அன்புள்ள ஜெயமோகன்
வணக்கம்,
முதல்முறையாக தாங்கள் ஆற்றிய “குறளினிது” உரைகளை கேட்டேன்
பல குறளுக்கு தங்களின் பொருள்படுத்தலும் அதற்கான வாழ்க்கை அனுபவங்களையும் சேர்த்து நிகழ்த்திய உரை எனக்கு புதிய திறப்பாக இருந்தது .எனக்கு திருக்குறள் மேல் மிகப்பெரிய காதலும் ஈடுபாடும் சிறுவயது முதலே உண்டு .தற்போது அதற்கு பலர் எழுதிய உரைகளை சேகரித்து வருகிறேன். தமிழின் எல்லா கவிஞர்கள், எழுத்தாளர்களுக்கும் குறளுக்கு உரையெழுதும் ஆசை இருக்கும்
அப்படி தங்களுக்கு திருக்குறளுக்கு உரையெழுதும் விருப்பம் இருக்கிறதா ?இருந்தால் எப்போது தங்களின் குறள் உரை நூலை எதிர்பார்க்கலாம் ?இதை என் சிறிய வேண்டுகோளாகவும் இதை தாங்கள் எடுத்து கொள்ளலாம் .
குறளுரையில் ஓரிடத்தில் நீங்கள் சொன்னது போல் “சிந்திக்கும் தமிழரின் வாழ்க்கை என்பது வாழ்நாள் முழுக்கதிருக்குறளை திரும்ப திரும்ப கண்டடைவது தான்”
எவ்வளவு சத்திய வார்த்தைகள் என்று நினைத்து பார்க்கிறேன் உடல் சிலிர்த்து வியந்து கொண்டே இருக்கிறது .
மிக்க நன்றி
அன்புடன்,
மதன்குமார் .
அன்புள்ள ஜெ
திருக்குறள் பற்றிய உங்கள் உரைகளை கேட்டு முடித்தபோது மெய்ஞான நூல்களை எவ்வளவு எளிமையாக சுருக்கி புரிந்துகொள்கிறோம் என்ற திகைப்பை அடைந்தேன். குறளை நாம் எளிமைப்படுத்திப் புரிந்துகொள்ள இரண்டு காரணங்கள்தான். ஒன்று, அன்றாடம். இன்னொன்று அரசியல். இரண்டு கோணங்களில் நமக்கு எது தெரியுமோ அதுதான் குறளிலும் உள்ளது என்று முடிவுகட்டிவிடுகிறோம். உங்கள் உரை குறளை மீட்டு அளிக்கிறது.
மா. செல்வக்கணபதி