எழுத்தாளன், புனிதன், மனிதன்

’எழுத்தாளனா இருக்கிறதுக்கு முன்னாடி முதல்ல மனுஷனா இருடா’ என்று எனக்கு மின்னஞ்சல்கள் வந்துகொண்டிருக்கின்றன. எழுதும் பலருக்கு கோணங்கி என்பது வேறு ஒருவர் என்று தெரியவில்லை. பலர் இணையச் சில்லறைகள் வெட்டிச் சுழற்சிக்கு விட்ட ஒரு பத்தியை மட்டும் படித்திருக்கிறார்கள்.

எனக்கு அதிர்ச்சி, இவ்வாறு கடும் கண்டனங்கள் தெரிவித்திருக்கும் பலர் மிகப்பெரிய பாலியல் ஊழல்காரர்கள் என தெரியவந்தது. உண்மையில் யார் அதிகக் கூச்சலிடுகிறார்களோ அவர்கள்தான் மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டிய கழுதைப்புலிகள். (அது இந்த உலகத்திலேயே எனக்கு மட்டும்தான் கடைசியாகத் தெரிகிறது). பல பெண்கள் ஆதாரங்களுடன் அனுப்பிய தனி மின்னஞ்சல்கள் ஒரு மாதிரி படபடப்பையே கிளப்பிவிட்டன. எல்லாம் இணைய ஆளுமைகள், அரசியல் ஆளுமைகள்.

அந்த வம்புகளுக்குள் செல்ல விரும்பவில்லை. இது இன்று என் மகள் வயதிலிருக்கும் பெண்களுக்கு ஓர் எச்சரிக்கையை அளிக்கவேண்டும். அதேசமயம் அவர்கள் இலக்கியத்தில் நுழைய, வெல்ல, இலக்கியத்தை வழிநடத்துபவர்களாக நாளை மலர உளத்தடையை அளிப்பதாக இருக்கலாகாது. எந்த தயக்கமும் அவர்களுக்கு வந்துவிடலாகாது. இப்போதே குடும்பம் கணவன் என்னும் பல தடைகளை கடந்தே அவர்கள் செயல்பட முடிகிறது. இந்த இணையச்சல்லிகள் இதை சந்தர்ப்பமாகக் கொண்டு ஒட்டுமொத்த இலக்கியம் மீதும் வீசும் சேறு அவர்களை தடைசெய்துவிடக்கூடாது.

(இதற்கும் வசையை ஆரம்பிப்பவர்கள் ஆரம்பிக்கலாம். அவர்களெல்லாம் அரசியல் சரிநிலைகளை காலை, மாலை, இரவு உணவாக உட்கொள்ளும் மனிதப்புனிதர்கள். ஒழுக்கக் குன்றேறிய தூயர்கள். இருபத்துநான்கு மணிநேர புரட்சியாளர்கள். அறக்களப்போராளிகள். அனைத்துமறிந்த மெய்ஞானிகள். அவர்களுக்கு ஒட்டுமொத்தமாக ஒரு நடுகல் வரலாற்றில் தேவை. ஒப்புக்கொள்கிறேன்.)

*

இந்தச் சந்தர்ப்பத்தில் இலக்கியமறியாத பாமரர்களும் இலக்கியத்தை உள்ளூர அஞ்சும் இலக்கிய விரோதிகளும் எழுப்பும் வினாக்களை மீண்டும் எதிர்கொள்கிறேன். இந்த தளத்திலேயே பலமுறை ஏற்கனவே எழுதியதுதான்.

எழுத்தாளன் என்ன புனிதனா? எழுத்தாளனுக்கும் சைக்கிள் ரிப்பேர் செய்பவனுக்கும் என்ன வேறுபாடு? எழுத்தாளர்களை ஏன்  கொண்டாட வேண்டும்? எழுத்தாளர்களுக்குச் சலுகை வேண்டுமா? எழுத்தாளர்கள் நல்லவர்களாக இருக்கவேண்டாமா? எழுத்தாளர்கள் சமூகத்திற்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டாமா? எழுத்தாளர்கள் சமூகத்தின் நல்லாசிரியர்கள் அல்லவா? இலக்கியம் ஒழுக்கத்தை போதிக்கவேண்டாமா?

இதெல்லாம் அலையலையாக வரும் கேள்விகள். இவற்றுக்காக சொன்ன பழைய பதில்களை மீண்டும் தொகுத்துச் சொல்கிறேன். இலக்கியப் பாமரர், இலக்கிய விரோதிகள் இரு சாராரும் இவற்றை வாசிக்கப்போவதில்லை. இதில் ஒரு நான்குவரியை பீராய்ந்து மிகைக்கொந்தளிப்பு அடைந்து ‘நானெல்லாம் பரம யோக்கியனாக்கும் தெரியுமா’ என காட்டிக்கொள்வார்கள். நான் எழுதுவது இலக்கிய வாசிப்பில் நுழையும் இளம் வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும்தான்.

எழுத்தாளன் சமூகத்தின் ’நுண்ணுணர்வு மிக்க’ ஓர் உறுப்பு. சமூகத்தின் ’மிகச்சிறந்த உறுப்பு’ அல்ல. நுண்ணுணர்வு (Sensibility) தான் அவனுடைய தகுதியும் சிறப்பியல்புமே ஒழிய நற்குண முழுமை (perfectness) அல்ல. வரலாறெங்குமே பெருங்கலைஞர்கள், கவிஞர்கள் பிழைபட்ட ஆளுமை கொண்டவர்களாகவே சித்தரிக்கப்பட்டுள்ளனர். கம்பன் தாசித்தெருவில் அலைந்தவன், ஆணவம் மிக்கவன் என்றே கதைகள் சொல்கின்றன. கம்பராமாயணம் தமிழிலக்கியத்தின் உச்சம், தமிழ்ப்பண்பாட்டின் சாரம்.இது முரண்பாடு அல்ல. கம்பன் அத்தனை நுண்ணுணர்வு கொண்டவனாக இருந்தமையால்தான் கம்பராமாயணம் இயல்வதாகியது.

மிகச்சரியான  மனிதர்களை கூர்ந்து கவனியுங்கள். அவர்களிடமிருப்பது உறுதி. அந்த உறுதி அவர்களின் ஆளுமையின் சாரம். உடலுக்குள் இரும்பாலான எலும்புகள் இருப்பதைப் போல. அவர்களின் நம்பிக்கைகள், கொள்கைகள் அனைத்திலும் அந்த உறுதி இருக்கும். சொல், செயல் அனைத்திலும் உறுதி இருக்கும். அவர்களாலேயே வாழ்க்கையை ஒரு நோன்பென நிகழ்த்த முடியும். அவர்களே சமூகத்தின் முன்னுதாரணங்கள். சமூகத்தின் இலட்சிய வடிவங்கள். சமூகம் உருவாக்கிய மிகச்சிறந்த ஆளுமைகள்.

அவர்கள் பலவகை. யானைடாக்டர் கிருஷ்ணமூர்த்தி போல, ஈரோடு டாக்டர் ஜீவானந்தம் போல, கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் போல சேவைக்களத்தில் செயல்பட்டவர்களாக இருக்கலாம். நித்ய சைதன்ய யதி போல ஆன்மிகத்தில் ஈடுபட்டவர்களாக இருக்கலாம். கெத்தேல் சாகிப் போல தங்கள் தொழிலையே யோகம் எனக் கொண்டவர்களாகவும் இருக்கலாம். நான் மீண்டும் மீண்டும் சொல்வது இதையே, எழுத்தாளன் அவர்களில் ஒருவன் அல்ல. அவர்களைப் பற்றி பாடி, பேசி, எழுதி வரலாற்றில் நிறுத்தவேண்டியவன் மட்டும்தான் எழுத்தாளன். அந்த இடமே அவனுக்குரியது.

(இதில் அரசியல் திருவுருக்கள் பெரும்பாலும் கிடையாது. அவர்களைப் பற்றி திட்டமிட்டு, பணம் செலவிட்டு உருவாக்கப்படும் போற்றிப்பாடடிகளும் இலக்கியம் அல்ல. எனக்கு உயர்மட்டம் மிக நன்றாக தெரியும். அங்கே என்னென்ன எப்படியெப்படி நடைபெறுகின்றன என்றும் தெரியும். இங்கே அரசியல்சரிகளுக்காக கொந்தளிப்பவர்கள் எவருக்கும் அரசியல் ஆளுமைகளின் சரிவுகளும் சிக்கல்களும் தெரிந்தாலும் பொருட்டாக தோன்றாது. ஏனென்றால் அவர்களிடமிருப்பது மிக எளிய அதிகார வழிபாடு மட்டுமே. அரசர்களின் பிறழ்வுகளைக் கொண்டாடிப் பழகியவர்கள் நாம்)

நான் முன்னரே சொன்ன அந்தச் சான்றோரின் எல்லைகள் எவை? மூன்று, சொல்லலாம். ஒன்று, அவர்களால் இன்னொருவராக ஆக முடியாது. அவர்களின் உறுதியே அதற்குத் தடை. இரண்டு, அவர்களால் தங்கள் பணிக்களத்துக்கு அப்பால் இன்னொரு களத்திற்குள் நுழைய முடியாது. அவர்கள் தங்கள் செயற்களத்தில் கட்டுண்டவர்கள். மூன்றாவதாக அவர்களின் இலட்சியவாதம். அது நன்னம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. அது அவர்களைச் செயல்புரியச் செய்கிறது. அது ஒரு கனவு. அது அவர்களை மனிதர்களின் இருண்ட பக்கங்களை, வரலாற்றின் சிடுக்குகளை பார்க்கமுடியாமலாக்குகிறது.

ஆகவே அவர்களால் இலக்கியம் எழுத முடியாது. மகத்தான அனுபவங்கள் கொண்டவர்களாக இருந்தும்கூட அவர்களின் தன்வரலாறுகளே எளிமையான ஆவணங்களாக இருப்பது அதனால்தான். அவர்களில் சிலர் புனைவும் எழுதியுள்ளனர், பெற்ற அம்மை தாங்கமுடியாது. அவர்களுக்கு அவர்களின் செயல்வட்டத்தை விட்டு எழுந்து மொத்தச் சமூகத்தையும் பார்க்க இயலாது. அவர்களின் எழுத்துக்களெல்லாமே ஒருவகை இனிய பொய்கள் – அவற்றில் கனவுகளும் நம்பிக்கைகளுமே உள்ளன.

இலக்கியவாதி மாமனிதர்களிடமிருந்து வேறுபடுவது தன் நுண்ணுணர்வால்தான். அந்த நுண்ணுணர்வு முதலில் அவனிடமிருந்து இல்லாமலாக்குவது அவனுடைய உறுதியைத்தான். அவனுடைய ஆளுமையில் நிலைத்தன்மையை அவன் அடைய முடியாது. அவனுடைய நம்பிக்கைகள், கொள்கைகள், உணர்ச்சிகள் எதிலும் நிலைத்தன்மையும் உறுதியும் உருவாவதே இல்லை. அவனுக்குள் அந்த இரும்பு இல்லை. ஆகவே வாழ்வை ஒரு நோன்பாக அவனால் நிகழ்த்த முடியாது. எதையும் முழுமூச்சாகக் கடைப்பிடிக்க முடியாது. எல்லா பக்கமும் சரிசமமாக வளர்பவனாக இருக்க முடியாது.

அந்த உறுதியின்மையால்தான் எழுத்தாளன் உலகியலில் பலவீனமானவனாக இருக்கிறான். அதனால்தான் அவனால் வணிகமோ தொழிலோ செய்யமுடியவில்லை. அவன் ஒரு படி குறைவான குடிமைப் பண்பு கொண்டவனாக இருக்கிறான். அவனால் நல்ல கணவனோ தந்தையோ ஆக இருக்க முடிவதில்லை. அதனால்தான் அவன் ஆளுமைப் பிறழ்வுகள் கொண்டவனாக இருக்கிறான். அவன் ஒரு சமூகம் உருவாக்கும் சிறந்த முன்னுதாரண மனிதன் அல்ல. அவன் சராசரி மனிதன்கூட அல்ல. அவன் சமூகத்தின் வழிபாட்டுப் பிம்பம் அல்ல.

நுண்ணுணர்வு என்பது அளவுக்கு மிஞ்சினால் ஒரு நோய்க்கூறு. அது ஒருவனை இயல்பாக வாழ விடுவதில்லை. மிகக்குறைவான காலம் ஏதேனும் ஒரு நுண்ணுணர்வு மிதமிஞ்சியிருக்கும் அனுபவம் அனைவருக்கும் இருக்கும். ஒரு தொழில் நசித்து அதில் இருந்து மீண்டுவரும் காலகட்டத்தில் நீங்கள் நுண்ணுணர்வு மிக்கவராக இருந்திருக்கலாம். உலகமே உங்களை ஏளனத்துடன் பார்க்கிறது என நினைத்திருப்பீர்கள். ஓர் அவமானம், ஒரு தோல்வி கொஞ்சநாள் உங்களை நுண்ணுணர்வு மிக்கவர்களாக ஆக்கியிருக்கும். தீவிரமான காதல் சில காலம் அப்படி ஆக்கும். அப்போது எப்படி இருந்தீர்கள்? நிலையழிந்து, அலைபாய்ந்து, கொந்தளித்தீர்கள் அல்லவா? அப்படி வாழ்நாள் முழுக்க இருக்க விதிக்கப்பட்டவன் எழுத்தாளன்.

இணையத்தில் எழுந்த பாமரக்குரல்களை தொகுத்து அனுப்பியிருந்தனர். ‘கடைக்குப்போய் கறிகாய் வாங்க தெரியாதவர்கள் எழுத்தாளர்கள். அவர்கள் எழுதுவதற்கெல்லாம் என்ன மதிப்பு?’ என்று ஒரு குரல். “அரசியல் நிலைபாடு இல்லாதவனெல்லாம் என்ன எழுதினாலும் அவனை ஏன் மதிக்கவேண்டும்?” “ஒழுக்கமானவனே நல்ல எழுத்தாளன்” இப்படி பல கருத்துக்கள். நியூட்டனும் ஐன்ஸ்டீனும் கடைக்குப்போய் கறிகாய் வாங்கத் தெரியாதவர்களாகத்தான் இருந்தனர். தன் சொந்த வீட்டுக்கு திரும்பி வர இன்னொருவரின் உதவியை நாடுபவர்களாக இருந்தனர். இங்கே அவர்கள் வாழ்ந்திருந்தால் இந்த பாமரக்கும்பலால் மனநோய் விடுதிக்கு அனுப்பப்பட்டிருப்பார்கள்.

(நடுவே ஒரு குரல். இலக்கியமறியாதவனை பாமரன் என்று சொல்லக்கூடாது என்று. இலக்கியமறியாதவன் இலக்கியப் பாமரனேதான். முற்றிலும் தெரியாதவன் அந்த அளவுக்கு பாமரன். பாமரனை பாமரன் என்று சொல்வதுதான் அந்தப் பாமரத்தனத்தை அடையாளம் கண்டுகொள்ள, அடுத்த தலைமுறையாவது அதிலிருந்து மீள ஒரே வழி)

இலக்கியவாதி மூன்று புள்ளிகளில் மாமனிதர்களிடமிருந்து வேறுபடுகிறான். தன் நுண்ணுணர்வால், கற்பனையால் அவன் இன்னொரு வாழ்க்கைக்குள் செல்லமுடியும். யானை டாக்டராக எழுத்தாளன் ஆகமுடியாது, ஆனால் யானைடாக்டராக தன் புனைவுலகில் வாழமுடியும், அதன் வழியாக யானைடாக்டரை மொழியில் நிகழ்த்திக்காட்டி வரலாற்றில் நிலைநிறுத்தமுடியும். காந்தியாகவும் ஐன்ஸ்டீன் ஆகவும் தன்னை ஆக்கிக்கொண்டு அவர்களின் அகவுலகை புனைவில் நிகழ்த்த முடியும். அவன் யோகி அல்ல. ஆனால் ராமகிருஷ்ண பரமஹம்சராகவும் தலாய் லாமாவாகவும்கூட அவனால் தன் புனைவுலகில் வாழமுடியும். அதனால்தான் எழுத்தாளன் சாமானியன் அல்ல என்கிறோம். சாமானியனால் இன்னொருவனாக ஆகவே முடியாது.

எழுத்தாளன் அவனுக்குரிய நுண்ணுணர்வால் ஒரு சமூகத்தின் மிகச்சரியான சராசரியாகவும் தன்னை உணரமுடியும். ஒரு பாமரனின் வாழ்க்கையை அப்பாமரனே உணராத நுட்பத்துடன் எழுத்தாளன் எழுதிவிடமுடியும். அதனாலேயே ஒட்டுமொத்த வரலாற்றின் சித்திரத்தையும் அவனால் காட்டமுடியும். பண்பாடுகளின் முழுமையான சித்திரம், வரலாற்றுத்தருணங்களின் முழுமையான சித்திரம் எழுத்தாளர்களாலேயே உருவாக்கப்பட்டுள்ளது.

எழுத்தாளன் ஒளியை நோக்கி எழும் ஆற்றல் கொண்டவன். இந்த மானுடச் சமூகம் இதுவரை உருவாக்கிய எல்லா ஆன்மிக உச்சங்களும், இலட்சிய உச்சங்களும் இலக்கியத்திலேயே அறியக்கிடைக்கின்றன. ஆனால் அவனால் இருளையும் பார்க்கமுடியும். அத்தனை மானுடக்கீழ்மையையும் இலக்கியம்தான் பதிவுசெய்துள்ளது. அந்த இருளிலிருந்து எழும் ஒளியையே அது முன்வைக்கிறது. தமிழ் இலட்சியவாதத்தின் உச்சம் கம்பராமாயணம், ஆனால் அதன் பெரும்பகுதி போர்வெறியையும் அழிவையும் சித்தரிக்கிறது.

உண்மை, எழுத்தாளன் முன்னுதாரண மனிதன் அல்ல. ஆனால் அவன் சாமானியனும் அல்ல. அவன் சராசரியில் ஒருவனாக இருந்தால் அவனால் அகவுலகின் உச்சத்திற்குள், வாழ்க்கையின் சாராம்சத்திற்குள் செல்லமுடியாது. பண்பாட்டின், வரலாற்றின் முழுமையைச் சொல்லிவிடமுடியாது. ஒளிக்கு நிகராக இருளையும் எழுதமுடியாது. யானைடாக்டரின் மேன்மையை எழுத முடிந்தவனால்தான் ஏழாம் உலகத்தின் சாக்கடையையும் எழுத முடியும்.

அந்த நுண்ணுணர்வாலேயே எழுத்தாளர்கள் பிறழ்வு கொண்டவர்களாக இருப்பதுண்டு. மிகச்சிலரிடம் அப்பிறழ்வு அதீதமாக இருக்கவும்கூடும். மௌனியும் ஜி.நாகராஜனும்  விபச்சாரத்திலும் குடியிலும் திளைத்ததை அப்படித்தான் இலக்கிய உலகம் புரிந்துகொள்கிறது. சிஃபிலிஸ் வந்து இசைமேதை கிட்டப்பா மறைந்ததை அப்படித்தான் புரிந்துகொள்கிறது. தாசியின் வீட்டுத் திண்ணையில் நோயுற்றுக் கிடந்து மறைந்த இசைமேதைகள் தமிழகத்தில் உண்டு.

மேலைநாட்டுக் கலைஞர்கள், இலக்கியமேதைகளின் வாழ்க்கை முறையாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அவர்களின் வாழ்க்கையின் அலைக்கழிப்புகளும் பிறழ்வுகளும் பலசமயம் அதீதமானவை. பெரும்பாலும் மிதமிஞ்சிய பாலியல் விழைவுகளும், அதேசமயம் பொறுப்பேற்கத் தயங்கி விலகிச்செல்லும் கோழைத்தனமும் அவர்களின் இயல்புகளாக இருந்துள்ளன. ப்ளேபர்ட், பால்ஸாக், துர்கனேவ் முதல் எஸ்ரா பவுண்ட் வரை முறைசாரா உறவுகள், அவ்வுறவில் பிறந்த ஏற்கப்படாத குழந்தைகள் என அவர்களின் தனிவாழ்க்கை மிகச் சிக்கலானதாகவே இருந்துள்ளது. ஒருபாலுறவினரும், குழந்தைகளை அதற்கு பயன்படுத்தியவர் என்று குற்றம்சாட்டப்பட்டவருமான ழீன் ழெனே போன்ற உச்சகட்ட விதிவிலக்குகளே ஏராளமானவர்கள் உள்ளனர்.

அவர்களை மேலைச்சமூகம் முன்னுதாரண மனிதர்களாக எண்ணவில்லை. ஆனால் நுண்ணுணர்வுள்ளவர்கள் என மதிப்பிட்டது. அந்த நுண்ணுணர்வு என்பது ஒரு சமூகத்தின் சொத்து. அச்சமூகம் தன்னைத்தானே பார்த்துக்கொள்ள, மதிப்பிட்டுக்கொள்ள, எதிர்காலத்திற்கான பதிவுகளாக விட்டுச்செல்ல தேவையான இலக்கியப்படைப்புகளை உருவாக்குவது அந்த நுண்ணுணர்வுதான். அந்த புரிதல் மேற்குலகுக்கு உள்ளது.

இலக்கியவாதிக்கு தேவை அந்த ஏற்புதான். அவன் தன் நூல்கள் வாசிக்கப்பட வேண்டும் என்று மட்டுமே கோருகிறான். தன் குரல் கவனிக்கப்படவேண்டும் என்கிறான். அரசியல் கூச்சல்களுக்கும் வம்புகளுக்கும் கொடுக்கப்படும் கவனத்தில் ஒரு சிறு பங்காவது தனக்கும் அளிக்கவேண்டும் என்கிறான். சமூகத்தின் அறிவியக்கத்திற்கு தான் அளித்த பங்கு அவனுக்கு தெரியும், அது மதிக்கப்படவேண்டும், அது சமூகத்திற்கு முக்கியமானது என்று சொல்கிறான்.

அப்படிச் சொல்லாத இலக்கியவாதிகள் இருக்கலாம். என்னிடம் ஒருவர் கேட்டார். ’சைக்கிள் ரிப்பேரும் இலக்கியமும் ஒன்றுதான் என்று இன்னார் சொல்கிறாரே’ என்று. நான் சொன்னேன், ’அந்த எழுத்தாளர் எழுதுவதை எழுத சைக்கிள் ரிப்பேர் செய்பவராலும் முடியும். நான் எழுதுவதை எழுத சாதாரண சைக்கிள் ரிப்பேர்காரரால் முடியாது’.

நான் எழுதுவது இலக்கியம் . இலக்கியம் எழுதவேண்டும் என்றால் ஒருவர் இயல்பிலேயே நுண்ணுணர்வு கொண்டவராக இருக்கவேண்டும். இளமையில் இருந்தே தன்னைத்தானே அடையாளம் கண்டுகொள்ளவேண்டும். தன் வாழ்க்கையையே ஒரு கற்றலாக, கல்விக்கான தேடலாக ஆக்கிக் கொள்ளவேண்டும். தன் ஆசிரியர்களைக் கண்டடைந்திருக்கவேண்டும். எந்த தொழிலுக்கும் உதவாத எழுத்தை ஒரு நீண்டகாலப் பயிற்சி என பயின்றிருக்க வேண்டும்.  அதன்பொருட்டு இந்த வாழ்க்கையிலுள்ள பணம், வெற்றி என வேறு அனைத்தையும் விலக்கி வைக்க துணிவு கொண்டிருக்கவேண்டும். எழுத அமரும் ஒவ்வொரு முறையும் ஒரு தியானம் போல மொழிக்குள் செல்லவேண்டும். தன்னுள் இருந்து தானே கலையைக் கண்டடையவேண்டும்.

அத்தனைக்கும் பின் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தன் எழுத்தை இச்சமூகத்தின் முன் வைக்கவேண்டும். இச்சமூகம் உதாசீனத்தையும் வசைகளையுமே அளிக்கும் என தெரிந்தும் ஒரு யோகம் என அதைச் செய்துகொண்டிருக்கவேண்டும். தன் அறிவுத்திறனில் நூறிலொன்றுகூட இல்லாதவர்கள், தன் உழைப்பில் ஆயிரத்திலொன்றைக்கூட இயற்றாதவர்கள், அடையும் கௌரவங்களில் ஒரு சிறு பங்கைக்கூட பெறாமல் மறையவேண்டும்.

அனைத்துக்கும் அப்பால், பாமரக்கும்பல் அவனிடம் ஓயாமல் நீயும் நாங்களும் ஒன்று, நீ கற்றதும் இயற்றுவதும் நாங்கள் வெட்டியாக இருப்பதும் சமம்தான், ஆகவே நீயும் எங்களைப்போல் இரு, நாங்கள் பேசுவதையே பேசு என்று கூவுவதை பொறுமையுடன் தாங்கிக் கொண்டிருக்கவேண்டும்.

எந்த இலக்கியவாதியும் தன்னை புனிதர் என்றும், உயர்ந்த ஆளுமை என்றும், இச்சமூகத்தின் சிறந்த உறுப்பினர் என்றும், இச்சமூகத்தை வழிநடத்தவும் அறிவுரை சொல்லவும் உரிமைகொண்டவன் என்றும் சொல்லிக் கொள்வதில்லை. அந்த இடத்தையும் கோருவதில்லை. கோரலாகாது. எழுத்தாளன் கோருவது தன் நுண்ணுணர்வுத்திறன் மதிக்கப்படவேண்டும், அது கவனிக்கப்படவேண்டும் என்று மட்டுமே.

தாகூருக்கே தெரியும், அவர் காந்தி அல்ல என்று. காந்திக்குத் தெரியும் தாகூரின் தீராத காதல்வேட்கைகள், அவருடைய எண்ணற்ற காமத்தொடர்புகள். தாகூர் மறைந்து ஐம்பதாண்டுகளுக்குப் பின்னரும் அவருடைய காதலிகள், ’கள்ளக்காதலி’கள் கண்டடையப்பட்டனர். ஆனாலும் தாகூர்தான் இந்தியாவின் கவிமுகம். அவர் மதிக்கப்பட்டது அவருடைய நுண்ணுணர்வாலும் அதன் வெளிப்பாடான கவிதையாலும்தான். அவர் நல்ல மனிதர் என்பதனால் அல்ல. அந்த வேறுபாட்டை உணராதவர்கள் பாமரர்களே.

இலக்கியவாதி உயர்ந்தோன் அல்ல. எவ்வகையிலும். ஆனால் அவன் சராசரியும் அல்ல. அவ்வாறு சசாசரியாக இருந்தால் அவனால் எதையும் எழுத முடியாது. சராசரியினர் அவனிடம் தங்கள் ஒழுக்க அளவுகோல்களை போடுவது அவனை ஒடுக்கும் வன்முறையாகவே மாறும். தங்கள் சராசரிக்கருத்துக்களைத்தான் அவன் சொல்லவேண்டும் என எண்ணுவது மேலும் பெரிய வன்முறை. மதம் ஓங்கியிருந்த ஐரோப்பாவில் அது நிகழ்ந்தது. கம்யூனிசம் ஓங்கிய ருஷ்யாவிலும் அது நீடித்தது.

சென்ற நூற்றாண்டில் ஓரினச்சேர்க்கையாளரான ஸக்கி தலைமறைவாக வாழநேர்ந்தது. பிறழ்வு குணம் கொண்டிருந்த டி.எச்.லாரன்ஸ், எட்கார் ஆலன் போ போன்ற பலர் தண்டிக்கப்பட்டார்கள்.அதில் இருந்து ஐரோப்பாவும் அமெரிக்காவும் தங்கள் பண்பாட்டு மலர்ச்சியால், தத்துவஞானிகள் மற்றும் அரசியலறிஞர்களின் வழிகாட்டலால் மேலெழுந்தனர். இலக்கியவாதியின் நுண்ணுணர்வை அடையாளம் கண்டனர்.

நாம் இன்னும் மத்தியகால மனநிலையில் இருக்கிறோம். அதை நவீன அரசியல் சரிநிலைகளாக எண்ணி முன்வைக்கிறோம். அது தேங்கிப்போன நிலப்பிரபுத்துவக் கருத்துநிலை. அந்த மனநிலையை அடித்து உடைக்கவே ழீன் ழெனேயை ‘செயிண்ட் ழெனே’ என்று சார்த்ர் சொன்னார். இங்குள்ள இந்தப் பிற்பட்ட- பாமர மனநிலையை இளைஞர்களாவது அடையாளம் கண்டுகொள்ளவேண்டும். அந்த போலிச்சீற்றம், போலிக்கண்ணீரை ஏதோ உயர்மதிப்பீடுகளின் வெளிப்பாடு என நினைத்துவிடலாகாது.

இலக்கியவாதிக்கு ‘கொம்பு’ உண்டா என்கிறார்கள். ’உண்டு, அது உணர்கொம்பு. உன்னைப்போன்ற பாமரனுக்கு அது இல்லை, மூடுடா வாயை’ என்பதே அதற்கான பதில்.

இலக்கியவாதி சட்டத்திற்கு, பொது ஒழுக்க நெறிக்கு, குடிமைப்பண்புகளுக்கு அப்பாற்பட்டவனா? இல்லை. சட்டமீறல் என்றால் சட்டம் தன் கடமையை செய்யட்டும். ஒழுக்கநெறி சமூகத்திற்கு தீங்கானது என்றால் அவனை ஒதுக்கி வைக்கட்டும். குடிமைப் பண்புக்கு எதிரானவன் அவன் என்றால் அவனை கண்டிக்கட்டும். ஆனால் இதெல்லாம் இலக்கியத்திற்கு நிபந்தனை என ஒருவன் சொல்வான் என்றால் அவனை ‘அப்பால் போடா’ என்று சொல்லாமல் எழுத்தாளன் ஒரு வரியும் எழுத முடியாது. தன் செயல்பாட்டுக்காக தனக்கான சிலுவையை எழுத்தாளன் சுமக்கத்தயாராவான்.

அந்நுண்ணுணர்வின் அத்தனை வதைகளையும் அனுபவிப்பவனாகவும் அந்நுண்ணுணர்வின் பிறழ்வுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பவனாகவுமே இலக்கியவாதி இருக்கமுடியும். அவனுடைய அந்த தனித்தன்மையை ஒரு பண்பட்ட சமூகம் சற்றேனும் புரிந்துகொள்ளவேண்டும். பாமரர் எங்குமுண்டு, அவர்களை ஒன்றும் செய்யமுடியாது, அதற்குமேல் பண்பாட்டை அறிந்த சிலராவது ஒரு சமூகத்தில் இருக்கவேண்டும்.

இலக்கியவாதியிடம் மிக அரிதாக அதீதப் பிறழ்வுகளும் இருக்கலாம். அதுவும் புரிந்துகொள்ளப்பட வேண்டும். ஒரு பாமரனிடம் அது இருந்தால் அது மிகக் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியதும் தண்டிக்கப்பட வேண்டியதும்தான். ஏனென்றால் அவன் எதையும் உருவாக்குபவன் அல்ல. இலக்கியவாதியிடம் அவனுடைய படைப்புசக்தியின் மறுபக்கமாகவே அது உள்ளது. அதன் பொருட்டு அவன் மன்னிக்கப்படவேண்டும், ஏற்கப்படவேண்டும் என நான் சொல்லவில்லை. ஆனால் அதன்பொருட்டு அவன் பாமரர்களால் வேட்டையாடப்படலாகாது. அப்புரிதல் ஒரு சமூகத்தில் சிலரிடமாவது வேண்டும்.

*

ஓர் எழுத்தாளனாக நான் என்னைப் பற்றி எப்போதுமே இப்படித்தான் சொல்லி வருகிறேன். என் எழுத்துக்களில் மெய்ஞானத்தின் உயர்தருணங்கள் உண்டு. அவை ரமணர் தன் உச்ச தியானநிலையில் அடைந்தவற்றுக்கு நிகரானவை. வாழ்க்கையின் உயர்விழுமியங்கள் உண்டு. நூறாண்டு வாழ்ந்த பேரன்னையால் மட்டுமே அறியத்தக்கவை. நீங்கள் மெய்ஞானம் தேடுபவர் என்றால் என் எழுத்துக்கள் உங்களுக்கு உங்கள் ஆழத்தையும் உங்கள் மரபையும் காட்டும். நீங்கள் வாழ்க்கையை அறிய முயல்பவர் என்றால் உங்களுக்கு அவை ஆயிரம் வாழ்க்கைகளின் சாரத்தை அளிக்கும்.

ஆனால் நான் ரமணர் அல்ல. எழுதி முடிந்த கணமே சாமானியன். வாழ்வை அறிந்தவன் அல்ல, அருண்மொழி இல்லாமல் சேர்ந்து பத்து நாட்கள் வாழமுடியாதவன். நல்லவேளை என்னைவிட ஒன்பது வயது குறைந்தவள், தனியாகவிட்டுவிட்டுச் செல்லமாட்டாள் என அவ்வப்போது எண்ணி ஆறுதல் கொள்பவன்.

நான் எவருக்கும் வாழ்க்கையை அல்லது அறத்தைக்  கற்றுக்கொடுப்பதில்லை. அதற்குரிய தகுதி கொண்டவர்களையே பரிந்துரைப்பேன். என்னிடம் சிலர் நீங்கள் யோகப்பயிற்சி செய்வதுண்டா என்பார்கள். நான் ஐம்பதாண்டுகளாக நகம் கடிக்கும் வழக்கம் கொண்டவன். ஐம்பதாண்டுகளாக அப்பா முதல் ஆசிரியர்கள் வரை அதைவிடும்படி ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள். ஐம்பதாண்டுகளாக அதை விட்டுவிட ஆத்மார்த்தமாகவே விரும்புபவன். இன்றுவரை அது என்னால் இயன்றதில்லை. அது மட்டும் முடிந்தால் அடுத்ததாக யோகம் செய்ய முயல்கிறேன் என்று பதில் சொல்வேன்.

நான் என் வாழ்க்கையை வெளிப்படையாக வைத்திருப்பவன். எங்கும் எப்போதும் நண்பர் புடைசூழ வாழ்கிறேன். அதுவும் மிகப்பெரிய எண்ணிக்கையிலான நண்பர்கள். தனிவாழ்கையில் ஒழுக்கநெறிகளை மிகக் கறாராகப் பேணுபவன் – எனக்கு மட்டுமல்ல என் நண்பர்களுக்கும் அவை தேவை என நினைப்பவன்.  கூடவே உணவு, தூக்கம், உடற்பயிற்சி ஆகியவை சார்ந்த நெறிகளையும் கறாராகவே கடைப்பிடிக்கிறேன். குடிப்பழக்கமோ வேறுவகை பிறழ்வுகளோ கொண்டவர்களை நான் என் இலக்கியச் சுற்றமாக, நட்புச்சுற்றமாக ஏற்பதில்லை. விஷ்ணுபுரம் அமைப்பிலும் அவர்களுக்கு இடமில்லை. எங்கள் நிகழ்வுகளிலும் இடமில்லை. ஆகவே மடம் என்றும் ராணுவக்கட்டுப்பாடு என்றும் கேலிகள் உண்டு.  இது என் இயல்பு, அவ்வளவுதான்.

என் எழுத்து என்பது பிறழ்வுகள் வழியாக உருவாவதல்ல, ஒத்திசைவு வழியாக உருவாவது. அதற்கு இந்த நெறிகள் வழியாக நான் என்னை ஒருங்கிணைவுடன் வைத்திருப்பது அவசியமானது. எந்த அளவுக்கு என் அகம் கூர்கொண்டிருக்கிறதோ அந்த அளவுக்கே நான் எழுதுவதுபோன்ற எழுத்து வெளிப்படும். அதற்கு நான் என் மூளையை துல்லியமாக வைத்திருக்கவேண்டும். ஆகவே போதைப்பொருட்கள் மட்டுமல்ல, அலோபதி மருந்துகளைக்கூட கூடுமானவரை தவிர்க்கிறேன். ஆனால் இது எழுத்தின் ஒரு வகை மட்டுமே. இதை செவ்வியல் எனலாம். சிதறல்கள், பிறழ்வுகள் வழியாக வெளிப்படும் வேறுவகை எழுத்துக்கள் உண்டு. அவற்றை எழுதுபவர்களின் வாழ்க்கைமுறை வேறாக இருக்கலாம். அதை எப்போதும் புரிந்துகொள்கிறேன்.

ஆனால் கொந்தளிப்புகள் எல்லா வகை எழுத்துக்களுக்கும் ஒரே அளவிலானவை. நானும் நிலையற்றவனே. நானும் கற்பனைகளில் அலைக்கழிபவனே. பலவகை நரம்புச்சிக்கல்கள் இருந்துள்ளன. பல சிக்கல்கள் தொடர்கின்றன. என் அகக்கொந்தளிப்புகள் என்னை பைத்தியத்தின் விளிம்பு வரை கொண்டு சென்றிருக்கின்றன. மருத்துவச் சிகிழ்ச்சைக்குக் கூட சென்றிருக்கிறேன். விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல்,  வெண்முரசு போன்ற படைப்புகளில் அந்த பெருங்கொந்தளிப்பை எவரும் காணலாம். அக்கொந்தளிப்பை அடையாமல் எவரும் அவற்றை எழுதவும் முடியாது. ஒரு கெட்ட தேவதையை உபாசனை செய்வதுபோலத்தான் இது. சொந்த தசையை அறுத்து பலியிடாமல் இந்த தெய்வம் கனியாது.

என்னை நிலைப்படுத்த தொடர் அலைச்சலில் இருந்துகொண்டிருக்கிறேன். உலகமெங்கும். என் கட்டற்ற கோபத்தை கட்டுப்படுத்துவதே இதுவரை என் வாழ்க்கையின் பெரும்சவாலாக இருந்துள்ளது. அதன்பொருட்டு என் உற்றார், நண்பர்களுடன் மன்னிப்பு கேட்டுக்கொண்டே இருக்கிறேன். என் சமநிலை என்பது இயல்பானது அல்ல, அது நான் முழுவிசையுடன் பேணிக்கொள்ளும் ஒரு புள்ளி மட்டுமே. அதன்பொருட்டு நான் நன்றி சொல்லவேண்டியது முதன்மையாக அருண்மொழிக்கு, பின் என் நண்பர்களுக்கு.

ஆகவேதான் ஓர் ஆளுமையாக என்னை நான் முன்வைப்பதில்லை. மாறாக, பொதுப்பணியாற்றும் ஒவ்வொருவரையும் போற்றி முன்வைக்கிறேன். அவர்களை பற்றி எழுதுகிறேன். அவர்களே முன்னுதாரணங்கள் என்பதனால்.

ஆனால் ஓர் எழுத்தாளனாக என்னை இளம்வாசகர்கள் அணுகுவதை நான் ஊக்குவிக்கிறேன். என்னிடமிருந்து அவர்கள் பெற்றுக்கொள்வதற்கு இருப்பது என் முன்னோடிகளிடமிருந்து என் வரை வந்துசேர்ந்த அறிவை. இலக்கியம், தத்துவம், பண்பாடு சார்ந்த புரிதல்களை. அத்துடன் நுண்ணுணர்வை படைப்பாக்கமாக ஆக்கிக்கொள்ளும் முறையை. படைப்பிலக்கியம், கலை சார்ந்த சில புரிதல்கள் நேரடி உரையாடல்கள் வழியாக, அவற்றில் உருவாகும் சிறந்த தருணங்களில் சொல்லப்படும் வரிகள் வழியாக, செய்முறைப் பயிற்சிகள் வழியாக மட்டுமே கற்கத்தக்கவை.

நூல்கள் உள்ளன. அவற்றில் சிந்தனை உள்ளது. ஆனால் சிந்தித்தல் என்னும் செயல்பாட்டை சிந்திக்கும் ஒருவரிடமிருந்து நேர்ப்பழக்கம் வழியாக மட்டுமே சரியானமுறையில் அறியமுடியும். அவ்வாறுதான் மானுடம் தோன்றிய நாள் முதல் இன்றுவரை ஆசிரியர் – மாணவர் உறவினூடாக அறிவு கைமாறப்பட்டுள்ளது. உலகம் முழுக்க இன்றும் அவ்வாறே அறிவு பரிமாறப்படுகிறது. ’நூல்களே போதும், நூலாசிரியர்கள் தேவையில்லை’ என்பவர்கள் நூல்களையும் வாசிக்கும் வழக்கமில்லாதவர்கள்.

எல்லா எழுத்தாளர்களும் ஆசிரியர்களா? இல்லை. நானறிந்தவரை பிரமிள் நல்ல ஆசிரியர் அல்ல. அவருடைய குணம் விசித்திரங்கள் கொண்டது. முற்றிலும் நிலையற்ற மனிதர். சுந்தர ராமசாமி மகத்தான ஆசிரியர். கடம்மனிட்ட ராமகிருஷ்ணன் குடிகாரர். பி.கே.பாலகிருஷ்ணனும் குடிகாரர். ஆனால் முன்னவர் மோசமான ஆசிரியர். பாலகிருஷ்ணன் மாபெரும் வழிகாட்டி. அந்த வேறுபாடு முக்கியமானது. தனக்கான ஆசிரியரை கண்டடையும் நுண்ணுணர்வு மாணவர்களுக்குத் தேவை.

எழுத்தாளன் வைக்கப்படவேண்டிய இடம் இதுவே. ஞானியாக அல்ல, வழிகாட்டியாக அல்ல, முன்னுதாரண மனிதனாக அல்ல, மிகச்சிறந்த குடிமகனாகவோ நல்ல மனிதனாகவோ அல்ல. நுண்ணுணர்வு கொண்ட ஒருவனாக மட்டுமே அவன் மதிக்கப்படவேண்டும். அந்நுண்ணுணர்வு ஒரு சமூகத்தின் கூரிய உணர்வுநிலை என்று அச்சமூகம் உணரவேண்டும். அதன் விளைவாக உருவாகும் இலக்கியம் அச்சமூகத்தின் சொத்து என அறியவேண்டும். அதை உருவாக்குபவன் என்றவகையில் அவன் ஆதரிக்கப்படவேண்டும்.

எல்லா வாசகர்களும் இலக்கியவாதியை அணுகவேண்டியதில்லை. அணுகினால் இலக்கியவாதி தாங்கவும் முடியாது. ஆனால் இலக்கியமரபை, அறிவியக்க மரபை தொடரவேண்டுமென விரும்பும் அடுத்த தலைமுறைக்கு ஆசிரியராக அணுக முன்னோடிகள் இன்றியமையாதவர்கள். அவ்வாறான தேடல்கொண்ட மாணவர்களிடம் நான் ஒன்றையே சொல்லமுடியும், இந்த தலைமுறையின் தலைசிறந்த ஆசிரியர்களில் நானும் ஒருவன்.

முந்தைய கட்டுரைசுப்ரமணிய ராஜூ
அடுத்த கட்டுரைமருத்துவர் ஜீவா பசுமை விருதுகள்