அன்புள்ள ஜெ,
ஆனையில்லா தொகுப்பை இன்றுதான் வாசித்து முடித்தேன். ஒவ்வொரு கதையிலுமுள்ள அந்த அபாரமான எளிமையும் ஃப்ளோவும்தான் எழுத்தில் வந்தாகவேண்டிய உச்சம். அதை மொழியின் மெருகு என்று சொல்வதா, மொழிக்குப்பின்னாலுள்ள மனதின் பிரகாசம் என்று சொல்வதா என்று தெரியவில்லை. உலகம் முழுக்க அத்தகைய எழுத்துக்கள்தான் உச்சமாகக் கொண்டாடப்படுகின்றன. நட் ஹாம்ஸன் முதல் வில்லியம் சரோயன், மார்க்யூஸ் வரை.
நான் மலையாளத்தில் பஷீரில் அப்படிப்பட்ட அழகை கண்டிருக்கிறேன். தமிழ் மொழியாக்கத்திலும் சரி, ஆங்கில மொழியாக்கத்திலும் சரி அது உள்ளது. அதேபோல பால் ஸகரியா கதைகளிலும். தமிழில் நாம் சிற்றிதழ்களுக்குள் நுணுக்கி நுணுக்கி எழுதுவதனாலும், அபூர்வமாக ஏதாவது எழுதுவதனாலும் அந்த ஈஸினெஸ் வந்தது குறைவு. ஈஸினெஸ் வரும். அதாவது எழுத்தாளர் ஒரு நிலையான ஸ்டைல் வைத்துக்கொண்டு அதையே எழுதினால் அப்படித் தோன்றும். ஆனால் அது கலை கிடையாது.
இந்தக்கதைகளில் உள்ள கதாபாத்திரங்கள் எவரும் வர்ணிக்கப்படவில்லை. பெரும்பாலும் அவர்கள் போகிறபோக்கில் பேசும் உரையாடல்களில் இருந்துதான் அவர்களின் குணாதிசயங்கள் தெளிவடைந்து வருகின்றன. நிகழ்வுகள் ஒன்றும் உணர்ச்சிகரமானவை அல்ல. அன்றாடக்கதைகள். அன்றாடம்தான் எல்லாமே. ஆனால் மனிதர்களின் குணநுட்பங்களும், அதற்கான வாழ்க்கைச்சம்பவங்களும் வந்துகொண்டே இருக்கின்றன. எங்கும் துக்கம் இல்லை. மனிதவாழ்க்கை என்ற கொண்டாட்டம்தான் உள்ளது. அதிலே நாய்கள், குரங்குகள் எல்லாமே உள்ளன.
இன்னொருவனின் பூனையை நாம் ஏன் பூனையாக்கவேண்டும் என்று ஒரு வசனம் வருகிறது. எல்லா புலிகளையும் சாதாரணமாக பூனையாகக் காட்டிவிடுகிறது இந்த தொகுப்பு.
ஸ்ரீனிவாஸ்