தியான வகுப்புகள் எதற்காக?

ஒரு தியான வகுப்பு– அறிவிப்பு

அன்புள்ள ஜெ,

தமிழகத்தில் இன்று மிக அதிகமாக நிகழ்பவை தியான வகுப்புகள். வெவ்வெறு வகைகளில், வெவ்வேறு இடங்களில் நடைபெறுகின்றன. இன்னுமொன்றை நீங்கள் ஒருங்கிணைக்கவேண்டுமா? பதிலுக்கு வேறு பயிற்சிமுறைகளை ஒருங்கிணைக்கலாமே? (மேலும் இதற்கான கட்டணங்களும் எல்லாருக்கும் உரியவை அல்ல)

ராகவேந்திரன் எம்

அன்புள்ள ராகவேந்திரன்,

இப்பயிற்சி வகுப்புகளை ஒருங்கிணைப்பதன் காரணம் ஒன்றே. நான் எழுத்து வழியாக சில கருத்துக்களை தொடர்புபடுத்துகிறேன். என் வழிகாட்டுதல் வெறும் சிந்தனைக்காக அல்ல, செயல்பாடுகளுக்காகவும்தான். இயல்பாகச் சில ஒருங்கிணைக்கப்படாத சந்திப்புகள் நிகழ்கின்றன. அங்கே பல விஷயங்கள் பேசப்படுகின்றன. இலக்கியம், தத்துவம், இந்தியக்கலை, பண்பாடு, வாசிப்புப்பயிற்சி, அகப்பயிற்சி என பல தளங்களில் அவ்வுரையாடல்கள் நடைபெற்றன.

அப்போதுதான் நண்பர் கிருஷ்ணன் இப்படி முறையாக ஒருங்கிணைத்து அவற்றை செய்யலாமே என்ற ஆலோசனையைச் சொன்னார். எழுத்து என்றுமுள்ள ஆவணம், புறவயமானது. ஆனால் அதில் உரையாடல் இல்லை. நேரடி உரையாடல், நேரடிக் கற்பித்தல் ஒருபடி மேலானது. ஏனென்றால் கேட்பவர், கற்பவர் கண்முன் அமர்ந்திருக்கிறார். அவரை உணர்ந்து அவருக்கான உரையாடலையும் கற்பித்தலையும் செய்யமுடியும். பிழைகளை உடனே களைய முடியும். வழிகாட்டமுடியும். வளர்ச்சியை கண்காணிக்க முடியும்.

ஆனால் ஒருங்கிணைக்கப்படாத உரையாடல்கள் பெரும்பாலும் வீணாகின்றன. இன்ன தலைப்பில், இன்ன முறையில் உரையாடல் நிகழும் என்னும் அறிவிப்புடன், அதற்கான திட்டத்துடன் அமையும் கற்பித்தல் தேவை என்று கிருஷ்ணன் சொன்னார். அந்த வகையான திட்டமிட்ட சந்திப்புகளுக்கு ஒரு தொடர்ச்சியும் இருக்கமுடியும். சம்பந்தப்பட்டவர்கள் நம்மிடம் தொடர் உரையாடலில் இருக்கமுடியும்.

ஆகவேதான் புதுவாசகர் சந்திப்பை 2016ல் ஆரம்பித்தோம். அவை மிகமிக வெற்றிகரமானவையாக இருந்தன. அவற்றில் பங்குபெற்ற பலர் இன்று எழுத்தாளர்கள், கட்டுரையாளர்கள். மிகச்சிறந்த வாசகர்களும் களப்பணியாளர்களும்கூட உருவாகி வந்தனர். விஷ்ணுபுரம் அமைப்பே இளைஞர்களால் நிறைந்தது.

ஆகவே இன்னும் சிலர் உதவியுடன் தொடர்ச்சியாக அமர்வுகளை ஒருங்கிணைக்கிறோம். இலக்கியம், தத்துவம், கலைகள் ஆகியவற்றில் கல்வியும் உரைப்பயிற்சி, வாசிப்புப் பயிற்சி ஆகியவையும் அளிக்கப்படுகின்றன. இன்னும் அவை தொடர்ந்து நிகழும். எங்கள் நோக்கம் மேலோட்டமான கவனத்திற்கு அப்பால் ஏதேனும் களத்தில் தொடர்ச்சியான முறையான பயிற்சிகள் பெற்ற ஒரு வட்டத்தை உருவாக்குதல். மேலைத் தத்துவம், கல்வெட்டு வாசிப்பு, நாட்டாரியலாய்வு சார்ந்தும் வகுப்புகளை ஒருங்கிணைக்கும் எண்ணம் உண்டு.

ஆனால் கூடவே மேலும் சில பயிற்சிகளும் தேவை என உணர்ந்தோம். குறிப்பாக அகப்பயிற்சிகள். தங்களை செயலில் தொகுத்துக்கொள்வது இன்றைய வாழ்க்கையின் மிகப்பெரிய சவால். இன்றைய வாழ்க்கை நம்மைச் சிதறச் செய்தபடியே இருக்கிறது. நம்மை மிதமிஞ்சி அலைக்கழியச் செய்கிறது. ஆகவே உடல்நலம் குன்றி, உளக்குவிப்பின்றி அவதிப்படுகிறோம்

எனக்கு அதை எதிர்கொள்ள யோகப்பயிற்சிகள் உதவியுள்ளன. முதுகுவலி முதலியவற்றில் இருந்து அவ்வாறே விடுபட்டேன். உளப்பயிற்சிகளை என் ஆசிரிய மரபில் இருந்து கற்றேன். அவற்றை பொதுவாகப் பரிந்துரைத்தும் வந்தேன். பழைய கட்டுரைகளைக் காணலாம். ஆனால் இவையெல்லாம் மதச்சடங்குகள் அல்ல. நம்பிக்கைசார்ந்தவை அல்ல. பூசை வழிபாடுகள் அல்ல. நம்மை நாமே பயிற்றுவிக்கும் உடல்- உளப்பயிற்சிகள் மட்டுமே.

ஆனால் பொதுவாக இங்கே புகழ்பெற்றிருக்கும் தியான- யோக முறைகளில் இரண்டு குறைபாடுகளைக் கண்டேன்.

அ. அவை பெருந்திரளான மக்களுக்கு அளிக்கப்படுகின்றன. ஆகவே அவற்றை நடத்துபவர்களால் தனிப்பட்ட முறையிலான ஆசிரிய – மாணவ தொடர்பை உருவாக்கிக் கொள்ள முடிவதில்லை. அகப்பயிற்சிகளில் அந்த தொடர்பும் கண்காணிப்பும் மிக முக்கியமானது.

ஆ. அவை சராசரியினருக்காக வடிவமைக்கப்பட்டவை. ஆகவே பெரும்பாலும் குறைந்த அறிவுத்தளம் சார்ந்த விளக்கங்கள், மிக எளிய நம்பிக்கைகளுடன் இணைந்து சொல்லிக்கொடுக்கப்படுகின்றன. அவை வாசிக்கும் வழக்கம் கொண்ட, சிந்திக்கும் வழக்கம் கொண்டவர்களை அன்னியப்படுத்துகின்றன. கலையிலக்கிய ஆர்வம் கொண்டவர்களை அவற்றை அறிந்த ஒருவரே பயிற்றுவிக்க முடியும். அறிவுத்தளமும் கலைத்தளமும் செயல்படுவது எப்படி என அவர் அறிந்திருக்கவேண்டும். சாரு நிவேதிதாவுக்கு யோகம் சொல்லிக்கொடுக்க குருஜி சௌந்தரால்தான் இயலும். அவருக்கே சாரு எவர் என புரியும். பொதுவான யோகப்பயிற்சியாளர்களால் இயலாது. அவர்கள் கற்பிப்பவை அதனாலேயே பயனற்றவை.

ஆகவே எனக்கு முக்கியமானவர்கள் என்று படுகிற, நான் மதிக்கிறவர்களைக் கொண்டு பயிற்சி முகாம்களை நடத்தலாமே என நண்பர்கள் முடிவுசெய்தோம். இவை குறைந்த எண்ணிக்கையில் (அதிகபட்சம் 30 பேர்) மட்டும் கலந்துகொள்ளும் நிகழ்வுகள். இவற்றில் முக்கியமான அம்சமே நேரடியான தொடர்பும் உரையாடலும் வழிகாட்டலும்தான். இவை இன்றைய தலைமுறைக்கு உதவியானவை என நான் நினைக்கிறேன்.

ஒரு வாய்ப்பை அளிப்பதுதான் நோக்கம். அவை மிகமிகப் பயனுள்ளவையாக உள்ளன என்றும், பலர் வாழ்க்கையையே மாற்றியமைத்துள்ளன என்றும் தெரியவருகிறது. அதுவே இலக்கு.

ஜெ

பிகு: கட்டணம் இன்றி இவற்றை நடத்த முடியாது. உணவு உறைவிடம் ஏற்பாடு செய்யவேண்டும். மிகக்குறைந்த செலவிலேயே ஒருங்கிணைக்கிறோம். கட்டணம் கட்டமுடியாதவர்களுக்கு நிதிப்புரவலர்களைக் கண்டடைகிறோம். மாணவர்களுக்காக நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கையில் புரவலர்களை கண்டடைகிறோம். ஆனால் எங்கள் நோக்கம் பரவலாக ‘அனைவரையும்’ சென்றடைவது அல்ல. கட்டணம் கட்டி இதற்கென்றே வந்து அமர்பவர்களிடம் இவற்றை கொண்டுசென்றால்தான் பயன் உண்டு. அவர்களே நீடிப்பார்கள். குறைந்தபட்ச ஆர்வமும் தீவிரமும் கொண்டவர்கள் மட்டுமே எங்களுக்குத் தேவை.

முந்தைய கட்டுரைசுதா
அடுத்த கட்டுரைமருத்துவர் ஜீவா பசுமை விருது விழா