இரு முகில்களின் கதை -கடிதம்

அந்தமுகில் இந்த முகில் மின்னூல் வாங்க

அந்த முகில் இந்த முகில் வாங்க

அன்புள்ள ஜெ

அந்தமுகில் இந்த முகில் நாவலை அண்மையில் ஏ.ஆர்.முருகதாஸ் வாட்ஸாப்பில் தமிழின் மிகச்சிறந்த நாவல் என்று சொல்லியிருந்தார். சினிமாமேல் ஈடுபாடு உடையவன் என்பதனால் உடனே அந்த நாவலை வாங்கி வாசித்தேன்.

சினிமா ஒரு கனவு. திரையில் வரும் சினிமாவும் கனவுதான். சினிமா எடுக்கப்படுவதும்கூட ஒரு வகையான கனவுதான். ஆனால் அந்த சினிமா கடந்தகால சினிமா என்றாலது ஒரு பெரிய மாயக்கனவு. அந்தக்கனவை இந்த நாவல் அற்புதமாக காட்டுகிறது.

கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் உருவாகும் காதல் எந்த ரொமாண்டிக் அம்சமும் இல்லாமல் சாதாரணமாகத் தொடங்கி மெதுவாக மெதுவாக மேலே சென்று அந்த நிலாவில் அவர்கள் போகும் காட்சியில் ப்யூர் ரொமாண்டிக் ஆக மாறிவிடுகிறது. அதுதான் நாவலின் அழகே. அவர்களின் காதல் அந்த இடத்தில்தான். அவர்கள் வாழ்வது அந்த ஒரு பயணத்தில் மட்டும்தான்.

கதையை ஒருவிதமான படபடப்புடன் வாசித்து முடித்தேன். ஆனால் அதை மனதில் ஓட்டிக்கொண்டே இருக்கும்போதுதான் அந்த நாவல் எவ்வளவு அற்புதமான படிமங்களால் கோக்கப்பட்டிருக்கிறது என்று புரிந்தது. இரண்டு முகில்கள்தான் இருவரும். அவர்கள் இருவரும் கரைந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்கள் தொட்டுக்கொள்ளும் இடம் கொஞ்சம்தான். தற்காலிகமானதுதான். ஆனால் அவர்கள் ஒன்றாக கரைந்துவிடமுடியும்

நாவல் முழுக்க பல ரியாலிட்டிகள். சினிமா ஒரு ரியாலிட்டியாக வருகிறது. காலந்தோறும் கைகூடாத காதல்கள் எல்லாமே உள்ளிழுக்கப்பட்டுவிடுகின்றன. அந்த முகில் இந்த முகில் என்று மனசு அரற்றிக்கொண்டே இருக்கிறது. கடுமையான வேதனையை உருவாக்கிய நாவல். ஆனால் ஒரு வகையான நிறைவையும் அளித்தது. வாழ்க்கையைப்பார்த்த நிறைவு

ஏ.ஜாபர்கான்

முந்தைய கட்டுரைபடைத்தலின் இனிமை
அடுத்த கட்டுரைஇந்திய நுண்கலைகளின் தரிசனம்- கடிதம்