எழுதுதல், கடிதம்

அன்புள்ள ஜெ,

நீண்ட நாட்கள் கடிதம் எழுதாமல் ஏதோ தனிமையில் பயணிப்பது போல இருக்கிறது. தொடர்ந்த பணிச்சுமையும், உலகியலும் அழுத்திக் கொண்டிருக்கிறன. ஏதாவது எழுத வேண்டும் என்று சில நாவல்கள் ஒற்றை வாசிப்பில் நின்றிருக்கின்றன. உங்களுடைய தளத்தை மட்டும் ஒரு வழிப்பாதையில் செல்வதைப்போல வாசித்துக் கொண்டிருக்கிறேன். இடையில் ஒரு இந்திய பயணம் நாளை முதல்.

இதனிடையில் என்னுடைய இரண்டாவது நாவல் முடியும் தருவாயில் இருக்கிறது. எப்படியும் ஒன்றிரண்டு மாதத்துக்குள் முடித்துவிட வேண்டும் என்று கிடைக்கும் சிறிது நேரத்தையும் அதற்காக பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். கரையெல்லாம் நதிகள் என்று தற்போதைக்கு பெயர் வைத்திருக்கிறேன். நன்றாக வந்து கொண்டிருக்கிறது. உண்மையில் எழுதிப் பார்ப்பதன் வழியாக நான் சில தடைகளை உடைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் என்றே சொல்ல வேண்டும். பார்க்கலாம்.

இந்த நேரத்தில் எனக்கு அனுபவப்படும் நிகழ்வுகள், எழுதிக் கொண்டிருப்பது நடக்கிறதா அல்லது நடப்பதை எழுதிக் கொண்டிருக்கிறோமா என்ற சந்தேகத்தையும் பயத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறன. வழக்கம் போல எழுதி முடித்ததும் உங்களுக்கு அனுப்ப வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய நோக்கமாக இருக்கிறது. இந்த நோக்கம் எப்படி இவ்வளவு ஆற்றலைக் கொடுக்கிறது என்பது ஆச்சரியம் தான்.

அன்புடன்,

சி. பழனிவேல் ராஜா.

***

அன்புள்ள பழனிவேல் ராஜா

நாம் எழுதுவது நம்மைத்தான். ஆகவே அது எப்படியோ நம் நிகழ்காலம் இறந்தகாலம் மற்றும் எதிர்காலம் சார்ந்ததாகவே இருக்கும். எழுதுங்கள்.

நம் சூழலில் எழுத்தாளனின் வாழ்க்கை என்பது அன்றாடத்தின் அழுத்தம் மற்றும் சலிப்புடன் ஓயாது போராடி அடையவேண்டிய ஒன்றாகவே இருக்கிறது.

ஜெ

முந்தைய கட்டுரைபௌத்தம் – சோ.ந.கந்தசாமி
அடுத்த கட்டுரைபி.எஸ்.நடராஜ பிள்ளை, பலிக்காத பரிகாரங்கள்