சங்கத்தமிழர் மதம் – கடலூர் சீனு

இனிய ஜெயம்

நமது இந்தியத் தத்துவ அறிமுக வகுப்புக்கு பிறகு வாசகர்கள் வாசிக்க வேண்டிய புத்தகங்களில் இதுவும் ஒன்று. வகுப்புக்கு வெளியிலான பண்பாட்டு ஆர்வலர்களும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் சண்முகம் பிள்ளை அவர்கள் எழுதிய இந்த சங்கத் தமிழரின் வழிபாடும் சடங்குகளும். மிக முன்னர் திரு ஜடாயு அவர்கள் எனக்கு பரிந்துரை செய்த நூல்களில் ஒன்று இது.

சங்க காலம் என்று அழைக்கப்படும் பண்டைய தமிழர் வாழ்வின் அடிப்படைக் கூறுகளை உருவாக்கிய வழிபாட்டு மரபுகளில் வேத மரபு கொண்டிருந்த முதன்மையான அடிப்படையான இடத்தை இந்த நூல் ஆதாரங்களின் வழியே முன் வைக்கிறது. வேத மரபு, வேதத்தின் இந்திரன் போன்ற தெய்வங்கள், மாயோன், முருகன், முக்கண்ணன் வழிபாடு, பிற தெய்வங்கள், கோள்கள், இந்த வழிபாடுகள் நமது பண்டைய பண்பாட்டில் வகித்த இடம் அன்றைய சடங்கு நிலைகள் குறித்தெல்லாம் தமிழ் நிலம் சார்ந்த  விரிவான அடிப்படைகளை ஆதாரம் வழியே முன் வைக்கிறது.

சங்க இலக்கியப் பாடல்கள் அதன் செவ்வியல் தன்மையை எவ்விதம் அடைந்தது என்று ஒரு வாசகருக்கு கேள்வி எழுந்தால் இந்த நூலின் பகைபுலம் வழியே அவ்வினாவுக்கு விடை காண முடியும்.

ஆய்வாளர் ராஜ் கெளதமன் அவர்களின் பண்டைய தமிழ் சமுதாயத்தில் சாதிகளின் உருவாக்கம் போன்ற ஆய்வு நூல்களை இந்த நூல் வழியே விரித்துப் பொருள் கொள்ள இயலும்.

வேத நெறி ஊடாடாத தூய தமிழ் நிலம் சார்ந்த கற்பிதங்கள் அரசியல் நோக்குகளுக்கு தெளிவான பதில் இந்த நூல்.

இது போக சில மாதம் முன்பு சிறு தெய்வம் பெருந்தெய்வம் பிராமணயமாக்கம் சார்ந்து அரசியல் நோக்கில் கருத்தியல் அடித்தடிக்கள் நடந்த போது எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் அவர்கள் சங்கம் மருவிய காலத்தின் நூலான சிலப்பதிகாரத்தை முன்வைத்து பண்பாட்டு நோக்கில் ஒரு விளக்கம் அளித்திருந்தார்.

அது

….சிலப்பதிகாரத்தை படித்துக் கொண்டிருக்கும் போது சட்டென்று உறைத்தது. மாலதி என்ற பிராமணப் பெண் பால் கொடுத்துக் கொண்டிருக்கும் போது பால் விக்கி குழந்தை இறந்து விடுகிறது. அவள் கோவில் கோவிலாகச் செல்கிறாள்

“அமரர்தருக் கோட்டம், வெள்யானைக் கோட்டம் புகா வெள்ளை நாகர் தம் கோட்டம், பகல் வாயில் உச்சிக் கிழான் கோட்டம், ஊர் கோட்டம், வேற் கோட்டம், வச்சிரக் கோட்டம், புறம்பணையான் வாழ் கோட்டம், நிக்கந்தக் கோட்டம், நிலாக் கோட்டம்.”

பத்துக் கோட்டங்கள். ஒரு பெருந்தெய்வம் கூடக் கிடையாது (வேற் கோட்டம் என்பதை முருகன் கோவில் என்று எடுத்துக் கொண்டால் அதைத் தவிர). சிவன் இல்லை. விஷ்ணு இல்லை. கண்ணன் இல்லை. இராமன் இல்லை. கடைசியில் பாசண்டைச் சாத்தன் கோவிலுக்கு வருகிறாள். குழந்தை பிணத்தை இடாகினிப் பேய் தின்று விடுகிறது.

ஆனால் பின்னால் ஆய்ச்சியர் பாடுகிறார்கள். அதில் ராமன் இருக்கிறான். கண்ணன் இருக்கிறான். திருமாலின் அவதாரங்கள் பேசப்படுகின்றன. கடைசியில் அவன்தான் நாராயணன் என்றும் சொல்லப் படுகிறான். மாலதி பாப்பாத்தி. ஆய்ச்சியர்கள் பாப்பாத்திகள் அல்லர்.

இத்தகு  பண்பாட்டு அடிப்படை நிலைகள் சார்ந்த உருவாக்கம் சங்க காலத்தில் எவ்விதம் இருந்தது அதில் வேத நெறியின் இடம் என்ன  போன்றவற்றை எல்லாம் அறிந்து கொள்ள, அறிவுத் தேட்டம் கொண்ட ஒவ்வொருவரும் அவசியம் வாசித்திருக்க வேண்டிய நூல் இது.

கடலூர் சீனு

சங்கத்தமிழரின் பண்பாடும் சடங்குகளும் மு சண்முகம் பிள்ளை இணைய நூலகம்

முந்தைய கட்டுரைஅறம், Stories of the True, ஒரு சந்திப்பு
அடுத்த கட்டுரைகற்றங்குடி வேல்சாமி மௌனகுரு சுவாமிகள்