கோணங்கி, பாலியல்குற்றச்சாட்டு, எழுத்தாளர்கள்…

கோணங்கி

எழுத்தாளர்கள் அல்லது பிரபலங்கள் பற்றிய பாலியல் குற்றச்சாட்டுகள், அது சார்ந்த வம்புகளில் நான் இன்று வரை கருத்து ஏதும் தெரிவித்ததில்லை. முதன்மைக் காரணம் அன்றன்றைய வம்புகளில் ஈடுபடுவதில்லை என்பது. இரண்டாவது காரணம், நான் அதில் என் கண்டனத்தை தனியாகத் தெரிவிக்க வேண்டியதில்லை, என் நிலைபாடு அனைவருமறிந்ததாகவே இருக்கும்  என்பது.அதோடு,  நான் தொடர்பு கொண்டிருக்கும் நபர்கள் மேல் அக்குற்றச்சாட்டுகள் வந்ததில்லை என்பதும் காரணம்.

ஆனால் அண்மையில் மூன்று நிகழ்வுகள்.

ஒன்று ,இருபதாண்டுகளுக்கு முன் என் நண்பராக இருந்தவரும் சொல்புதிது இதழுடன் தொடர்புகொண்டிருந்தவருமான செந்தூரம் ஜெகதீஷ் ஒரு பெண்ணிடம் பாலியல் மீறலில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டு.

செந்தூரம் ஜெகதீஷுக்கு நான் பலவகையிலும் உதவிசெய்ததுண்டு. அவருக்கு வேலை வாங்கிக்கொடுத்ததும் நான்தான். என் சிபாரிசால் வெங்கட் சாமிநாதன் மற்றும் திலீப்குமார் இருவரும் என்.டிடி.வி தலைவர் ஜெனிஃபர் அருளிடம் பரிந்துரை செய்தார்கள். துணிக்கடை ஏஜெண்ட் ஆக இருந்த அவர் ஊடகவியலாளராக ஆனார் -போதிய கல்வித்தகுதி இல்லாதபோதிலும். அது நட்பு கருதி நான் செய்த உதவி.

ஆனால் செந்தூரம் ஜெகதீஷுடன் எனக்கு இருபதாண்டுகளாக அணுக்கமேதுமில்லை. என் வாசகர், நண்பராக அவர் இருந்த காலகட்டத்தில் அவருடைய ஆளுமையில் ஓர் அசட்டுத்தனத்தை மட்டுமே நான் கண்டிருக்கிறேன். அதை ஒரு நண்பராக நான் பொருட்படுத்தவுமில்லை. நானும் இன்னொருவகை அசடுதான். ஆனால் அவரது அந்த அசட்டுத்தனமே தீமையின் விளைவை அளிக்க ஆரம்பித்தபோது முழுமையாக விலகிக்கொண்டேன்.

செந்தூரம் ஜெகதீஷின் பிற்கால மாற்றங்கள் எனக்கு தெரியாது. அவர் மிகக் கடுமையாக என்னைப்பற்றி எழுதுகிறார் என்று சொல்லி அறிந்திருக்கிறேன். எதிர்வினையாற்றியதில்லை. அப்பாலியல் குற்றச்சாட்டு ஆதாரங்களுடன் வெளிவந்ததை சுட்டிக்காட்டியிருந்தனர். என் பதில் இதுவே, இருபதாண்டுகளுக்கு முன் நானறிந்த செந்தூரம் ஜெகதீஷ் அல்ல அவர். என் பார்வையில் இலக்கியவாதி அல்லது இலக்கியவாசகர் என்னும் இரு தகுதிகளுமில்லாத, பலவகை உளச்சிக்கல்கள் கொண்ட எளிய மனிதர் அவர். அதற்குமேல் நான் சொல்ல ஒன்றுமில்லை.

இரண்டாவதாக, இன்று மணல்வீடு ஹரிகிருஷ்ணன் பற்றிய ஓரினச்சேர்க்கைக் குற்றச்சாட்டு சதீஷ்குமார் என்பவரால் முன்வைக்கப்பட்டுள்ளது.

மணல்வீடு ஹரிகிருஷ்ணனை என் தளத்தில் நான் அறிமுகம் செய்திருக்கிறேன். நாட்டாரியல் சார்ந்து அவர் பணியாற்றுகிறார் என்பதனாலும், நாஞ்சில்நாடனின் சிபாரிசினாலும்தான் அதைச் செய்தேன். என் வாசகர்கள் பலர், குறிப்பாக வெளிநாட்டினர், அதன்பொருட்டு அவருக்கு உதவியும் செய்தனர்.

ஆனால் பின்னர் அவர் மேல் பல குற்றச்சாட்டுக்கள் நண்பர்களால் சொல்லப்பட்டன. நிதி ஒழுங்கு சார்ந்தவை. மிகத்தீவிரமானவை. ஆகவே அவரைப் பற்றிய எச்செய்தியையும் பத்தாண்டுகளுக்கும் மேலாக நான் வெளியிடவில்லை. நிதியளிப்பவர்களுக்கும் அவருக்குமான சிக்கல் அது. அவரை நான் இலக்கியவாதியாகவோ இதழாளராகவோ எவ்வகையிலும் பொருட்படுத்தத் தக்கவராக கருதவுமில்லை.

மூன்றாவதாக, இப்போது கோணங்கி மீது ஓரினச்சேர்க்கைக்கு தூண்டினார் என்று குற்றச்சாட்டுக்கள் பலரால், வெளிப்படையாக, இணையத்தில் முன்வைக்கப்படுகின்றன. கோணங்கி முப்பதாண்டுகளுக்கு முன்பு எனக்கு வேண்டியவராக இருந்தார். அவருடன் பயணம் செய்துள்ளேன். அவரைப் பற்றி எழுதியிருக்கிறேன். இப்படிப்பட்ட இயல்பின் எந்த ஒரு சான்றும் அவரிடம் நான் கண்டதில்லை. நேற்று காலைவரை எவரும் என்னிடம் ஒரு சொல்கூடச் சொன்னதில்லை. பவா செல்லத்துரையிடம் பேசினேன். அவருக்கும் ஒன்றும் தெரியாது. அவரும் அதிர்ந்துபோயிருக்கிறார்.

அப்படியென்றால் இக்குற்றச்சாட்டை எப்படி எடுத்துக் கொள்வது? இளங்கோ கிருஷ்ணன் அவருக்கு முன்னரே தெரியும் என இப்போது சொல்கிறார். கடலூர் சீனு அவருடைய நண்பருக்கு இப்படி ஓர் அனுபவம் ஏற்பட்டதாக இப்போது குறிப்பிடுகிறார்.மேலும் பலர் ஆம் என்கிறார்கள். எனக்கு இவை முற்றிலும் புதிய செய்திகள். என்னிடம் இவை பற்றி எவரும் உரையாடுவதில்லை. அல்லது, இவை பற்றிய உரையாடற்களத்திற்கு வெளியே நானே என்னை வைத்திருந்திருக்கிறேன்.

ஆனால் பெரிய அதிர்ச்சி ஏதுமில்லை. கலைஞனின் மனம் இருளுக்குள்ளும் ஒளிக்குள்ளும் மாறிமாறிச் செல்வது. அவனால் கட்டுப்படுத்தப்பட இயலாதது. நுண்ணுணர்வு என்பது நேர்நிலையிலும் எதிர்நிலையும் செயல்படுவதுதான். பாலுணர்வு என்பதுக் கலைஞர்களிடம் ஒரு நோய்க்கூறாகவே ஆகக்கூடும். அவ்வியல்பை கருத்தில்கொண்டே அவனை, அவன் கலையை அணுகவேண்டும். அதற்குமேல் சொல்ல ஏதுமில்லை.

நான் ஓர் எழுத்தாளனாகவே இதைச் சொல்கிறேன். என் அக- புற நடத்தையை இதுவரை முற்றிலும் கட்டுப்படுத்தியே வந்துள்ளேன். பொதுக்களத்தில் ஒழுக்க எல்லைகளை நான் கறாராகப் பேணுவது என் படைப்பியக்கம் அதனால் பாதிக்கப்படலாகாது என்பதனால்தான். ஆனால் நான் ஒழுக்கவாதி அல்ல. ஒழுக்கத்தை மாறாநெறியாக நான் முன்வைப்பதுமில்லை. ஆகவே இப்போது பாய்ந்து குதறும் கும்பலில் நான் சேரப்போவதில்லை.

கோணங்கிமேல் இளைஞர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு உண்மை என்றால் வலுவான பொதுச்சமூகக் கண்டனத்திற்குரியது. முதிரா இளைஞர்களிடம் அவர் அவ்வாறு நடந்துகொண்டிருந்தால் அது சட்டப்படி குற்றமும் கூட. ஆகவே ஒரு சமூக உறுப்பினராக அச்செயலை கண்டிக்கிறேன். இளைஞர்கள் இனிமேல் அவரிடம் கவனமாக இருக்கலாம்.

கோணங்கி பொதுவில் மன்னிப்பு கோரலாம். அல்லது இன்று வந்துள்ள பொதுக்கண்டனமே பெரிய தண்டனைதான். எழுத்தாளனுக்கு அது ஓர் இறப்பு. அவரை நான் அறிந்தவரை மனமுடைந்திருப்பார் என்றே எண்ணுகிறேன். குடும்பத்தைச் சாந்தே செயல்படுபவர் அவர். இப்போது குடும்பச்சூழலில் இருந்து அன்னியமாகிவிடுவார். அவர் இதிலிருந்து மீண்டுவரவேண்டும். மீண்டும் அவருக்கு நண்பர்களின் ஆதரவு இருக்கவேண்டும்.

நான் கோணங்கியை அவருடைய தொடக்ககாலச் சிறுகதைகளுக்காக முதன்மையான இலக்கியக் கலைஞராகவே மதிக்கிறேன். இந்த விவாதத்தால் அம்மதிப்பீடு மாறப்போவதில்லை.

மௌனி தமிழ் விக்கி

இந்தச் சந்தர்ப்பத்தில் மௌனியும் நகுலனும் தன்னிடம் அவ்வாறு நடந்துகொண்டதாகவும், அது கலைஞர்களின் வழிமுறை என்றும் கோணங்கி தன்னிடம் சொன்னதாக குற்றம் சாட்டுபவர் ஒருவர் எழுதியிருக்கிறார். அவ்வாறு சொல்லியிருந்தால் அது அந்த தேவையின்பொருட்டு சொல்லப்பட்டது. ஆனால் இந்த வம்புகள் வழியாக அது நினைவில் நிறுத்தப்பட்டுவிடலாம். அது முழுக்கவே பொய்யானது. அதை முன்வைக்கவேண்டிய கடமை உண்டு என்பதனாலேயே இதை எழுதுகிறேன்.

நகுலனை எனக்கு நன்றாகவே தெரியும். நாஞ்சில்நாடன் போன்றவர்களுக்கு அவர் மிக அணுக்கமானவர். அவர்மேல் அத்தகைய பேச்சு எதுவும் எழுந்ததில்லை. அவருக்கு பாலியல் சார்ந்த மிகத்தீவிரமான உடற்குறைபாடுதான் இருந்தது. வேறுபல உடற்சிக்கல்களும் குடிப்பழக்கமும் இருந்தன. அவற்றை நீல.பத்மநாபன், ஆ.மாதவன் ஆகியோர் புனைவுகளில் பதிவு செய்திருக்கிறார்கள்

மௌனியின் குணச்சிக்கல்கள் பற்றி பலரும் எழுதியுள்ளனர். தாசிகளுடனான உறவு, சாராயம் குடிக்கும் வழக்கம், கூடவே சாதிமேட்டிமைத்தனம் ஆகியவை அவரை வழிபட்ட வெங்கட் சாமிநாதன் முதல் அவரை எதிர்த்த பிரமிள் வரை பலரால் பதிவுசெய்யப்பட்டுள்ளன. ஆனால் பாலியல் சார்ந்து இப்படி ஒரு சித்திரம் பதிவானதில்லை. அவரை மிக அணுக்கமாக அறிந்த திலிப்குமார் போன்றவர்கள்கூடச் சொன்னதில்லை.

மேலும் மௌனி 1907ல் பிறந்தவர். கோணங்கி அவரை முதன்முதலில் சந்திப்பது தன் இருபத்தியாறாவது வயதில் ,1984 ல். அதற்கு அடுத்த ஆண்டுதான் நான் கோணங்கியைச் சந்தித்தேன். சேர்ந்து மௌனியை சந்திக்கச் செல்லலாம் என கோணங்கி என்னை அழைத்தார். அப்போது மௌனிக்கு 77 வயது. அடுத்த ஆண்டு, 1985ல் மௌனி மறைந்தார்.

மௌனியின் முதுமை மிகத்துயரமானது. 1982ல் அவருடைய இரு மகன்கள் விபத்தில் மறைந்து இன்னொரு மகன் மனநோயாளியாகியிருந்தான். மௌனியின் கண் பார்வையும் பெரும்பாலும் போயிருந்தது. நரம்புச்சிக்கலால் அவரால் எழுந்து நடமாடமுடியவில்லை என்றும், கைகளை ஊன்றி நண்டுபோல தவழ்ந்தே வீட்டுக்குள் நடமாடினார் என்றும் திலீப்குமார் சொன்னார். (மௌனியுடன் கொஞ்சதூரம் என்னும் கட்டுரையிலும் குறிப்பிட்டிருக்கிறார்)

நகுலன்

நகுலன் தமிழ் விக்கி

நகுலனை கோணங்கி சந்திப்பது 1987 ல் குற்றாலம் கவிதைமுகாமில், அதன்பின்னரே அவரை தேடிச்சென்று இல்லத்தில் சந்தித்தார். அப்போது நகுலனுக்கு வயது 66 வயது. அதற்கு எட்டாண்டுகளுக்கு முன்னரே நகுலனுக்கு நரம்புத்தளர்ச்சியும் நினைவிழப்பும் தொடங்கியிருந்தது. பின்னர் அது அல்ஷைமர் நோயாக மாறியது. அவருடைய அந்த மறதிநிலையைத்தான் ’மிஸ்டிக் கிழவன்’ என்றெல்லாம் கோணங்கி போன்றவர்கள் ’ரொமாண்டிஸைஸ்’ செய்தார்கள். அவர்களால் அதை நோய் என உணர முடியவில்லை.

நான் நகுலனை 1985ல் என் இருபத்து மூன்றாவது வயதில் ஆ.மாதவனுடன் சென்று சந்தித்தேன். பலமுறை அவருக்கு பிடித்தமான மதுக்குப்பியுடன் சென்று பார்த்துள்ளேன். என்னை அவருக்கு நன்றாகவே தெரியும். ஆனால் 1987ல்  நகுலனால் சீராக எந்த முகத்தையும் நினைவுகூர முடியவில்லை. இளமை முழுக்க அவருடன் அணுக்கமாக இருந்த நாஞ்சில்நாடனையே நீ யார் நீ யார் என்று திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டிருந்தார். அவரால் இயல்பாக நடமாட முடியாது. கைகால்களில் கடுமையான நடுக்கமும், நாக்குழறலும் இருந்தன.

ஆகவே இவ்விரு எழுத்தாளர்கள் பற்றியும் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு சிலரால் முன்வைக்கப்படும் அவதூறுகள் அருவருப்பானவை. இருவருமே மிக அபூர்வமான அறிவுத்திறன் கொண்டவர்கள். மௌனி ஒரு கணிதமேதை என்றே சொல்லத்தக்கவர். இசைவிற்பன்னர். நகுலனின் ஆங்கில அறிவு பிரமிப்பூட்டுவது. ஆனால் இருவரின் வாழ்க்கையும் இருவகையில் சிதைவுண்டது. இருவருமே இயல்பான வாழ்க்கை அமைந்திருந்தால் மிகப்பெரிய சமூகநிலைக்குச் சென்றிருக்கவேண்டியவர்கள். எழுத்தாளர்களாக எவ்வளவு மதிக்கத்தக்கவர்களோ, மனிதர்களாக அவ்வளவு பரிதாபத்திற்குரியவர்கள்.

மௌனி தொடர் பொருளியல் வீழ்ச்சிக்காளானார். அதன்பின் அவருடைய மொத்த வாழ்க்கையும் படிப்படியான சரிவுதான். நகுலனுக்கு அவருடைய ஐந்து வயதில் முதல் வலிப்பு நோய் வந்தது. மூளையில் உயிர்மின்சாரம் அதிகமாவதன் விளைவு. அன்றெல்லாம் அதற்குச் சரியான மருந்துகள் இல்லை. அவர் அம்மா அவரை தன் அருகிலேயே வைத்துக்கொண்டு வளர்த்தார். வலிப்புநோய் அடிக்கடி வந்து கடைசிவரை நீடித்தது. அதன்விளைவான உடற்குறையுடன் வீட்டுக்குள்ளேயே வாழ்ந்தமையால் உருவான ஆளுமைக்குறுகுதலும் அவருக்கு இருந்தது.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு எழுத்தாளர்களை ஒட்டுமொத்தமாக அவமதிக்கவும், இலக்கிய முன்னோடிகளையே சிறுமைசெய்யவும் சமூகவலைத்தளக் கும்பல் ஒன்று முயல்கிறது. ஆகவேதான் இதை எழுதினேன். இதற்குமேல் விவாதமோ உரையாடலோ இல்லை.

முந்தைய கட்டுரைகா.மு.ஷெரீப்
அடுத்த கட்டுரைதிணைகள் கவிதை விருது