அனலும் கதிரும் – கடிதங்கள்

எழுகதிர் வாங்க 

எழுகதிர் மின்னூல் வாங்க 

அன்புள்ள ஜெ

எழுகதிர் தொகுப்பில் அனலுக்குமேல் என்னும் கதையை இன்று வாசித்தேன். ஒரு பெரும் திகைப்பு உருவாகியது. துப்பறியும் கதைபோலப் போகும் கதை. ஆனால் அடுக்கடுக்காக வேறேதேதோ சொல்லிச் செல்கிறது. ஆண் பெண் உறவின் நுட்பங்களாக இந்தக்கதையை வாசித்துக்கொண்டே செல்லலாம். இன்னொரு மொழிச்சூழலில் என்றால் இதற்குள் ஒரு அபாரமான சினிமாவாக இந்தக்கதை வந்திருக்கும். அப்படிப்பட்ட கதை. அனலுக்குமேல் என்பதேகூட ஒரு பெரிய குறியீடு. எல்லாமே நெருப்புக்குமேலே நடைபெறுகிறது. நெருப்பு உள்ளே உறங்குகிறது.  கொலை, சாவு, பலி, செக்ஸ் என்று எவ்வளவு விஷயங்களை அந்தக் கதை தொட்டுச்செல்கிறது. உண்மையான ஓவியம் ஒன்றின் கதை.

அதேபோல எழுகதிர் கதை. அதையும் ஒரு அற்புதமான சினிமாவாக ஆக்கமுடியும். கதை தேடிச்செல்பவர்கள் ஏன் இதையெல்லாம் படமாக்கவில்லை என்பது ஆச்சரியம்தான்.

சிவக்குமார் மாரிமுத்து

***

அன்புள்ள ஜெ

எழுகதிர் தொகுப்பிலுள்ள பலிக்கல் என்ற சிறுகதையை பற்றி நான் ஒரு கடிதம் எழுதவேண்டுமென்று நினைத்தேன். பலமுறை சொல்லிப்பார்த்தேன். எழுதமுடியவில்லை. கடைசியாக இப்போது எழுதுகிறேன். ஆழமான கதை. நெஞ்சில் கத்தியாலே குத்துவதுபோல ஒரு கதைக்கரு. யோசித்துக்கொண்டே இருக்கிறேன். எவ்வளவு தூரம் யோசித்தாலும் அதன் உண்மையான அர்த்தங்கள் கொஞ்சம் அப்பாலே தான் இருக்கின்றன. இங்கே மனித வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது. நாம் வாழ்வது நம்மோட வாழ்க்கை இல்லை. வேறு எவரோடோயோ வாழ்க்கையோட மீதம்தான் என்று எனக்கு தோன்றியது. எனக்கு ஜோசியத்திலே நம்பிக்கையும் ஆர்வமும் உண்டு. அந்த ஆர்வத்தால் பல ஜாதகங்களைப் பார்த்திருக்கிறேன். மனிதவாழ்க்கை ஒரு தொடர்ச்சி என்று நினைக்காமல் பார்த்தால் ஜாதகபலன்களை புரிந்துகொள்ளவே முடியாது. அப்படி ஒரு ஆழமான கதை.

இவன்

அருணாசலதாசன்

எழுகதிர் முன்னுரை

முந்தைய கட்டுரைபி.எஸ்.நடராஜ பிள்ளை, பலிக்காத பரிகாரங்கள்
அடுத்த கட்டுரைந.பிச்சமூர்த்தி, கு.அழகிரிசாமி- கடிதங்கள்