சந்தித்தல், கடிதம்

பிப். 9 அன்று நீங்கள் பதிவிட்டு இருந்த பால முருகன் என்பவரின் கடிதத்தையும், அதற்கான உங்களது பதிலையும் படித்தேன். பால முருகன் அவர்கள் குறிப்பிட்டு இருத்த, ‘மறுபடியும் உங்ககிட்ட பேசணும்னு ஆசப்பட்டு இன்னொரு Book வாங்கி மறுபடியும் உங்க கிட்ட கையெழுத்து வாங்க நீட்டினேன். நீங்க என்ன பாத்து ஒரு நொடி சிரிச்சுட்டு அந்த Book கையெழுத்து போட்டு கீழ உங்க Mobile Number எழுதி “Call பண்ணிட்டு ஒரு நாள் என்ன நேர்ல வந்து பாருங்கனு சொன்னீங்க. எனக்கு சந்தோஷம் தங்கல‘ என்ற நிகழ்வு எனக்குள் சிறு அதிர்வு, மகிழ்வை உருவாக்கி இருக்கிறது. சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் நான் மேலும் ஓரடி உங்களை நெருங்கி நிற்பதாய்த் தோன்ற செய்தது.

உங்களை நான் நேரில் கண்டதில்லை. ஆனால், அந்த ஆவல் நான் புத்தகக் கண்காட்சிக்கு வரும் ஒவ்வொரு முறையும் என்னிடம் உண்டு. விஷ்ணுபுரம் பதிப்பகத்தை நெருங்கும்போதே எனக்குள் ஒரு படபடப்பு உருவாகுவதை என்னால் உணர முடிகிறது. உங்களை நேரில் கண்டால் ஒருமுறை அணைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றும். அதேநேரம் அது அதிகப்பிரசங்கித் தனமாக இருக்கும் என்றும் தோன்றும். அப்படி தோன்றித்தான் நான் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களைக் கண்டபோது கையெழுத்தை மட்டும் பெற்றுக் கொண்டு கடந்து வந்தேன். அவரைவிட்டு விலகும் வரை, ‘ஒரு ஹக் பண்ணிக்கலாமா சார்’ என்ற  சொற்றொடர் எனக்குள் சுழன்று கொண்டே இருந்தது.

நீங்கள் என்னுடைய ஆசிரியர்கள். எழுத்து சார்ந்து எனக்குள் இருக்கும் கேள்விகளுக்கு ஏதோ ஒரு வழியில் தொடர்ந்து எனக்குப் பதில் அளித்து வருபவர்கள். உங்களை நெருங்க எனக்கு எப்பொழுதும் தயக்கமாக இருக்கிறது. ‘நான் எப்படி அவர்களை’ என்ற எண்ணம் மேலோங்குகிறது. இந்த எண்ணம், நீங்கள் அலைபேசி எண் எழுதிக் கொடுத்ததாகப் படித்தபோது மட்டுப்பட்டிருக்கிறது. அதுதான் அந்த அதிர்விற்கும், மகிழ்விற்கும் காரணம் என்று நம்புகிறேன். உங்களையும் ஒரு நாள் நேரில் கண்டு, என் எழுத்து சார்ந்த ஐயங்களைத் தீர்த்துக் கொள்வேன் என்றும் நம்புகிறேன். நன்றி ஆசானே!

– தினேஷ்

அன்புள்ள தினேஷ்

நான் எப்போதும் எனக்கு என ஒரு நெறியை வைத்திருக்கிறேன். சிந்தனையை அறியவிரும்பும் எவருக்கும் அணுகக்கூடியவனாகவே இருக்கவேண்டும் என்பது அதன் முதல் நெறி. ஆனால் வீணாக ஒருபொழுதையும் செலவழிக்கலாகாது எவருக்காகவும் என்பது என்னுடைய இரண்டாவது நெறி.

உங்கள் ஆர்வம் உண்மையாக இருக்கும்பட்சத்தில் நீங்கள் தயங்கவேண்டியதே இல்லை. நான் என் ஆசிரியர்களை தேடிச்சென்றது நான் தகுதிபெறும்பொருட்டே ஒழிய எல்லா தகுதிகளையும் அடைந்தபின்பு அல்ல.

ஜெ

முந்தைய கட்டுரைமுழுமையெனும் மாயப்பொன் – கடிதம்
அடுத்த கட்டுரைஅழகாபுரி அழகப்பன்