யப்போகிறார்கள்)  அவர்களின் புரிதல் எப்போதுமே ஒரு புள்ளி முன்னாலேயே நின்றுவிடும். இன்னொருவகை பாமரர்.

பழைய ‘பிளாக்’ அச்சு முறையில் வண்ணங்களை உருவாக்க ஒரே படத்தை இரண்டு தடவை வெவ்வேறு வண்ணங்களில்  அச்சிடுவார்கள். நல்ல கம்பாசிட்டர் மிகச்சரியாக அவற்றை அமைக்கவில்லை என்றால் இரு அச்சுகளும் சற்று தள்ளி பதிந்து ஒரு வகை இரட்டைப்படம் உருவாகிவிடும். கலங்கிப்போன ஒரு படம். அதற்கு அன்று ‘புள்ளித்தப்பு’ என்பார்கள். பேராசிரியர்கள் இலக்கியம், கலை, மனித உள்ளம் , பண்பாடு பற்றி எது சொன்னாலும் அப்படித்தான் ஆகிறது. ஒரு புள்ளி எப்போதுமே தவறுதான். ஆனால் அவர்களின் அபாரமான தன்னம்பிக்கை, அதன் விளைவான இளக்காரம் அல்லது பரிவுப்பாவனை காரணமாக அவர்களிடம் நம்மால் பேசவே முடியாது.

நுண்ணுணர்வு என நாம் சொல்லும்போது அதை இப்பாமரர் எப்படி புரிந்துகொள்கிறார்கள் என்பது திகைப்பூட்டுவதுதான். நுண்ணுணர்வு உடையவர்கள் எல்லாம் கலகக்காரர்கள் அல்லது குடிகாரர்கள் அல்லது பித்தர்கள் அல்ல. நுண்ணுணர்வு என்பது ஒரே வகையானதும் அல்ல.

நுண்ணுணர்வின் விளைவான தனிவாழ்க்கையின் அலைக்கழிப்பை முற்றிலும் கட்டுக்குள் நிறுத்திக்கொண்டு இயல்பான புறவாழ்க்கை வாழ்ந்தவர்கள் உண்டு- டி.எஸ்.எலியட் போல. மிக அசாதாரணமான நுண்ணுணர்வுடன்  மிக உயர்ந்த அரசுப்பணிகளில் இருந்தவகள் பலநூறுபேர் உண்டு–  மகாகவி கதே முதல் ஆக்டோவியோ பாஸ் வரை. ஆன்மிக, கல்வி அமைப்புகளை உருவாக்கியவர்கள் உண்டு- தல்ஸ்தோய் போல, தாகூர் போல. அரசை எதிர்த்துப் போராடிய பெருங்கலைஞர்கள் உண்டு- ஷோல்ஷெனித்ஸின் போல. அதே அரசுடன் சமரசமாகப்போன பெருங்கலைஞர்களும் உண்டு- மைக்கேல் ஷோலக்கோவ் போல.

நுண்ணுணர்வால் புரட்சியாளர்களாகி சிறையில், போரில் மாண்டவர்கள் உண்டு-கிறிஸ்டோபர் கால்டுவெல் போல. தற்கொலை செய்துகொண்டவர்கள் உண்டு-  மயகோவ்ஸ்கி போல.  குடிகாரர்களாகி தெருவில் மாண்டவர்களும் உண்டு- ஜி.நாகராஜன் போல. அதேசமயம் எஸ்ரா பவுண்ட் போல, போர்ஹே போல  ஃபாசிசத்துக்கு ஆதரவாக நின்றவர்களும் உண்டு. இதெல்லாம் எளிமையான புறவயமான அடையாளங்களைக் கொண்டு வகுத்துரைக்கப்படக் கூடியவை அல்ல.

முசோலினியை ஆதரித்தார் என்பதற்காக எஸ்ரா பவுண்டின் இடமோ, சிறுவர்களிடம் ஓரினச்சேர்க்கை உறவுகொண்டிருந்தார் என்பதனால் ழீன் ழெனேயின் இடமோ மறுக்கப்பட்டதில்லை. அரசாங்க தூதராக பதவி வகித்தார் என்பதனால் ஆக்டோவியோ பாஸின் இடமும் மறுக்கப்படத்தக்கது அல்ல. நான் சொல்ல வருவது இதுவே.

ஃபாசிஸ்டு ஆட்சியை ஆதரித்த எஸ்ரா பவுண்டின் வாழ்க்கையிலும் அறமே இன்றி கைவிடப்பட்ட காதலிகளின் பட்டியல் உள்ளது. மாபெரும் புரட்சிக்காரரான பாப்லோ நெரூதாவின் வாழ்க்கையிலும் அதேபோல் அறமே இன்றி கைவிடப்பட்ட காதலிகளின் பட்டியல் உள்ளது. மாமன்னருக்கு அமைச்சராக இருந்த மகாகவி கதேயின் வாழ்க்கையிலும் மாபெரும் அமைப்புகளை உருவாக்கிய தாகூர் வாழ்க்கையிலும் ஆன்மிகவாதியாக மலர்ந்த தல்ஸ்தோய் வாழ்க்கையிலும் அவ்வாறு ஒரு பட்டியல் உள்ளது. நம்மூர் பாமரர்களின் பொது அறப்பார்வை, பேராசிரியர்களின் அதைவிடப் பாமரத்தனமான பொதுப்பார்வை கொண்டு அதை புரிந்துகொள்ள முடியாது.

நுண்ணுணர்வோ கலகமோ அந்த ஆசிரியனின் வாழ்க்கையைக் கொண்டு மதிப்பிடத்தக்கவை அல்ல. உதாரணமாக போகன் சங்கர். அவருடைய வாழ்க்கை மிகச் சாதாரணமான ஓர் அரசூழியருக்குரியது, அவருடைய அன்றாடமும் அவ்வாறே. ஆனால் அவருடைய புனைகதைகளில்கூட இல்லாத ஒரு மீறல், தத்துவார்த்தமான ஒரு கலகம், ஒரு முழுநிராகரிப்பு நோக்கு கவிதைகளில் உள்ளது. கவிதைகளில் மட்டும் அவர் ஒரு முழுக்கலகக்காரர். அதைப் புரிந்துகொள்பவனே வாசகன் என்பவன். புள்ளித்தப்புகள் சென்றடையமுடியாத இடம் அது. ஏன் அவர் கவிதையில் உள்ள அந்த  திமிறல் கதைகளில் இல்லை என்பதை விளக்கமுடியாது, கூடாது என்னும் நுண்ணுணர்வு உடையவனே அழகியல் விமர்சகன்.

இறுதியாக, நான் சொல்ல வந்தது இது. என் வாழ்க்கையை நான் முழுமையாகவே ஒழுக்க நெறிகளின்படியே அமைத்துள்ளேன். புறவாழ்க்கையை முற்றிலும் ஒழுங்குக்கு உட்படுத்தி, சிதறல்கள் அனைத்தையும் ஒழுங்கமைத்து என் எழுத்தில் மட்டுமே என்னைக் குவிக்கிறேன். நான் எழுதும் படைப்புகள் அத்தகைய தவத்தை கோருபவை.  என் இலக்குகள், நான் ஆற்றும் பணிகள் மிகப்பெரியவை. அவற்றை நோக்கிச் செல்கிறேன். எனக்கு நித்ய சைதன்ய யதி போல் ஓர் ஆசிரியர் அமைந்ததும், அவர் எனக்கு கற்றுத்தந்த அகப்பயிற்சிகளும்  அதற்கு உதவுகின்றன. என் பித்துகளை என் ஆட்சிக்குள் நிறுத்துகிறேன்.

அவ்வாறன்றி, சிதறல்கள் வழியாகவே கலையை நிகழ்த்தும் பெருங்கலைஞர்கள் உண்டு. அவர்களின் வாழ்க்கையை வைத்து அவர்களின் கலை குறைத்து மதிப்பிடப்படலாகாது. குற்றமெனில் அரசு தண்டிக்கட்டும். ஆனால் அதை முகாந்திரமாகக் கொண்டு அக்கலைஞனை, அக்கலையை சிறுமைசெய்ய எவருக்கும் உரிமை இல்லை.

அதைச் சொல்லும் தகுதியை நான் அடைவது, என் தனிவாழ்க்கையைக் கொண்டு என்னை எவரும்  எவ்வகையிலும் உயர்வாக மதிப்பிடவும் வேண்டாம் என்று நான் பொதுவெளியில் ஆணித்தரமாகச்  சொல்லும்போது மட்டுமே.

ஜெ

முந்தைய கட்டுரைஎல்.கிருஷ்ணன்
அடுத்த கட்டுரைPlumule -கடிதம்