பாதிக்கப்பட்டவர்களுடன் நிற்றல்

கோணங்கி, பாலியல்குற்றச்சாட்டு, எழுத்தாளர்கள்…

கோணங்கி தமிழ் விக்கி

விவாதத்தை தொடர விரும்பவில்லை. ஏனென்றால் இதைப்போன்ற ஒரு தருணத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று இருக்கும். மிகையுணர்ச்சியுடன் பேசுவது ஓர் தற்பிம்பத்தையும் அளிக்கும். வம்பின் கொண்டாட்டம் வேறு. இந்த தளம் அதற்கானதல்ல.

ஆனால் நாலைந்து பெண்களின் கடிதங்கள் வந்தன. அனைத்திலும் பொதுவான ஒரு வரி இருந்தது. பாதிக்கப்பட்டவர்களுடன் நிற்கவேண்டாமா?

இன்று சமூகவலைத்தளங்களில் கூச்சலிடுபவர்கள் எவரும் அப்படியெல்லாம் பாதிக்கப்பட்டவர்களுடன் நிலைகொள்பவர்கள் அல்ல. அவர்களின் அரசியலுக்கு உகந்தவர்கள்மேல் இதே குற்றச்சாட்டு வந்தபோது அவர்கள் என்ன செய்தார்கள் என்று பாருங்கள். குற்றம்சாட்டியவர்களைத்தான் இழிவுசெய்தனர். பாதிக்கப்பட்டவர்களை இன்றுவரை தொடர்ந்து வேட்டையாடுகின்றனர். குற்றம்சாட்டப்பட்டவர்களுடன் நின்று கொண்டாடுகின்றனர். அதற்கான சப்பைக்கட்டுக்களை உருவாக்குகின்றனர். அதே குரல்கள்தான் கோணங்கியின் குருதிக்காக பாய்கின்றன.

அவர்களின் விதிகள் மிகமிக எளியவை. அவர்களுக்கு தேவை எளிய இலக்குகள். அதிகாரமுள்ளவர்களிடம் அடிபணிவார்கள். எளிய இலக்கு அகப்பட்டால் உச்சகட்ட குரூரத்துடன் எதிர்வினையாற்றுவார்கள். அதற்கு நியாயம், ஒழுக்கம், பாதிக்கப்பட்டவர்களுடன் நிற்றல் என பல பாவலாக்கள். வெற்றுக்கூச்சல்களுக்கு அப்பால் இவர்கள் செய்யக்கூடுவதொன்றில்லை. இவர்களிடமிருப்பது எந்த அறமும் அல்ல. இவர்கள் எவரும் ஒழுக்கவாதிகளும் அல்ல. இவர்களிடம் வெளிப்படுவது வெறும் அறிவியக்க எதிர்ப்பு. வேறொன்றுமில்லை.

நான் என்றுமே யதார்த்தத்தில் என்ன என்று பார்க்க முயல்பவன். இக்குற்றச்சாட்டுக்கள் எல்லாமே பல ஆண்டுகள் பழையவை. இன்று போதிய உடல்நலமில்லாமல், பணமோ அதிகாரமோ இன்றி, தனித்திருக்கும் 65 வயதான ஒருவரை இலக்காக்குபவை. குற்றம்சாட்டுபவரின் இயல்பென்ன, நோக்கம் என்ன, அக்குற்றத்தில் அவருடைய பங்கென்ன என்பதெல்லாம் எங்கும் விவாதிக்கமுடியாதவை.

குற்றச்சாட்டுடன் ஒருவர் பொதுவெளிக்கு வந்திருக்கிறார் என்பதனாலேயே, அவரை ஆதரித்து இன்னும் பலகுரல்கள் எழுந்தன என்பதனாலேயே, அவர்களுக்கு நல்லெண்ணத்தின் மதிப்பை அளித்து, அவர் சார்பில் நின்று இதை கடுமையாகக் கண்டிக்கிறோம். அது சமூகக் கடமை. ஆனால் ’இது உண்மையென்றால் கண்டிக்கிறோம்’ என்பதற்கு அப்பால் சொல்ல எவருக்கும் உரிமை இல்லை. தீர விசாரித்து எவரும் எதையும் சொல்லும் சூழல் இங்கில்லை. அதுவும் பத்தாண்டுகள் பதினைந்தாண்டுகளுக்கு முந்தைய செயல்பாடுகளை.

இவை ’me too’ வகை குற்றச்சாட்டுக்கள். இவற்றால் எவரும் எதையும் நிரூபிக்க முடியாது. இவற்றின் நோக்கமே பொதுவெளியில் முன்வைப்பதன் வழியாக குற்றம்சாட்டப்பட்டவரை அவமானப்படச் செய்வதுதான். அந்த அவமானத்தையே தண்டனையாக அளிப்பதுதான். இங்கே இவ்விஷயத்தில் அது நிகழ்ந்துவிட்டது. அதற்குமேல் எதுவும் சாத்தியமும் இல்லை. நான் சொன்னது அதையே.

முகநூலில் இலக்கியத்தின் எதிரிகள் இதைப் பயன்படுத்தி உருவாக்கும் வெறிக்கூச்சல்களுடன் இலக்கியமென்றால் என்ன என அறிந்தவர்கள், இளம்படைப்பாளிகள், இன்றைய கூட்டுமிகையுணர்ச்சியால் பாதிக்கப்பட்டு இணைந்துவிடலாகாது. அதனால் அவர்களுக்கே இழப்பு. ’அவ்வளவுதாண்டா இலக்கியம்’ என்ற முடிவுக்கு இவர்களின் கூச்சல் வழியாகச் சென்றுசேரும் அசடுகள் இவர்களுடன் ஊழலரசியலுக்கு கொடிபிடிக்கப் போகலாம். அவ்வளவே இப்போது சொல்ல விரும்புகிறேன்.

சென்ற காலங்களில் இங்கே இதைப்போன்ற எல்லா சிக்கல்களிலும் பாதிக்கப்பட்டவர்களுடன் எல்லாவகையிலும் உடன்நின்றவர்கள் நானும் என் நண்பர்களும் மட்டுமே. தமிழகத்திலும் கேரளத்திலும். அதை இலக்கியச்சூழல் அறியும். இந்தக் கூச்சலிடும் கும்பலில் ஒருவரைக்கூட, ஒரே ஒருவரைக்கூட, பாதிக்கப்பட்ட எவரும் உதவிக்கு நாடமுடியாது என்பது முன்பு பாதிக்கப்பட்டவர்கள் அறிந்த உண்மை. என்றும் பாதிக்கப்பட்டோருக்கு உதவியாகவே நாங்கள் இருப்போம், உறுதியுடன், கடைசிவரை. எப்போதும் இருந்திருக்கிறோம்.

ஜெ

முந்தைய கட்டுரைசிறுநூல்கள்
அடுத்த கட்டுரையோக முகாம், கடிதம்