அகநிலம் – கடிதம்

தங்கப்புத்தகம் மின்னூல் வாங்க 

தங்கப்புத்தகம் வாங்க 

அன்புள்ள ஜெ

என் வாழ்க்கையில் நான் வாசித்த நூல்களில் தலையாயது என்று ஒன்றைச் சொல்லவேண்டும் என்றால் தங்கப்புத்தகம் நூலைத்தான் சொல்வேன். மெய்யாகவே ஓர் ஆன்மிகத் தங்கப்புத்தகம் அது. அந்தக் கதைகள் இணையத்திலே வெளிவந்தபோது வாசித்தேன். ஆனால் அவை மாறி மாறி வந்தமையால் ஒரு முழுமையான சித்திரம் அப்போது உருவாகவில்லை. இன்று நூலாக வாசிக்கையில் பெரும் திகைப்பும் நுண்மையான அறிதல்களும் உருவாகின்றன.

நான் எற்கனவே லாப்ஸிங் ராம்பா போன்றவர்கள் எழுதிய திபெத் பற்றிய கதைகளை வாசித்துள்ளேன். ஓஷோ சொன்னதனால் திபெத்தியன் புக் ஆப் டெத் வாசித்தேன்.  ஆனால் தங்கப்புத்தகம் முற்றிலும் வேறானது. இது திபெத்தை ஒரு குறியீடாக எடுத்துக்கொண்டு நம்முடைய ஆன்மிகப்பயணத்தைப் பற்றிப் பேசுகிறது. ஒவ்வொரு கதையும் திகைப்பையும் மலைப்பையும் அளிக்கிறது. மூளைக்குள் என்னமோ நிகழ்கிறது. நாம் தியானத்திலே இருக்கிறோமா என்ற சந்தேகம் வந்துவிடுகிறது.

தங்கப்புத்தகம், கூடு, கரு ஆகிய மூன்று கதைகளும் திபெத் பின்னணியில் அமைந்தவை. கொஞ்சம் தியானம் பயில்பவர்களுக்கு கூடு, தங்கப்புத்தகம், கரு என்னும் தலைப்புகளே ஆழமான அர்த்தங்களை அளிக்கும். காக்காய்ப்பொன் சிவம் நிழல்காகம் போன்ற கதைகள் தனியாக வேறு தளத்தைச் சேர்ந்தவை என்றாலும் இந்தக்கதைகளின் ஒளியில் அவை மேலும் ஆழம் பெறுகின்றன. ஒவ்வொரு கதையை ஒட்டியும் ஏராளமாகப் பேசமுடியும். இந்தப்புத்தகத்தை தியானம் பயிலும் ஒவ்வொருவரும் வாசித்தாகவேண்டும். ஒருவரோடொருவர் விவாதிக்கவேண்டும்.

நிழல்காகம் கதையை நான் என் நண்பர்களிடம் சொன்னேன். எல்லாருமே தியானம் பயில்பவர்கள். அனைவருமே திகைப்புடன் அவர்களின் சொந்த அனுபவம் அது என்றார்கள். காக்காய்ப்பொன் கதையும் அதேபோலத்தான். நாம் எதை பழகுகிறோம், எப்படி நம்மை இயற்கை பழகிக்கொள்கிறது என்பதெல்லாம் நுட்பமாக உணரத்தக்கது

இந்தக் கதைகளை ஏன் பயிலவேண்டும்? இதையே நேரடியாக உரைகளாகச் சொல்லியிருக்கலாம். ஆனால் அப்போது அவை ஐடியா ஆகவே நம்முள் சென்றுசேரும். அனுபவமாக ஆகாது. அதற்குத்தான் கதைகள். கதைகளாக மட்டுமே சொல்லமுடியும். அல்லது சிம்பாலிக் சடங்குகளாகச் சொல்லமுடியும். ஆகவேதான் புராணங்களும் கோயில்களும் உருவாயின. இந்தக்கதைகளை ஒருவகையான நவீன புராணங்கள் என்று சொல்லலாம்.

நன்றி

திரு.மாணிக்கவாசகம்

அன்புள்ள ஜெ

தங்கப்புத்தகம் படித்தேன். ஒரே வார்த்தை. ஏதாவது ஒரு வகையில் யோகமோ தியானமோ பயில்பவர்கள் கண்டிப்பாக வாசிக்கவேண்டிய புத்தகம். அவர்களால்தான் இதைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியும். கதைகள் எல்லாமே தியான -யோக உருவகங்களாகவே உள்ளன

சிவா ராஜ்குமார்

முந்தைய கட்டுரைசுனில் கிருஷ்ணன் உரையாடல், பதிவு
அடுத்த கட்டுரைதியானம், திரளும் தனிமையும்