அவை அங்கே இருக்கட்டும் – கடிதம்

முதுநாவல் வாங்க

முதுநாவல் மின்னூல் வாங்க

அன்புள்ள ஜெ

அண்மையில் நடைபெற்ற கோவை நவீனஇலக்கிய மாநாட்டில் ஒரு முஸ்லீம் பேச்சாளர் பேசும்போது ‘ஜெயமோகன் இஸ்லாமியர் மற்றும் சிறுபான்மையினர் பற்றி ஒன்றுமே எழுதவில்லை’ என்று சொன்னார். அங்கே உடனே சிலர் அப்படி இல்லை என்று சொன்னார்கள். அவர் தனக்கு அது தெரியவில்லை என்று சொல்லிவிட்டார்.

தமிழில் இஸ்லாமிய சூஃபி மெய்ஞானம் பற்றி எழுதப்பட்ட மிகச்சிறந்த கதைகள் நீங்கள் எழுதியவை. முதுநாவல், படையல் இரண்டு கதைகளுமே எப்போது வாசித்தாலும் என்னை மெய்சிலிர்க்கச் செய்யும் அனுபவங்கள். மேலும் பல இஸ்லாமியப் பின்னணி கொண்ட கதைகளையும் எழுதியிருக்கிறீர்கள். அவையெல்லாம் சும்மா இஸ்லாமியர்களுக்கு வேண்டியவர் என்று பாவலா காட்டும் கதைகள் இல்லை. இஸ்லாமிய மெய்ஞானத்தின் சாராம்சம் வெளிப்படும் கதைகள். இஸ்லாமியரை அன்பானவர்கள், பண்பானவர்கள், பாதிக்கப்படுபவர்கள் என்றெல்லாம் பாராட்டி போலியாக எழுதவில்லை.  அதில் வரும் கதாபாத்திரங்களெல்லாம் கெத்தேல் சாகிப் போன்றவர்கள்.

இதைப்போல கிறிஸ்தவக் கதைகளையும் நிறைய எழுதியிருக்கிறீர்கள். கிறிஸ்தவ ஆன்மிகம் வெளிப்படும் கதைகள் அவை. வெறும் முள் அவற்றிலே ஓர் உச்சம். இதையெல்லாம் இவர்கள் படிக்கவில்லை. அறம் தொகுதியையாவது ஒரு இலக்கியவாசகர் படிக்காமலிருப்பாரா? இந்தப்பிரச்சாரம் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. இதை முறியடிக்க இஸ்லாமியக் கதைகளையும் கிறிஸ்தவக் கதைகளையும் தனித்தொகுப்புகளாக வெளியிடலாமே?

ஆனந்த் கண்ணன்

***

அன்புள்ள ஆனந்த்

அப்படி வெளியிடும் எணணமில்லை. இவர்கள் சொல்வது வேண்டுமென்றே. இவர்களிடமிருப்பது வெறும் சாதி – மதக்காழ்ப்பு மட்டுமே. அதை அணையாமல் பாதுகாப்பதற்காக எதையுமே வாசிக்காமலிருப்பார்கள்.

சரி, தொகுத்தளித்தால் என்ன ஆகிவிடும்? கதைகளை இவர்கள் வாசித்தால் என்ன ஆகிவிடும்? காழ்ப்புநோய் நீங்கி தெளிந்துவிடுவார்களா என்ன? அது அப்படி தீரும் நோயா? வாசித்தால்கூட ‘அதெல்லாம் உண்மையிலே சிறுபான்மை எதிர்ப்பு கதைகள் தெரியுமா? நல்லா உன்னிப்பா கவனிக்கணும் நீங்க…” என ஆரம்பித்துவிடுவார்கள்.

அந்தக் கதைகள் மெய்யான ஆன்மிகத்தேடல் கொண்டவர்களுக்கானவை. அவை அப்படியே அவர்களுக்காக மட்டும் இருந்துகொண்டிருக்கட்டும்.

ஜெ

முதுநாவல், கடிதங்கள்

முதுநாவல்- கடிதம்

முதுநாவல் முன்னுரை

முந்தைய கட்டுரைஎழுகதிர் நிலம்- 9
அடுத்த கட்டுரைஅய்யனார்குளம்