சிறுநூல்கள்

யானை டாக்டர் வாங்க

வணங்கான் வாங்க

நூறு நாற்காலிகள் வாங்க

அறம் வாங்க 

அண்மையில் நண்பர் போதகர் காட்ஸன் தன்னுடைய கிறிஸ்தவ சபையின் (ஆங்கிலிகன் சபை) 40 ஆவது ஆண்டுநிறைவுக்காக 5 மார்ச் 2023 ல் கொண்டாடும் விழாவில் பங்கேற்பாளர்களுக்கு சிறு நூல்களைப் பரிசாகக் கொடுக்க திட்டமிட்டார். ஆனால் அவ்வாறு கொடுக்க திருச்சபை பணத்தை பயன்படுத்த அனுமதி இல்லை. அதற்காக அவர் என் தம்பி ஷாகுல் ஹமீதின் உதவியை நாடினார். ஷாகுல் நம் நண்பர்களிடம் உதவி தேட சங்கர் பிரதாப், அருண்குமார், சிட்னி கார்த்திக் (கார்த்திக் வேலு) ஆகிய நண்பர்கள் உதவினர். அந்த நிதியில் யானைடாக்டர், நூறுநாற்காலிகள், வணங்கான் ஆகிய சிறு நூல்கள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டன.

“ஒரு கிறிஸ்தவ சபையின் போதகர் கேட்டுக்கொள்ள ஓர் இஸ்லாமியர் உதவ இந்துக்கள் வாங்கி அளிக்க இந்நூல்கள் வழங்கப்படுகின்றன. இதுவே இந்தியாவின் ஆத்மா” என்று காட்சன் அந்நூலின் முன்னுரையில் குறிப்பிட்டார்.

இந்நூல்கள் ஐம்பது ரூபாய் மதிப்புள்ளவை. ஒரு நல்ல காபியின் விலை. ஒரு கதை ஒரு நூல். சிறியவை. வாசிப்புப் பழக்கமுள்ளவர் அரை மணிநேரத்தில் வாசிக்கலாம். ஆனால் இவை வாசிப்புப் பழக்கத்தை அறிமுகம் செய்ய மிகமிக உதவியானவை. பெரிய நூல்கள் வாசிப்புப் பழக்கமில்லாதவர்களை அச்சுறுத்துகின்றன. சிறிய நூல்களை அவர்கள் உடனடியாக வாசிக்கிறார்கள். குறிப்பாக சிறுவர்களுக்கு இந்நூல்கள் மிக அணுக்கமானவை.

ஏற்கனவே ஈரோடு வாசிப்பு வட்டம் சார்பாகவும், தன்னறம் அமைப்பு சார்பாகவும் யானைடாக்டர் போன்ற நூல்கள் பல்லாயிரம் பிரதிகள் இவ்வாறு அச்சிடப்பட்டு வினியோகிக்கப்பட்டுள்ளன. யானைடாக்டர் லட்சம் பிரதிகள் வரை அளிக்கப்பட்டுள்ளது. இந்த தலைமுறையில் தமிழில் மிகப்பிரபலமான சிறுகதை அதுதான் என நினைக்கிறேன்.

திருமண விருந்துகளிலும் பிற நிகழ்வுகளிலும் இந்நூல்களை அன்பளிப்பாக அளிக்கும் நண்பர்கள் உள்ளனர். கல்விநிலையங்களிலும் கொடையாளிகளால் இந்நூல் அன்பளிப்பாக அளிக்கப்படுகிறது. பல மாணவர்கள் தங்களுக்கே என பெறும் முதல்நூலாக இவை உள்ளன. இச்சிறு நூல்களைப் பார்க்கையில் ஒரு பெருமிதம் உருவாகிறது. ஆறு ஓடைகளாக மாறி சிற்றோடையாக பிரிந்து ஒவ்வொரு வயலுக்கும் சென்று சேர்வதுபோல இந்நூல்கள் தமிழக வாசகர்களைச் சென்றடைகின்றன.

’அறம்’ தொகுதி திருக்குறள், பாரதியார் பாடல்கள் போல தமிழகத்தின் பொதுநூல் என்னும் தகுதியை எட்டிக்கொண்டிருக்கிறது.

யானைடாக்டர் அமேஸான் 

நூறுநாற்காலிகள் அமேஸான்

வணங்கான் அமேஸான்

அறம் அமேஸான் 

முந்தைய கட்டுரைதிணைகள் கவிதை விருது
அடுத்த கட்டுரைபாதிக்கப்பட்டவர்களுடன் நிற்றல்