ஏ.வின்செண்ட் இயக்கிய தீர்த்தயாத்ரா என்னும் இந்தப்படம் 1972ல் வெளிவந்தது. என் அம்மாவையெல்லாம் பிழியப் பிழிய அழைவைத்த படம். மிக எளிமையான கதைதான். ஓர் அம்மா இரண்டு பெண்கள், ஒரு பையன். அவர்களின் தந்தை இறந்துவிட குடும்பம் அனாதையாகிறது. பிழைப்புதேடிக் கிளம்பும் அவர்களின் வாழ்க்கை அழிகிறது.
முழுமுதற் காரணம் ஆண்துணை இல்லாத பெண்ணை அடைய நினைக்கும் ஆண்களின் காமவேட்டை. கிடைக்காத பெண்ணை அவதூறுசெய்து அழிக்கிறார்கள். எந்தப் பெண்ணைப் பற்றி எவர் அவதூறு செய்தாலும் அதை நம்புகிறது ஒட்டுமொத்தச் சமூகமும்.
ஒவ்வொருவராக சாகும் படத்தில் கதைநாயகன் அவதூறை நம்பி கதைநாயகியை கைவிடுகிறான். உண்மை உணர்ந்து அவன் வரும்போது அவள் இறந்து விடுகிறாள். அவன் மன்னிப்புக் கேட்பதுதான் கிளைமாக்ஸ். ஆனால் அவள் மன்னித்தாளா இல்லையா என்பது படத்தில் இல்லை. வெறுமே பார்த்துவிட்டு கண்களை மூடிக்கொள்கிறாள். வெறும்பார்வை. அதுதான் உச்சகட்டம்.
1972ல் மலையாளச் சினிமா ரசிகர்களுக்கு அந்தப்பார்வை பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது. அவள் மன்னித்தாளா இல்லையா என்பது பல ஆண்டுகள் பேசப்பட்டது. மிகுந்த பொருளியல் வெற்றி அடைந்தபடம். இப்போது யோசிக்கும்போது அசோகமித்திரனின் ‘தண்ணீர்’ உள்ளிட்ட நாவல்களின் பேசுபொருள் இது என்று படுகிறது. அந்த உசகட்டம்கூட ஒரு அசோகமித்திரன் ’டச்’ கொண்டதே.
சாரதா, மது, கவியூர் பொன்னம்மா, படாபட் ஜெயலட்சுமி ஆகியோரின் இயல்பான நடிப்பும், யதார்த்தமான காட்சிகளுமாக, மிகக்குறைவான நாடகத்தன்மை கொண்ட படம். நான் இதை 1974ல் பார்த்தேன். 12 வயது பையனாக. ஐம்பதாண்டுகள் கடந்தபின் இப்படத்தை இப்போது மீண்டும் பார்த்தேன். ஒரு பெரிய சுமை நெஞ்சில் அழுத்தவே செய்தது.
இன்று சோகப்பிழிவு எனத் தோன்றலாம். ஆனால் ஐம்பதாண்டுகளுக்கு முன் வாழ்க்கை இப்படித்தான் இருந்தது. ஒவ்வொரு பெண்ணும் அவதூறு என்னும் பேய்க்கு அஞ்சி வாழ்ந்தாள். வெறும் வம்பினாலேயே பெண்களின் வாழ்க்கைகள் அழிக்கப்பட்டன. கணவனால் அவர்கள் கைவிடப்பட்டனர். கல்யாணமே ஆகாமலிருந்தனர். தகுதியற்ற கல்யாணங்களில் சிக்கிக்கொண்டனர்.
90 சத காட்சிகள் இயற்கை வெயிலொளியில் எடுக்கப்பட்டவை. வின்செண்டின் சாகசமென்பது காட்சிகளில் நிழலாட்டத்தை அனுமதிப்பது என்பார்கள். அன்றைய குறைந்த பதிவுத் திறன் கொண்ட படச்சுருளில் அது மிக மிகக் கடினமானது. அன்றெல்லாம் மிக உயர்ந்த ஒளியை அமைத்தபின் ஒளிவடிகட்டிகள் போட்டுத்தான் இரவையே எடுப்பார்கள். பகல்கள் பளிச் என இருக்கும். இரவில் உருவங்கள் பளிச்சிடும். ஆனால் வின்செண்ட் பகலில் நிழலாட்டத்துடன் காட்சிகளை எடுத்துள்ளார்.
வின்செண்ட் எல்லா படங்களையும் இலக்கியத்தில் இருந்தே எடுத்திருக்கிறார். இந்தக் கதையும் வி.டி.நந்தகுமார் எழுதிய நாவலை ஒட்டியது. கமல்ஹாசனின் அணுக்கமான நண்பராக இருந்தவர் நந்தகுமார். நாவலிலும் ’அவள் என்ன நினைத்தாள்? யாருக்குத் தெரியும்?’ என்றுதான் கடைசிவரி இருக்கும்
படத்தில் அந்தக் குடும்பம் மகிழ்ச்சியாக இருந்த ஒரு தருணத்தில் வரும் பாடல் ‘சந்த்ரகலாதரனு கண்குளிர்க்கான் தேவி …’ என்னும் இரவு நடனம். என் நினைவில் நீண்டகாலம் இருந்தது அதுதான். அந்தப்படத்தின் மையத்துடன் எப்படியோ தொடர்புடைய பாடல். தேவி சிவனுக்காக ஆடுகிறாள். பெண் ஆணுக்காக வாழ்ந்து அழிகிறாள்
*
சந்த்ரகலாதரன்னு கண் குளிர்க்கான் தேவி
பந்தடிச்சு ஆடுந்நு சாஞ்சாடுந்நு
சஞ்சல சரணத்தில் சிலங்கள் கிலுங்ஙி
கொஞ்சும் தரிவளகள் தாளத்தில் குலுங்ஙி
பர்வதநந்தினி இந்நிவள்ங்கு அகம்படி
ஊர்வசி மேனக சுந்தரரிமார்
ரம்ப திலோத்தம நர்த்தகி மார்
மதனன் மீட்டுந்நு மணிவீண
நந்திகேசன் மிருதங்கம் முழக்குந்நு
மானச சரஸின்றே கரையில் உலஞ்ஞாடும்
மாலேய சுரபில மலர்வனியில்
சந்திர கிரணங்கள் சாமரம் வீசும்போள்
பந்துர நர்த்தனம் துடரூ நீ
*
சந்திரப்பிறை அணிந்தவனின் கண்கள் குளிர தேவி
பந்தாடுகிறாள் சாய்ந்தாடுகிறாள்
அசையும் கால்களில் சதங்கைகள் ஓசையிட்டன
கொஞ்சும் வளையல்கள் தாளத்தில் குலுங்கின
பர்வத நந்தினியாகிய இவளுக்கு இன்று துணை
ஊர்வசி மேனகை சுந்தரிகள்
ரம்பா திலோத்தமா நடனமங்கையர்
மன்மதன் மீட்டுகிறான் மணிவீணை
நந்தீஸ்வரன் மிருதங்கம் வாசிக்கிறான்
மானச சரஸின் கரையில் நிறைந்துகுலுங்கும்
மலர்ச்செடிகள் நிறைந்த பூங்காவனத்தில்
சந்திர கிரணங்கள் சாமரம் வீசும்போது
அழகுநடனத்தை நீ தொடர்க. தேவி தொடர்க.