தேவிபாரதி ஆவணப்படம் – கடிதம்

அன்புள்ள ஜெ,

வணக்கம்‌. தன்னறம் விருதின்பொருட்டு எடுக்கப்பட்ட எழுத்தாளர் தேவிபாரதி அவர்களின் ஆவணப் படத்தை பார்த்தேன்;  குழுவினரின் தரமான ஆக்கம்.

பள்ளிப் பருவத்திலேயே இப்படி ஒரு வீழ்ச்சியைக் கண்ட வாழ்வு அதிர்ச்சி அளிக்கிறது. வாழ்வு மீதான நம்பிக்கையும் எதிர்கொள்வதற்கான வீராப்பும் அப்படி ஒரு அநீதி நிகழ்ந்த பின்னும் மொத்தக் குடும்பத்தினருக்கே இருந்தது வணக்கத்திற்குரியது.

ஆனால் தேவிபாரதியின் தந்தை ‘அறிவற்றங் காக்கும் கருவி’ எனச் சொல்லித் தரும் சராசரி ஆசிரியர் அல்ல; அப்படி ஒன்றைத் தன் மகனுக்கு அடுத்திருந்து உருவாக்கித் தந்துவிட்டுச் சென்றிருக்கிறார். அவர் தடுமாறும் போதெல்லாம் புத்தகங்களே அவரை காத்திருக்கின்றன. அவரின் அனுபவங்கள் வாசிப்பின் மீதும், மன்னிப்பின் மீதும், வாழ்வின் மீதும் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

அவரது பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் பதிவின் கீழ் பின்னூட்டமிட்டிருப்பதைக் கண்டேன். எழுத்தும் வாசிப்பும் குடும்பத்தால் அங்கீகரிக்கப்படுவதையும், அடுத்த தலைமுறைக்கு கைமாறுவதையும் காண்கையில் அவர் தந்தை ஆக்கித் தந்த அழியாச் செல்வம் என் கண்முன்னே விரிகிறது.

அவருக்கு என் சிரந்தாழ்ந்த வணக்கங்கள்.

நன்றி.

விஜயகுமார் சாமியப்பன்

முந்தைய கட்டுரைபனிமனிதன் – கடிதம்
அடுத்த கட்டுரைஆர்.பொன்னம்மாள்