உங்களுடைய பெங்களூரு உரை கேட்ட வாசகர் சுரேஷ்குமார் உங்களுக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு கேட்டிருந்தார்:
உரையின்போது metaphysics பற்றியும் ஒரு காலத்தில் அது முக்கியத்துவத்தை இழந்து பின்பு மீட்சி அடைந்தது என்றும் பேசினீர்கள். நான் அப்பொழுது குறிப்பிட்டது போல physics-ஐ metaphysics-லிருந்து பிரித்து முதன் முதலில் விடுதலை தந்தது நியூட்டன் தான் என்று தோன்றுகிறது. அவருக்கு முன் இருந்த அறிஞர்கள் ஒரு இயக்கத்தை விளக்கும் போது அது எப்படி இயங்குகிறது என்பதுடன் அது ஏன் இயங்குகிறது (metaphysics) எது சரியான இயக்கம் எது தவறான இயக்கம் (morality) என்ற வழிகளிலேயே சிந்தித்து வந்திருந்தனர். நியூட்டன் அந்த சிந்தனை முறைகளிலிருந்து மாறுபட்டு, ஒரு இயக்கத்தை புரிந்துகொள்ள ‘ஏன்’ என்ற கேள்வி தேவை இல்லை, அது எப்படி இயங்குகிறது என்று கவனித்து அறிந்தால் மட்டுமே போதுமானது என்பதைச் செயல்படுத்தி காட்டினார். அவரின் இந்த பங்களிப்பே புதிய அறிவியலுக்கு வழிகோலியது எனலாம்.
நீங்களும் பதிலில் இந்த கருத்துக்கும் பதில் அளித்திருந்தீர்கள்:
நியூட்டன் பற்றி நீங்கள் சொன்னவற்றை நானும் யோசித்தேன். நிரூபணவாத அறிவியல்முறைமைதான் மீபொருண்மைவாதத்தின் இடத்தை இல்லாமலாக்கியது என்பதே என்புரிதல். பிரான்ஸிஸ் பேக்கன் முன்வைத்தது அது. அதுவே தொடக்கம். நிரூபணவாதத்தின் உச்சம் நியூட்டன் என்பதனால் நீயூட்டனில் அந்த மீபொருண்மை மறுப்புப் போக்கு முழுமையடைந்தது என்று கொள்ளலாம்
நான் பெங்களூரு உரையை கேட்கவில்லை. இருந்தாலும் வாசகர் கேள்வியையும் உங்கள் பதிலையும் படித்து, இது தொடர்பாக நான் படித்தததை பகிர்ந்து கொள்ளலாமே என்று (உரையை கேட்காமல் கருத்து சொல்கிறோமே என்ற தயக்கத்துடனேயே) எழுதுகிறேன்.
பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் அறிவியலை மேலெடுத்துச்செல்லும் கேள்விகளை சாக்ரடீசுக்கு முன்வந்த அணுவியலாளர்களே கேட்டதாகவும், பின் வந்தவர்கள் இந்த பாதையை தவற விட்டதாகவும் குறிப்பிடுகிறார். அவருடைய எழுத்தை சுமாராக மொழி பெயர்த்துள்ளேன்:
சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போலல்லாமல், அணுவியலாளர்கள் “எதற்காக, அறுதிக்காரணம் என்ன” என்ற வாதத்தை தொடங்காமலேயே உலகை விளக்க முயன்றார்கள். ஒரு நிகழ்வின் ‘அறுதிக்காரணம்’ என்பது இனி வரப்போகும் எந்த விளைவின் பொருட்டு இந்த நிகழ்வு நிகழ்ந்தது என்பது. மனித விவகாரங்களில் இந்த கருத்தாக்கம் செல்லும். ஏன் ரொட்டி செய்ய வேண்டும்? ஏனென்றால், மக்கள் பசியுடனிருப்பார்கள். ஏன் ரயில் பாதை போட வேண்டும்? ஏனென்றால், மக்கள் பயணம் செய்ய விரும்புவார்கள். இது போன்ற நிகழ்வுகள், எந்த நோக்கத்தைக்கொண்டு செய்யப்படுகின்றன என்பதன் அடிப்படையில் விளக்கப்படலாம். ஒரு நிகழ்வு குறித்து நாம் ‘ஏன்’ என்று கேட்கும்போது, நாம் கேட்க நினைப்பது இரண்டு கேள்விகளில் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம். ‘எந்த விளைவை நோக்கி இந்த நிகழ்வு நிகழ்ந்தது?’ என்றும் பொருள் படலாம். அல்லது, ‘எந்த கடந்தகால சூழல் இந்த நிகழ்வுக்கு காரணம் ஆகியது?’ என்றும் நாம் கேட்க நினைக்கலாம். முதல் கேள்விக்கு விளக்கம் நோக்கியல் விளக்கம் (teleological explanation) அல்லது அறுதிக்காரண விளக்கம் எனப்படுகிறது. இரண்டாம் கேள்விக்கு விளக்கம் இயந்திரவியல் விளக்கம் (mechanistic explanation). இவ்விரண்டில் எந்த கேள்வியை அறிவியல் கேட்கவேண்டும் அல்லது இரண்டையுமே கேட்கவேண்டுமா என்பது முன்கூட்டியே எப்படி தெரிந்திருக்க முடியும் என்று எனக்குத்தெரியவில்லை. ஆனால் இயந்திரவியல் கேள்வியே விஞ்ஞான அறிவின் பாதை, நோக்கியல் கேள்வி அல்ல என்று அனுபவத்தில் தெரிகிறது. அணுவியலாளர்கள் இயந்திரவியல் கேள்வியைக் கேட்டு இயந்திரவியல் பதில் சொன்னார்கள். அடுத்து வந்தவர்கள், ஐரோப்ப்பிய மறுமலர்ச்சி காலம் வரை, நோக்கியல் கேள்வியிலேயே ஆர்வம் காட்டினார்கள்; அறிவியலை ஒரு குருட்டுப்பாதையில் அழைத்து சென்றார்கள்.
அணுவியலாளர் டெமாகிரிடஸை அடுத்து வந்த சிறப்பான தத்துவங்களில் கூட குறை என்னவென்றால், பிரபஞ்சத்தில் ஒப்பீட்டளவில் மனிதனுடைய இருப்புக்கு கொடுத்த அதீதமான முக்கியத்துவமே என்கிறார்.
ஐரோப்பிய மறுமலர்ச்சிக்கு பிறகே சாக்ரடீசுக்கு முந்தைய தத்துவ வாதங்களில் இருந்த வீரியமும் சுதந்திர சிந்தனையும் மீண்டு வந்தன என்கிறார்.
ஏன் என்ற கேள்வியை ‘ஏன், எதற்காக’ என்று பொருள் கொள்வதை விட ‘ஏன், எதனால்?’ என்று பொருள் கொள்வதே அறிவியலின் பாதை என்று தோன்றுகிறது.
– வைகுண்டம்