அன்புள்ள ஆசிரியருக்கு,
குருஜி சௌந்தரின் சென்ற மாத யோக முகாமில் கலந்துகொண்டது எனக்கு பலவகைகளில் முக்கியமான ஒரு அனுபவமாக அமைந்தது. இதற்கு முன் சிறு வயதில் பக்கத்து வீட்டு ஸ்ரீநாத் என்ற என் ஏழாம் வகுப்பு தோழன் “நல்ல ரிலீஃப் கிடைக்குது ஆன்ட்டி” என்று அம்மாவிடம் சொல்லி என்னையும் தங்கையையும் வீட்டருகே ‘ராஜ யோக தியான நிலையத்’திற்கு அழைத்து சென்று அருமையான ஞாயிற்றுகிழமை அதிகாலைகளில் என்னை ஒரு ஐந்து முறை வதைத்திருக்கிறான். அது முதல் எனக்கு யோகா மீது ஒரு மரியாதையுடன் கூடிய விலக்கம் வந்தது, மரபான விஷயங்களை முற்றிலும் ஆராயாமல் மறுப்பது ஒரு வகை மொண்ணைத்தனம் என்பதையும் உணர்ந்திருந்தேன். ஆனால் கடந்த சில வருடங்களாக யோகா பயின்று பார்க்க வேண்டும் என நான் நினைப்பதற்கு காரணம் யோகா குரு சௌந்தரின் ஆளுமையே, அவரது புன்னகை ததும்பும் முகமும். ஒரு முறை எப்படி திருவனந்தபுரம் திரைப்பட விழாவில் ’கிம் கி டுக்’இன் ‘மோபியஸ்’ என்ற கொடூர படத்தை பார்த்து மயங்கி விழுந்தேன் என நான் பலவாறு பயமுறுத்தி சொன்ன பின் அதை அன்றே தரவிறக்கம் செய்து பார்த்துவிட்டு அதே புன்னகையுடன் “நல்ல படம் தான் அஜீ” என்றது அதற்கு சான்று.
யோக முகாமின் முதல் வகுப்பு பொது அறிமுகமாக அமைந்திருந்தது. ஆனால் அதிலேயே இது எனக்கு முக்கியமான தத்துவ கல்வியாகவும் இருக்க போகிறது என்பதை உணர்ந்தேன். முக்கியமாக நம் உடல் எந்த நிலையிலும் அதிகபட்சம் இருபது நிமிடங்களுக்கு மேல் சௌகரியமாக அமரவோ படுக்கவோ முடியாது என்று அவர் சொன்னது. சற்றேனும் அசைந்து சில பகுதிகளை விடுவித்தே மீண்டும் இயல்பாக முடியும் என்றார். தூக்கத்திலும் கூட நாம் அசைகிறோம், ததும்பிய படியே இந்த பாரத்தை சிறிது சிறிதாக வாழ்நாள் முழுக்க கையாள்கிறோம்.
பின் பதஞ்சலி துவங்கி வளர்ந்து வரும் யோக மரபு, மரபான-மரபல்லாத யோகா என்ற பிரிவினை, மரபான யோகம் எப்படி குறைந்தது மூன்று அடுக்குகளையும் இணைத்தே பயிற்சியை தொடங்குகிறது ஆகியவற்றை சொல்லி, யோகம் எப்படி ஆயுர்வேதத்தின் திரிதோஷம் (வாத பித்த கபம்) என்ற கருதுகோளை தனக்கே உரிய முறையில் கையாள்கிறது என்றும் சொல்லி முதல் அமர்வை முடித்தார்.
எலும்பு தசை என்னும் வெளிப்புற உடலின் முதல் அடுக்கும், மூச்சு இதயத்துடிப்பு ரத்தவோட்டம் என்னும் உள் உறுப்புகளின் செயல்பாடுகள் கொண்ட இரண்டாம் அடுக்கும், சிந்தனைகளினால் ஆன மூன்றாம் அடுக்கும் (அன்னம், பிராணம், மனம்) சேர்ந்தே பயிற்சிக்குள்ளாக்க படவேண்டும் என்றார். இதில் பிராணம் எப்படி மற்ற இரு கோசங்களுக்கும் குறியாக செயல்படுகிறது, எப்படி இவையிரண்டையும் இணைப்பதாகவும் இருக்கிறது என்பது மிக அழகான ஒரு அவதானிப்பு. கோபம் கொள்ளும்போது உச்சம் பெறும் அதே மூச்சும் இதயத்துடிப்பும் தான் ஓடும்போதும் உச்சம் கொள்கிறது.
பின் பயிற்சிகள் தொடங்கியது, முதலிலேயே அவர் சொன்ன விஷயம், மூச்சுடன் இணைந்து நாம் செய்யாத எந்த உடற்பயிற்சியும் ஆசனம் ஆகாது என்பது. இன்னொருவகையில், மூச்சுடன் ஒருங்கிணைந்த உடற்பயிற்சியே ஆசனம் என்றும் சொல்லலாம். முதலில் முதுகு தண்டுக்கும் மார்ப்புக்குமான தாடாசனம் போன்ற ஆசனங்கள். ஒவ்வொரு ஆசனத்துக்கும் ஒரு எதிர் ஆசனம் (counter pose) உண்டு அதையும் இணைத்தே பயில வேண்டும் என்றும் அறிந்துகொண்டோம். உடற்பயிற்சிக்கும் யோகாவுக்குமான முக்கியமான மற்றொரு வேறுபாடு, ஒவ்வொரு ஆசனத்துக்கு முன்னும், அதை செய்து முடித்த பின்னரும் கண்களை மூடி உடலை ஒவ்வொரு பாகமாக கவனம் கொள்வது. எளிமையாக தோன்றும் இது உண்மையில் ஒரு வகையில் உடலை தியானிப்பதே. நாம் கொஞ்சம் கொஞ்சமாக உடலை அறிந்து கொள்ள துவங்குகிறோம், முதல்முதலாக நம் எடை எங்கு செல்கிறது, எந்த இடம் பயிற்சியின்றி தளர்ந்திருக்கிறது, எந்த இடம் இறுக்கமாக இருக்கிறது என பலவற்றை உணரமுடிகிறது. மேலும் முக்கியமாக, எவ்வளவு நம் உடல் நம் அறிதலுக்கு அப்பாற்பட்டிருக்கிறது எனவும் தெரிந்து கொள்கிறோம். கண்கள் மூடி இருளில் துழாவுவது போல உணர கிடைக்கும் அதன் சிறு பகுதியை மட்டுமே நாம் கவனத்தில் கொண்டு வரமுடிகிறது. உள்ளே ஆழத்தில் ஒரு பிரபஞ்சமே இயங்குவதை போன்ற ஒரு உணர்வு.
சிந்தனைக்கும் உடலுக்கும் இருக்கும் தொடர்பு வியப்பூட்டுவது. ஏக பாத பிரணாம் ஆசனம் என ஒன்று. ஒற்றைக்காலில் கைகளை கூப்பி கும்பிடுவது போல மேலே உயர்த்தியபடி நிற்க வேண்டும். அதை செய்வதற்கு முன் எங்களை கண்களை மூடி உடலின் சமநிலையை கவனிக்க சொன்னார். உடல் தண்ணீரில் நிற்கும் படகு போல அசைவதை உணரமுடிந்தது. பின் கண்களை திறந்து கொண்டு அவர் சொன்னபடி மெதுவாக ஒற்றை காலை உயர்த்தி மறுகாலால் நிற்க சொன்னார். அனேகமாக எல்லாரும் தள்ளாடி விழப்போனோம். குருஜி எதிரில் தெரியும் ஒரு புள்ளியை மட்டும் கண்கள் எடுக்காமல் பார்த்தபடி செய்ய சொன்னார். கொஞ்சம் கொஞ்சமாக அப்படி செய்ய துவங்கியபோது தள்ளாட்டம் தானாக குறைந்தது. ஒரு கட்டத்தில் எனக்கு அவ்வாறு ஒரு புள்ளியில் கவனம் நிறுத்தி மிக சமநிலையுடன் நிற்க தொடங்கினேன். கால்கள் களைக்கும் வரை எத்தனை நிமிடங்கள் வேண்டுமானாலும் அது போல அசைவில்லாமல் நிற்கலாம் என்று தோன்றியது. ஆனால் எதிரே தெரிந்த அந்த சிறு புள்ளியில் இருந்து ஒரு கணம் கண்ணெடுத்தால் கூட உடலில் தடுமாற்றம் தெரிந்தது. அந்த புள்ளியை கண்கள் பார்த்தாலும் சிந்தனை எங்கோ ஒரு நொடி சென்றால் கூட அப்புள்ளி பார்வையில் மறைந்து மீண்டும் தடுமாற்றம். கவனம் என்பதை எப்படி அவ்வளவு தூலமாக உணரமுடியும் என்பது பெரும் வியப்பு தான். அதேபோல இரு கால்களிலும் தனித்தனியாக செய்தபின் மீண்டும் சமபாத நிலையில் கண்களை மூடி நிற்கும் போது முதலில் இருந்த தள்ளாட்டம் இப்போது சுத்தமாக இல்லை. ஏதோ ஒரு விதத்தில் மனமும் அதே அமைதியை, சமநிலையை அடைந்திருக்க வேண்டும்.
யோக நித்ரா அதே போல மற்றொரு அனுபவம். படுத்தபடி கண்களை மூடி உடலை முற்றிலுமாக தளர்த்த வேண்டும். குருஜியின் கட்டளையின் படி ஒவ்வொரு பாகமாக மெல்ல மெல்ல தளர்த்தினோம். “உங்களை அறியாமலேயே நீங்கள் தோள்களையும் கால்களையும் இறுக்கமாக வைத்திருப்பீர்கள், அதை மெல்ல ஒவ்வொன்றாக தளர்த்துங்கள், அதற்காக நீங்கள் பிரத்யேகமாக ஒன்றும் செய்ய வேண்டாம், மனதை அங்கு கொண்டு சென்று கவனித்தாலே போதுமானது” என்று சொன்னபடியே அவரது குரல் சுற்றி வந்தது. அவர் சொன்னது போலவே ஒரு சிறு கவனம் தான் தேவையாக இருந்தது. அதை அங்கு கொண்டு சென்று தளர்த்த நினைக்கும் போது உடல் ஒரு மந்திர தொடுகையை உணர்ந்தது போல இளகி விடுபடுகிறது. அதுவரை அத்தனை ஆயிரம் நுண்சரடுகளால் மனம் அதை இழுத்துப் பிடித்திருந்ததை போல அப்போது தோன்றியது.
பின் குருஜி உடலின் பாகங்கள் ஒவ்வொன்றாக உணர சொன்னார். முதலில் வலது கை கட்டைவிரல் என்றதும் நான் அதை உற்சாகமாக அசைக்க துவங்க, அதை அருகிருந்தே கண்டது போல அவரது குரல் “விரல்களை அசைக்க வேண்டாம், அதை உணர்ந்தால் மட்டும் போதும்” என்றது. அசைக்காமல் கட்டளையிடாமல் வலியோ அசௌகரியமோ இல்லாமல் ஒரு உடல் பாகத்தை எப்படி உணர்வது. அதன் இருப்பை மட்டும், வெறும் ஜடம் போல அதன் அசைவின்மையை, ஆனால் அது ஜடம் அல்ல என்பதையும். அப்படி ஒவ்வொரு பாகமாக “ஆம்” “ஆம்” என்று சொல்லி தொடுத்து கொண்டு பின் மொத்தமாக உடலையே உணரவேண்டும்.
அடுத்து ஓசைகளில் கவனம் செலுத்த சொன்னார். தொலைதூரத்து பறவைகளின், மரங்களில் காற்றின் ஓசைகளை முதலில் கவனிக்க சொன்னார். அங்கும் இருப்பு மட்டுமே, அதிலும் நாம் ஆற்றுவதற்கு ஒன்றும் இல்லை. மெல்ல கட்டிடத்துக்கு வெளியே கேட்கும் ஓசைகளை கேட்க சொன்னார். அடுத்து கட்டிடத்துக்கு உள்ளே ஒரு சிறு மணியை ஒலிக்க செய்தார், பின் மூச்சையும், இதயத்துடிப்பையும் கவனிக்க சொன்னார். அசைவில்லாத உடலில் இருந்து மனம் எழுந்து தொலைதூரத்து மலைகளில் இருந்து தொடங்கி ஒவ்வொன்றாக படிந்து ஒழுகி மீண்டும் வந்து சேர்ந்தது. அந்த தொலைதூரங்களுக்கும் என் உடலுக்கும் இப்போது பெரிய வித்தியாசங்கள் இல்லை. எல்லாவற்றையும் இருப்பாக மட்டுமே உணர்ந்தேன். பதினைந்து நிமிடங்கள் வரை கடந்தபின் கடைசியாக குருஜி கண்களை மூடியபடியே விரல்கள், கழுத்து என மெல்ல அசைக்க சொன்னார். முதல் சிறு அசைவுக்கு முந்தைய கணம் வரை மீண்டும் அது சாத்தியம் என்றே தோன்றவில்லை. மனம் உடலை அவ்வளவு முழுமையாக கைவிட்டது போல இருந்தது. ஆனால் ’அசைக்க’ என்று எண்ணிய மறுகணம் விரல் அசைந்தது. ஒரு சிறு பிறப்புக்கணம். உடலை மீண்டும் மெல்ல எனது என்று சொல்லி எடுத்து கொண்டது போல. தொலைதூரங்களை சற்று கைவிட்டது போலவும்.
இந்த அனுபவம் எல்லாம் தத்துவத்தில் நாம் பல சமயம் கருதுகோள்களாக அறிவது தான். ஆனால் அவற்றை தன்னிலையில் உணர்வது என்பது எத்தனை முக்கியமானது என்று எனக்கு இந்த பயிற்சிகள் காட்டி கொடுத்தது. அபூர்வமான வாழ்க்கை தருணங்களில் அல்ல அன்றாடமே இந்த விந்தையான போதத்தை அடையவும் அதில் பரிச்சயமாகவும் முடியும் என்பதும் தெரிந்தது.
இது போன்ற பயிற்சிகள் தத்துவ அறிதலை அங்கீகரிப்பது மட்டுமல்ல வழிநடத்தவும் முடியும், இந்திய உயர் தத்துவத்தில் யோக தியான பயிற்சிகள் வழியாகவே பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. நாகார்ச்சுனரின் ’மாத்யமிகா’ அதன் உச்சத்தில் சூன்யவாதத்தை பேசியபோது அதில் இருந்து யோக தியான பயிற்சி செய்த கிளைகள் சூன்யவாதம் அதன் இன்மை தன்மையை மட்டுமே சொல்கிறது, நிர்வானத்தில் உணரும் நேர்நிலை அனுபவத்தை சொல்ல வேறு வகை கருதுகோள்கள் வேண்டும் என்று அதை வளர்த்தெடுத்தனர்,
சித்தமாத்ர/யோகாசார மரபு தர்க்கத்தில் இருந்து அல்ல தியான அனுபவத்தில் இருந்தே இந்த அறிதலை பெற்றது, அதனாலேயே தர்க்கத்தால் தீவிர மாத்யமிகா பிரிவான ’கெலுக் பா’ போன்ற பிரசங்கிக பிரிவுகளால் விமர்சனத்துக்குள்ளானது, இப்போது வரை திபத்திய பௌத்தத்தில் அந்த விவாதம் தொடர்கிறது. ஆனால் யோகாசார மரபு புத்தரின் அநாத்ம கொள்கைக்கு எதிரானது என்று தோன்றக்கூடிய ஸ்வசம்வேதனா (reflexive awareness) ஆலயவிக்ஞானா (storehouse consciousness) ஆகியவற்றை ஏற்று வளர்த்ததற்கு இந்த தியான அனுபவங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. ஐந்து ஸ்கந்தங்கங்களில் ஒன்றான விக்ஞானம் அல்லாது பாலி சூத்திரங்களில் புத்தர் வேறு ஒரு விக்ஞானத்தை குறித்து சில இடங்களில் பேசுகிறார் அல்லது குறிப்புணர்த்துகிறார் என்பதை விக்ஞான வாதிகள் தங்கள் வாதமாக முன்வைக்கின்றனர்.
ஏதாயினும் மாத்யமிக தர்க்கத்தின் இறுக்கம் தளர்ந்து நேர்நிலை அனுபவம் பேசும் இந்த பௌத்த மரபே உலகலாவ வளர்ந்தது. போதிதர்மர் வழி சென்ற யோகாசார மரபின் தியான பௌத்தமே(தியான்) சீனாவில் சான் எனவும் கொரியாவில் ஷாங் எனவும் ஜப்பானில் ஸென் எனவும் வளர்ச்சி பெற்றது. பல்வேறு ஹட யோக மற்றும் தியான பயிற்சிகளை கொண்ட டொக்ஸென்(அதியோகம்) போன்ற பள்ளிகளும் திபத்தில் உள்ளன. ஆனாலும் இவையெல்லாவற்றுக்கும் நாகார்ச்சுனரின் சூன்யவாதம் அடிப்படையே என்பதை மறுக்க இயலாது. ஆனால் ஒரு கலைஞனாக எனக்கு எப்போதும் தர்க்கம் மீறி உள்ளுணர்வில் எழுந்த அதன் மேலதிக வளர்ச்சி நிலையே உண்மையை நெருங்குவதாக தோன்றும்.
இந்த மூன்று நாள் பயிற்சியில் நான் ஸ்வசம்வேதனமோ அல்லது அத்வைதத்தின் ஸ்வயம்ப்ரகாஸத்தையோ கண்டேன் என சொல்ல முடியாது. ஆனால் அதை நோக்கிய ஒரு பாதையை என்னால் கொஞ்சம் உணர முடிந்தது என்றே சொல்வேன். நாம-ரூபமற்ற போதம் அல்ல, என் மனதில் எப்போதும் ஒன்றோ மற்றொன்றோ என ஒரு பொருளே அல்லது சிந்தையே இருந்தது. ஆனால் அந்த அறிபடுபொருளில் ஒரு ஒருமையையும் மையத்தையும் ஓரளவு உணர்ந்தேன். எண்ணங்களை தியானித்தல் என்பதை போலவே உடலையும், உடல் செயற்பாட்டையும் தியானிக்க முடியும் என்பது தெரிந்தது. இவையிரண்டுமே முதற்படிகள் அதன் முதற்படிகள்.
மூன்று நாள் முகாம் முடிந்ததும் பெரிய பயணம் சென்று வரும்போது தோன்றும் தனிமையும் முழுமையுணர்வும் தோன்றியது. உடலால் ஒரு பயணம், உடல்வழியே ஒரு பயணம்,
குருஜி சௌந்தருக்கு நன்றி
அஜிதன்